வேதம் ஓதும் சாத்தான்கள்
சல்மான் ருஷ்டியின் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் நான் எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம் போல் வெளியிட்டுள்ளன.
அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது. ராம் ஸ்வரூப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல் என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது.
இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக் கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின்' சாத்தானின் வசனங்கள்' என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ 'ராம் ஸ்வர்ப்' என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு புலமை சான்ற கேள்விகள் என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.
தவறான வாதங்களையும், பொய்யான செய்திகளையும் உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு ' சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தைத் தந்துவிட்டு அவரது கேள்விகளுக்குச் செல்வோம்.
ராம்ஸ்வர்ப் சொல்கிறார்:-
சாலமன் ரஷ்டியின் சாத்தானின் வசனங்கள் இஸ்லாத்தையும், அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சிப்பதற்காகவே எழுதப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவர் 'மக்கா' நகரை 'ஜாஹிலியா' என்ற பெயரால் தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து மக்காவை இஸ்லாமிய வரலாறுகள் 'ஜாஹிலியா' என்றே குறிப்பிடுகின்றன. ருஷ்டி தனது நூலில் முஹம்மதை குறிப்பிடும் போது 'மஹவுன்ட்' என்றும் நபிகளின் எதிரியாக திகழ்ந்த அபூ ஸூஃப்யானை 'அபூஸிம்பல்' என்றும் சிறிய மாற்றத்துடன் குறிப்பிடுகிறார். ஏனைய பாத்திரங்களைக் குறிப்பிடும் போது ரஷ்டி இந்த வித்தியாசத்தைக் கூட செய்யவில்லை. இஸ்லாமிய வரலாறுகளில் எவ்வாறு அவர்களின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறே குறிப்பிடுகிறார். நபியின் சித்தப்பா ஹம்ஸா, இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நீக்ரோ அடிமை பிலால், மற்றும் காலித் ஆகியோர் இதே பெயர்களாலேயே இவரது நூலில் குறிப்பிடப்படுகிறார்கள். மக்காவில் - அதாவது ஜாஹிலியாவில் பன்னிரண்டு பரத்தையர் இருந்ததாகக் குறிப்பிடும் இவர், அந்தப் பரத்தையருக்கு நபியின் மனைவியரின் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார். இது கீழ்த்தரமான, அநாகரீகமான சித்தரிப்பாக அமைந்துள்ளது. 'நான் இந்த நூலில் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை வெறும் கற்பனையாக எழுதப்பட்ட கதை தான் எனது நூல் என்று ரஷ்டி இப்போது பின்வாங்கினாலும் உண்மையில் அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சனம் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டே தனது நூலை எழுதி இருக்கிறார் என்பது அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.
இவை யாவும் சல்மான் ரஷ்டியைப் பற்றியும், அவரது நூல் பற்றியும் 'ராம் ஸ்வர்ப்' தருகின்ற அறிமுகமாகும். இந்தச் சிறிய அறிமுகத்திலிருந்து ரஷ்டியையும், அவரது நூலையும் நன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை விமர்சிப்பது தான் அவரது நோக்கம் என்றால் 'ராம் ஸ்வர்ப்' போல் தெளிவாக நேரடியாக விமர்சிக்கலாம்.
தனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்படுகின்ற ஐயங்களைத் தெளிவாக எழுப்பி இருக்கலாம். ரஷ்டியிடம் அந்தத் துணிவையும், நாகரிகத்தையும் காண முடியவில்லை. மாறாக மஞ்சள் பத்திரிக்கைகள், சினிமா கிசு கிசு செய்திகளைப் போல் நாலாம் தர நடையைத் தேர்வு செய்திருக்கிறார். 'ராம்ஸ்வர்ப்' செய்யும் அறிமுகத்திலிருந்து இதை நாம் நன்றாக விளங்க முடிகின்றது. முஸ்லிம் அறிஞர் உலகும், ராம் ஸ்வர்ப் போன்றவர்களும் இஸ்லாத்தையே அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று கண்டுபிடித்துச் சொன்ன பிறகும் கூட அவர் துணிவுடன் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.
நான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை, கற்பனைக் கதைதான் நான் எழுதிய நூல் என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ரஷ்டி. அவ்வளவு துணிவும், நேர்மையும் கொண்டவர் ஒரு சமுதாயம் தங்கள் அன்னையர் என்று மதிக்கும் நபிகளின் மனைவியரின் பெயர்களைப் பரத்தையர்களுக்குச் சூட்டி மகிழும் வக்கிரபுத்தியும், கீழ்த்தரமான எண்ணங்களையும் உடையவர் தான் ரஷ்டி என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ராம்ஸ்வர்ப்.
'ராம்ஸ்வர்ப்' போன்றவர்களே ஜீரணிக்க முடியாத அளவுக்கு எழுதும் நாலாந்தர எழுத்தாளராக இவர் காட்சியளிக்கிறார். இவரைப் பற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் இத்துடன் விட்டுவிட்டு ராம்ஸ்வர்ப் எழுப்புகின்ற புலமை சான்ற கேள்விகளைப் பார்ப்போம்.
கேள்வி:-1
மக்கத்துக் காபிர்கள் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பல தெய்வ வணக்கம் கூடாது என்று போதித்த முஹம்மதுக்குத் திடீரென ஒரு வஹி வருகிறது. அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவதான மனாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? அவை போற்றப்பட்ட பறவைகள்; அவற்றின் சிபாரிசுகள் நிச்சயமாக விரும்பப்படுகின்றது என்று அந்த வஹி கூறுகிறது. தங்களின் தெய்வங்களை முஹம்மது புகழ்ந்து கூறியவுடன் மக்காவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முஹம்மதுவைப் பின்பற்றி அல்லாஹ்வை வணங்க வழி ஏற்படுகிறது. இந்த உடன்பாடு அற்ப ஆயுளில் முடிந்து விடுகிறது. அந்த தெய்வங்களைப் புகழ்ந்து தனக்கு வந்த வஹி, ஷைத்தானிடமிருந்து வந்தது என்பதை முஹம்மது சீக்கிரமே கண்டுகொண்டு, அதற்குப் பதிலாக வேறு வசனத்தைக் கூறுகிறார். முஹம்மதுவால் திருத்திக் கூறப்பட்ட அந்த வசனம் அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவாதாக மனாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? உங்களாலும் உங்கள் மூதாதையராலும் இட்டுக்கட்டப்பட்ட பெயர்களேயன்றி இந்த பெண் தெய்வங்கள் வேறில்லை.
(அல்குர்ஆன்53:19-23)
இந்தத் தகவல்கள் கற்பனையானது அல்ல; மாறாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களான தபரீ, வாகிதி போன்றவர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ்களின் அடிப்படையிலே தனது நூலுக்கு 'சாத்தானின் வசனங்கள்' எனப் பெயரிட்டிருக்கிறார் ரஷ்டி.
இந்தக் கதையை கூட்டவோ, குறைக்கவோ இல்லாமல் சரியாகத் தரும் ரஷ்டி நம்முடைய உள்ளத்தில் முக்கிய வினாவையும் விதைக்கிறார். அதாவது ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து எவ்வாறு மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது? இந்த விஷயத்தில் குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லையே? மேலும் முஹம்மதுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் அவற்றை முறையாக இறைவன் ரத்து செய்து விட்டான். (அல் குர்ஆன் 22:52) என்று குர்ஆன் இயம்புகிறது.
பதில்:1
இந்த விபரங்களின் அடிப்படையில் 'ராம்ஸ்வர்ப்' கேட்க விரும்புவதும், சொல்ல வருவதும் என்னவென்றால் திருக்குர்ஆனில் ஷைத்தான்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன அவற்றை வேறுபடுத்தி அறிந்திட குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லை என்பது தான்.
இதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும், ஒரு குர்ஆன் வசனத்தையும் சமர்ப்பிக்கிறார். முதலில் 'ராம்ஸ்வர்ப்' தனது வாதத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸைப் பார்ப்போம். அந்த ஹதீஸைப் பற்றி 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்'என்று ராம்ஸ்வர்ப் குறிப்பிடப்படுவதிலிருந்து ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவைகளும் ஆதாரமாகக் கொள்ளத் தகாதவைகளும் உள்ளன என்பதை ராம்ஸ்வர்ப் அறிந்திருக்கிறார் என்பது தெரிகின்றது. ' ஆதாரப்பூர்வமான ஹதீஸ்' என்ற அடைமொழியுடன் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸ் உண்மையில் ஆதாரப்பூர்வமானது அல்ல; மாறாக இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும். 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்' என்று சொல்லப்படுவதற்கு முஸ்லிம் உலகம் எந்தத் தகுதிகளை வரையறுத்திறுக்கிறதோ அந்தத் தகுதியை இது பெற்றிருக்கவில்லை.
உதாரணமாக ஹதீஸை ஒருவரிடமிருந்து ஒருவராக அறிவிப்பவர் தமக்கு முந்திய அறிவிப்பாளரைச் சந்தித்திருக்க வேண்டும்; அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமையும்.
'ராம்ஸ்வர்ப்' எடுத்து வைக்கும் இந்த ஹதீஸில் இந்த இரண்டு தகுதிகளுமே இல்லாமலிருக்கின்றன. தபரி, வாகிதி குறிப்பிடுவதால் மட்டும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக ஆகிவிட முடியாது. இந்த ஹதீஸைப் பொறுத்தவரை இந்த நபர் எனக்குக் கூறினார் என்று அறிவிக்கும் இரண்டாம் நபர் முதலாம் நபரைச் சந்தித்ததவராகவோ, அவரது காலத்தில் வாழ்ந்தவராகவோ இல்லை. முப்பதுக்கும் மேற்பட்ட வழிகளில் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி பெரும்பாலான அறிவிப்புகளில் சொல்லி வைத்தாற் போல இந்தக் குறைபாட்டைக் கொண்டதாக உள்ளது.
காரல் மாக்ஸ் இதை என்னிடம் கூறினார் என ராம்ஸ்வர்ப் கூறினால் அந்தக் கூற்றின் நிறை எதுவோ அதே நிலையைத் தான் இந்தச் செய்தியும் பெறுகிறது.
மேலும் பல குறைபாடுகளையும் இந்தச் செய்தி உள்ளடக்கி இருக்கிறது.
'ராம்ஸ்வர்ப்' இப்போது இதை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டதால் நாம் இவ்வாறு கூறவில்லை எவரும் விமர்சிப்பதற்கு முன் - பல நூறு ஆண்டுகளுக்கு முன் - வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் இதை அலசி இது பொய் என்று தள்ளுபடி செய்துள்ளனர். அவர்கள் தள்ளுபடி செய்த இந்தக் குப்பையைத் தான் ரஷ்டியும், ராம்ஸ்வர்பும் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்டுப் புனைந்த பெரும் பொய்யாகும் இந்தச் செய்தி என்று அறிஞர் இப்னு குஸைமா குறிப்பிடுகிறார்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியானதல்ல என்று 'பைஹகீ' எனும் அறிஞர் குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தியை அறிவிப்பவர்களின் குறைபாடுகளையும் பட்டிலிட்டுக் காட்டுகிறார்.
அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு எதுவும் இல்லாத வகையில் இது அமைந்துள்ளது என்று 'பஸார்' என்னும் அறிஞர் கூறுகிறார்.
இந்தச் செய்தியை நபித்தோழர்கள் எவரும் கூறாமல் நபித்தோழர்களின் அடுத்த காலத்தவர்கள் தான் அறிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் அது நடந்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களால் எப்படி அறிவிக்க முடியும் என்று கேட்கிறார் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள்.
ஒன்றிரண்டு அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் அடுத்தடுத்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இல்லை என்றும் இப்னு கஸீர் மேலும் கூறுகிறார்.
ஆதாரமற்ற இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத் தான் ஆதாரப்பூர்வமானது என்கிறார் ராம்ஸ்வர்ப். இவர் எடுத்து வைக்கும் ஆதாரமே பொய் என்று ஆகிவிடும் போது அதனடிப்படையில் அவர் எழுப்பிய கேள்வியும் புலமை சான்ற கேள்வி (?) என்ற நிலையிலிருந்து இறங்கி விடுகின்றது.
அல்லாத், அல் உஸ்ஸா மற்றும் மனாத் பற்றி இன்று நாம் காணுகின்ற 53:19-23 வசனங்களைத் தவிர வேறு எதுவும் குர்ஆனில் அருளப்படவில்லை.
இந்தக் கதை உருவாக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதையும் அறிந்து கொள்வது இங்கே அவசியமாகும்.
'அன்னஜ்மு' என்ற 53-வது அத்தியாயத்தை (அதாவது அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயத்தை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியபோது ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும், நபியின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி 'புகாரி' நூலில் இடம்பெறுகின்றது.
இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் நபியுடன் அவரது எதிரிகளும் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படுகின்றது. நபியுடன் சேர்ந்து நபியின் எதிரிகள் எப்படி ஸஜ்தா செய்திருப்பார்கள்? அவர்கள் ஸஜ்தா செய்யும் அளவுக்கு நபியுடன் ஒத்துப்போனார்களென்றால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நபி ஏதேனும் சொல்லி இருக்க வேண்டும். அவர்களின் தெய்வங்களைப் பற்றி புகழ்ந்து நபி ஏதேனும் சொல்லி இருந்தாலே அவர்கள் ஸஜ்தா செய்திருக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதை புனையப்பட்டது.
நபியின் எதிரிகள் நபியுடன் சேர்ந்து ஸஜ்தா செய்யக் காரணம் தான் என்ன? என்ற ஐயம் சிலருக்கு எழலாம்.
நபியின் எதிரிகள் பல்வேறு கடவுளர்களை நம்புபவர்களாக இருந்தாலும் அவைகளைக் கடவுளர்களாக எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக மிகப் பெரிய கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் தான் அல்லாஹ் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது.
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நபியே நீர்அவர்களைக் கேட்டால்' அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள் அல்குர்ஆன் (31:25)
மேலும் (29:61, 29:63, 39:38, 43:9, 43:87, 10:18, 39:3) ஆகிய வசனங்களிலும் மக்கத்து மாந்தர்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்ற விபரம் கூறப்படுகிறது.
அன்னஜ்மு அத்தியாயத்தில் இடம் பெறும் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் கூறப்படும் வசனத்தை ஓதியபோது நபிகள் ஸஜ்தா செய்யவில்லை. மாறாக அந்த அத்தியாயத்தின் கடைசியில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்! வணங்குங்கள்!! என்று வருகின்ற வசனத்தை ஓதும்போது தான் நபிகள் ஸஜ்தா செய்தார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வது நபிகளின் எதிரிகளுக்கும் உடன்பாடு என்பதால் அவர்களும் சேர்ந்து ஸஜ்தா செய்தனர்.
ஸஜ்தா செய்யுங்கள்! எனக் கட்டளையிடும் வசனங்களில் முதன் முதலில் அருளப்பட்டது அன்னஜ்மு அத்தியாயத்தில் உள்ள வசனமாகும். அதற்காக நபிகள் ஸஜ்தா செய்த போது நபிகளின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர்.
அப்துல்லா எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 53:19 23 வசனத்தின் போது ஸஜ்தா செய்யவில்லை, அதன் இறுதி வசனத்தின் போதே ஸஜ்தா செய்தார்கள் என்று இதிலிருந்து அறியலாம்.
53:1923 வசனத்தின் போது ஸஜ்தா செய்தார்கள் என்று சிலர் எவ்வித ஆதாரமுமின்றி நம்பிக் கொண்டு, அதற்கு ஒரு காரணத்தையும் சிருஷ்டித்து விட்டார்கள். அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அந்தப் பொய்யான காரணம் தான்' ராம்ஸ்வர்ப்' எடுத்துக் காட்டும் அந்தக் கதை.
ரஷ்டியும், ராம்ஸ்வர்ப்பும் எடுத்துக் காட்டிய செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஆகிவிடும் போது அதன் அடிப்படையில் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அடிபட்டு அர்த்தமற்றுப் போகின்றன.
மேற்கூறிய அந்தப் பொய்யான நிகழ்ச்சியின் மூலம் ராம்ஸ்வர்ப் எழுப்பிய கேள்வி என்னவென்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
நபிக்கு ஷைத்தானிடமிருந்தும் வஹி வந்ததை ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது எப்படி? என்பதே அந்தக் கேள்வி.
நபிகளுக்கு ஷைத்தான் உதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறும் அந்தச் செய்தி பொய் என்று நிரூபணமான பின் பிரித்தறிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லாத ஒன்றைப் பிரித்தறிய வழி முறையைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டிய அந்தச் செய்தி பொய் என்பதை ஏராளமான குர்ஆன் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.
முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக் கரத்தால் அவரைப் பிடித்து அவரது நாடி நரம்புகளைத் துண்டித்திருப்போம்.
(அல் குர்ஆன் 69:44)
நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம்.
(அல்குர்ஆன் 15:9)
ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத்திரட்டி (உம் உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும்.
(அல்குர்ஆன் 75:16)
முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு இல்லை.
(அல்குர்ஆன் 53:3)
இந்த வசனங்கள் யாவும் வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக்குகின்றன.
ஷைத்தான் குறுக்கிட்டு எதையும் சேர்த்துவிட முடியாது என்று அறைகின்றன.
இன்னும் தெளிவாக இது விரட்டப்பட்ட ஷைத்தானுடைய சொல் அல்ல (81:25) எனவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
இதை ஷைத்தான்கள் இறக்கியருளவில்லை, அவர்கள் அதற்கு சக்தி பெறவும் மாட்டர்கள். (26:210) என்றும் குர்ஆன் கூறுகிறது
ஷைத்தான்களால் உதிப்பு ஏற்படுத்தப்படும் என்பதை முற்றாக இந்த வசனங்கள் நிராகரிக்கும் போது ஆதாரமற்ற பொய்யான ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று முத்திரை குத்தி 'ராம்ஸ்வர்ப்' தன் கேள்வியை எழுப்புகின்றார்.
நபிகள் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டார்கள் என்ற தன் கூற்றுக்கு திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார்.
முஹம்மதுக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் இறைவன் அவற்றை முறையாக ரத்து செய்து விட்டான் என்று குர்ஆனுடைய 22:52 வசனம் கூறுவதாக ராம்ஸ்வர்ப் கூறுகிறார்.
அவர் குறிப்பிட்டது. போல் குர்ஆன் கூறுமானால் ராம்ஸ்வர்ப் உடைய கேள்வி புலமை சான்ற கேள்வி என்பதில் ஐயமில்லை. ஆனால் திருக்குர்ஆன் அவ்வாறு கூறவே இல்லை. ஒரு சிலர் செய்துள்ள தவறான மொழிபெயர்ப்பை நம்பி அவர் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்.
அல்குர்ஆன் 22:52 வசனத்திற்கு எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவரது உள்ளத்தில் ஷைத்தான் உதிப்பு ஏற்படுத்தாமல் இருந்ததில்லை; ஆனால் ஷைத்தான் ஏற்படுத்திய உதிப்பை அல்லாஹ் அகற்றி தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்று சிலபேர் மொழியாக்கம் செய்துள்ளனர்.
அதுதான் ராம்ஸ்வர்ப்புடைய இந்தக் கேள்விக்குக் காரணம்.
உண்மையில் அந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராம்ஸ்வர்ப்புக்கு ஏற்படக்கூடிய ஒரு சந்தேகத்தை நாம் நீக்கி விடுவோம். இவரைப் போன்றவர்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் 'புலமை சான்ற கேள்வி (?) கேட்டுவிட்டதால் மொழிபெயர்ப்பு தவறு என்று நாம் சமாளிப்பதாக அவர் எண்ணக்கூடும். அவருக்கு அந்த சந்தேகம் வரத் தேவையில்லை. நாம் சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாக இப்போதைய அகராதிகளைக் காட்ட மாட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நபித்தோழர்கள் சொன்னதையே சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாகத் தருவோம். தவறான மொழி பெயர்ப்புச் செய்தவர்கள் -அவரது உள்ளத்தில் - என்று குறிப்பிட்ட இடத்தில் - மூலத்தில் -'உம்னிய்யத்'- என்ற பதம் உள்ளது.
'உம்னிய்யத்' என்ற வார்த்தைக்கு அவர் அறிவித்த செய்தியில் என்பதே பொருளாகும் என்று நபிகளின் அன்புத் தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர்.
புகாரியில் இது இடம் பெற்றுள்ளது.
அவரது மாணவர் முஜாஹித் அவர்களும், தபரீ அவர்களும் இதே பொருளையே தருகிறார்கள். நபித்தோழர்கள் 'உம்னிய்யத்' என்ற வார்த்தைக்குச் செய்துள்ள பொருளின் அடிப்படையில் அந்த வசனத்தில் பொருள் என்னவென்று பார்ப்போம்.
எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவர் அறிவித்த செய்தியுடன் ஷைத்தான் எதையும் சேர்க்காது இருந்ததில்லை; ஷைத்தான் சேர்த்தவற்றை அகற்றி அல்லாஹ் தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்பதே அதன் பொருளாகும்.
அதாவது எந்த ஒரு தூதரும் இறைச் செய்தியை மக்களுக்குக் கூறினால் அவர் கூறிய செய்தியில் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்த்துக் கொள்வர். இறைவன் அவற்றை அடையாளம் காட்டி தன் வசனங்களை உறுதி செய்வான் என்று உத்திரவாதம் தருகிறது அந்த வசனம்.
