Sidebar

19
Thu, Sep
1 New Articles

பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?

பரகத்துல்லா, பத்தமடை

பதில்

காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் போதும் என்ற அளவுக்கு காங்கிரஸ் மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருந்தது. எப்படியாவது காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதை பாஜக பயன்படுத்திக் கொண்டது. இது தான் ஒரே காரணம்.

காங்கிரஸ் செய்த ஊழல் உள்ளிட்ட எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜகவும் செய்தது. பணக்காரர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அப்படி இருந்தும் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் கருதினார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டும்.

இரண்டுமே அனைத்து அயோக்கியத்தனக்களிலும் சமமானவை எனும் போது காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் தேர்வு செய்தார்கள் என்றால் சோனியா, ராகுல், மன்மோகன், சிதம்பரம் போன்ற படித்த மேதைகள் தான் காரணம்.

இரண்டு திருடர்களில் ஒரு திருடன் மற்றவனை திருடன் என்று குற்றம் சாட்டினால் நீ தான் திருடன் என்று திருப்பி அடிக்க வேண்டுமல்லவா? மதிகெட்ட காங்கிரஸ் தலைமை இப்படி உரிய பதிலடி கொடுக்கவில்லை. பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்தி இருவரும் சமம் என்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அறிவு இல்லை.

ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டதை வைத்து காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்திய போது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களைப் பட்டியல் போட்டு பாஜக ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என்று எளிதாக நிலைநாட்டி இருக்க முடியும்.

இதற்கும் ஊமை மன்மோகனும் மக்களை அணுகாத வெள்ளைக் காலர் சிதம்பரமும் காங்கிரசின் முக்கிய தலைவர்களும் தக்க பதில் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரரின் தலையை வெட்டி நமது எல்லையில் போட்டது என்றார் மோடி. இது போல் வாஜ்பாய் ஆட்சியிலும் நடந்தது என்பதை இவர்கள் உரத்துச் சொல்லி மறுத்து இருந்தால் இது எடுபடாமல் போய் இருக்கும். அதைச் செய்யவும் படித்த முட்டாள்களுக்குத் தெரியவில்லை.

மும்பை தாக்குதலைச் சொல்லி பாகிஸ்தான்காரன் நமது நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துகிறான். அதைத் தடுக்க காங்கிரசுக்கு துப்பு இல்லை என்றது பாஜக. உன் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது என்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அறிவும் இந்த மதியீனர்களுக்கு இல்லை.

மன்மோகன், பாகிஸ்தான் பிரதமரோடு கை குலுக்குகிறார் என்று பாஜக செய்த பிரச்சாரத்துக்கும் மவுனம் தான் இந்த மூடர்களின் பதிலாக இருந்தது. பாகிஸ்தானுக்கு ரயில் விட்டது யார்? கார்கில் ஊடுறுவல் நடந்தது யார் ஆட்சியில்? கார்கில் ஊடுறுவல் நாயகன் முசரபுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளித்தவர் வாஜ்பாய் தானே?

தீவிரவாதிகளுக்கு பணிந்து கந்தகாருக்கு போய் தீவிரவாதிகளை ஒப்படைத்து விட்டு வந்தது யாருடைய ஆட்சி என்று எகிறி அடிக்க எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் இந்த மடையர்கள் அதற்கும் பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்யவில்லை.

இந்திய மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்று மோடி பேசியதற்கும் பதில் கொடுக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சியில் தான் இதைவிட அதிக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற புள்ளிவிபரங்கள் கையில் இருந்தும் அதை எடுத்து வீரியமான பிரச்சாரம் செய்யவில்லை.

அதே நேரத்தில் மோடியின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்காக உளவுத்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களில் உளவு பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள். இப்படிப்பட்ட ஒருவர் பிரதமராகலாமா என்பதைக் கையில் எடுத்து சரியான முறையில் கொண்டு சென்று இருந்தால் ஒழுக்கத்தை விரும்பும் பண்பாடுள்ள இந்திய மக்கள் மோடியை வெறுத்து இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை நாம் சந்தித்து இது நல்ல வாய்ப்பு. இது ஒன்றே மோடியை ஒழித்துக் கட்டப் போதுமானது என்று ஆலோசனை சொன்னோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள், மோடி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் மோடி பெண்பித்தர் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும் என்றெல்லாம ஆலோசனை கொடுத்தோம். எங்கள் கட்சியில் அதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது.

பதவிப் பிரமானத்துக்கு எதிராக உளவுத்துறையைச் சொந்த வேலைக்குப் பயன்படுத்தியதாக மத்திய அரசு விசாரணைக் கமிசன் அமைத்து விசாரிப்போம் என்று கூறி விட்டு அதை அப்படியே கிடப்பில் போடும் அளவுக்கு இவர்களின் அரசியல் அறிவு இருந்தது.

எந்தப் பிரச்சனையையும் எப்படிக் கையாள்வது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. தெலுங்கானா பிரச்சனையை மாற்றி மாற்றி பேசி மாநிலத்தை ரணகளமாக்கினார்கள்.

தெலுங்கானா பகுதியில் வாக்கெடுப்பு நடத்துவோம். மக்கள் தனி மநிலத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் மாநிலத்தைப் பிரிப்போம்; இல்லாவிட்டால் பிரிக்க மாட்டோம் என்று சொன்னால் அனைத்து கட்சியினரும் அதை ஏற்று இருப்பார்கள். பிரிப்பது என்று முடிவு எடுத்தாலும் பிரிப்பதில்லை என்று முடிவு எடுத்தாலும் அதை மக்கள் தலையில் போட்டு விடலாம் என்ற திட்டத்தை மேதாவி சிதம்பரத்துக்கு கடிதம் மூலம் நாம் தெரிவித்தோம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தீர்க்க வழிமுறைகள் உள்ளன என்றும் தெரிவித்தோம். இப்படி எளிதாக தீர்க்க வேண்டிய பிரச்சனையைத் தவறாக தீர்க்க முயன்று ஆந்திராவில் காங்கிரசை அழித்தார்கள்.

ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பின் அவரது மகனுக்குப் பின்னால் மக்கள் நிற்கிறார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்தது. ஆனால் அவர் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகளும் ஆந்திராவில் காங்கிரசை அழித்தன.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராகப் போராடுவது போல் சித்தரித்து காங்கிரசுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திய போது அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் விட்டு இருக்க வேண்டும். நெருக்கடியும் கொடுத்து அவரைக் கைதும் செய்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் வகையில் நாங்கள் ஊழல்வாதிகள் என்று ஒப்புக் கொள்வது போல் நடந்து கொண்டது காங்கிரஸ்.

பாஜக ஊழலுக்கு எதிராக தம்பி ஹசாரே என்று ஒருவரை உருவாக்கி பில்டப் கொடுத்து பாஜக ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப் போராட்டத்தை நடத்தி இருந்தால் பாஜக ஆதாயம் அடைய முடியாமல் தடுத்து இருக்கலாம்.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் கூட பிரதமரும் காங்கிரசை அழித்த சிதம்பரமும் எந்தப் பதிலும் விளக்கமும் மக்களுக்குச் சொல்லவில்லை.

மோடி டீக்கடைக்காரர் என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். இது மோடிக்குச் சாதகமாக அமையும் என்ற சாதாரண அறிவு கூட காங்கிரசாருக்கு இல்லை.

மோடியின் அம்மா ஆட்டோவில் போகிறார்; தாயைக் கவனிக்கவில்லை என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். பெற்ற தாய் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டாத எளிமையானவர் என்று இது மாறும் என்பது கூட தெரியாக மடையர்களாக கங்கிரசார் இருந்தார்கள்.

கங்கிரஸ் செய்த எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜக செய்து இருந்தும் பாஜக பரிசுத்தம் என்பது போலவும் காங்கிரஸ் மட்டுமே அயோக்கியர்கள் போலவும் சித்தரித்து வெற்றி பெற்றார்கள் என்றால் மூளையற்ற காங்கிரசின் தலமை தான் இதற்குக் காரணம்.

களத்தில் நின்று உழைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் ஒயிட் காலர் தலைவர்களை முன்னிறுத்தினார்கள். மக்களின் நடித்துடிப்பை அறிந்து கொள்ளாத இவர்களின் ஆலோசனையைக் கேட்டதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.

ஒரு காரியம் சரியா தவறா என்பதை மட்டும் ஏசி அறையில் விவாதிப்பது அரசியலுக்கு உகந்தது அல்ல. இதை மக்கள் ஏற்பார்களா என்பதையும் அறிந்து செயல்படுவது தான் அரசியல். இந்த அரசியல் மன்மோகனுக்கும் தெரியாது. தலைக்கணத்தில் யாராலும் மிஞ்ச முடியாத சிதம்பரத்துக்கும் தெரியாது. பல்லாண்டுகளாக காங்கிரசை வைத்து பிழைப்பு நடத்திய கிழட்டுத் தலைவர்களுக்கும் தெரியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவரின் கீழ் செயல்பட வேண்டும். அவர் மக்களால் அறியப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஒருவர் வளர்ந்தால் நமக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று நினைத்து ஏராளமான கோஷ்டிகளை உருவாக்கி ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். ஜகன்மோகனை ஓரம் கட்டி போட்டி தலைவர்களை உருவாக்கி கட்சியை அழித்தனர். தமிழகத்திலும் ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்படவில்லை.

இன்னும் பல காரணங்கள் உள்ளன. அனைத்திலும் காங்கிரசின் முட்டாள்தனம் பளிச்சிடுகிறது. இதன் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து இருந்த காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்று கருதிய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள்.

இவை பாஜகவின் ஆதரவு ஓட்டு அல்ல. காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுக்களாகும். இது நீடிக்காது, காங்கிரஸ் துடிப்புள்ள மூளையுள்ளவர்களின் ஆலோசனையுடன் அரசியல் நடத்தினால் அடுத்த தேர்தலுக்குள் இதை மாற்ற முடியும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account