Sidebar

19
Thu, Sep
1 New Articles

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

கேள்வி பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற பிச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின் சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத் ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது கூறியிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும் முகநூல்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?

எம். அக்ரம் பாஷா, அபுதாபி

பதில்

உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

முதலில் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அவ்வாறு அளிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்களிப்போம் என்ற தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பாஜகவுக்குப் பொருந்தாது. இது பாஜக அல்லாத கட்சிகளைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நிலைபாடாகும்.

பாஜவைப் பொருத்தவரை சமுதாய உணர்வுள்ள எந்த முஸ்லிமும் இந்த நிலைபாட்டை எடுக்க மாட்டான்.

இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முக்கியம் என்றாலும், அவர்களின் உயிர், உடமை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது அதைவிட முக்கியமானதாகும். பாஜக இடஒதுக்கீடு அளித்தாலும் அதன் மூலம் பயன்பெற முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது,

கொலையாளிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது,

பாபர் மஸ்ஜிதை இடித்தது மட்டுமன்றி இன்னும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என்று மிரட்டுவது,

முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி அளிப்பது,

திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவது,

அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிப்பது,

முஸ்லிம்கள் தங்களது மத நம்பிக்கையின்படி நடத்தும் திருமணம் போன்ற விஷயங்களை ஒழிக்க பொது சிவில் சட்டம் என்று கூப்பாடு போடுவது

இப்படி ஏராளமான கொடுமைகளை பாஜகவினர் செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் வாழ்வதும் வழிபடுவதும் இவர்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் பா.ஜ.க.வை ஆதரிக்காது. முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக இட ஒதுக்கீடு அளித்தால் எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவை ஆதரிப்போம் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டது ஜமஅத்துடன் முரண்பாடு கொண்டு சொன்னது அல்ல.

இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இடஒதுக்கீடு வழங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் அவர்கள் செய்த அநீதிகளை மறந்துவிட்டு ஆதரிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களிலும், தீர்மானத்திலும் சொல்லியுள்ளது. இது பா.ஜ.க.வுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அப்படிச் சொல்லி விட்டார்.

இது தவறு என்று நாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இப்படிச் சொல்லிவிட்டேன். இவ்வாறு நான் சொல்லியிருக்கக் கூடாது என்று அவரே நம்மிடம் தெரிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் என்ன தெரிவித்ததோ, அதுதான் அல்தாஃபியின் நிலையுமாகும்.

நான் சொன்னது சரிதான், அதுதான் எனது கருத்து என்று அவர் வாதிட்டால் தான் அது முரண்பாடு என்று கூற முடியும்.

சில கேள்விகளை திடீரென்று எதிர்கொள்ளும் போது இது போன்ற நிலமை சில வேளைகளில் ஏற்பட்டு விடுவதுண்டு.

ஜமாஅத்தில் இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகளும் இல்லை என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறோம்.

இது அவரது தனிப்பட்ட கருத்து என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாம் கூற மாட்டோம்.

ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக யாருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்க இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. சொந்த விஷயங்களில் தான் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து என்று இதன் பின்னர் அல்தாபி சொல்லி இருந்தால் தான் அது முரண்பாடு என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி இருந்தால் ஜமாஅத் தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும். கவனமின்மையால் திடீரென கேள்வி கேட்ட போது தவறுதலாக இப்படிச் சொல்லி விட்டேன் என்பது தான் அல்தாபியின் பதில் என்பதால் ஜமாஅத்தில் முரண்பாடு என்று அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

வேறு இயக்கத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் தவறாகும்.

ஒரு இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பாரதூரமான கருத்தைச் சொல்கிறார். அதை அவரும் மறுக்கவில்லை. அவரது இயக்கமும் மறுக்கவில்லை என்றால், அதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளது.

அல்தாபி இவ்வாறு கருத்து சொன்ன பின் தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரித்து இருந்தால் அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது ஜமாஅத் இது பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்தால் அப்போதும் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாபியின் பேட்டி வெளியாகி முகநூல்களில் பலவித விமர்சனங்கள் வந்த போது தான் கூறியது சரிதான் என்று நியாயப்படுத்தி அறிக்கையோ, மின்ன்ஞ்சலோ அல்தாபி அனுப்பி இருந்தால் அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாஃபி அவர்கள் இப்படிக் கூறியவுடன் ரியாதில் பொதுச் செயலாளர் இருக்கும் நிலையில் அங்கிருந்தே அனைவரிடமும் ஆலோசனை பெற்று அங்கிருந்தே ஜமாஅத்தின் கருத்து என்ன என்று அறிக்கை வெளியிட்டார்.

ஜமாஅத்தின் கருத்து இது தான் என்று அந்த அறிக்கை தெளிவாக அறிவித்தது. அல்தாபி சொன்னது ஜமாஅத்தின் கருத்து அல்ல என்ற விஷயமும் அதற்குள் அடங்கி இருந்தது.

