5 - كِتَابُ الغُسْلِ
அத்தியாயம் : 5 குளியல்
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ} [المائدة: 6]
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால்363 தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.68 மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 5:6
وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلاَ جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا} [النساء: 43]
43. நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!116 குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளி வாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.494 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால்363 தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
திருகுர்ஆன் 4:43
بَابُ الوُضُوءِ قَبْلَ الغُسْلِ
பாடம் : 1
குளிப்பதற்கு முன் உளூ செய்தல்.
248 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ "
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்க முற்பட்டால் முதலில் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து அதைக் கொண்டு தமது (தலையின்) ரோமக் கால்களைக் கோதிவிடுவார்கள். பிறகு தம் தலையின் மீது மூன்று முறை தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பிறகு தம் மேனி முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)
249 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءهُ لِلصَّلاَةِ، غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الجَنَابَةِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கால்களை விட்டு விட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்வார்கள். மேலும் தம் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள். பிறகு தம் மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது கால்களைக் கழுவுவார்கள். இதுவே பெருந்துடக்கிற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குளியல் (முறை) ஆகும்.
அறிவிப்பபர் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி)
بَابُ غُسْلِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ
பாடம் : 2
ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது.
250 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الفَرَقُ»
நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஃபரக் எனும் பாத்திரத்திலிருந்து குளித்தோம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(குறிப்பு: ஃபரக்' என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)
بَابُ الغُسْلِ بِالصَّاعِ وَنَحْوِهِ
பாடம் : 3
ஒரு ஸாவு' அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில் குளிப்பது.
251 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: دَخَلْتُ أَنَا وَأَخُو عَائِشَةَ عَلَى عَائِشَةَ، فَسَأَلَهَا أَخُوهَا عَنْ غُسْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَدَعَتْ بِإِنَاءٍ نَحْوًا مِنْ صَاعٍ، فَاغْتَسَلَتْ، وَأَفَاضَتْ عَلَى رَأْسِهَا، وَبَيْنَنَا وَبَيْنَهَا حِجَابٌ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ، وَبَهْزٌ، وَالجُدِّيُّ، عَنْ شُعْبَةَ، «قَدْرِ صَاعٍ»
நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் இல்லத்திற்குச்) சென்றோம், அப்போது அவர்களுடைய சகோதரர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குளியல் பற்றி கேட்டார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ஸாவு' போன்ற ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லிக் குளித்துக் காட்டினார்கள். தமது தலை மீது தண்ணீரை ஊற்றினார்கள். அப்போது அவர்களுக்கும், எங்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது.
அறிவிப்பவர் : அபூஸலமா
252 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الغُسْلِ، فَقَالَ: «يَكْفِيكَ صَاعٌ»، فَقَالَ رَجُلٌ: مَا يَكْفِينِي، فَقَالَ جَابِرٌ: «كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ» ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாவு தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஜஅஃபர்
253 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَيْمُونَةَ كَانَا يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «كَانَ ابْنُ عُيَيْنَةَ، يَقُولُ أَخِيرًا عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، وَالصَّحِيحُ مَا رَوَى أَبُو نُعَيْمٍ»
253 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் (அவர்களின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பது வழக்கம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
بَابُ مَنْ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلاَثًا
பாடம் : 4
தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.
254 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ: حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا، وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا»
254 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானோ (குளிக்கும் போது) மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன் என்று கூறியபடி தமது இரு கைகளாலும் சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)
255 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مِخْوَلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُفْرِغُ عَلَى رَأْسِهِ ثَلاَثًا»
255 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது தமது இரு கைகளால்) மூன்று முறை தமது தலையில் தண்ணீர் ஊற்றக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
256 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ يَحْيَى بْنِ سَامٍ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، قَالَ: قَالَ لِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَتَانِي ابْنُ عَمِّكَ يُعَرِّضُ بِالحَسَنِ بْنِ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ. قَالَ: كَيْفَ الغُسْلُ مِنَ الجَنَابَةِ؟ فَقُلْتُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُ ثَلاَثَةَ أَكُفٍّ وَيُفِيضُهَا عَلَى رَأْسِهِ، ثُمَّ يُفِيضُ عَلَى سَائِرِ جَسَدِهِ» فَقَالَ لِي الحَسَنُ إِنِّي رَجُلٌ كَثِيرُ الشَّعَرِ، فَقُلْتُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْكَ شَعَرًا»
256 உமது தந்தையின் சகோதரர் மகன் ஹஸன் பின் முஹம்மத் பின் அல்ஹனஃபிய்யா அவர்கள் என்னிடம் வந்து பெருந்துடக்குக்கான குளியல் எப்படி என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் என்று நான் சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள் நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின்றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே)? என்று கேட்டார். அதற்கு நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்! என்று கூறினேன் என ஜாபிர் (ரலி) என்னிடம் கூறினார்.
அறிவிப்பவர் : அபூஜஅஃபர்
بَابُ الغُسْلِ مَرَّةً وَاحِدَةً
பாடம் : 5
குளிக்கும் போது ஒரு தடவை தண்ணீர் ஊற்றுதல்.
257 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ مَيْمُونَةُ: «وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ»
257 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அப்போது அவர்கள் இரண்டு முறை அல்லது மூன்று முறை தமது (முன்)கைகளைக் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையில் தண்ணீரை ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது (இடக்)கையை பூமியில் தேய்த்தார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள். தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். பிறகு அந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று இரு பாதங்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
بَابُ مَنْ بَدَأَ بِالحِلاَبِ أَوِ الطِّيبِ عِنْدَ الغُسْلِ
பாடம் : 6
குளிக்கும் போது குவளையைக் கொண்டு அல்லது நறுமணத்தைக் கொண்டு துவக்குதல்.
(புகாரியின் இத்தலைப்பு பொருளற்றது என்பதால் இது புகாரியிடம் ஏற்பட்ட தவறு எனப் பலர் விமர்சனம் செய்துள்ளனர். குவளை அல்லது நறுமணம் பூசுதல் என்று குறிப்பிட்டதில் எந்த அர்த்தமும் இல்லை. இத்தலைப்பில் உள்ள ஹதீஸில் குவளை பற்றி மட்டுமே உள்ளது. நறுமணம் பற்றி ஒன்றும் இல்லை. குவளையைக் கொண்டு குளித்தல் என்றுதான் தலைப்பிட்டு இருக்க வேண்டும். – மொழி பெயர்ப்பாளன்)
258 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلم «إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، دَعَا بِشَيْءٍ نَحْوَ الحِلاَبِ، فَأَخَذَ بِكَفِّهِ، فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ، ثُمَّ الأَيْسَرِ، فَقَالَ بِهِمَا عَلَى وَسَطِ رَأْسِهِ»
258 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியல்) குளிக்கும் போது ஹிலாப் குவளை போன்ற ஒன்றை கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து தமது தலையின் வலப் புறம் ஊற்றுவார்கள். பிறகு இடப்புறம் ஊற்றுவார்கள். பிறகு தமது இரு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ المَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ فِي الجَنَابَةِ
பாடம் : 7
பெருந்துடக்கிற்கான குளியலின் போது வாய்கொப்பளித்து மூக்கில் தண்ணீர் செலுத்துதல்.
259 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَتْنَا مَيْمُونَةُ قَالَتْ: «صَبَبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ فَلَمْ يَنْفُضْ بِهَا»
258 நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தமது இரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைக்க) துண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைக்கவில்லை.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
بَابُ مَسْحِ اليَدِ بِالتُّرَابِ لِتَكُونَ أَنْقَى
பாடம் : 8
கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை மண்ணில் தேய்த்தல்.
260 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ الحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الحَائِطَ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ»
260 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியலைக்) குளிக்கும் போது (முதலில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தமது இரு கால்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
بَابٌ: هَلْ يُدْخِلُ الجُنُبُ يَدَهُ فِي الإِنَاءِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا، إِذَا لَمْ يَكُنْ عَلَى يَدِهِ قَذَرٌ غَيْرُ الجَنَابَةِ
பாடம் : 9
பெருந்துடக்குடையவர் கையில் எவ்வித அசிங்கமும் இல்லாத போது கையைக் கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர் பாத்திரத்தில் நுழைக்கலாமா?
وَأَدْخَلَ ابْنُ عُمَرَ، وَالبَرَاءُ بْنُ عَازِبٍ يَدَهُ فِي الطَّهُورِ وَلَمْ يَغْسِلْهَا، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يَرَ ابْنُ عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ بَأْسًا بِمَا يَنْتَضِحُ مِنْ غُسْلِ الجَنَابَةِ
இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத்தில் கையை நுழைத்துள்ளனர். பின்னர் உளூ செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.
261 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ»
261 நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் போட்டியிட்டுச் செல்லும்.
அறிவிப்பவர் : நபிகள் நாயகத்தின் மனைவி மைமூனா (ரலி)
262 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ غَسَلَ يَدَهُ»
262 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியல்) குளிக்கும் போது (முதலில்) கைகளைக் கழுவிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
263 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ» وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ مِثْلَهُ
263 நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்கான (கடமையான) குளியலை ஒரே பாத்திரத்திலிருந்து நிறைவேற்றினோம்..
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
264 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمَرْأَةُ مِنْ نِسَائِهِ يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» زَادَ مُسْلِمٌ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ «مِنَ الجَنَابَةِ»
264 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியரில் ஒருவரும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
கடமையான குளிப்புக்காக என்று ஷுஅபா அவர்கள் அதிகப்படியாக கூறுகிறார்கள்.
بَابُ تَفْرِيقِ الغُسْلِ وَالوُضُوءِ
பாடம் : 10
இடைவெளி விட்டு உளூச் செய்தல் குளித்தல்.
وَيُذْكَرُ عَنْ ابْنِ عُمَرَ: «أَنَّهُ غَسَلَ قَدَمَيْهِ بَعْدَ مَا جَفَّ وَضُوءُهُ»
உளூ செய்த தண்ணீர் காய்ந்த பின்னர் தமது இரு கால்களையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுவியதாக அறிவிக்கப்படுகிறது.
265 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ مَيْمُونَةُ: «وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً يَغْتَسِلُ بِهِ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا مَرَّتَيْنِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَغَسَلَ رَأْسَهُ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى مِنْ مَقَامِهِ، فَغَسَلَ قَدَمَيْهِ»
265 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (முதலில்) தமது இரு முன் கைகள் மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் இரண்டு முறை அல்லது மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் வலக்கையால் இடக்கையின் மீது தண்ணீர் ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையை தரையில் தேய்த்தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு தம் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள்; தலையை மூன்று முறை கழுவினார்கள். பிறகு உடம்பிற்கு தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு அந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்று தமது பாதங்கள் இரண்டையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர் : நபிகள் நாயகத்தின் மனைவி மைமூனா (ரலி)
بَابُ مَنْ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ فِي الغُسْلِ
பாடம் : 11
குளிக்கும் போது வலக் கையில் தண்ணீர் அள்ளி இடக் கையின் மீது ஊற்றுவது.
266 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ، قَالَتْ: «وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا وَسَتَرْتُهُ، فَصَبَّ عَلَى يَدِهِ، فَغَسَلَهَا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ» - قَالَ: سُلَيْمَانُ لاَ أَدْرِي، أَذَكَرَ الثَّالِثَةَ أَمْ لاَ؟ - ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ أَوْ بِالحَائِطِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَغَسَلَ رَأْسَهُ، ثُمَّ صَبَّ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ خِرْقَةً، فَقَالَ بِيَدِهِ هَكَذَا، وَلَمْ يُرِدْهَا "
266 நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்து அவர்களுக்குத் திரையிட்டேன். அப்போது அவர்கள் தம்கையில் தண்ணீர் ஊற்றி அதனை ஒரு முறை அல்லது இரு முறை கழுவினார்கள்
பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வலக் கையால் இடக் கையின் மீது ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள், பிறகு தமது (இடக்) கையை தரையில் அல்லது சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள்; முகத்தையும், இரண்டு கைகளையும் கழுவினார்கள்; தலையையும் கழுவினார்கள்; பிறகு உடம்புக்கு தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது இரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டைக் கொடுத்தேன். அப்போது வேண்டாம்' என்பது போல் தமது கையினால் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : நபிகள் நாயகத்தின் மனைவி மைமூனா (ரலி)
ஒரு முறை இரு முறை என்பதுடன் மூன்று முறை என்றும் சொன்னார்களா என்று எனக்குத் தெர்யவில்லை என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் கூறுகிறார்.
بَابُ إِذَا جَامَعَ ثُمَّ عَادَ، وَمَنْ دَارَ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ
பாடம் : 12
ஒரு முறை தாம்பத்திய உறவு கொண்ட பின் மீண்டும் தாம்பத்திய உறவு கொள்வதும், பல மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டபின் ஒரேயொரு முறை குளிப்பதும்.
267 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ المُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قَالَ: ذَكَرْتُهُ لِعَائِشَةَ فَقَالَتْ: يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ «كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَطُوفُ عَلَى نِسَائِهِ، ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا يَنْضَخُ طِيبًا»
267 (நறுமணம் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் கட்டியவனாக இருக்க நான் விரும்பவில்லை' என இப்னு உமர் கூறியதை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், அபூ அப்திர்ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்று விட்டு வருவார்கள். பிறகு காலையில் நறுமணம் கமழக் கமழ இஹ்ராம் கட்டியிருப்பார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் அல் முன்தஷிர்
(குறிப்பு : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது தமது மனைவியரையும் அழைத்துச் சென்றார்கள். (பார்க்க புகாரி 1572) இஹ்ராம் கட்டுவதற்கு முன் தமது மனைவியரைச் சந்தித்தார்கள் என்றால் தாம்பத்தியம் செய்ய சந்தித்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஹஜ்ஜின் போது மக்காவில் ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியான வீடுகள் இருக்கவில்லை. இனி ஹஜ் கிரியைகள் ஆரம்பமாவதால் இனிமேல் ஹஜ் முடியும் வரை சந்தித்துப் பேச முடியாது என்பதற்காக மனைவியரை சாதாரண முரையில் சந்தித்துப் பேசுவதற்குத் தான் வாய்ப்பு இருக்கும். – மொழி பெயர்ப்பாளன்)
268 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي السَّاعَةِ الوَاحِدَةِ، مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ، وَهُنَّ إِحْدَى عَشْرَةَ» قَالَ: قُلْتُ لِأَنَسٍ أَوَكَانَ يُطِيقُهُ؟ قَالَ: كُنَّا نَتَحَدَّثُ «أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلاَثِينَ» وَقَالَ سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، إِنَّ أَنَسًا، حَدَّثَهُمْ «تِسْعُ نِسْوَةٍ»
268 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவிலும், பகலிலும் ஒரு நேரத்தில் தம் மனைவியரிடம் செல்வார்கள் (அப்போது) அவர்களுக்கு பதினோரு மனைவியர் இருந்தனர்' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சக்தி பெற்றிருந்தார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக் கொள்வோம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : கத்தாதா
மற்றொரு அறிவிப்பில் ஒன்பது மனைவியர் என்று கூறப்பட்டுள்ளது.
(குறிப்பு : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் எல்லா மனைவியிடமும் செல்வார்கள் என்பதை ஒருவர் சொல்வதாக இருந்தால் இரவு முழுவதும் நபிகள் நாயகத்தைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும் எல்லா மனைவியரிடமும் சென்று தாம்பத்தியத்தில் ஈடுபட்டார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு நாள் என்ற முறையில் தான் தங்குவார்கள். இது தான் அவர்களின் வழக்கம். ஏதாவது ஒரு நாளில் எல்லா மனைவிகளிடமும் சென்றால் அனைவரிடமும் கலந்தாலோசனை செய்வது போன்ற காரணத்துக்காகத் தான் அது இருக்க முடியும். அனஸ் (ரலி) அவராக ஊகம் செய்து சொல்வது ஏற்புடையதல்ல. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முப்பது இளைஞர்களின் சக்தி இருந்தது என்று நபிகள் நாயகம் சொல்லவில்லை. இதுவும் அனஸ் அவர்களின் அர்த்தமில்லாத ஊகம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும், செய்ததும் அனுமதித்ததும் தான் ஹதீஸ். ஒருவர் கற்பனை செய்வது ஹதீஸாக ஆகாது. இதை ஹதீஸ் போல் மக்களிடம் சொல்லக் கூடாது. - மொழிபெயர்ப்பாளர்
بَابُ غَسْلِ المَذْيِ وَالوُضُوءِ مِنْهُ
பாடம் : 13
இச்சைக் கசிவு நீரைக் (மதீ) கழுவுவதும் அது வெளியேறியதற்காக உளூ செய்வதும்.
269 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ»
269 இச்சைக் கசிவு நீர் (மதீ) அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மனைவியாக) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்ட போது, உளூ செய்து கொள்வீராக! ஆணுறுப்பைக் கழுவிக்கொள்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
بَابُ مَنْ تَطَيَّبَ ثُمَّ اغْتَسَلَ وَبَقِيَ أَثَرُ الطِّيبِ
பாடம் : 14
நறுமணம் பூசி குளித்த பின்னரும் நறுமணம் நீடித்துக் கொண்டிருப்பது.
270 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ المُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، فَذَكَرْتُ لَهَا قَوْلَ ابْنِ عُمَرَ: مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنْضَخُ طِيبًا، فَقَالَتْ عَائِشَةُ: «أَنَا طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ طَافَ فِي نِسَائِهِ، ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا»
270 (நறுமணம் பயன்படுத்தி காலையில் இஹ்ராம் கட்டியவனாக இருப்பதை நான் விரும்புவதில்லை என இப்னு உமர் கூறியதை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசினேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டுப் இஹ்ராம் கட்டியவர்களாக காலைப்பொழுதை அடைவார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் அல் முன்தஷிர்
(குறிப்பு : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது தமது மனைவியரையும் அழைத்துச் சென்றார்கள். (பார்க்க புகாரி 1572) இஹ்ராம் கட்டுவதற்கு முன் தமது மனைவியரைச் சந்தித்தார்கள் என்றால் தாம்பத்தியம் செய்ய சந்தித்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஹஜ்ஜின் போது மக்காவில் ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியான வீடுகள் இருக்கவில்லை. இனி ஹஜ் கிரியைகள் ஆரம்பமாவதால் இனிமேல் ஹஜ் முடியும் வரை சந்தித்துப் பேச முடியாது என்பதற்காக மனைவியரை சாதாரண முரையில் சந்தித்துப் பேசுவதற்குத் தான் வாய்ப்பு இருக்கும். – மொழி பெயர்ப்பாளன்)
271 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا الحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ، فِي مَفْرِقِ النَّبِيِّ صلّى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ»
271 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) நறுமணத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ تَخْلِيلِ الشَّعَرِ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ أَفَاضَ عَلَيْهِ
பாடம் : 15
தலை முடியைக் கோதுவதும், தலையின் சருமம் நன்றாக நனைந்துவிட்டதாகக் தெரிந்த பின்னர் தலையில் தண்ணீரை ஊற்றுவதும்.
272 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، غَسَلَ يَدَيْهِ، وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، ثُمَّ اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ»
272 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்கும் போது தமது இரு (முன்)கைகளையும் கழுவுவார்கள்: தொழுகைக்காக செய்வது போன்று உளூவும் செய்வார்கள். பிறகே குளிப்பார்கள். கையால் தலை முடியைக் கோதிவிடுவார்கள். தலையின் சருமம் நன்றாக நனைந்துவிட்டதாகத் தெரியவந்ததும் தம் (தலை) மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
273 - وَقَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نَغْرِفُ مِنْهُ جَمِيعًا»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீர் அள்ளுவோம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ مَنْ تَوَضَّأَ فِي الجَنَابَةِ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ، وَلَمْ يُعِدْ غَسْلَ مَوَاضِعِ الوُضُوءِ مَرَّةً أُخْرَى
பாடம் : 16
பெருந்துடக்கின் (கடமையான) குளிப்பை நிறைவேற்றுவதற்காக உளூ செய்து குளித்த பின்னர் உளூ செய்த உறுப்புகளை மீண்டும் கழுவாமலிருப்பது.
274 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: أَخْبَرَنَا الفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ قَالَتْ: «وَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا لِجَنَابَةٍ، فَأَكْفَأَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ ضَرَبَ يَدَهُ بِالأَرْضِ أَوِ الحَائِطِ، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ المَاءَ، ثُمَّ غَسَلَ جَسَدَهُ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ» قَالَتْ: «فَأَتَيْتُهُ بِخِرْقَةٍ فَلَمْ يُرِدْهَا، فَجَعَلَ يَنْفُضُ بِيَدِهِ»
274 பெருந்துடக்கிற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் வைத்துக் கொண்டு தமது வலக் கையால் தமது இடக் கையின் மீது இரண்டு முறை அல்லது மூன்று முறை ஊற்றினார்கள். பிறகு மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையை தரையில் அல்லது சுவற்றில் தேய்த்து இரண்டு முறை அல்லது மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தமது முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உடலின் மற்ற பகுதிகளைக் கழுவினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது இரு கால்களையும் கழுவினார்கள். நான் (துடைப்பதற்காக) அவர்களிடம் துண்டு ஒன்றைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் விரும்பாமல் தமது கையால் தண்ணீரை உதறலானார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
بَابُ إِذَا ذَكَرَ فِي المَسْجِدِ أَنَّهُ جُنُبٌ، يَخْرُجُ كَمَا هُوَ، وَلاَ يَتَيَمَّمُ
பாடம் : 17
தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டது பற்றி பள்ளிவாசலில் வைத்து ஒருவருக்கு நினைவுக்கு வந்தால் அவர் அப்படியே பள்ளியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். (அதற்கு முன்) தயம்மும் செய்ய வேண்டியதில்லை.
275 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُقِيمَتِ الصَّلاَةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ قِيَامًا، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَامَ فِي مُصَلَّاهُ، ذَكَرَ أَنَّهُ جُنُبٌ، فَقَالَ لَنَا: «مَكَانَكُمْ» ثُمَّ رَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ إِلَيْنَا وَرَأْسُهُ يَقْطُرُ، فَكَبَّرَ فَصَلَّيْنَا مَعَهُ " تَابَعَهُ عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، وَرَوَاهُ الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ
275 இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் தளத்தில் அவர்கள் போய் நின்ற போது தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், உங்கள் இடத்திலேயே நில்லுங்கள் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையிலிருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
بَابُ نَفْضِ اليَدَيْنِ مِنَ الغُسْلِ عَنِ الجَنَابَةِ
பாடம் : 18
பெருந்துடக்கிற்காகக் குளித்த பின்னர் இரு கைகளையும் உதறுவது.
276 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، قَالَ: سَمِعْتُ الأَعْمَشَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ مَيْمُونَةُ: «وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَسَتَرْتُهُ بِثَوْبٍ، وَصَبَّ عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، فَضَرَبَ بِيَدِهِ الأَرْضَ، فَمَسَحَهَا، ثُمَّ غَسَلَهَا، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ وَأَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ ثَوْبًا فَلَمْ يَأْخُذْهُ، فَانْطَلَقَ وَهُوَ يَنْفُضُ يَدَيْهِ»
276 நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வைத்து ஒரு ஆடையால் அவர்களுக்குத் திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தமது கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள்; வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது பாதங்களைக் கழுவினார்கள். அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் வாங்காமல் தம் கைகளை உதறிக் கொண்டே சென்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
بَابُ مَنْ بَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ فِي الغُسْلِ
பாடம் : 19
குளிக்கும் போது தலையின் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
277 - حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الحَسَنِ بْنِ مُسْلِمٍ ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنَّا إِذَا أَصَابَتْ إِحْدَانَا جَنَابَةٌ، أَخَذَتْ بِيَدَيْهَا ثَلاَثًا فَوْقَ رَأْسِهَا، ثُمَّ تَأْخُذُ بِيَدِهَا عَلَى شِقِّهَا الأَيْمَنِ، وَبِيَدِهَا الأُخْرَى عَلَى شِقِّهَا الأَيْسَرِ»
277 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரான எங்களில் ஒருவருக்கு பெருந்துடக்கு ஏற்பட்டால் இரு கைகளிலும் தண்ணீர் அள்ளி ஊற்றிக் குளிப்போம். பின்னர் கையால் தண்ணீர் அள்ளி வலப் பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் அள்ளி இடப் பக்கம் ஊற்றுவோம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
بَابُ مَنِ اغْتَسَلَ عُرْيَانًا وَحْدَهُ فِي الخَلْوَةِ، وَمَنْ تَسَتَّرَ فَالتَّسَتُّرُ أَفْضَلُ
பாடம் : 20
அறைக்குள் ஒருவர், தனியாகக் குளிக்கும் போது ஆடையின்றி குளிக்கலாம்; மறைத்துக் கொண்டு குளிப்பது காலச் சிறந்தது.
وَقَالَ بَهْزُ بْنُ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ»
ஒருவர் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதை விட, அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவித்துள்ளார்கள்.
278 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " كَانَتْ بَنُو إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً، يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، وَكَانَ مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ وَحْدَهُ، فَقَالُوا: وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلَّا أَنَّهُ آدَرُ، فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ، فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ، فَفَرَّ الحَجَرُ بِثَوْبِهِ، فَخَرَجَ مُوسَى فِي إِثْرِهِ، يَقُولُ: ثَوْبِي يَا حَجَرُ، حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى مُوسَى، فَقَالُوا: وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ، وَأَخَذَ ثَوْبَهُ، فَطَفِقَ بِالحَجَرِ ضَرْبًا " فَقَالَ أَبُو هُرَيْرَةَ: وَاللَّهِ إِنَّهُ لَنَدَبٌ بِالحَجَرِ، سِتَّةٌ أَوْ سَبْعَةٌ، ضَرْبًا بِالحَجَرِ
278 பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வெறும் மேனியுடன் குளிப்பது வழக்கம். மூஸா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூஸாவுக்கு விரை வீக்கம் இருப்பதனால் தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என பனூ இஸ்ராயீல் சமூகத்தினர் கூறினார்கள்.
ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை ஒரு கல்லின் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடியது. மூஸா (அலை) அவர்கள் அதனைப் பின்தொடர்ந்து, கல்லே எனது துணி! கல்லே எனது துணி! என்று குரல் எழுப்பினார்கள். பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர் மூஸா (அலை) அவர்களைப் பார்த்துவிட்டு, அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! மூஸாவிற்கு எந்தக் கோளாறுமில்லை என்று கூறினர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூஸா (அலை) அவர்கள் கல்லின் மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்துவிட்டன.
279 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا، فَخَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْتَثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ: يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى؟ قَالَ: بَلَى وَعِزَّتِكَ، وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ " وَرَوَاهُ إِبْرَاهِيمُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا»
279 அய்யூப் (அலை) அவர்கள் வெறும் மேனியுடன் குளித்துக் கொண்டிருந்த போது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்கள் மீது விழுந்தது. உடனே அய்யூப் (அலை) அவர்கள் அதை தம் துணியால் பிடிக்கப் போனார்கள். அப்போது இறைவன் அவர்களை அழைத்து, அய்யூபே! நீங்கள் பார்க்கும் இதை விட செல்வ நிலையில் உம்மை நான் வைக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் ஆம். (உண்மை) உன் வலிமையின் மீது ஆணையாக! ஆயினும் உன் பரக்கத்தை விட்டு நான் தேவையற்றவன் அல்லவே! என்று அய்யூப் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.
بَابُ التَّسَتُّرِ فِي الغُسْلِ عِنْدَ النَّاسِ
பாடம் : 21
மக்களிடையே குளிக்கும் போது திரையிட்டு மறைத்துக் கொள்ளுதல்.
280 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ
280 மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் யாரம்மா இவர்? எனக் கேட்டார்கள். நான் அபூதாலிபின் புதல்வி உம்மூ ஹானீ என்று பதிலளித்தேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹானீ (ரலி)
281 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ قَالَتْ: «سَتَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ مَسَحَ بِيَدِهِ عَلَى الحَائِطِ أَوِ الأَرْضِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ المَاءَ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ» تَابَعَهُ أَبُو عَوَانَةَ، وَابْنُ فُضَيْلٍ فِي السَّتْرِ
281 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கினால் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் தமது இரு கைகளையும் (மணிக்கட்டுகள் வரை) கழுவினார்கள். பிறகு தமது வலக் கையினால் இடக் கையின் மீது ஊற்றி தமது மர்மஸ்தலத்தையும் அதில் பட்டிருந்ததையும் கழுவினார்கள். பிறகு கையை சுவரின் மீதோ அல்லது தரையின் மீதோ தேய்த்தார்கள். பிறகு இரு கால்களைத் தவிர மற்ற உளூவின் உறுப்புகளுக்கு தொழுகைக்காகச் செய்வது போன்று உளூ செய்தார்கள். பிறகு தம் உடம்பிற்குத் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சிறிது நகர்ந்து தமது இரு பாதங்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
குளிக்கும் போது திரையிட்டுக்கொள்வது' தொடர்பாக அபூஅவானா , இப்னு புளைல் ஆகியோர் அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் இடம் பெற்றுள்ளது.
بَابُ إِذَا احْتَلَمَتِ المَرْأَةُ
பாடம் : 22
பெண்களுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால்...
282 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ أُمِّ المُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ: جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ: إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الحَقِّ، هَلْ عَلَى المَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ إِذَا رَأَتِ المَاءَ»
282 அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; அவள் (மதன) நீரைக் கண்டால் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
بَابُ عَرَقِ الجُنُبِ، وَأَنَّ المُسْلِمَ لاَ يَنْجُسُ
பாடம்: 23
பெருந்துடக்குடையவரின் வியர்வையின் நிலையும், முஸ்லிம் அசுத்தமாவதில்லை என்பதும்.
283 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: حَدَّثَنَا بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ المَدِينَةِ وَهُوَ جُنُبٌ، فَانْخَنَسْتُ مِنْهُ، فَذَهَبَ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ، فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» قَالَ: كُنْتُ جُنُبًا، فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ المُسْلِمَ لاَ يَنْجُسُ»
283 பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்துவிட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் பெருந்துடக்குடைவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
بَابٌ: الجُنُبُ يَخْرُجُ وَيَمْشِي فِي السُّوقِ وَغَيْرِهِ
பாடம் : 24
பெருந்துடக்கு ஏற்பட்டவர் வெளியேறலாம்; கடைவீதி முதலிய இடங்களில் நடக்கலாம்.
وَقَالَ عَطَاءٌ: «يَحْتَجِمُ الجُنُبُ، وَيُقَلِّمُ أَظْفَارَهُ، وَيَحْلِقُ رَأْسَهُ، وَإِنْ لَمْ يَتَوَضَّأْ»
பெருந்துடக்கு ஏற்பட்டவர் உளூ செய்யாமல் இரத்தம் குத்தி எடுக்கலாம்; நகங்களை வெட்டலாம்; தலைமுடியை மழிக்கலாம் என அதாவு அவர்கள் கூறியுள்ளார்கள்.
284 - حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَطُوفُ عَلَى نِسَائِهِ، فِي اللَّيْلَةِ الوَاحِدَةِ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ»
284 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் மனைவியரிடம் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
285 - حَدَّثَنَا عَيَّاشٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جُنُبٌ، فَأَخَذَ بِيَدِي، فَمَشَيْتُ مَعَهُ حَتَّى قَعَدَ، فَانْسَلَلْتُ، فَأَتَيْتُ الرَّحْلَ، فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ وَهُوَ قَاعِدٌ، فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هِرٍّ»، فَقُلْتُ لَهُ، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ يَا أَبَا هِرٍّ إِنَّ المُؤْمِنَ لاَ يَنْجُسُ»
285 பெருந்துடக்குடனிருந்த என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து, என்னுடைய கையைப் பிடித்தார்கள். அவர்களுடன் நான் நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் (அங்கிருந்து) நழுவிச் சென்று வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு வந்தேன். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) எங்கே இருந்தாய்? என்று கேட்டார்கள். நான் (எனது நிலையை) அவர்களிடம் சொன்னேன். அப்போது, சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அபூ ஹிர்! விசுவாசி (பெருந்துடக்கினால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
بَابُ كَيْنُونَةِ الجُنُبِ فِي البَيْتِ، إِذَا تَوَضَّأَ قَبْلَ أَنْ يَغْتَسِلَ
பாடம் : 25
பெருந்துடக்கு ஏற்பட்டவர் குளியலை நிறைவேற்றாமல் உளூ செய்து கொண்டு வீட்டில் தங்கியிருத்தல்.
286 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، وَشَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ " أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْقُدُ وَهُوَ جُنُبٌ؟ قَالَتْ: نَعَمْ وَيَتَوَضَّأُ "
286 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் உறங்குவார்களா? என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ஆம்; ஆயினும் உளூ செய்துகொள்வார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸலமா
بَابُ نَوْمِ الجُنُبِ
பாடம் : 26
குளியல் கடமையானவர் உறங்குவது.
287 - حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ قَالَ: «نَعَمْ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ، فَلْيَرْقُدْ وَهُوَ جُنُبٌ»
287 எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் உறங்கலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; உங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருந்தாலும் அவர் உளூ செய்துவிட்டு உறங்கலாம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பபவர் : இப்னு உமர் (ரலி)
بَابُ الجُنُبِ يَتَوَضَّأُ ثُمَّ يَنَامُ
பாடம் : 27
குளியல் கடமையானவர் உளூ செய்துவிட்டு உறங்கலாம்.
288 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَرَادَ أَنْ يَنَامَ، وَهُوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ»
288 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளியல் கடமையாகி இருக்கும் நிலையில் உறங்க நினைத்தால் தமது மர்மஸ்தலத்தைக் கழுவிட்டு தொழுகைக்குரிய உளூ செய்வார்கள். (அதன் பின்னர் உறங்குவார்கள்.)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
289 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: اسْتَفْتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ؟ قَالَ: «نَعَمْ إِذَا تَوَضَّأَ»
289 எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா? என உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்துவிட்டு (உறங்கலாம்.) என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
290 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ»
290 இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விடுவது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்யுங்கள்; உங்கள் ஆணுறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றனர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
بَابٌ: إِذَا التَقَى الخِتَانَانِ
பாடம் : 28
ஆண்-பெண் பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்...
291 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، ح وحَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ» تَابَعَهُ عَمْرُو بْنُ مَرْزُوقٍ، عَنْ شُعْبَةَ، مِثْلَهُ وَقَالَ مُوسَى: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، أَخْبَرَنَا الحَسَنُ مِثْلَهُ
291 ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உறவு கொண்டால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
بَابُ غَسْلِ مَا يُصِيبُ مِنْ فَرْجِ المَرْأَةِ
பாடம் : 29
பாலுறவின் போது பெண்ணுறுப்பிலிருந்து பட்ட ஈரக் கசிவைக் கழுவுவது.
292 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنِ الحُسَيْنِ، قَالَ: يَحْيَى، وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الجُهَنِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَقَالَ: أَرَأَيْتَ إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ فَلَمْ يُمْنِ؟ قَالَ: عُثْمَانُ: «يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ وَيَغْسِلُ ذَكَرَهُ» قَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرَ بْنَ العَوَّامِ، وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ - فَأَمَرُوهُ بِذَلِكَ. قَالَ: يَحْيَى، وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّ أَبَا أَيُّوبَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
292 ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொண்டு விந்தை வெளியேற்றாமலிருந்தால் (குளிப்பு கடமையா) கூறுங்கள்? என்றேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர் தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்ய வேண்டும்; தமது பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும் என்று கூறினார்கள்.
பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். இது குறித்து அலீ பின் அபீதாலிப் (ரலி), ஸுபைர் பின் அவ்வாம் (ரலி), தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்ட போதும் அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்யும் படி பணித்தார்கள் என்றனர். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் செவியேற்றதாக உர்வா பின் ஸுபைர் அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
293 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي قَالَ: أَخْبَرَنِي أَبُو أَيُّوبَ، قَالَ: أَخْبَرَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ: إِذَا جَامَعَ الرَّجُلُ المَرْأَةَ فَلَمْ يُنْزِلْ؟ قَالَ: «يَغْسِلُ مَا مَسَّ المَرْأَةَ مِنْهُ، ثُمَّ يَتَوَضَّأُ وَيُصَلِّي» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «الغَسْلُ أَحْوَطُ، وَذَاكَ الآخِرُ، وَإِنَّمَا بَيَّنَّا لِاخْتِلاَفِهِمْ»
293 அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார்; ஆனால் விந்தை வெளியேற்றவில்லை என்று கேட்டேன் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனைவியிடமிருந்து (கசிந்து) தம் மீது பட்ட இடங்களைக் கழுவ வேண்டும். பிறகு உளூ செய்து கொண்டு தொழலாம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
(பாலுறுப்புகள் சந்தித்துவிட்டால்) குளியல் தான் (மார்க்கத்தில்) பேணுதலான நடவடிக்கையாகும். இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாகும். இதில் கருத்து வேறுபாடு உள்ளதால் தான் இந்த ஹதீஸை நாம் இங்கு குறிப்பிட்டோம்.
அத்தியாயம் : 5 குளியல் (43-293)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode