Sidebar

21
Sat, Dec
38 New Articles

விவாதம் முடிந்து விபத்துக்குள்ளான தவ்ஹீத் உலமாக்கள்

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விவாதம் முடிந்து விபத்துக்குள்ளான தவ்ஹீத் உலமாக்கள்

ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்கு எத்தனையோ தடைக் கற்கள் உள்ளன. ஒருவன் சத்தியத்திற்கு வர வேண்டும் என்று எண்ணும் போது சமுதாயத்தில் அவனுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்து, மரியாதை குறுக்கே வந்து நிற்கும். அதை வைத்து அவனிடம் ஷைத்தான் பல குறுக்குக் கேள்விகள் கேட்பான்.

மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் கிராமத் தலைவராக இருப்பார். அல்லது சட்டமன்ற உறுப்பினராக அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக ஏன்? முதலமைச்சராகக் கூட இருப்பார். நீ இஸ்லாத்திற்குப் போனால் இந்த மரியாதை கிடைக்குமா? என்று ஷைத்தான் அவரிடம் கணக்குப் போட வைப்பான். அவரும் கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டு, இந்த மரியாதை அங்கு போனால் நமக்குக் கிடைக்காது என்று அவர் அசத்தியத்திலேயே இருந்து விடுகின்றார்.

இது மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஷைத்தான் போடும் தடைக் கல்லாகும். இஸ்லாத்தின் பெயரிலேயே அசத்தியத்தில் இருக்கும் ஒருவர் ஏகத்துவத்தின் பக்கம் இணைய வரக் கூடிய கட்டத்திலும் இது போன்று ஷைத்தான் அவரிடம் விஷ வித்துக்களை விதைக்கின்றான். அதனால் அவர் சத்தியத்திற்கு வராமலேயே இருந்து விடுகின்றார்.

இன்று சமுதாயத்தில் பல செல்வந்தர்கள், நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். உங்கள் பள்ளிக்குத் தொழ வந்தால் எங்களுக்கும் நஜாத் என்ற முத்திரை குத்தி விடுகின்றார்கள். இது தான் நாங்கள் பகிரங்கமாக வர முடியாததற்குக் காரணம் என்று கூறுகின்றார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் இதுவரை இந்தப் பக்கம் வருவதை நாம் பார்க்க முடியவில்லை. அந்தப் பக்கத்தில், அதாவது அசத்தியத்தின் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள். இப்போது இவர்களுக்குக் குறுக்கே சமூக அந்தஸ்து, மரியாதை தடைக் கல்லாக இருக்கின்றது.

அடுத்து, ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்குத் தடைக் கல்லாக நிற்பது நோய் நொடிகள், பொருளாதார நஷ்டம் போன்றவை.

ஒருவன் தவ்ஹீதிற்கு வந்திருப்பான். வந்தவுடன் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு விடும். அவ்வளவு தான்! அவன் சத்தியத்தை விட்டு வெளியே போய் விடுவான்.

அது போல் ஒருவன் தவ்ஹீதுக்கு வந்திருப்பான். அவனைத் தவிர அவனது குடும்பமே விபத்தில் பலியாகி விடுவர். இது அவனுடைய உள்ளத்தில் ஒருவித மன உறுத்தலையும் உடலில் ஓர் உதறலையும் ஏற்படுத்தி விடும்.

அதற்குத் தக்கவாறு மக்களும்,பாருங்கள்! இவன் அவ்லியாக்களைத் திட்டினான். இந்தச் சாபம் தான் இவனை இப்படி ஆட்டி அலைக்கின்றது என்று விமர்சனம் செய்வார்கள். அவ்வளவு தான். தடுமாறி தடமும் மாறி விடுவான். வீட்டில், வீதியில் நாம் ஏகத்துவப் பிரச்சாரத்தைச் செய்ய முனைகின்ற போது, அடுத்த வீட்டு அப்துல் காதிரைப் பார்! அவனுடைய குடும்பமே விபத்தில் காலி! எதிர் வீட்டு இப்ராஹீமைப் பார்! அவனுடைய பொருளாதாரம் நஷ்டமடைந்து விட்டது என்று முன்னுதாரணமாக்கி தவ்ஹீதுக்கு வர விடாமல் தடுக்கின்ற பணிகளில் ஈடுபடுவர்.

இன்றைக்கும் பலர் தவ்ஹீதுக்கு வராமல் இருப்பதற்கு இந்தத் தடைக்கல் தான் காரணமாக இருக்கின்றது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்தத் தடைக்கல் தான் மிகப் பெரிய அளவில் குறுக்கே வந்து நின்றது. இதைத் தான் அல்லாஹ் உடைத்தெறிகின்றான்.

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 39:36

ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் போது இப்படித் தான் அசத்தியவாதிகள் எச்சரிக்கை விடுப்பார்கள். அப்படிப்பட்ட எச்சரிக்கையை எதிர்கொள்வதற்கு ஒரேயொரு ஆயுதம் இந்த வசனம் தான். அல்லாஹ் போதும் என்று நம்புங்கள். என் கொள்கைக்கு வந்த நீங்கள் என்னைத் தான் பயப்பட வேண்டும். என் அல்லாதவர்களை நீங்கள் பயப்படக் கூடாது என்று நமக்குப் பாடம் புகட்டுகின்றான்.

அதாவது இந்த விஷயத்தில் நாம் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போன்று நடக்க வேண்டும் என்று சொல்கின்றான். இதோ இப்ராஹீம் (அலை) அவர்களின் முழக்கத்தைப் பாருங்கள்.

எதையும் எதிர்கொண்ட இப்ராஹீம் நபி

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்? (என்று அவர் கூறினார்)

திருக்குர்ஆன் 6:81

இணை கற்பித்தால் அல்லாஹ் தண்டிப்பான் என்று நான் ஆதாரப்பூர்வமாக, அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு பயமுறுத்துகின்றேன். அதற்கு நீங்கள் பயப்படவில்லை. ஆனால் ஆதாரம் இல்லாமல், அல்லாஹ் அல்லாத தெய்வங்கள், அவ்லியாக்கள் தண்டித்து விடுவார்கள் என்று என்னைப் பயமுறுத்துகிறீர்கள். நான் எப்படிப் பயப்படுவேன் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் முழங்குகின்றார்கள்.

இப்படித் தான் ஓர் ஏகத்துவவாதி இருப்பான். இப்படித் தான் இருக்க வேண்டும். இப்படித் தான் ஏகத்துவ வாதிகள் இருக்கின்றார்கள். ஏதாவது ஒரு சோதனை ஏற்பட்டதும் கொள்கையை விட்டு ஓடுவது என்பது மக்கத்து காஃபிர்கள், முஷ்ரிக்குகள் வேலையாகும்.

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டம்.

திருக்குர்ஆன் 22:11

இந்து மதத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் சிவசேனா தலைவன் தன் மனைவி இறந்ததும் சிலைகளைப் போட்டு உடைத்தான். இது போன்று சுன்னத் ஜமாஅத்தினர் நோய் என்றால் நாகூர் தர்ஹாவுக்குச் செல்வார்கள். அங்கு நிவாரணம் கிடைக்கும் என்று காத்திருப்பார்கள். கிடைக்கவில்லை என்றால் ஏர்வாடிக்கு மாறி விடுவார்கள். இதே போல் தரீக்காவை விட்டு தரீக்காவும் மாறுவார்கள்.

இது போன்று ஒரு ஏகத்துவவாதி இருக்க மாட்டான். அதற்கு எடுத்துக் காட்டு தான் அண்மையில் நடந்த விபத்து! எம்.ஐ. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று விட்டு காரில் சென்று கொண்டிருந்த போது கார் ஒரு மரத்தில் மோதி விட்டது. கார் சிதைந்து, சின்னாபின்னமாகி, சிதிலமாகி விட்டது. எம்.ஐ.சுலைமான் அவர்களுக்குக் காலில் பலத்த காயம். ரஹ்மத்துல்லாஹ், கார் டிரைவர் சில்மி ஆகியோருக்கும் காயம்.

அவ்வளவு தான்! இது அவ்லியாக்களின் வேலை தான் என்று இந்த அசத்தியவாதிகள் கதை கட்டி விட்டனர்.

மரத்தில் மோதிய காரைப் பார்ப்பவர்கள், அந்தக் காரில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்குச் சாத்தியமேயில்லை என்ற முடிவுக்குத் தான் வருவார்கள். ஆனால் அல்லாஹ் அந்த மூவரையும் காப்பாற்றி விட்டான். இவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்கும் வண்ணம் மூன்று பேருமே பிழைத்து விட்டார்கள்.

விவாதத்தில் கலந்து கொண்டு திரும்பிய எம்.ஐ. சுலைமானும், ரஹ்மத்துல்லாஹ்வும் ஒருக்கால் இறந்து விட்டாலும் நாங்கள் கொண்டிருக்கும் கொள்கை சத்தியம்; நாங்கள் சொன்னது சத்தியம்; நாங்கள் வாதிட்டது சத்தியம்; அல்லாஹ் ஒருவன் தான் நிரந்தரமாக உயிரோடு இருப்பவன்; இவர்கள் கூறும் அவ்லியாக்கள் இறந்து விட்டவர்கள் தான்; உயிரில்லாதவர்கள் தான்.

இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கு எள்ளளவும் மாற்றம் கிடையாது.

அதனால் இந்த அசத்திய வாதிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

விபத்து நேரிட்டாலும் 22:11 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று விளிம்பிற்கு வந்து விட மாட்டோம். சத்தியத்தை விட்டு வெளியேறி விட மாட்டோம். இந்தக் கொள்கையில் இறுதி வரை நிற்போம். அதிலேயே உயிர் துறப்போம்.

05.08.2009. 7:04 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account