அவ்வாறு அறிக்கை வெளியிட்ட பின்னர், ஜமாஅத்தின் கருத்து தவறு, நான் சொன்னதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அல்தாஃபி சொல்லி இருந்தால் தான் ஏன் அவருக்கு ஒரு நிலை மற்றவருக்கு ஒருநிலையா என்று கேள்வி கேட்கமுடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டது போல் வேறு இயக்கம் நடந்து அதை தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா அவர்கள் அள்ளிக் கொடுத்ததைப் பார்த்து, தமிழகத்தில் தானே புயல் வராத பகுதிகளில் வசிக்கும் மக்கள் புயல் தமது பகுதிக்கும் வராதா என்று ஏங்குகின்றனர் என்று மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார்.

இது அவரது கருத்து. இதை மமக மற்றும் தமுமுக ஆதரிக்கவில்லை என்று அதன் நிர்வாகிகள் அறிக்கை விட்டிருப்பார்களானால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த இயக்கத்தினை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்திருக்காது.

அதுபோல் பேசிய சட்டமன்ற உறுப்பினரும் தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று உடனே மறுத்து இருந்தால், அப்போதும் நாம் விமர்சித்து இருக்க மாட்டோம்.

(அனைத்து முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் தான் கூறியது தவறு என்று மென்மையாக அவர் ஒப்புக் கொண்டார்.)

பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்களில் இதுதான் நடக்கிறது.

அந்த இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலை திறந்தாலும், இறந்தவரின் படங்களுக்கு மூத்த தலைவர்கள் மலர் தூவினாலும், பா.ஜ.வு.டன் ஒரே மேடையில் தோன்றினாலும், அந்த இயக்கங்கள் அதை எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கின்றன.

பா.ஜ.க. தலைவருடன் போஸ் கொடுத்ததை எங்கள் இயக்கம் கண்டிக்கிறது என்று அந்த இயக்கங்களால் சொல்ல முடியவில்லை. சொன்னால் அந்த மூத்த தலைவர் மனஸ்தாபம் அடைவார் என்று மௌனம் சாதிக்கிறார்கள்.

ஏராளமான சம்பவங்கள் மூலம் தெரிந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

மூத்த தலைவர்களும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. நிர்வாகிகளுக்கும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவர் இப்படிக் கூறினால், அது ஜமாஅத்தின் கருத்துக்கு எதிராக இருந்தால், வாய் மூடி இருக்காமல், கருத்து சொன்ன நபரைப் பார்க்காமல், கருத்தை மட்டும் பார்த்து உடனே மறுப்புச் சொல்கிறது.

அதுபோல் யாருடைய கருத்துக்கு எதிராக ஜமாஅத் கருத்துச் சொல்கிறதோ, அவரும் சரியானவராக இருக்கிறார். கவனக்குறைவாக நான் சொன்ன சொற்களால் ஜமாஅத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுவிட்டதே என்று சொல்லி அவரும் வருந்துகிறார்.

நான் சொன்ன கருத்துக்கு எதிராக உடனே எப்படி மறுப்பு வெளியிடலாம் என்று அவரும் நினைக்கவில்லை.

அவர் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருப்பதால் எப்படி எதிர்க்கருத்து சொல்வது என்று நிர்வாகமும் நினைக்கவில்லை.

இது ஆட்களைச் சார்ந்த இயக்கமல்ல. கொள்கை சார்ந்த இயக்கம். மார்க்க விஷயத்தில் கூட பெரிய பெரிய இமாம்கள் சொன்ன கருத்தாக இருந்தாலும், அது தவறு என்றால், அதை விட்டுவிட வேண்டும் என்ற சரியான, உறுதியான அடித்தளத்தில் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசத்தை விளங்கினார்கள் என்றால், இந்தப் பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதை அவர்கள் பெருமிதத்துடன் பார்ப்பார்களே தவிர குறைகூற மாட்டார்கள்.

எத்தனையோ இயக்கங்களைப் பார்க்கிறோம். அதன் மாவட்ட நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தாலோ, மோசடி செய்தாலோ, சமுதாய நலனுக்கு எதிராக நடந்தாலோ, அவர்களை எதிர்த்து கருத்துச் சொல்லவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தலைமைக்குத் துணிவு இல்லை.

அந்த மாவட்டத்தில் அந்த நபரை நம்பித் தான் இயக்கம் உள்ளதால், நடவடிக்கை எடுத்தால், எல்லோரும் அவருடன் சென்று விடுவார்கள் என்று அஞ்சும் அளவிற்கு கொள்கையற்றவர்களாக உள்ளனர்.

ஆனால் அதிகச் செலவில் நடத்தப்பட்ட திருமணங்களில் கலந்துகொண்ட சின்ன விஷயத்துக்காக மாநில நிர்வாகிகள் மீதே நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது.

இந்த ஜமாஅத்தில் இருக்கும் மக்கள் இதன் தெளிவான கொள்கைக்காகவே இருக்கிறார்கள்.

எனவேதான் தலைமையும் சரியாக உள்ளது. நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களும் சரியாக உள்ளனர்.

நம்மை இந்த விஷயத்தில் விமர்சிப்பவர்கள் இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் மேலும் உயர்வாகத்தான் இந்த ஜமாஅத்தை மதிப்பார்கள்.

ஒரு பேச்சுக்காக நான் சொன்ன கருத்து தான் சரி என்று அல்தாபி வாதிட்டு இருந்தாலோ, அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ இந்த ஜமாஅத் இவர்களைப் போல் வாய்பொத்தி இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

28.10.2013. 4:29 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account