இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சல்மான், கோவை
பதில்
காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.
முஸ்லிம்கள் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் 30 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் பெறுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. குஜராத்தில் நடந்த கொடூரச் செயலைப் பார்த்து விட்டு, வயிற்றில் உள்ள குழந்தையைக் கூட ஈட்டியால் குத்தி கொலை செய்த கொடூரத்தைப் பார்த்து விட்டு, சிலிண்டர்களை வீடுகளில் வீசி கொளுத்திப் போட்ட கொடூரத்தைப் பார்த்து விட்டு இந்தக் கொடியவர்களை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.
முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்கள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.
நம் சமுதாயத்தில் உள்ள சில மூடர்கள் குண்டு வைத்தல் போன்ற காரியங்களில் இறங்குவதும் மற்றவர்கள் வைக்கும் குண்டுகள் முஸ்லிம்கள் மீது போடப்படுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலைக்கு காரணமாக இருந்துள்ளது. ஊடகங்கள் இவ்வாறு சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதை மாற்ற நாம் முயல வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதை வெறுக்கிறார்கள் என்றாலும் அது உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, தீவுரவாதிகளின் ஆதாரவாளர்களாகவோ இருக்கிறார்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழகத்தை விட இந்தி பேசும் மாநிலங்களில் இது அதிகமாகப் பதிந்துள்ளது.
இதை மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். பாஜக ஆதரவு 30 சதவிகிதத்தைக் குறைக்கும் வகையில் நாம் திட்டங்கள் வகுத்தாக வேண்டும்.
இதன் துவக்கமாக குண்டு வெடிப்புக்கும், தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்கள் ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டத்தைத் திரட்டி கண்டனப் பேரணிகள் எல்லா ஊரிலும் நடத்த வேண்டும். முஸ்லிம்கள் இது போன்ற செயல்களை நஞ்சாக வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலும் அனைத்து சமுதாய மக்களும் இதைக் கவனிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கான திட்டம் அடுத்த வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் தனி நபர் சந்திப்புகளை அதிகப்படுத்தி நாட்டில் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் புரியவைக்க வேண்டும். இதற்காக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். முஸ்லிமல்லாத மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பை அகற்றுவது தான் உடனடியாகச் செய்ய வேண்டியதாகும்.
மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று நாம் அஞ்சத் தேவை இல்லை. இந்தியாவில் சிறுபான்மையாக உள்ள மக்களிடம் தான் உலக நாடுகளின் அதிகாரம் உள்ளது. சிறுபான்மை மக்கள் நசுக்கப்படும் போது வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், பொருளாதார வல்லரசுகளான இஸ்லாமிய நாடுகளும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஐநா வரை பிரச்சனையாகும். அதைக் கவனத்தில் கொண்டு தான் ஆட்சி நடத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே அதிகமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.
பாடப்புத்தகங்களில் இந்து மதக் கருத்தைப் பரப்புதல், சிறுபான்மை கல்விக் கூடங்களின் சலுகைகளைப் பறித்தல், இட ஒதுக்கீட்டின் பயன் முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் தடுத்தல், பசுமாடுகளை அறுக்கத் தடை செய்தல், கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இடையூறு செய்தல் இது போல் சில்லறைத்தனமான வேலைகள் செய்ய ஓரளவு வாய்ப்பு உள்ளது. உலக அளவில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவ்வாறு செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
பாபர் மஸ்ஜிது சம்மந்தமாக வழக்கு போட்டவர்களை மிரட்டி அல்லது சரிக்கட்டி அது குறித்த வழக்கை வாபஸ் பெறச் செய்து .சட்டப்படியான தடை இல்லாமல் ஆக்கி அந்த இடத்தைக் கோவிலாக்க முயற்சிக்கலாம்.
வைப்பாட்டி தான் வைத்துக் கொள்ளலாமே தவிர இரண்டாம் திருமணம் கூடாது என்றும் நீதிமன்றங்கள் மூலமே விவாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கலாம்.
இவை நடக்கும் போது இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ளும். இதனால் ஏற்படும் விழிப்புணர்வு முஸ்லிம்களுக்கு நன்மையாக மாறும். எனவே நாம் இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை
தேர்தல் முடிவு தரும் பாடம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode