Sidebar

19
Thu, Sep
1 New Articles

இந்தியாவில் முஸ்லிம்களுக்கான உரிமைகள்

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இந்தியாவில் முஸ்லிம்களுக்கான உரிமைகள்

மக்கள் தொகையில் 13.4 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம் குடிமக்களுக்கு, நமது ஜனநாயகம் என்ன செய்திருக்கிறது என்பது தான் இப்போது எழுந்திருக்கும் முக்கியக் கேள்வி.   

இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு 9.3.2005 அன்று நியமித்தது.

ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட தீவிர ஆய்வுக்குப் பிறகு அண்மையில் தனது அறிக்கையை அக்குழு பிரதமரிடம் ஒப்படைத்தது. இவ்வறிக்கை 30.11.2006 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர்.

1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது.

ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது.

36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண் - பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை.

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், அதன் மொத்த மக்கள் தொகையில் 25.2 சதவிகிதம் முஸ்லிம்களே! முப்பது ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி புரிகிறார்கள். எனினும், மற்ற மாநிலங்களை விட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம் தான்.

பீகாரிலும், உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்கு கூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம் தான் உள்ளது.

குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே.

சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது.

எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

அதிகபட்சமாக கேரளாவில் 9.5 சதவிகித முஸ்லிம்கள் உயர் பதவிகளில் உள்ளனர். 

மேற்கு வங்கத்தில் பூஜ்யம்.

மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில் கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்துறை என மாநில அரசுகளின் எல்லா துறைகளிலும் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது தான் சச்சார் குழுவின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று.

நீதித்துறையும் முஸ்லிம்களுக்கு அநீதியே இழைத்துள்ளது.

சச்சார் குழு தனது ஆய்வை மேற்கொள்வதற்காக கீழ் நீதிமன்றங்களில் அடிமட்ட ஊழியர்கள் தொடங்கி நீதிபதிகள் வரை கணக்கெடுப்பு நடத்தியதில், முஸ்லிம்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காண முடிந்தது. முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம் தான் உள்ளனர்.

மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது.

வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திராவில் மட்டுமே மக்கள் தொகைக்கு அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நீதித் துறையில் உள்ளனர்.

மதக் கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதி கூட நியமிக்கப்பட்டதில்லை.

அய்.ஏ.எஸ். அதிகாரி முனீர் ஹோடா மீது ஏவப்பட்ட மதவெறி ஆயுதம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காக அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட மனுவை பரிசீலித்து ஒப்புதல் அளித்தார் அப்போதைய உள்துறை செயலாளர் முனீர் ஹோடா. முஸ்லிம் என்பதாலேயே ஒரு தீவிரவாதிக்கு ஹோடா உதவ முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு, தீவிரவாதத்திற்கு அவர் துணை புரிவதாகவும் பழிசுமத்தி, பதவியில் இருந்து தூக்கியெறிந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முனீர் ஹோடாவுக்கு சிறப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்போதும் ஜெயலலிதா, 'தீவிரவாதி தப்பித்துப் போக உதவிய ஹோடாவுக்கு உயர் பதவி வழங்கியிருப்பதாக'க் குற்றம் சாட்டுகிறார். ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரியை முன்னாள் முதல்வரே வீண் பழியால் மதவெறித் தாக்குதல் நடத்தும் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி முன்னேற முடியும்?

சச்சார் குழு தனது ஆய்வுக்காக மொத்தம் 1,02,652 கைதிகளை கணக்கில் எடுத்தது. அதில் பெரும்பாலானவர்கள் இழைத்த குற்றம் தீவிரவாதம் அல்ல. முஸ்லிம்கள் அதிகம் உள்ள 12 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம்கள் பற்றின தகவல்களைத் திரட்டித் தருமாறு ஆய்வுக் குழு கேட்டுக் கொண்டது. மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகியவை தகவல்களைத் தராததால் - மீதமுள்ள எட்டு மாநிலங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு குழு அறிக்கையை தயார் செய்தது.

10.6 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட மகாராட்டிர சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 32.4 சதவிகிதம்.

குஜராத்தில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், சிறைக் கைதிகளின் தொகையோ 25 சதவிகிதத்திற்கும் அதிகம்.

காஷ்மீருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் தொகையை அதிகம் கொண்ட அஸ்ஸாமிலும் இதே நிலைதான்.

வறுமையில் உழலும் நகர்ப்புற முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த தேசிய அளவை விட ஒரு மடங்கு அதிகம்.

அடுத்து, காவல் துறையின் மதப்பாகுபாடு.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதில் பெரும் பங்காற்றுகிறவர்கள் காவல் துறையினரே! ஒரு தலித்தை திருட்டு வழக்கிலும், கொலை வழக்கிலும் சிக்க வைப்பது, காவல் துறைக்கு எவ்வளவு எளிதான ஒரு செயலோ அதே போலத் தான் ஒரு முஸ்லிமை பயங்கரவாத, தீவிரவாதச் செயல்களுக்காக கைது செய்வதும்.

அரசுப் பணிகளிலேயே புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு புலனாய்வுத் துறை, உளவுத் துறை, ராணுவம் போன்றவை வெறும் கனவு தான்.

உளவுத் துறையை (RAW) பொறுத்தவரை, 1969 தொடங்கி இன்று வரை அதன் பணியாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரம். உளவுப் பணியில் முஸ்லிம்களை சேர்க்கக் கூடாதென்பது, இந்த மதச்சார்பற்ற தேசத்தின் எழுதப்படாத சட்டம். தகுதி, திறமை, தேச பக்தியுள்ள ஒருவர் அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஒரே காரணத்துக்காக தகுதியற்றவராகிறார்.

ராணுவமோ, 'எங்களின் ரகசியங்களை யாருக்கும் வெளியிட இயலாது' என அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் குழுவுக்கே 'தண்ணி' காட்டிவிட்டது! புள்ளிவிவரங்களைத் தர மறுத்துவிட்டதால், ராணுவத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டறிய முடியவில்லை. மத்திய அரசுக்கும் கட்டுப்படாமல் ராணுவம் சர்வாதிகாரப் போக்கில் ஒரு தனி ராஜாங்கம் நடத்தி வருகிறது.

''புள்ளி விவரங்களைக் கொடுத்தால் அது பாதுகாப்புப் படையினருக்கு தவறான எண்ணத்தைத் தூண்டும். இதுவரை கட்டிக்காத்த ஒற்றுமையையும் உற்சாகத்தையும் சமத்துவ நீதியையும் அது குலைக்கும். ராணுவத்தைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக்கான தேசியக் கொள்கை பொருந்தாது'' என ராணுவம் வாதிட்டதால், சச்சார் குழுவுக்கு, உண்மை நிலவரம் மறுக்கப்பட்டது.

ராணுவ உயர் பதவிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்து கொள்ளாமல், அரசால் அவர்களுக்கான நலத்திட்டத்தை வகுக்க இயலாது. இடஒதுக்கீடு ராணுவத்திற்குப் பொருந்தாது என்பதால் தான் அங்கு உயர் பதவிகள் அனைத்திலும் சாதி இந்துக்கள் நிறைந்திருக்கிறார்கள்.

நாடு முழுவதுமான முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி சூழல் பற்றிய முழு முதல் ஆய்வு, சச்சார் குழுவினுடையது தான் என்றாலும், ஏற்கனவே இந்திரா காந்தி ஆட்சியின் போது கோபால் சிங் என்பவர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசு வேலைவாய்ப்பு குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது.

அப்போதிருந்த ஐநூறு மாவட்டங்களில் 80 மாவட்டங்களில் தான் அக்குழு ஆய்வு செய்தது எனினும், அந்த ஆய்வறிக்கையின் முடிவும் முஸ்லிம்கள் சமூக வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும், ராணுவத்திலும் நீதித்துறையிலும் சிறுபான்மையினருக்கான பங்கு போதிய அளவுக்கு வழங்கப்படவில்லை எனவும் எச்சரித்திருந்தது. அப்போதிருந்தே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டையும், நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தால், இன்றைக்கு அவர்களின் நிலை இந்தளவுக்கு கீழிறங்கி இருக்காது.

எனினும், நாம் ஏற்கனவே அறிந்தபடி ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர்.

பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம் பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர்.

3.6 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம்.

அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட அவர்களால் நிரப்ப முடியவில்லை.

94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர்.

படிப்பு தான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குத் தான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை.

நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும் தானே இயற்கை! முஸ்லிம்களுக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account