நபிகளிடம் இறைச்செய்தியை எழுதுபவராக இருந்த 'அப்துல்லாஹ் இப்னு ஸஃது' என்பவர் நபி சொன்னதற்கும் அதிகமாக அவராகவும் சில வார்த்தைகளைச் சேர்த்து எழுதிக் கொள்வார். நபி அவர்கள் அதைக் கண்டுபிடித்து அகற்றுகிறார்கள் என்பதை ராம்ஸ்வர்ப் தன் மூன்றாவது கேள்வியில் ஒப்புக்கொள்கிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்கள் கைச்சரக்கைச் சேர்த்துவிட முயன்றனர் அவை அந்தக் கால அறிஞர்களால் அடையாளம் காட்டப்பட்டன. 'ராம்ஸ்வர்ப்' போன்றவர்கள் திருக்குர்ஆனில் உள்ளதாக எதையாவது சொந்தமாகக் கூறினால் இன்றைய அறிஞர்களாலும் அவை வெளிச்சம் போட்டு காட்டப்படும்.
இந்த இடத்தில் 'ராம்ஸ்வர்ப்' போன்றவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படக் கூடும் 22:52 வசனத்தில் 'ஷைத்தான்' என்று தான் கூறப்படுகிறது. மனிதர்கள் சொந்தமாகச் சேர்ப்பதைப் பற்றி அல்லவே என்பது தான் அந்தச் சந்தேகம்.
திருக்குர்ஆன் அனேக இடங்களில் ஷைத்தான் என்ற பதத்தை வழி கெட்ட மனிதர்களுக்கும் பயன்படுத்தி இருக்கின்றது.
(பார்க்க! அல்குர்ஆன் 6:112, 2:14)
ஹதீஸ்களிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.
ராம்ஸ்வர்ப் தேடிப் பார்த்துச் சிரமப்படாமலிருக்க அவரே குறிப்பிட்டுள்ள ஒரு ஹதீஸைத் தருவோம். நபிகள் ஒரு கவிஞனைக் கண்டபோது இந்த ஷைத்தானைப் பிடியுங்கள் என்று கூறியதாக 'ராம்ஸ்வர்ப்' குறிப்பிடுகிறார். (அது பிறகு வருகின்றது.)
இதில் மனித இனத்தைச் சேர்ந்த ஒரு கவிஞனை நபிகள் 'ஷைத்தான்' என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ஆக இந்த வசனம் 'ஷைத்தான் நபியின் உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்துவான். அவர் அதை இறைவனின் வஹி என்று எண்ணிக் கூறிவிடுவார் என்று கூறவே இல்லை. மாறாக நபி இறைச் செய்தியை மட்டுமே கூறுவார்.
அவர் கூறிய இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்ப்பர்; அது இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு அகற்றப்படும் என்பதே பொருளாகும்.
'ராம்ஸ்வர்ப்' தன் புலமை சான்ற கேள்விக்கு ஆதாரமாகச் சமர்ப்பித்த ஹதீஸ் பொய்யானது; அவர் எடுத்து வைத்த குர்ஆன் வசனத்தின் பொருள் தவறானது என்று ஆகும் போது அவரது கேள்விக்கு எவ்வித ஆதாரமும் இல்லாது போய்விடுகின்றது.
கேள்வி:2
அவருக்கு இறைவனிடமிருந்து வஹி வருகிறது என முதன் முதலில் நம்பியவர் அவருடைய முதலாளியும், முதல் மனைவியுமான கதீஜா தான். ஆனால் இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறான் போலும் என்று அவருடைய நேசத்துக்குரிய மனைவி ஆயிஷாவே அடிக்கடி அவரை கிண்டல் செய்திருக்கிறார். மேலும் தான் முஹம்மதுக்குக் கொடுத்த அறிவுரைக்கேற்ப மூன்றுமறை நபிக்கு வஹீ வந்ததாக உமர் பெருமையடித்துக் கொண்டார். இது உமருக்குத் திருப்தியளித்திருக்கலாம். ஆனால் பலருடைய உள்ளங்களில் வினாக்களை எழுப்பிவிட்டது என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:2
இந்த மூன்று நிகழ்ச்சிகளை இறைவேதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவர் தரும் அடுத்த சான்றுகளாகும்.
கதீஜா (ரலி) அவர்கள் தான் முதலில் விசுவாசம் கொண்டார்கள்; அதை நாம் மறுக்கவில்லை. கதீஜா (ரலி) முதலில் விசுவாசம் கொண்டதால் இறைவேதம் என்று குர்ஆனை நம்புவதற்கு என்ன தடை இருக்கிறது?
கணவருக்குப் பயந்து கொண்டு விசுவாசம் கொண்டிருக்கலாம் என்று சொல்ல வருகிறாரோ என்னவோ தெரியவில்லை. கதீஜா (ரலி) முதன்முதலில் விசுவாசம் கொண்டது அவர் இறைத் தூதர் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்யுமே தவிர அந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தாது.
(அ) கதீஜா ஒரு பெண். பொதுவாகவே பெண்கள் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை எளிதில் விட முன்வர மாட்டார்கள். புதிய கருத்துக்களை ஏற்பதற்கு ரொம்பவும் தயக்கம் காட்டுவார்கள். தன்னுடைய பாரம்பர்யமான கொள்கையைத் தகர்த்தெறியும் புதுக் கொள்கையை கணவர் சொன்னவுடன் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவரிடம் இறைத் தூதருக்கான அனைத்து அம்சங்களும் இருந்ததால் மட்டுமே அது சாத்தியமாயிற்று.
(ஆ) கதீஜா அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்தார்கள்; அவர்களின் செல்வத்தில் தான் நபிகளின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. இது போன்ற நிலைமையில் கணவன் மீதுள்ள மதிப்பு தானாகவே சரிந்து போய்விடுவதை உலகில் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வத்தில் காலங்கழிக்கும் தன் கணவரை அவமதிப்புச் செய்வதற்கு பதிலாக, அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றே மிகமிக உயர்வான மதிப்பை வழங்கினார்கள் என்றால் நபியிடம் அதற்கான சிறப்புத் தகுதிகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
(இ) முஹம்மதை விட வயதில் மூத்தவரான கதீஜா தன்னைவிட மூத்தவர் என்ற மரியாதைக்காக இறைச் செய்தியை நம்பினார்கள் என்றும் சொல்ல முடியாது.
(ஈ) வெளி உலகில் நல்லவனாக, உத்தமனாக நடிக்கின்றவர்கள் தமது வீட்டில் அப்படி நடிக்க முடியாது. ஒருவனுடைய உண்மையான நடத்தையை மற்றவர்களை விட அவனது மனைவி தான் நன்றாக அறிய முடியும். அவனுடைய எல்லா பலவீனங்களும், கெட்ட குணங்களும் மனைவிக்குத் தெரிவது போல் எவருக்கும் தெரிய முடியாது. பதினைந்து ஆண்டுகள் நபியுடன் வாழ்க்கை நடத்திய கதீஜா அவர்கள் அவருடைய அப்பழுக்கற்ற, நேர்மையான, உள்ளேயும் வெளியேயும் ஒரே விதமாக வாழுகின்ற வாழ்க்கையைப் பார்த்துத் தான் அவர் இறைத்தூதர் என்றதும் ஏற்றுக் கொள்கிறார்கள். நபியின் பரிசுத்த வாழ்க்கைக்குச் சான்றாக அமைந்த கதீஜாவின் விசுவாசத்தை சம்மந்தமில்லாமல் இங்கே குறிப்பிடுகிறார் ராம்ஸ்வாப்.
இனி ஆயிஷா அவர்களின் விஷயத்துக்கு வருவோம். அதில் ராம்ஸ்வாப் சொந்தச் சரக்கைக் கலந்துவிட்டு அதனடிப்படையில் தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார். நீ விரும்பும் பெண்களை மணந்து கொள்ளலாம் என்ற வசனம் இறங்கிய போது உங்கள் ஆசையை உங்கள் இறைவன் விரைந்து நிறைவேற்றுகிறான் என்றே நான் கருதுகிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வசனம் இறங்கியதைத் தான் இங்கே ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா அவர்களின் இந்தக் கூற்றை இவர் எப்படி உருமாற்றி விட்டார் தெரியுமா? இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறானோ என்று ஆயிஷா அடிக்கடி நபியைக் கிண்டல் செய்திருக்கிறார் என்று ராம்ஸ்வர்ப் கூறுகிறார்.
'அடிக்கடி', 'கிண்டல்' இவருடைய வசதிக்காகவே என்ற வாசகங்கள் ராம்ஸ்வர்ப் உடைய கைசரக்குகள். இது தான் புலமை சான்ற கேள்வியா? இது வடிகட்டிய பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
ஒரு தந்தை தன் மகனுடைய ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் போது உன் தந்தை உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அக்கரையாக இருக்கிறார் என்று கூறுவதற்கு என்ன நிலையோ அதே நிலைதான் ஆயிஷாவின் கூற்றுக்கும் உண்டு.
இந்தத் தில்லுமுல்லுகளை ராம்ஸ்வர்ப் ஏன் செய்திருக்கிறார் தெரிகிறதா? இவருடைய வசதிக்காகவே - குர்ஆன் இறங்கியது என்றால், இறைவனுடைய செய்தி அல்ல அது. இவர் தனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதை இறைவன் கூறுவதாகச் சொல்லி விடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்த ஒட்டுவேலையின் நோக்கம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவரே இவருக்கு முரண்பட்டுக் கொள்கிறார். ஆயிஷாவுடைய சொல்லை சிதைத்ததன் மூலம் அவரது விருப்பத்திற்கேற்பவே குர்ஆன் இறங்கியது என்று சொல்லவரும் ராம்ஸ்வர்ப், அவருடைய விருப்பத்துக்கு மாறாக -அவருடைய தோழர்களில் ஒருவராகிய உமருடைய விருப்பத்திற்கேற்பவே மூன்று விஷயங்களில் வஹி வந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்று வசனங்கள் இறங்கியது வினாக்களை எழுப்பிவிட்டதாம். ஆயிஷா அவர்கள் கூற்றிலிருந்து எழும் வினாவுக்கு விடையாக அமைந்துள்ளதை அவர் வினா என்கிறார்.
ஆயிஷா அவர்களின் கூற்றைத் தேடிப்பிடித்து அதில் ஒட்டுவேலைகள் செய்த ராம்ஸ்வர்ப் அதே ஆயிஷாவின் மற்றொரு கூற்றையும் கவனித்திருந்தால் முறையாக இருக்கும்.
33:37 வசனத்தைப் பற்றி ஆயிஷா குறிப்பிடும் போது முஹம்மது இறை வேதத்தில் எதையும் மறைப்பவராக இருந்திருந்தால் தன்னைக் கண்டிக்கும் இந்த வசனத்தைத் தான் மறைத்திருக்க முடியும் என்று கூறுவதன் மூலம் அவர்களின் வசதிக்காகவே குர்ஆன் இறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று மறுக்கிறார்கள். நபிகளின் விருப்பத்துக்கு மாறாக ஒன்றல்ல இரண்டல்ல! நூற்றுக்கணக்காண வசனங்கள் இறங்கியுள்ளன.
தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டுமென நபிகள் பெரிதும் விரும்பினார்கள்.
நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.
உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். உமக்கு அதிகாரத்தில் யாதொரு பங்குமில்லை (3:128) என்ற வசனம் அப்போது இறங்கியது.
குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1) வசனம் இறங்கியது.
செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம் என்று நபிகள் விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.
கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள் பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பத்துக்கு ஏற்ப வசனங்கள் இறங்கின.
நோன்பு நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள். அவற்றைச் செய்யுமாறு அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது. இவையெல்லாம் நபியின் விருப்பத்திற்குகேற்றவாறு தான் எல்லா வசனங்களும் இறங்கின என்ற ராம்ஸ்வர்புடைய சந்தேகத்தைத் தரைமட்டமாக்குகின்றன.
கேள்வி:3
முஹம்மது நபி மக்காவில் இருந்த போது, அவருக்கு எழுத்தராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸஃது பற்றி ஹதீஸ் கூறுகிறது. நபி சொன்னபடி அவர் இறைவழிபாட்டை எழுதிக் கொள்வார். நபி சில சமயங்களில் பாதியில் நிறுத்தி விடுவார். அப்போது அந்த எழுத்தர் வார்த்தைகளைப் போட்டு நிரப்புவார். அவர் சேர்த்து எழுதிய வார்த்தைகளும் இறைவேதத்துடன் ஒன்றிவிட்டதைக் கண்டு அவர் குழப்பமுற்றார். இது அவருடைய உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. இதைப் பற்றி பலரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். இஸ்லாத்தையும் கை விட்டார். முஹம்மது இதற்காக அவரை மன்னிக்கவே இல்லை. இருபது வருடங்கள் கழித்து நபி மக்காவை வெற்றி கொண்டபோது அப்துல்லாவை சிரச் சேதம் செய்யுமாறு கட்டளையிட்டார். நபியின் மருமகனும், அப்துல்லாவின் பால் குடிச் சககோதரருமான உஸ்மானின் சிபாரிசின் பேரில் காப்பாற்றப்பட்டார். நபியிடம் உஸ்மான், அப்துல்லாவைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டபோது நபி நீண்ட பொழுது மௌனமாக இருந்தார். பிறகு சரி என்று சொன்னதாகவும், உஸ்மான் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு நபி தம்மைச் சூழ்ந்திருந்த தோழர்களை நோக்கி நான் ஏன் அவ்வளவு நேரம் மவுனமாக இருந்தேன் தெரியுமா? அந்த இடைவெளியில் உங்களில் எவராவது எழுந்து அவருடைய தலையைக் கொய்துவிட மாட்டீர்களா? என்ற எண்ணத்தில் தான் மவுனம் சாதித்தேன் என்று சொன்னார். இப்னு இஸ்ஸாக் இவ்வாறு கூறுகிறார்.
பதில்:3
இரண்டு நோக்கங்களுக்காக இந்தச் செய்தியை ராம்ஸ்வர்ப் எடுத்துக் காட்டுகிறார்.
(1)இறை வேதத்துடன் மனிதர்களும் தங்கள் கைச்சரக்கைச் சேர்த்து விட்டார்கள் என்று நிரூபிப்பது
(2) நபி மிகவும் மோசமான குணம் கொண்டவர். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி யாராவது கொன்று விடமாட்டார்களா? என்று எதிர்பார்த்ததன் மூலம் கீழ்த்தரமான எண்ணங்களையே நபி கொண்டிருந்தார் என்று காட்டுவது.
இப்னு இஸ்ஹாக்கும், அபூதாவூத் போன்றவர்களும் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தாலும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் சிலர் நம்பகமற்றவராகவும், வேறு ஒருவர் அலி (ரலி) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பும் ஷியாக்களின் தலைவராகவும் இருக்கிறார். அவர்களால் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்லவே அல்ல.
உண்மையில் இது பற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தி இவ்வளவு தான்:-
அப்துல்லாஹ் இப்னு ஸஃது என்பவர் அல்லாஹ்வின் தூதரிடம் எழுத்தராக இருந்தார். ஷைத்தான் அவரை வழி கெடுத்து விட்டான். அவர் காஃபிர்களுடன் சேர்ந்து கொண்டார். மக்கா வெற்றியின் போது அவரைக் கொன்று விடுமாறு நபி கட்டளையிட்டார்கள். அவருக்காக உஸ்மான் அடைக்கலம் கோரிய போது உடனே அடைக்கலம் தந்தார்கள்.
இது தான் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூத், நஸயீ ஆகியநூல்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் அடைக்கலம் கேட்டவுடனே அடைக்கலம் தந்ததாக உள்ளது. ஆதாரப்பூர்வமான இந்தச் செய்தியுடன் அந்தச் செய்தி முரண்படுவதாலும் அதன் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாததாலும் அந்தச் செய்தியின் அடிப்படையில் 'ராம்ஸ்வர்ப்' கருதுகின்ற இரண்டாவது நோக்கம் அடிப்பட்டுப்போகின்றது.
இவரை யாராவது கொன்று விட மாட்டீர்களா என்ற அளவுக்குக் கடுமையான வார்த்தையை நபி பிரயோகம் செய்திருந்தால் - அவரை மனப்பூர்வமாக மன்னிக்கவில்லை என்று ஆகின்றது. மனப்பூர்வமாக அவரை நபி மன்னித்திருக்காவிட்டால், சம்மந்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸஃது அவர்கள் மனந்திருந்தி திரும்பவும் இஸ்லாத்தில் இணைந்திருக்க மாட்டார். அவரது பிற்கால வாழ்க்கை இஸ்லாத்தின் மீதும், இறைத்தூதர் மீதும் இருந்த அளவு கடந்த நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
எகிப்துடன் நடந்த போரில் முஸ்லிம்களின் அணியில் இவர் பங்கெடுத்துக் கொண்டார். அதன் வெற்றிக்கு துணை நின்றவர்களில் பிரதானமானவராக அவர் இருந்தார். பல போர்க்களங்களில் பாராட்டப்படும் சாதனைகள் பல புரிந்தார். எகிப்து நாட்டின் நிர்வாகியாகவும் சில காலம் இருந்தார்.
அலி முஆவியா இருவருக்கிடையில் பூசல்கள் தோன்றிய போது எப்பக்கமும் சாராமல் இவர் நடுநிலை வகித்தார் என்று இப்னு யூனுஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்,
ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட படைக்கு இவர் தளபதியாகச் சென்று ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டார் என்று இப்னு ஸஃது என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
இஸ்லாமிய முக்கிய கடமையாக உள்ள தொழுகையை -வைகறைத் தொழுகையை -நிறைவேற்றி முடிந்ததும் இவரது உயிர் பிரிந்தது என்று புகாரி, பகவி ஆகியோர் கூறுகின்றனர்.
இந்த சரித்திரக் குறிப்புகள் அவருக்கு இஸ்லாத்தின் மீது இருந்த காதலுக்கு சான்றாக அமைந்துள்ளன. நபி இவரைப் பற்றி அந்த வார்த்தையைக் கூறி மனப்பூர்வமாக மன்னித்திருக்கா விட்டால் இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக அவர் நடந்து கொண்டிருக்க முடியாது என்று சிந்தனையாளர்கள் உணரலாம்.
இறைச் செய்தியுடன் தன் சொந்தச் சரக்கையும் சேர்த்துவிடுவார் என்ற கருத்தும் பொய்யானதாகும். ஏனெனில் நாம் குறிப்பிட்ட ஆதாரப்பூர்வமான அந்தச் செய்தியில் அந்த விபரம் இல்லை. நபியின் எழுத்தராக இருந்த என்ற வாசகம் அவரைப் பற்றி அறிமுகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் தானே தவிர, வஹியில் கலப்படம் செய்தவர் என்று காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் அல்ல. வஹியை எழுதுபவராக இருந்த அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. சொந்தச் சரக்கைச் சேர்த்தார் என்ற விபரமெல்லாம் அதில் இல்லை. எனவே ராம்ஸ்வர்புடைய முதல் நோக்கத்திற்கும் அடிப்படையில்லாமல் போய் விடுகின்றது.
'வஹியில் அவர் கலப்படம் செய்தார்' என்று ஒரு வாதத்துக்காக பொருள் செய்தாலும், ராம்ஸ்வர்புடைய கருத்துக்கு அதில் ஆதாரம் எதுவுமில்லை. ஏனெனில் வஹியில் அவர் செய்த கலப்படத்தைத் தான் நபி கண்டுபிடித்து அகற்றி விடுகிறாரே! வஹியில் யாரேனும் கலப்படம் செய்தால் இறைவனின் தூதருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு விடும் என்றுதான் அதில் விளங்க முடியுமே தவிர, ராம்ஸ்வர்ப் விளங்குவது போல் விளங்க முடியாது.
கேள்வி:4
பல கடவுள் கொள்கைக்குப் பதிலாக முஹம்மது ஒரு கடவுள் கொள்கை வந்த போதும் இவரது இந்த வேத வெளிப்பாட்டினால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. மதத்தில் ஒரு ஆழமும், கடவுள் கொள்கையில் ஒரு தீர்க்கமும், மக்களின் பழக்க வழக்கங்களில் ஒரு உயர்வும் ஏற்படவில்லை என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:4
இவரது இந்த வாதத்துக்கு இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு பாமரன் கூட பதில் சொல்ல முடியும். அவ்வளவு முட்டாள் தனமான கூற்றை இவர் எடுத்து வைக்கிறார். உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும் வித்தியாசங்களைக் கூட உணர முடியவில்லை என்றால் ஷைத்தான் இவருடைய உள்ளத்தில் தான் உதிப்பை ஏற்படுத்தி இருக்கிறான் என்று அர்த்தம்.
யானையை, பன்றியை, ஆட்டை, மாட்டை மாட்டின் சானத்தை, அதன் மூத்திரத்தை, பல்லியை, மூஞ்சூறை, கல்லை, மண்ணை, மரத்தை எல்லாம் கடவுளர்களாக எண்ணி அதற்கு போய் சாஷ்டாங்கம் செய்து கொண்டிருந்த சமுதாயத்தை அந்த மூடக் கொள்கையிலிருந்து விடுவித்து இவற்றையெல்லாம் விட மனிதன் உயர்ந்தவன். மனிதனைப் படைத்த இறைவன் உயர்ந்தவன் என்று நிரூபித்துக் காட்டியது மாபெரும் புரட்சி இல்லையா?
கடவுளுக்கும் மனைவியர், மக்கள், அவர்களுக்குள்ளேயும் சண்டைகள், பிறன் மணை நோக்குதல், திருடுதல், விபச்சாரம் புரிதல், பொய் சொல்லுதல், உறங்குதல், உண்ணுதல் போன்ற மனிதனிடம் காணப்படும் எல்லா பலவீனங்களும் உண்டு என நம்பி, மனிதனை விடவும் மட்டமானவராகக் கடவுளை நம்பிக்கொண்டிருந்ததை மாற்றியமைத்து, கடவுள் எல்லா பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று பறைசாற்றியது கடவுள் கொள்கையில் தீர்க்கமானதாக இவருக்குத் தென்படவில்லையா?
ஆதீனங்கள், மடங்கள், அவற்றின் பூசாரிகள், கடவுளின் புரோக்கர்கள், அவர்கள் உருவாக்கிய ராகு , எமகண்டம், ஜோசியம், ஜாதகம் , மாயம், மந்திரம், திதி, திவசம், தாரை வார்த்துக் கொடுத்தல், தாயத்து, தட்டு, தகடு போன்ற எல்லா சடங்குகளையும் அடியோடு அகற்றிக் காட்டியது! ஒரு ஆழமில்லையா?
காவி உடைக்குள்ளேயும் கமண்டலத்திலும் மனித உயர்வைத் தேடிக் கொண்டிருந்த மக்களை, நல்லொழுக்கப் பண்பாடுகளே மனித உயர்வுக்குக் காரணம் என்று உணர வைத்து அவர்களை அதற்கேற்ப மாற்றியமைத்தது அந்த வேத வெளிப்பாடு செய்த மறுமலர்ச்சி அல்லவா?
இறை வேதங்களை சில ஜாதியினர் தங்கள் காதுகளால் கூட கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவர்களின் காதுகளில் ஊற்ற வேண்டுமென சட்டமியற்றிக் கொண்டு மனித சமுதாயத்தில் ஒரு பெரும் பகுதியினரை மிருகத்திலும் கீழாக நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் அனைவரும் சமமே என்று உரத்துச் சொல்லி, வேதத்தை முழு மனித சமுதாயத்துக்கும் பொது உடைமையாக ஆக்கியதை முஹம்மதுக்கு அருளப்பட்ட அந்த வேதத்தைத் தவிர வேறு எந்த வேதம் செய்து காட்டியது?
மது, மங்கை, சூது, ஆடல் பாடல்களில் காலத்தைக் கழித்தும் கொண்டிருந்த மாக்களை அதிலிருந்து விடுவித்தும், நாடோடிகளை நாடாள்வேராகச் செய்ததும், நேர்மை, ஒழுக்கம், பண்பாட்டுக்கு முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்கிக் காட்டியதும் அந்த வேதம் செய்த பாதிப்பில்லையா?
ஒரு சமுதாயம் தன்னுடைய எல்லாப்பழக்க வழக்கங்களையும் சுத்தமாகத் துடைத்து எறிந்து விட்டு முற்றிலும் மாறுபட்ட புதிய கலாச்சாரத்தைத் தழுவிக் கொண்டதும், இவரது கண்களில் படவில்லையானால் கோளாறு இவரது கண்களில் தான் உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லித் தந்தது என்று தன்னுடைய அடுத்த கேள்வியில் குறிப்பிடுகிறார். முரண்பாட்டின் மொத்த உருவமாக ஒருவர் திகழ முடியுமென்றால் ராம்ஸ்வர்ப்பைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.
கேள்வி:5
போர், சமாதானம், கனீமத்தைப் பங்கிடுதல் வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள், எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது; இதனால் சல்மான் ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப் பரிகசிக்கிறார் என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:5
ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லித் தருவது முட்டாள்களின் பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதைப் பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது.
கடவுள் பன்றி உருவம் எடுப்பது, மீனும், மனிதனும் இணைந்து மனிதப் பிள்ளையைப் பெற்றெடுப்பது, யானை முகமும் மனித உடலும் கொண்ட விசித்திரப் படைப்பு, ஐந்தாறு கைகள், ஆறேழு முகங்கள் கொண்ட அதிசய உருவங்கள். இவைகளையே வேதத்தில் பார்த்துப் பழகி வந்தவர்களுக்கு முஹம்மதுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுக்கு பரிகசிப்பாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இவை தான் வேதத்தின் இலக்கணம் என்ற நம்பிக்கையுடையோர் நன்றாகப் பரிகசிக்கட்டும்!
கேள்வி:6
கவிஞர்களைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் முஹம்மது மிக மோசமாக நினைத்திருந்தார். அவர் குர்ஆனை வழங்கியதற்காக மக்கள் அவரைக் கவிஞர் என்று கவுரவித்ததை அவர் நிராகரித்தார். தன்னை நபி என்றே மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஒரு கவியுடைய கவிதையைக் கேட்ட போது அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! ஒருவனுடைய வயிற்றில் சீழ் நிரம்பியிருப்பதை விட அவனுடைய உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பது மோசமானது என்று முஹம்மது சொன்னதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. மக்கத்துப் பரத்தையரையும், கவிஞர்களையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும் போது எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று முஹம்மது கூறியதாக ரஷ்டியின் புத்தகத்தில் காணப்படுகின்றது. மறு புறமோ முஹம்மது தன்னுடைய தத்துவத்தைப் போற்றுவதற்காகவும், தனது வெற்றியை உயர்த்துவதற்காகவும், எதிரிகளை பழிப்பதற்காகவும் கஃபு இப்னு மாலிக், ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸூஹைர் போன்ற கவிஞர்களை அமர்த்திக் கொண்டார். அவர்களுக்கு தாராளமாக செல்வத்தையும், அடிமைப் பெண்களையும் பரிசில்களாக வழங்கினார்.
பதில்:6
நபியின் காலத்தின் அரபுலகிலும், உலகின் பல பகுதிகளிலும் கவிஞர்களுக்கு இருந்த மதிப்பு அளவிடற்கரியதாக இருந்தது. எழுதவும், படிக்கவும் தெரிந்திராத அன்றைய மக்கள், கவிஞர்களை உன்னதமானவர்களாக, தெய்வீக அம்சம் கொண்டவர்களாக, மனிதப் புனிதர்களாக, உத்தமர்களாக எண்ணி மதித்து வந்தனர். இந்தக் கவுரவத்தை எழுதவும் படிக்கவும் அறியாத அந்த நபிக்கு வழங்க முன்வந்த போது அதை நிராகரித்து விட்டார் என்றால் அது தான் அந்த நபியின் தனித்தன்மை.
அவர் உண்மையாளர்; பதவி, புகழுக்காக இவ்வாறு அவர் வாதிடவில்லை என்பதற்கு அது மகத்தான சான்றாகவும் அமைந்துள்ளதை நியாய உணர்வுடன் சிந்திப்பவர்கள் அறிய முடியும். அந்தக் கவுரவத்தை நிராகரித்துவிட்டு, எதைச் சொன்னால் மக்கள் எதிர்ப்பார்களோ, துன்பம் தருவார்களோ, கொலை செய்யவும் கூட முயற்சிப்பார்களோ நாடு கடத்தத் துணிவார்களோ அந்த 'நபி' என்ற தகுதியை - அன்றைய மக்கள் நம்ப மறுத்து இழிமொழி பேசிய நபி என்ற தகுதியை - வாதிட்டு அந்தத் துன்பங்களை எதிர்கெண்டாரே அது அவரது நபித்துவத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. 'கவிஞன்' என்ற தகுதியை அவர் மறுத்தது அவரது பலமாகவே உள்ளது. அதை பலவீனமாகக் காட்ட எண்ணுகிறார் ராம்ஸ்வர்ப்
'எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமுமில்லை' என்று முஹம்மது கூறியதாக ரஷ்டி குறிப்பிடுவது பச்சைப் பொய், அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. கவிஞர்களைப் பற்றி நபி (ஸல்) ராம்ஸ்வர்ப் குறிப்பிட்டப்படி மிகமிக மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததில்லை. கவிதை என்ற பெயரால் காம உணர்வைத் தூண்டி விடுவதையும், பெண்களின் அங்கங்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதையும், மதுபானங்களையும் போதைப் பொருட்களையும் வர்ணித்துப் பாடுவதையும், தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவனை அவனது குலத்தை - கோத்திரத்தை - உருவத்தை - விமர்சிக்கும் கவிஞர்களையும் தான் நபிகள் கண்டித்துள்ளார்கள். அத்தகைய கவிஞர்களையே ஷைத்தான் என வர்ணித்தார்கள்.
அத்தகைய கவிதைகளையே சீழை விடவும் மோசமானது என்றனர்.
'லபீத்' என்ற இஸ்லாத்திற்கு முற்பட்ட கவிஞரின் கவிதையை நபி (ஸல்) பாரட்டியதை புகாரியில் காண்கிறோம்.
நல்ல கவிதை ஒன்றை ஒரு நபித்தோழர் நபியின் முன்னே பாடிக்காட்டிய போது திரும்பவும் பாடுவீராக! என்று பலமுறை அதை அவர்கள் ரசித்துக் கேட்டதை நூல்களில் நாம் காண்கிறோம். (முஸ்லும்)
நபியவர்கள் ரசித்துக்கேட்ட அந்தக் கவிதை முஸ்லிம் கவிஞருடைய கவிதை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தமாக கவியையும், கவிஞர்களையும் நபிகள் மறுத்தார்கள் என்பது உண்மைக்கு முரணாகும். நபியவர்களே நல்ல கவிஞர்களை வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு ராம்ஸ்வர்ப் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் நபிகள் வரவேற்றது சான்றாக உள்ளது. இதில் இவர் குறை காண்பதற்கு எதுவுமில்லை. நபிக்கு இறங்கிய அந்த வேதமும் இரு வகைக் கவிஞர்களையும் குறிப்பிடுகிறது. நல்ல கவிஞர்களை வரவேற்கிறது.
(பார்க்க அல்குர்ஆன் 26:227)
கேள்வி:7
தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த காபிர்களை சிரச் சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில் முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான் அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:7
கவிஞர்கள் அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு போதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல கிரிமினல் குற்றங்களைப் புரிந்ததால், அந்தக் கிரிமினல் குற்றங்களுக்காகவே கொல்லப்பட்டனர்.
'ராம்ஸ்வர்ப்' என்ற எழுத்தாளர் திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நீதிமன்றம் அதற்காக தண்டனை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர் எழுத்தாளன் என்ற காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாக எவரேனும் கூறினால் அவனை விட முட்டாள் எவனுமிருக்க முடியாது.
அவர் ஹிந்துவாக இருப்பதால் தான் தண்டிக்கப்பட்டார் என்று கூறுவதும் முட்டாள் தனமானது.
இதே போல் தான் எவர் குற்றம் செய்தாலும் இஸ்லாம் சலுகை காட்டியதில்லை. குற்றவாளிகள் கவிஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிச்சலுகை எதுவும் இஸ்லாம் காட்டவில்லை. கவிஞர்களோ, கவிஞர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து இஸ்லாம் தப்பவிட்டதில்லை. அந்த அடிப்படையில் சில கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தான் ராம்ஸ்வர்ப் விமர்சிக்கிறார். உதாரணமாக அவர் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களில் கஃபு இப்னு அஷ்ரபை எடுத்துக் கொள்வோம்.
நபிகள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் முதன் முதலில் 'பத்ரு' என்னும் போர்க்களத்தைச் சந்திக்கிறார்கள். அதில் நபிகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மதீனாவில் - இஸ்லாமிய நாட்டில் ஒரு பிரஜையாக கஃபு இப்னு அஷ்ரப் என்ற கவிஞனும் இருந்தான். பத்ரு வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே மக்காவுக்கு ஓடி அங்கேயே தங்கி முஸ்லிம்களுக்கெதிராக மக்கத்துத் தலைவர்களைத் தூண்டி விட்டதோடு அவனது சொந்த நாட்டின் இரகசியங்களையும் அவர்களுக்குத் தெரிவித்தான்.
இதன் காரணமாகவே அவனைக் கொல்லுமாறு நபிகள் கட்டளையிட்டார்கள். இப்னு இஸ்ஹாக் இதனை குறிப்பிடுகிறார்.
ஆதாரப்பூர்வமான வேறு நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.
ஒரு நாட்டைச் சேர்ந்தவன், எதிரி நாட்டுக்கு - அதுவும் இரண்டு நாடுகளுக்குமிடையே பகைமை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது - போர் மேகங்கள் சூழ்ந்து நெருக்கடியான நிலையில் இருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவன் எதிரி நாட்டுக்கு இராணுவ இரகசியங்களைத் தெரிவித்தால் எந்த நாடும் அவனை மன்னிக்க முன்வராது. தேசத் துரோகிகளுக்கு கடுமையான தண்டனையை உலகில் எந்த நாடும் அளிக்கும்.
அந்த தேசத்துரோக்க் குற்றத்தையே கஃபு இப்னு அஷ்ரப் என்பவன் செய்தான்.
தேசத் துரோகி கவிஞர் என்பதற்காக அவனை மன்னிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் ராம்ஸ்வர்ப். ஏனைய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் அவர்கள் கவிஞர்களாக இருந்தார்கள் என்ற காரணத்துக்காக அல்ல என்பதை ராம்ஸ்வர்ப் உணர வேண்டும்.
கேள்வி:8
அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:8
இஸ்லாம் ஒரு போதும் விமர்சனத்தை மறுத்ததில்லை. யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக் கூடாது.
விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது.
இதில் எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருத மாட்டார்கள். ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பவன் அந்த தேசத்தின் நீதிமன்றத்தை - அது வழங்கும் தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தேசம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை விமர்சனம் செய்வது தடுக்கப்படுகின்றது. அவ்வாறு விமர்சனம் செய்தால் தேசத்துரோகி என்று அவனுக்குப் பட்டம் சூட்டப்பட்டு தண்டிக்கவும் படுகிறது. ஒரு தேசத்துக்கு என்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகள் இருப்பதை ராம்ஸ்வர்ப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இது போலவே ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவனைக் கருதவேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவன் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்பதற்கு முன்னால் அவன் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; கேள்விகள் கேட்கலாம் என்பது எப்படித் தவறாகும்?
ராம்ஸ்வர்ப் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். அல்லாஹ்வை, அவன் தூதரை, அவன் அளித்த வேதத்தை விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் அதற்கு பதில் தரும்.
அல்லாஹ்வை - வேதத்தை - நபியை -ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்ட சாலமன் ரஷ்டி விமர்சித்தால் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் இன்னமும் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர் நம்பவில்லை என்று கூறி அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் என்று இஸ்லாம் முடிவு செய்கிறது.
எந்தக் கொள்கையை ஏற்றுவிட்டதாக ஒருவன் கூறுகிறானோ, அவன் அந்தக் கொள்கையை நம்பாதவனாக இருந்தால் அவனது கூற்று எப்படி உண்மையாக இருக்க முடியும்?
இதைத் தான் இஸ்லாம் கூறுகிறது. ராம்ஸ்வர்ப் இதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. அவரது புலமை சான்ற கேள்விகள் எதுவுமே புலமை சான்றதாக இல்லை. பொய்யும், முரண்பாடும், பொருந்தா வாதங்களும் நிறைந்த தன் கேள்விகளுக்கு 'புலமை சான்ற கேள்விகள்' என்று அவர் பெருமிதப்பட்டுக் கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை.
07.12.2009. 9:29 AM
வேதம் ஓதும் சாத்தான்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode