இந்த மூடர்களை என்ன செய்யலாம்?
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு சிறிது சிறிதாக விலகிச் செல்லும் சவூதி ஆட்சியாளர்கள் கொரோனா வைரஸுக்குப் பயந்து மார்க்கத்தில் விளையாடி வருகின்றனர்.
புனித கஅபா ஆலயத்துக்கு வரலாற்றில் இது வரை இல்லாத கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
தற்போது சவூதி அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பைக் காணுங்கள்.
கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்டவற்றைப் பேணவும் என்ற முன்னுரையுடன் வெளியிட்ட அறிவிப்புகளைக் காணுங்கள்!
1- ஐந்து வேளைத் தொழுகைகளிலும் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை பத்து நிமிடம் என்ற அளவில் குறைத்துக் கொள்ளவும்.
2- வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் தொழுகைக்கும் ஜும்மா உரைக்கும் சேர்த்து பதினைந்து நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.
3- ரமலானிலும் இதர மாதங்களிலும் நோன்பு துறக்கும் ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தவும்.
4- எல்லா பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருப்பதைத் தடை செய்யவும்.
5- பேரீச்சம்பழம் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் பள்ளிவாசலில் இருந்து அப்புறப்படுத்தவும்.
6- பயன்படுத்தப்பட்ட குடினீர் கோப்பைகளை அகற்றவும்
இப்படி அறிவித்துள்ளனர்.
மேலும் உம்ரா விசாவையும் ரத்து செய்து கஅபா ஆலயத்தை வெறிச்சோட வைத்துள்ளனர்.
கஅபா ஆலயத்துக்கு மாஸ்க் போடாதது மட்டும் தான் இவர்கள் செய்யாமல் விட்டது.
கொரோனா வைரஸை விட சவூதி ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு மிகப்பெரிய வைரஸ்களாக ஆகியுள்ளனர் என்பது இந்த அறிவிப்பில் இருந்து தெரிகின்றது.
صحيح البخاري 3473
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، وَعَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ، مَاذَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعُونُ رِجْسٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا، فِرَارًا مِنْهُ» قَالَ أَبُو النَّضْرِ: «لاَ يُخْرِجْكُمْ إِلَّا فِرَارًا مِنْهُ»
ஓர் ஊரில் பிளேக் நோய் இருப்பதைக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 3473, 5728, 6974
صحيح البخاري 3474
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَنِي «أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ»
பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு இறை நம்பிக்கையாளருக்கு அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு, அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று நம்பி சகித்துக் கொண்டும் நன்மையை எதிர்பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3474, 5734, 6619
கொள்ளை நோய்கள் குறித்த இஸ்லாமியப் பார்வை என்ன என்பது இந்த நபிமொழிகளில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது.
ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் அவ்வூருக்கு நாம் போகக் கூடாது என்ற அளவுக்குத் தான் நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருக்க வேண்டும்.
கொள்ளை நோய்க்குப் பயந்து அவ்வூரை விட்டு ஓட்டம் எடுக்கும் அளவுக்கு நமது முன் எச்சரிக்கை நடவடிக்கை இருக்கக் கூடாது என்று அற்புதமான வழிகாட்டலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்து விட்டார்கள்.
கொள்ளை நோய் ஏற்பட்ட ஊரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறரது உதவிகள் அதிகம் தேவைப்படும். நாம் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தால் மனிதர்களுக்குச் செய்யும் கடமையில் இருந்து நாம் தவறியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக ஆகி விடுவோம்.
மேலும் நோய் இல்லாத ஊர்களுக்கு அதைப் பரப்பியவர்களாகவும் ஆகி விடுவோம்.
இதைக் கவனத்தில் கொண்டு அழகான வழிகாட்டலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்துள்ளனர்.
அல்லாஹ் நாடினால் தான் எதுவும் நிகழும் என்ற மன உறுதியுடன் அவ்வூரிலேயே இருந்து மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும். உயிருக்குப் பயந்து ஓடும் கோழைகளாக ஆகக் கூடாது என்ற இந்த வழிகாட்டலை சவூதி அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மக்காவுக்கு வர வேண்டாம் அல்லது எங்கள் நாட்டுக்கு வர வேண்டாம் என்று சவூதி அறிவிக்கலாம். இதற்கு உரிமை உள்ளது.
இதற்கு கடும் சட்டம் எதுவும் போடத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) இப்படித் தான் வழிகாட்டியுள்ளனர் என்று அறிவித்தாலே கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்த முஸ்லிமும் மக்காவுக்கு வர மாட்டான்.
கொரோனா வந்து விடும் என்று அளவுக்கு அதிகமாக அஞ்சி ஒருவரும் வரக் கூடாது என்று தடுக்க இவர்களுக்கு மார்க்கம் அனுமதி அளித்துள்ளதா?
மேலும் உள்ளூர் மக்கள் கூட சில நிமிடங்களுக்குள் தொழுது விட்டு ஓடி விட வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் இவர்களிடம் இறை நம்பிக்கை உள்ளதா?
பதினைந்து நிமிடங்கள் அளவுக்கு மக்களுடன் கல்ந்தால் கொரோனா பாதிக்காது; அதை விட அதிகமான நேரம் மக்களுடன் கலந்தால் தான் கொரோனா பரவும் என்று இவர்களுக்கு சொல்லிக் கொடுத்த அடி முட்டாள் யார்?
பரவ வேண்டும் என்று இருந்தால் ஒரு வினாடி போதாதா?
மக்காவில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை எனும் போது இந்த அறிவிப்பு செய்கிறார்கள் என்றால் இவர்களை விட அறிவீனர் யாரும் இருக்க முடியாது.
ஒரு வேளை கொரோனாவால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களைச் அந்தித்து ஆறுதல் கூறுவதும், தேவையான உதவிகள் செய்வதும் மார்க்கக் கடமையாகும். வருவது வரட்டும் என்ற துணிவோடு இதை எதிர் கொள்ள வேண்டும்.
மேலும் நபிகள் நாயகத்தின் இந்த எச்சரிக்கையைப் பாருங்கள்!
868 حَدَّثَنَا أَبُو عَمَّارٍ ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ، قَالَا : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ، وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ. وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ، وَأَبِي ذَرٍّ. حَدِيثُ جُبَيْرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
(கஅபாவின் நிர்வாகிகளான) அப்து முனாபின் சந்த்திகளே! இந்த ஆலயத்தில் இரவிலும் பகலிலும் எந்த நேரத்திலும் தொழுபவரையும், தவாப் செய்பவரையும் தடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதி
கஅபாவை நிர்வகிக்கும் சவூதி மன்னருக்கும் அவருக்கு ஜால்ரா அடிக்கும் போலி அறிஞர்களுக்கும் தொழுகையைத் தடுக்க அதிகாரம் அளித்தது யார்?
இதனால் உயிர் போகும் என்றால் அல்லாஹ்வின் அந்த நாட்டத்தை ஏற்பதற்கு முஸ்லிம் சமுதாயம் தயாராக இருக்கும் போது அதைத் தடுக்கும் முடிவை இவர்கள் எடுத்துள்ளனர்.
இஸ்லாம் மார்க்கத்துக்கு தவறான வடிவம் கொடுத்து இஸ்லாத்தை இந்த நாசகார ஆட்சியாளர்கள் கேவலப்படுத்தப் பார்க்கின்றனர்.
கஅபாவின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் கஅபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்படவில்லை; கஅபாவை நெருங்க முடியாமல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டதில்லை. வரலாற்றில் இந்த மடமையை சவூதி ஆட்சியாளர்கள் செய்துள்ளனர்.
இறைவா உனது ஆலயத்தை நிர்வகிக்கும் பயந்தாங்கொள்ளிகளிடம் இருந்து கஅபா ஆலயத்தை மீட்டு தகுதியானவர்கள் கையில் ஒப்படைப்பாயாக என நாம் அல்லாஹ்வை இறைஞ்சுவோம்.
சவூதியின் கொரோனா வைரஸ்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode