பெரியார் தாசனின் ஜனாசாவில் தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளவில்லையா
கேள்வி
பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் அதைப் புறக்கணித்தது என்று கூறப்படுவது உண்மையா?
மசூது கடையநல்லூர்
ரஸ்மின், இலங்கை
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம்.
இதுபோல் ஜனாஸா தொழுகையில் பங்கு கொள்வதற்கும் முன்னரே உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடந்து வருகிறோம். பெரியார் தாசன் அப்துல்லா அவர்களுக்காக புதிதாக ஒரு நிலைப்பாட்டை நாம் எடுக்கவில்லை.
முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவராக இருப்பவர் வெளிப்படையாக அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அல்லது வெளிப்படையாக கடவுள் மறுப்புக் கொள்கையை வெளிப்படுத்தினால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்வதில்லை என்பது நெடுங்காலமாக நாம் கடைப்பிடித்து வரும் நிலைபாடாகும்.
அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
அல்குர் ஆன் 9 : 113
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்கு பாவமன்னிப்பு தேடுவதாக இருப்பதால் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைப்படி இது போன்ற ஜனாஸாக்களில் நாம் கலந்து கொள்வது இல்லை.
தன்னைப் பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்கள் இணை கற்பித்தால் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பெரியார் கொள்கையைப் பெருமையுடன் பிரச்சாரம் செய்ததாலும், பெரியார் சிலைக்கு மாலை போட்டதாலும் இதைக் கடவுள் மறுப்புக் கொள்கையாகவே நாம் கருதுகிறோம்.
கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னது தான் பெரியாரின் பிரதானமான கொள்கை என்பது தமிழ் உலகமே அறிந்த உண்மையாகும்.
மேலும் இனவாதத்தை ஒழித்துக்கட்டிய இஸ்லாத்தை ஏற்ற பின்னும் திராவிட இன மக்களுக்காகப் பாடுபடுவதாக அவர் கூறியதும் ஏற்க முடியாததாகும்.
பெரியார் தாசன் அல்லாத பரம்பரை முஸ்லிம் இப்படி நடந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் இந்தக் கொள்கையைத் தான் கடைப்பிடித்து வருகின்றது. இதற்கு முன் எத்தனையோ பிரமுகர்கள் மரணித்து அவர்களின் ஜனாசா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டதுண்டு. இறந்தவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் செயலில் ஈடுபடுவது, அதை ஆதரித்துப் பேசியது தெரியவந்தால் நாம் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டோம்.
நபிகள் நாயகத்துக்கே அனுமதி இல்லாத ஒன்றை நாம் யாருக்காகவும் செய்ய முடியாது என்பது தான் இதற்குக் காரணம்.
மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டும். வேறு யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. பெரியாரின் அடிமை என்ற பொருளில் பெரியார் தாசன் எனவும் அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அப்துல்லாஹ்வாகவும் அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார்.
இனிமேல் யாரும் தன்னைப் பெரியார் தாசன் என்று அழைக்கக் கூடாது. நான் அல்லாஹ்வின் தாசன் மட்டுமே என்று பகிரங்கமாக அவர் அறிவிக்கவும் இல்லை. கெஜட்டில் மாற்றம் செய்யாவிட்டாலும் மக்கள் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று சொல்வது அவருக்குக் கடமையாக இருந்தது. அவர் முன்னிலையில் அவ்வாறு அழைக்கப்பட்ட போது அவர் அதை மறுக்கவில்லை என்பதையும் கூடுதல் தகவலாக சொல்லிக் கொள்கிறோம்.
இது தவிர இறந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு நல்லடக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்து இவர் பேசுவார், அடுத்து அவர் பேசுவார் என்று அரசியல் மேடையாக்குவதும், இறந்தவரைப் பற்றி இல்லாததைக் கூறிப் புகழ்வதும் தங்களின் வருகையை விளம்பரப்படுத்த தலைவர்கள் துடிப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தால் ஏற்க முடியாததாகும்.
ஏகத்துவக் கொள்கையில் மரணித்தவராக இருந்தாலும் அவரது மரணம் அரசிலாக்கப்பட்டால் அதையும் நாம் தவிர்ப்பதைக் கொள்கையாக வைத்துள்ளோம்.
தொழுதோமா, ஜனாஸாவுக்காக துஆ செய்தோமா, அடக்கம் செய்தோமா, என்று கலைந்துவிடுவது தான் சரியான இஸ்லாமிய முறையாகும்.
இந்த முறை மீறப்பட்டால் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்வது பெரியார் தாசன் எனும் அப்துல்லாஹ்வுக்காக எட்டுக்கப்பட்ட முடிவு அல்ல.
கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
27.08.2013. 3:53 AM
பெரியார் தாசனின் ஜனாஸாவில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode