புனித மாதங்கள் எவை?
போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன.
9:36 வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
நூல்: புகாரீ: 3197, 4406, 4662, 5550, 7447
இந்த நபிமொழி புனிதமான மாதங்கள் யாவை என்பதை விளக்குகிறது.
பொதுவாக திருக்குர்ஆனில் அடிப்படையான சட்டங்கள் மட்டுமே கூறப்படும். அதற்கான விளக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தை அல்லாஹ் மூலம் கிடைக்கப் பெற்ற விளக்கம் போலவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோல் அமைந்த வசனங்களின் விளக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் அறிந்து கொள்ள முடியும் என்பதால் திருக்குர்ஆனுடன் நபியவர்களின் விளக்கமும் அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் மட்டும் போதும் என யாராவது வாதிட்டால் அந்த நான்கு மாதங்களைத் திருக்குர்ஆனிலிருந்து அவர்கள் எடுத்துக்காட்ட வேண்டும். அவ்வாறு காட்ட முடியாது எனும் போது திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பது நிரூபணமாகி விடும்
புனித மாதங்கள் எவை?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode