17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே?
15 ஏக்கர் சொத்து வாங்கினீர்களா
சமீபத்தில் நீங்கள் திருச்சிக்கு அருகில் பதினைந்து ஏக்கர் சொத்து வாங்கியதாக குழுமங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா?
- அப்பாஸ் இப்ராஹீம், ஆவடி
? நான் பதினைந்து ஏக்கரோ, பதினைந்தாயிரம் ஏக்கரோ வாங்கினாலும் அதை யாரும் விமர்சிக்க கடுகளவும் இடமில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் தலைமைப் பதவி வகிக்கும் ஜமாஅத்தின் மூலம் பணம் திரட்டி எதையாவது வாங்கினால் தான் யாரும் விமர்சிக்கலாம்.
ஆனால் இந்த ஜமாஅத்துக்கு நான் தலைவனாக இருந்தாலும் இதன் வரவு செலவுகளை நான் செய்வது இல்லை. யாரும் நன்கொடை கொடுத்தால் கூட அதை என் கையால் தொடுவது இல்லை. இன்னொரு நிர்வாகியை வரவழைத்து அவர் கையில் கொடுக்கச் செய்து ரசீது போட்டுக் கொடுத்து விடுவேன். சரியாக செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிப்பவனாகவும் கேள்வி கேட்பவனாகவும் தான் நான் இருக்கிறேன்.
ஒரு பைசாவையும் நான் கையாள்வது இல்லை.
நான் பீஜேயிடம் இவ்வளவு கொடுத்தேன்; அதற்கு ரசீது தரவில்லை என்று ஒருவரும் கூற முடியாது. அது போல் ஜமாஅத் பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்றோ, கடனாக வாங்கியுள்ளேன் என்றோ ஒருவரும் சொல்ல முடியாது. இப்போது நிர்வாகியாக இருக்கும் யாரிடமும் இதைக் கேட்டு உறுதி செய்யலாம். ஊழியர்களிடமும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
அப்படியானால் நான் எத்தனை கோடிக்கு சொத்து வாங்கினாலும் கண்டிப்பாக அது ஜமாஅத் பணமாகவோ, ஜமாஅத்தை வைத்து சம்பாதித்த பணமாகவோ இருக்க முடியாது.
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஜமாஅத் 2004 ல் புணரமைப்பு செய்யப்பட்டது. அந்த 2004ல் இருந்து இன்றைய தேதிவரை உலகில் எந்த இடத்திலும் ஒரு ஜான் இடமும் நான் வாங்கியதில்லை. என் மனைவி மக்களும் வாங்கியதில்லை. இரு சக்கர வாகனமோ நான்கு சக்கர வாகனமோ கூட வாங்கியதில்லை.
எனவே இது அப்பட்டமான பொய் என்பதை இரண்டாவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நம்முடைய ஜமாஅத்தில் உறுப்பினராக இல்லாமல் நமது செயல்பாடுகளைக் கண்காணித்து வரக்கூடிய ஒரு செல்வந்தர் இந்த ஜமாஅத்தின் நம்பகத் தன்மையால் கவரப்பட்டு தனக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் நிலத்தை இலவசமாக எழுதித் தந்துள்ளார்.
இது முறைப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய ஸ்டாம்ப் வரி செலுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. நம் ஜமாஅத்துக்காக மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தான் இப்படி திரித்து கதை கட்டி இருக்கக் கூடும். அந்தச் சொத்தில் எனக்கு கடுகளவும் உரிமை இல்லை என்பதை மூன்றாவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: அல்தாபி 17 ஏக்கர் தன்பெயரில் எழுதிக் கொண்டார் என்று சிலர் சொன்னாலும் சொல்வார்கள். ஜமாஅத்துக்கு வங்கினாலும் ஜமாஅத்தின் சார்பில் ஒரு மனிதன் தான் கையெழுத்துப் போட வேண்டும். ஜமாஅத் வந்து கையெழுத்து போடாது. ஜமாஅத்துக்காக இன்னார் என்று குறிப்பிட்டால் அதில் அந்த நபர் எள்ளளவும் அநதச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.
உணர்வு 16:25
21.02.2012. 13:32 PM
17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode