தமிழில் இன்னொரு குர்ஆன் மொழிபெயர்ப்பு தேவையா?
திருக்குர்ஆனுக்கு பல அறிஞர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கும் போது இன்னொரு மொழிபெயர்ப்பு தேவை தானா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்பட்டது. இது குறித்து ஒற்றுமை இதழ் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பீஜேயை பேட்டி கண்டார். இந்தப் பேட்டி ஒற்றுமை இதழில் வெளியானது.
இந்தப் பேட்டியை இலங்கையில் இருந்து வெளியாகும் உண்மை உதயம் இதழில் இஸ்மாயீல் ஸலஃபி மறு பிரசுரம் செய்தார்.
நேயர்கள் பயனடைவதற்காக அதை இங்கே வெளியிடுகிறோம்.
தமிழகத்தில் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமாகிய அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அண்மையில் திருக்குர்ஆனுக்கு தமிழில் ஒரு மொழியாக்கத்தினை வெளியிட்டுள்ளார். இதனை முன்னிட்டு ஒற்றுமை இதழ் அவரைப் பேட்டி கண்டது. மேற்படி மொழிபெயர்ப்பு ஒர் அறிமுகமாக இருக்கும் என்பதால் அப்பேட்டியை உண்மை உதயத்தில் மறு பிரசுரம் செய்கின்றோம்.
முதன் முதலில் தமிழ் மக்களுக்கான மொழிபெயர்ப்பு 19ஆம் நூற்றாண்டில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஹபீப் முஹம்மது என்பவரால் அரபுத் தமிழ் நடையில் தரப்பட்டது. அதன் பிறகு அ.க. அப்துல் ஹமீத் பாக்கவி மொழி பெயர்த்த தர்ஜமத்துல் குர்ஆன் தமிழ் கூறும் நல்லுலகத்தின் பரவலான வாசிப்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்குர்ஆனுக்கு 9 தமிழ் மொழி பெயர்ப்புகளும், விரிவுரைகளும் வெளியாகியுள்ளன.
இப்போது மூன் பப்ளிகேஷன், மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் மொழி பெயர்த்துள்ள திருக்குர்ஆனை வெளியிட்டுள்ளது ஏற்கனவே பல மொழிபெயர்ப்புகளும், விரிவுரைகளும் இருக்கும் நிலையில் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பின் பின்னணி, சிறப்புத் தன்மைகள் குறித்து அறிய பி.ஜே. அவர்களைச் சந்தித்தோம்.
ஒற்றுமை: ஏற்கனவே திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புக்கள் தமிழில் பல வந்துள்ளன. இப்பொழுது புதிதாக ஒரு மொழி பெயர்ப்பைக் கொண்டு வருவதற்கான காரணம், அவசியம் என்ன?
பி. ஜைனுல் ஆபிதீன்: ஏற்கனவே திருக்குர்ஆனுக்குப் பல மொழி பெயர்ப்புக்கள் வந்திருந்தாலும் அந்த மொழி பெயர்ப்புகளுக்கும், நாம் செய்துள்ள மொழி பெயர்ப்புக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டாலே இதற்கான அவசியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
முதலாவது; ஏற்கனவே வந்துள்ள மொழிபெயர்ப்புகளெல்லாம், முஸ்லிம் சகோதரர்களுக்கு விளங்குவதற்கு ஏற்ற அமைப்புக்களில் தான் உள்ளன. இத்தனை மொழிபெயர்ப்பும் வந்த பின்பும் கூட, பல சகோதரர்கள் படித்துவிட்டு, இந்த வசனம் என்ன கூறுகிறது என்று எங்களுக்கு விளங்கவில்லை என்றெல்லாம் கேள்விகளை நமக்கு எழுதி வந்தனர். எனவே, இது வரை வந்துள்ள மொழிபெயர்ப்புகள் எல்லாம் முஸ்லிம்களைக் கவனத்தில் கொண்டு செய்யப்பட்டவை என்றும், அவைகளை முஸ்லிம்கள் கூட முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதையும் நாம் அனுபவத்தில் கண்டோம்.
தவிர, நமக்கு நேரடியாகவும், நமது பத்திரிகைக்கும் (உணர்வு) வந்த கேள்விகளின் அடிப்படையிலும், திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் சற்று விளக்கமாக வந்தால் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் இந்த மொழிபெயர்ப்பைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டோம்.
இரண்டாவது; நாம் வாழக்கூடிய காலத்திற்கு ஏற்றவாறு சில புதிய விஷயங்கள் தெரிய வரும். நூறு வருடத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய பார்வைக்கும் இன்றைக்கு வாழக் கூடியவர்களின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
இன்று நவீனமாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கும் போது அதைப் பற்றிய அந்த ஞானத்துடன் குர்ஆனைப் பார்க்கும் பொழுது, அவை இரண்டிற்கும் சம்பந்தம் இருப்பது தற்போது வாழ்கிறவர்களுக்குத் தெரியும். ஆனால், நூறு வருடத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இது தெரிந்திருக்க முடியாது.
நூறு வருடத்திற்கு முன்பு நாம் வாழ்ந்திருந்தாலும் அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இப்படி புதிய புதிய விஷயங்களெல்லாம் இன்று உலகில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்ற போது, அதைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்ற பார்வை இன்று உள்ளது போன்று அன்று (நூறு வருடங்களுக்கு முன்பு) இருந்திருக்க முடியாது.
அதே போன்று இனி வரக்கூடிய காலங்களில் இன்னும் சிறந்த பார்வை கூட வரலாம். அப்போது இன்னும் பல மொழி பெயர்ப்புகள் நமக்குத் தேவைப்படும்.
இது தவிர, இன்று உலகில் இருக்கக் கூடிய புதுப் புது சவால்கள். இந்த சாவல்களை எல்லாம் அன்று இருந்தவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் வரும் பொழுது அந்தச் சவால்களைச் சந்திக்காதவர்களுக்கு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது.
இன்று உலகளாவிய அளவில் இஸ்லாம் பரவிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இஸ்லாத்திற்கு எதிரான பல கேள்விகளும், பல சந்தேகங்களும், பல சவால்களும் வரும் பொழுது அந்தக் கோணத்துடன் இந்தக் குர்ஆனைப் பார்க்கும் பொழுது அதற்கேற்றவாறு இந்த மொழிபெயர்ப்பை அளிக்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
முஸ்லிமல்லாதவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புரியும் வண்ணம் இந்த மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் பொழுது எந்த ஒரு வசனத்திலும் அவர்களுக்குச் சந்தேகம் வரக் கூடாது; அந்த அளவிற்கு இந்த மொழிபெயர்ப்பில் அவர்களுக்கு ஒரு நிறைவு கிடைக்க வேண்டும், கண்டு பிடிக்கப்படும் புதிய புதிய விஷயங்களைப் பற்றியெல்லாம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காண்பிக்க வேண்டும் என்றும் நாம் விரும்பினோம்.
இத்தனை விஷயங்களையும் செய்ய வேண்டுமாயின், ஒரு புதிய மொழிபெயர்ப்பு வேண்டும். இந்தக் காரணத்தினால் தான் இதை நாம் மேற்கொண்டோம், இதுவே முடிவு என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
நமக்கு பின்னர் வரக்கூடிய காலத்தில் இதை விட இன்னும் ஒரு மொழிபெயர்ப்பு தேவையென்றால் அதையும் நாம் வரவேற்க வேண்டும்.
இதுவரை தமிழில் 9 மொழிபெயர்ப்புக்கள் உள்ளன. 8 மொழி பெயர்ப்புக்கள் இருக்கும் பொழுது 9 ஆவதாகச் செய்வதற்கும் 7வதாக இருக்கும் போது 8வதாக செய்வதற்கும் ஒரு நியாயம் இருந்தது போன்று தான் இந்த மொழிபெயர்ப்பை நாம் செய்தோமே தவிர, அவர்கள் செய்த அதே வேலையை நாம் செய்யவில்லை. கண்டிப்பாகச் செய்யவில்லை என்பதை இந்த நமது மொழிபெயர்ப்பை பார்த்து நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். இது தான் இந்த மொழிபெயர்ப்பின் அவசியம்.
ஒற்றுமை: முஸ்லிமல்லாதவர்களும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், விஞ்ஞானக் கருத்துக்களை எடுத்துரைப்பதாகவும் நவீன கால சவால்களுக்கு ஏற்றவாறு உங்களது மொழிபெயர்ப்பு திருக்குர்ஆனுடைய கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது என்று கூறினீர்கள். இதை இப்படிச் சொன்னால் மட்டும் போதாது. இதற்கு உதாரங்களையும் சான்றுகளையும் கூறுங்களேன்.
பி.ஜே.சான்றுகள் சொல்வதாக இருந்தால் உதாரணமாக நவீன காலத்தில் நாம் அனுப்புகின்ற செய்திகளெல்லாம் ஆகாயத்திற்குச் சென்று பின்பு திரும்பி வருகின்றது என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதாவது நாம் அனுப்பக்கூடிய அலைகளில் திரும்பி வரக் கூடிய ஒரு அம்சம் இருப்பதால் தான் நம்மால் ரேடியோவைக் கேட்க முடிகிறது. அதே போன்று சாட்டிலைட்டில் இன்னும் பல விஷயங்களும் உள்ளன.
வானத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக (86:11) என்று கூறுகிறான். இந்த வசனத்தை நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் விளங்கியிருக்க மாட்டார்கள். திருப்பித் தரும் வானம் என்றால் மழையைக் கூட அவர்கள் நினைத்திருக்கலாம்.
இந்த (86:11) வசனத்தை நாம் எடுத்துப் பார்க்கும் போது திருப்பித் தரக்கூடிய ஒரு அம்சம் வானத்தில் இருப்பதினால், நாம் இன்று பார்க்கின்ற ரேடியோ, சாட்டிலைட், டிஷ் போன்றவற்றின் கோணத்தில் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கின்றோம்.
இந்த 86:11 வசனத்தைப் போட்டு அதில் ஒரு குறிப்பு எண் கொடுத்துள்ளோம். குறிப்பு பகுதிக்குச் சென்று மேற்படி குறிப்பு எண்ணில் உள்ள விளக்கத்தைப் பார்த்தால், வானம் எதை எதையெல்லாம் திருப்பித் தருகின்றது என்ற விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதை நவீன உலகின் பார்வையுடன் பார்க்கும் போது அனைவருக்கும் விளக்கம் தரக் கூடியதாக இருக்கும்.
அதே போன்று முஸ்லிமல்லாத சகோதரர்கள் குர்ஆனைப் படிக்கும் போது பல வசனங்கள் எப்போது அருளப்பட்டது? எதைச் சொல்கிறது? என்பதையெல்லாம் இந்த மொழி பெயர்ப்பில் விளங்கலாம், சில வசனத்தின் நேரடி வார்த்தையைப் பார்க்கும் போது வன்முறையை இஸ்லாம் தூண்டுகிறது போன்ற ஒரு தோற்றம் தெரியும்.
உதாரணத்திற்கு - அவர்களுடன் போர் செய்யுங்கள்; வெட்டுங்கள்; கொல்லுங்கள் என்று சில வசனங்கள் வரும். இது யாரைச் சொல்கின்றது என்பதைப் பார்க்காமல் படிக்கும் போது இவையெல்லாம் முஸ்லிமல்லாத மக்களோடு இஸ்லாம் வன்முறையைத் தூண்டுவது போன்றே தெரியும். காரணம், இதற்கான விளக்கங்களைப் பெரும்பாலான மொழி பெயர்ப்புக்களில் கொடுக்கத் தவறியுள்ளனர். இது போன்ற விளக்கங்கள் அன்று தேவைப்படாமல் கூட இருந்திருக்கலாம். ஏனெனில் அன்று முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனை அவ்வளவாகப் படிப்பதில்லை.
ஆனால், இன்று முஸ்லிமல்லாதவர்களும் விருப்பபட்டு குர்ஆனைப் படிக்கும் போது அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; அவர்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள்; அவர்களுடன் யுத்தம் செய்யுங்கள் போன்ற வசனங்கள் வரும். இது போன்ற வசனங்களை முஸ்லிமல்லாதோர் படிக்கும் போது - என்ன இது? வன்முறையைத் தூண்டுவது போன்று இஸ்லாமிய மார்க்கம் இருக்கிறதே? என்று அவர்கள் நினைப்பார்கள். ஆகையால் தான், அது போன்ற வசனங்கள் வரும் போது, அதற்கு நாம் ஒரு எண்ணைக் கொடுத்து, அதில் இது எதைச் சொல்கிறது, எதற்காகச் சொல்கிறது என்ற விளக்கத்தை அளித்துள்ளோம்.
இதன் மூலமாக முஸ்லிம் அல்லாத ஒருவர் குர்ஆனைப் படித்து விட்டு எந்த வசனத்தைப் பற்றியெல்லாம் தவறாக விளங்கிக் கொண்டிருந்தாரோ - அதைப் பற்றியெல்லாம் விளக்கம் பெறுவார்.
அதே போன்று இன்றைய நவீன உலகில் இஸ்லாம் தாராளமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் சில விஷயங்கள் இஸ்லாம் பரவுவதற்குத் தடையாக நிற்கும். குறிப்பாக நவீன உலகில் வட்டியைத் தவிர்க்க இயலவில்லை; ஆபாசத்தை தவிர்க்க முடியவில்லை; இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு வாழவே இயலாது என்ற நிலைக்கு மனிதன் இன்று தள்ளப்பட்டுள்ளான். ஆனால், இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு வாழ இயலும். அது தான் நல்லது என்று அதன் பயன்களைச் சுட்டிக் காட்டி நாம் அந்தந்த இடங்களை விளக்கியுள்ளோம்.
பெண்கள் விஷயத்தில் பார்க்கும் போது, பெண்களுக்கு இஸ்லாம் பல உரிமைகளைக் கொடுத்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளைக் கொடுக்கும் போது அவைகளைப் பார்த்து ஒரு பிற்போக்குத் தனம் என்ற பிரச்சாரம் நடத்தப்படும். இது போன்ற விஷயங்களுக்கு அந்தந்த இடத்தில் இது தான் பெண்களுக்கு நல்லது, நன்மை பயக்கும், இவையெல்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிப்பதில்லை, அதிகமான உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது என்று பல்வேறு குறிப்புக்கள் கொடுத்திருப்பதால், இதை ஒரு முஸ்லிம் படித்தாலும், முஸ்லிமல்லாதவர் படித்தாலும், பகுத்தறிவுவாதி படித்தாலும் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.
அது போக, எங்கெல்லாம் விஞ்ஞானக் கருத்துக்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளோம். ஆகவே, குர்ஆனை யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி ஒவ்வொரு இடத்திலும் விளக்கம் கொடுத்திருக்கின்றோம். அவைகளை நீங்கள் எமது மொழிபெயர்ப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றுமை:உங்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் 194 பக்கங்களில் 357 விளக்கக் குறிப்புக்களைக் கொடுத்திருக்கின்றீர்கள். இதை தர்ஜமா என்றும் சொல்ல முடியாத நிலையில், தப்ஸீர் என்றும் சொல்ல முடியாத நிலையில் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாக ஏராளமான குறிப்புக்களுடன். உங்களுடைய மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு நெருடல் என்னவென்றால், வேறு மொழி பெயர்ப்புக்களில் எல்லாம் ஒவ்வொரு சூறாவின் (அத்தியாயத்தின்) தொடக்கத்திலும் இது மக்காவில் அருளப்பட்டது இது மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்புக்கள் இருக்கும். ஆனால், உங்களது மொழி பெயர்ப்பில் 114 அத்தியாயங்களில் அது போன்ற குறிப்புக்களை நம்மால் காண முடியவில்லையே? இது வித்தியாசமாகத் தெரிகிறதே? இதன் பின்னணி என்ன?
பி.ஜே. ஆம்! நீங்கள் குறிப்பிட்டவாறு நமது மொழிபெயர்ப்பில் எந்த அத்தியாயத்திற்கு முன்பாகவும் இது மக்காவில் அருளப்பட்டது; இது மதீனாவில் அருளப்பட்டது என்று நாம் குறிப்பிடவில்லை. அது மட்டுமன்றி ஓரங்களில் போடப்படுகின்ற ருகூஃ எண் ஐன் , ஸஜ்தா போன்றவற்றையும் கூட நாம் குறிப்பிடவில்லை.
இவைகளையெல்லாம் நாம் ஏன் குறிப்பிடவில்லை என்பதை தொகுக்கப்பட்ட வரலாறு எனும் பகுதியில் காரண காரியத்துடன் விளக்கியுள்ளோம்.
ஒரு அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது , மதீனாவில் அருளப்பட்டது என்று சொல்வதாக இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அறிவுறுத்தியிருக்க வேண்டும். அப்போது தான் இது மதீனாவில் அருளப்பட்டது அல்லது மக்காவில் அருளப்பட்டது என்று சொல்ல முடியும். அல்லது அந்த அத்தியாயத்தின் கருத்தை வைத்துக் கொண்டு இது மக்காவில் அல்லது மதீனாவில் அருளப்பட்டது என்று யூகிக்க முடியும்.
உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுங்கள் என்ற வசனம் மக்காவில் அருளப்பட்டதாக இருக்க முடியாது. இதற்கு எந்த ஆதாரமும் கிடைக்காவிட்டாலும் நம்மால் அதைச் சொல்ல முடியும்.
ஏனென்றால் ஒரு ஆட்சி அமைத்து, அதன் பிறகு தான் இந்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும். ஆகவே, இந்த வசனம் மதீனாவில் தான் அருளப்பட்டது என்று நம்மால் சொல்ல முடியும். இது போன்று விளங்கக் கூடிய விஷயங்களை வைத்து எங்கு அருளப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், சில வசனங்களுக்கு ஆதாரம் வேண்டும்.
மக்காவில் அருளப்பட்டது, மதீனாவில் அருளப்பட்டது என்று மற்ற மொழி பெயர்ப்புகளில் போட்டிருப்பார்கள். ஆனால், அதற்குள் மதீனாவில் அருளப்பட்ட பல வசனங்கள் இடம்பெற்றிருக்கும். மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த அத்தியாயத்தில் சில வசனங்கள் மதீனாவில் அருளப்பட்டிருக்கும்.
இது தவிர உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனில் - மக்காவில் அருளப்பட்டது, மதீனாவில் அருளப்பட்டது என்றெல்லாம் குறிப்படப்படவில்லை.
இன்று உள்ள மொழி பெயர்ப்புக்களைப் பார்த்தால் சூரத்துன்னாஸ் மக்காவில் அருளப்பட்டது என்று ஒரு மொழிபெயர்ப்பிலும், மதீனாவில் என்று மற்றொரு மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆக, எந்த விஷயத்திற்கு ஆதாரம் உள்ளதோ அதைத் தான் நாம் சொல்ல வேண்டும். ஆதாரமில்லாத விஷயங்களை விட்டு விட வேண்டும் என்ற அடிப்படையில் இவைகளைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை. இதற்கான நியாயங்களை தொகுக்கப்பட்ட வரலாறு பகுதியில் குறிப்பிட்டுள்ளோம்.
மற்ற மொழி பெயர்ப்பாளாகளெல்லாம் எப்படிக் குறிப்பட்டுள்ளனர் என்றால் யா அய்யகல்லதீன் ஆமனு என்று ஆரம்பிக்கும் வசனங்கள் மதீனாவில் அருளப்பட்டவை
யா அய்யாஹன்னாஸ் (மனிதர்களே) என்று அல்லாஹ் குறிப்பிட்டால் அது மக்காவில் அருளப்பட்டது என்ற அளவுகோலை வைத்துள்ளனர்.;
ஆனால், மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயத்திலும் இது போன்ற வசனம் வருகின்றது.
இது போன்ற அளவுகோலை வைத்துத் தான் மக்காவில் அருளப்பட்டது. மதீனாவில் அருளப்பட்டது என்று பிரித்துள்ளார்கள். எங்கு அருளப்பட்டது என்பதற்கு ஹதீஸ்களில் சில அத்தியாயத்திற்கு மட்டுமே ஆதாரம் கிடைக்கிறது. சுமார் 100 அத்தியாயங்களுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தில் ஆதாரமற்ற ஒன்றை நாம் சொல்லக் கூடாது என்பதினால் அவைகளைத் தவிர்த்திருக்கின்றோம். இதற்கான முழு விளக்கத்தையும் தொகுக்கப்பட்ட வரலாறு பகுதியில் நீங்கள் படித்து விளங்கிக் கொள்ள முடியும்.
ஒற்றுமை: நீங்கள் அளிக்கும் இந்த விளக்கங்களைப் பார்க்கும் போது, சற்று புதுமையாகவே தெரிகின்றது. இதுவரை திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கையாண்ட முறைக்கு முற்றிலும் மாற்றமாக இருக்கின்றது. நீங்கள் கையாண்டுள்ள இந்த முறையை வேறு மொழிகளில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த அறிஞர்கள் கையாண்டிருக்கின்றார்களா?
பி.ஜே.: இந்த முறையை வேறு மொழிபெயர்ப்பாளர்கள் கையாண்டார்களா? என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், திருமறைக் குர்ஆனின் விரிவுரையாளர்களும், அன்று இருந்த மார்க்க அறிஞர்களும், நபித்தோழர்களும் கூட இந்த விஷயத்தில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தியுள்ளனர். எந்த அளவிற்கு என்றால், இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் குர்ஆனை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவர். அவர்களிடத்தில் எழுதப்பட்ட குர்ஆன் பிரதி ஒன்று கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.
அதில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பெயர் போடப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்த இப்னு மஸ்வூத் (வ) அவர்கள் ஏன் இப்படி பெயர் போட்டிருக்கின்றீர்கள்? இப்படி குர்ஆனில் இல்லையே? குர்ஆனில் இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் செய்கின்றீர்கள்? என்று ஆட்சேபனை தெரிவித்து விட்டு, குர்ஆனில் இல்லாத ஒன்றைச் சேர்க்கக் கூடாது என்று ஆட்சேபனை செய்ததாக ஆதாரமான செய்தியை நாம் காண்கின்றோம்.
அதே போன்று இமாம் ஸூயூத்தி தனது இத்கான் என்கிற நூலில் தகுந்த பல அறிஞர்களை மேற்கோள் காட்டி, குர்ஆனில் இல்லாத ஒன்றைச் சேர்க்கக் கூடாது என்றும், பல அறிஞர்கள் வலியுறுத்தியதைத் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்துத் தந்த குர்ஆனின் மூலப் பிரதியில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
இது அந்தக் காலத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது.. ஆனால், அந்தக் கண்டிப்பு மக்களுக்கு பரவலாகத் தெரியாமலிருந்த காரணத்தினால் இவைகளைக் கண்டு கொள்ளமால் மொழி பெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.
இதை நாம் புதிதாகக் கூறவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இது பேசப்பட்டு இருக்கிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பே இப்னு மஸ்வூத் (ரலி) போன்ற நபித்தோழர்களாலேயே குர்ஆனில் இல்லாத ஒன்றைக் குர்ஆனில் சேர்ப்பதிலிருந்து தவிர்த்து விட வேண்டும்; குர்ஆனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளார்கள். இதையும் நாம் தொகுக்கப்பட்ட வரலாறு பகுதியில் விளக்கி இருக்கின்றோம்.
ஒற்றுமை: மொழிபெயர்ப்பாளர்களின் தார்மீகக் கடமை என்னவென்றால், எந்த மூலத்திலிருந்து மொழி பெயர்க்கின்றார்களே, அந்த மொழியின் மூலத்தில் உள்ளவைகளை, அதனுடைய கருத்து இம்மியளவும் பிசகாமல் வேற்று மொழியில் பெயர்ப்பது தான். அதாவது அரபியில் உள்ளதை அப்படியே தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது தான் மொழிபெயர்ப்பாளர்களின் தார்மீகக் கடமை. இது ஒரு சிக்கலான பணியும் கூட.
ஆனால் உங்களுடைய மொழி பெயர்ப்பில், சொற்பிரயோகத்தை நீங்கள் எப்படியெல்லாம் கையாண்டுள்ளீர்கள்? அது மற்ற தமிழ் மொழி பெயர்ப்பாளர்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றது?
பி.ஜே.இந்த மொழிபெயர்ப்பைப் பொறுத்தமட்டில், எதை நாம் கருத்தில் கொண்டோம் என்றால், திருக்குர்ஆன் என்பது உயர்ந்த இலக்கியத் தரத்தில் அரபி மொழியில் அமைந்துள்ளது. அதற்குச் செய்யப்படக் கூடிய மொழி பெயர்ப்பு கொச்சையான தரத்திலிருந்தால் குர்ஆனின் மூலத்தின் மீதே மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடும். இதில் நாம் கவனம் செலுத்தினோம். கருத்து சிதையாமல், குர்ஆன் எப்படி உயர்ந்த நடையில், தரத்தில் எல்லோருக்கும் புரியும்படியாக அமைந்துள்ளதோ அதில் கவனம் செலுத்தினோம். அரபு மொழிக்கே உள்ள தனித்தன்மையில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவ்வாறு செய்தால், படிப்பவர்களுக்கு மிகவும் அந்நியமாகத் தெரியும்.
உதாரணத்திற்கு, அரபி மொழியில் யார் என்னை அடித்தானோ அவன் வந்தான் என்பார்கள். இதை அப்படியே தமிழில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும். மாறாக என்னை அடித்தவன் வந்தான் என்று மொழி பெயர்க்கும் போது இதில் எந்தக் கருத்துச் சிதைவும் இல்லை. அன்னியமும் இல்லை. மக்களுக்குச் சுலபமாக விளங்கும்.
மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அரபியில் உள்ளதை அப்படியே பெயர்த்துள்ளதைப் போன்று நாமும் மொழி பெயர்க்காமல் கருத்துச் சிதைவு ஏற்படாமல் வார்த்தைகளை அமைத்துள்ளோம். இதில் சில நன்மைகள் உள்ளன. முதலாவது இது தமிழ் மொழிக்கு அன்னியமின்றித் தெரியும். இரண்டாவது சொற்சுருக்கத்தின் காரணமாக பக்கங்கள் குறையும்.
இதே போன்று அரபி மொழியில் உள்ள ஒரு பழக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். பிரதி பெயர்ச் சொற்களை (லமீர் என்று அரபியில் சொல்வார்கள்) எல்லா சொற்களிலும் அரபியில் பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக, உளூ செய்வதைப் பற்றி ஒரு வசனம் குர்ஆனில் இருக்கிறது. அது உங்களுடைய கைகளை, உங்களுடைய முகங்களை, உங்களுடைய கால்களை கழுவிக் கொள்ளுங்கள் என்று இருக்கும். இப்படித் தான் அரபியில் சொல்வார்கள். ஆனால் தமிழில் இப்படிச் சொல்லும் வழக்கம் கிடையாது. ஒவ்வொன்றுக்கும் உங்கள், உங்கள் என்று தமிழ் மொழியில் சொல்ல மாட்டார்கள். மாறாக உங்கள் என்பதை ஒரு முறை மட்டுமே சொல்லி அனைத்து செயல்களையும் சொல்வது தமிழ் மொழியின் வழக்கம்.
ஆகவே இது போன்ற பிரதி பெயர்ச் சொற்களை நாம் குறைத்திருக்கின்றோம். இதனால் எந்தக் கருத்துச் சிதைவும் ஏற்படாது. இது குற்றமான செயலும் அல்ல. இது பற்றி நாம் குறிப்பு பகுதியிலும் விளக்கியுள்ளோம்.
இது போக, தமிழ்ச் சொற்களில் சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டும் ஒரு கருத்தைச் சொல்லலாம். அதிகமான வார்த்தைகளைக் கொண்டும் அதே கருத்தைச் சொல்லலாம். நாம் இதிலும் கவனம் செலுத்தியிருக்கின்றோம்.
உதாரணத்திற்கு, தமிழ் மொழியில் கூடியவர்கள் என்று சேர்த்துக் கொள்ளும் ஒரு வழக்கம் இருக்கின்றது. அதாவது, செய்யக் கூடியவர்கள்; சாப்பிடக் கூடியவர்கள்; அடிக்கக் கூடியவர்கள், செய்யக் கூடியவன்; சாப்பிடக் கூடியவன்; அடிக்கக் கூடியவன் என்று சொல்வார்கள்.
செய்வோர் சாப்பிடுவோர் என்று கூறினாலே போதுமானது. இது போன்று நூறு வார்த்தைகள் குறையும் போது பல பக்கங்கள் குறையும். இது பார்ப்பதற்கும், படிப்பதற்கும் அழகாகவும், கருத்துச் சிதைவு இல்லாமலும் இருக்கிறது.
இது போன்ற வார்த்தைகளைத் தேடி, தேவையில்லாத வார்த்தைகளை நாம் குறைத்திருக்கிறோம். தேவையில்லாத ஒன்றை அல்லாஹ் குர்ஆனில் போடாத போதும் நாமும் போடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி இவ்வாறு செய்திருக்கிறோம்.
அதே போன்று, தமிழ் மொழியில் கொள்ள வேண்டாம் என்று சொல்வார்கள். அதாவது செய்து கொள்ள வேண் டாம் என்பார்கள். செய்யாதே என்றும் இதைச் சொல்லலாம். திருடிக் கொள்ள வேண்டாம் என்பதை திருடாதே என்றும் சொல்லலாம். இரண்டும் ஒன்று தான்.
இந்த கொள்ள வேண்டாம் என்ற சொல் ஒரு அலங்காரத்திற்காக, தேவையில்லாமல் இருப்பது போன்று நமக்குத் தெரிந்தது. இவைகளையும் நாம் தேடிக் கண்டு பிடித்து குறைத்துள்ளோம்.
இது போன்ற சொற்கள் மூலமாக நாம் நமது மொழி பெயர்ப்பில் 100லிருந்து 150 பக்கங்கள் வரை குறைத்திருக்கின்றோம்.
அதே போன்று மற்ற மொழி பெயர்ப்புக்களில் அடைப்புக் குறிக்குள் சில வார்த்தைகளைக் கொடுத்திருப்பார்கள். இவ்வாறு அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்படுபவை மொழிபெயர்ப்பாளரின் சொந்தக் கருத்தாகும்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அடைப்புக் குறிக்குள் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் குர்ஆன் இல்லை. சிறிது கூடுதலாக கவனம் செலுத்தினால் அடைப்புக் குறி விளக்கம் இன்றியே குர்ஆனை விளங்க முடியும். ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் அல்லாஹ் குர்ஆனை வைத்திருக்கவில்லை. இலகுவாகவே வைத்துள்ளான்.
மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு பக்கத்திற்கு 20-30 அடைப்புக்குறி விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், நாம் மிகமிகச் சொற்பமாகவே கொடுத்துள்ளோம். இது கூட இல்லாமலேயே குர்ஆனை விளக்க முடியும்.
இந்த மொழிபெயர்ப்பில் நாம் கையாண்டுள்ள இன்னொரு விஷயம், வசனங்ளைப் பிரிப்பதில் சிலர் ஒவ்வொரு வசனத்திற்கும் தனித் தனியாக அர்த்தம் போட்டிருப்பர்.
ஆனால், நாம் இப்படிச் செய்யாமல, ஒவ்வொரு வசனத்திற்கும் அர்த்தம் போட்டு விட்டு, சில இடங்களில் இரண்டு வசனம், மூன்று வசனங்களைச் சேர்த்து மொத்தமாக அர்த்தம் போட்டுள்ளோம்.
இதை ஏன் இப்படிச் செய்தோம் என்றால், வசனங்களுக்கு எண் போட்டது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் கிடையாது. அபூபக்கர் (ரலி), உஸ்மான் (ரலி) காலங்களிலும் எண் கிடையாது. பிற்காலத்தில் எண் போட்டதினால் தான் பல கருத்து வேறுபாடுகள் வந்தன. இஸ்தான்புல், தாஸ்கண்டில் உள்ள குர்ஆனின் மூலப் பிரதியில் வசனங்களுக்கு எண்கள் கிடையாது.
மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் பிரிந்திருக்கக் கூடிய வசனங்களில் சில கருத்து முடியாமல் இருக்கும் உதாரணத்திற்கு மூஸாவை அனுப்பினோம் என்பது ஒரு வசனமாகவும், பிர்அவ்னிடம் என்பது மற்றொரு வசனமாகவும் பிரித்திருப்பார்கள். இது போன்ற வசனங்கள் அனைத்தும் கருத்து முடிவு பெறாமல் உள்ளன.
நமது மொழிபெயர்ப்பில் கருத்து முடிவு பெறாமல் உள்ள இது போன்ற வசனங்களை இணைத்திருக்கின்றோம். அதாவது, மூஸாவை பிர்அவ்னிடம் அனுப்பினோம் என்பதை ஒரே வசனமாக மொழி பெயர்த்திருக்கின்றோம். இது கருத்துக் குறைவு இல்லாமலும், அர்த்தம் மாறாமலும் இருக்கின்றது.
ஒற்றுமை: இந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில், பல அற்புதமான செய்திகளைத் தெளிவாக மக்களுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் தெளிவடைய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டு மிகக் கவனமாக இந்த மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். இதற்கு உங்களுக்கு படித்த கால அளவு எவ்வளவு?
பி.ஜே. இதை ஒரு தப்ஸீராக (விளக்கவுரையாக) எழுதுவது தான் ஆரம்பத்தில் நமது நோக்கம். 1995ஆம் ஆண்டு இதற்கான முயற்சியில் நாம் இறங்கினோம்.
தப்ஸீர் என்ற முறையில் விரிவான விளக்கங்களுடன் பல பாகங்களாகத் தயார் செய்ய வேண்டும் என்று எண்ணினோம். ஆனால், இப்படித் தயார் செய்தால் இதை மக்களால் வாங்க முடியுமா? இது மக்களுக்குச் சென்றடையுமா? இது அறிவு ஜீவிகளை மட்டும் தானே சென்றடையும் என்பன போன்ற யோசனைகளும் வந்தன.
இதன் பிறகு தர்ஜமா (மொழிபெயர்ப்பு) மட்டும் போடலாம் என்று மொழிபெயர்ப்பைத் துவங்கினோம்.
துவங்கிய பிறகு, முழு நேரமாக அல்லாமல், பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது மற்ற மொழி பெயர்ப்புகளை நாம் பார்த்த போது, அதில் வரக்கூடிய சந்தேகங்கள், நம்மிடம் கேட்கப்படும் சந்தேககள் போன்றவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாகவும், நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தப்ஸீரை சுருக்கி அதையும் இணைத்து, குறைந்த அளவிலான பக்கங்ளில் இந்த மொழிபெயர்ப்பை அளிப்பது என்று முடிவு செய்து சென்ற றமழானில் (டிசம்பர் 2001) தான் இதற்கான முயற்சியில் முழுமையாக இறங்கினோம்.
ஐந்து ஆறு வருடங்களாக இதன் பணி நடக்கிறது என்றாலும், முழுமையாக இந்தப் பணியில் இறங்கி ஒரு வருடம் தான் ஆகிறது. மனிதன் என்கிற முறையில் நாம் மொழிபெயர்த்ததில் தவறுகள் இருக்க வாய்ப்பிருக்கும் என்ற காரணத்தினால் பல மவ்விகளைச் சென்று சந்தித்து ஆலோசனை செய்துள்ளோம். இந்த சந்திப்புக்காக சுமார் 40 தினங்களைச் செலவிட்டோம்.
இந்த ஆலோசனைகளின் போது பல தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன. ஆக இது ஒரு தனி நபரின் உழைப்பினால் உருவானது என்று சொல்ல முடியாது. மவ்லவிமார்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களின் கூட்டு முயற்சி என்று கூட சொல்லலாம்.
பல அறிஞர்கள் கூடி ஆய்வு செய்து இந்த மொழிபெயர்ப்பை உருவாக்கியிருந்தாலும் கூட இதில் தவறு வராது என்று யாராலும் உத்தரவாதம் கொடுக்க இயலாது.
இப்படி மொழிபெயர்ப்பு அச்சாகி வந்த பிறகு இப்படிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நமக்கே தென்படுகிறது. ஆகவே இதன் முதல் விமர்சகரே நாம்தான்.
ஆகவே, இன்னும் நல்ல பல ஆலோசனைகள் மக்களிடம் இருக்கலாம். இதில் தவறுகள், விடுதல் இருக்கலாம். அவைகளை எல்லாம் மக்கள் சுட்டிக் காட்டினாலும், இன்னும் ஏதாவது சேர்க்கப்பட வேண்டும் என்று யாராவது கருத்துச் சொன்னாலும் அவர்களுக்கு எமது நன்றிகளையும் தெரிவிப்போம். அவர்களது கருத்துக்களைப் பரிசீலித்து அடுத்தடுத்த வெளியீடுகளில் பயன்படுத்திக்கொள்வோம்.
நன்றி : ஒற்றுமை
18.01.2010. 9:12 AM
தமிழில் இன்னொரு குர்ஆன் மொழிபெயர்ப்பு தேவையா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode