Sidebar

21
Sat, Dec
38 New Articles

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா?

பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா?

அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்

அந்த உரையில் நான் என்ன பேசினேன்? எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.

அல்லது முஸ்லிம் தலைவர்களே இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்.

ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும்?

விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம். அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களைத் தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார்.

இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.

இப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்?

இந்து மக்கள் மத்தியிலும், மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்? எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் தானா? இவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா? என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்?

இது குறித்து எழுத்தாளர்கள் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரை கண்டிக்கவில்லை.

நான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை?

பொதுவாக இஸ்லாத்திலும், இன்ன பிற சட்டங்களிலும் விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள். இதுதான் உலக நியதி. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.

பாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.

என் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன். ஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.

நமது மார்க்கத்துக்காகவும், உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன்.

பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.

தீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம்

விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே? அந்தப் பத்திரிகையைக் கொளுத்தினீர்களே? அதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே? விபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

இந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத் தான்.

அவரது குடும்பப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்தத்தில் தான் கையாளப்படும்.

இந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன். அவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது. எனவே தான் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும். தூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 4:148

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம்.

திருக்குர்ஆன் 2:194

இஸ்லாம் மட்டும் இதைக் கூறவில்லை. மானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.

ஒரு படத்தை எதிர்ப்பதால் - குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் - முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமயானவை.

இவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான். நம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவானால் அது எங்கள் உயிருக்கும், உடமைக்கும், மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும்? நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்?

தொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள். சரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.

அதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை. மேடைப் பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதி வைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே? நின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்? வாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. உங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்று தான் சொன்னேன்.

நானோ, என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.

பாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தைத் தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.

அன்புடன்

பீஜைனுல் ஆபிதீன்

28.01.2013. 14:29 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account