Sidebar

06
Thu, Feb
76 New Articles

காஷ்மீரில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதா?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

காஷ்மீரில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதா?

இந்தியாவின் கோயபல்சுகள்

காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டனர் என்று சங்பரிவாரக் கும்பல் 1986 ஆம் ஆண்டு செய்த கோயபல்ஸ் பிரச்சாரம் 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வரலாறை இந்தியா டுடே முடித்து வைத்தது. புதிய தலைமுறையினருக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக 1993 மார்ச் மாதம் அல்ஜன்னத் இதழில் அப்போது ஆசிரியராக இருந்த பீஜே எழுதிய தலையங்கம் வெளியிடப்படுகிறது- திருத்தங்களுடன்

இந்தியாவை ஹிந்து ராஜ்ஜியமாக மாற்றி விட வேண்டும் என்பதற்காக மதவெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சில இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி, இந்து முண்னணி, இந்து மகாசபை, பஜ்ரங்தள் என்று பல பெயர்களில் இவர்கள் இயங்கி வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னனால் வரை ஹிந்து ராஜ்ஜியம் வெறும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. இவர்களின் மதவெறிப் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாமல் இருந்தது. பெரும்பாலான ஹிந்துக்கள் இவர்களின் பிரச்சாரத்தை நம்பாததால் முஸ்லிம்களைப் பகைவர்களாக எண்ணவில்லை.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்களின் வெறியூட்டும் பிரச்சாரத்தைப் பெரும்பாலான ஹிந்துக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். காரணம் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்கள் கோயபல்சு கண்டுபிடித்த தத்துவத்தைப் பலமாகப் பிடித்துக் கொண்டது தான்.

ஹிட்லரின் அரசில் கொள்கை பரப்பும் பொறுப்பில் இருந்த அமைச்சர் தான் கோயபல்ஸ். ஹிட்லர் மீது மக்கள் வெறுப்படையாமல் இருப்பதற்காக ஹிட்லருக்கு ஆதரவாகவும், ஹிட்லரின் எதிரிகளுக்குப் பாதகமாகவும் பொய்களைப் புணைந்து பரப்பியவன். ஒரு பொய்யை வெட்கமின்றி தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அது உண்மை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடும் என்ற கருத்தை பரப்பியவன் தான் கோயபல்ஸ்.

கோயபல்ஸின் இந்தக் கேடுகெட்ட சிந்தனை தான் சங்பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கை. அதன் அடிப்படையில் அவர்கள் பரப்பிய பொய்களில் ஒன்று தான் காஷ்மீர் முஸ்லிம்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டார்கள் என்ற புளுகு மூட்டை.

காஷ்மீரில் முஸ்லிம்கள் ஏராளமான ஹிந்துக் கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கி விட்டதாக இவர்கள் 1986 முதல் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் மீண்டும் அதையே கூறினார்கள். ஒவ்வொரு தலைவரும் இதை முக்கிய விஷயமாக மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். இதன் பிறகு தான் இவர்களின் வெறியூட்டும் பிரச்சாரம் ஹிந்துக்களிடம் எடுபடலாயிற்று.

எத்தனையோ முஸ்லிம் அமைப்புகள் இருந்தும், முஸ்லிம்களுக்காக பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் கட்சிகள் பல இருந்தும் இவர்களின் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க யாரும் முன்வரவில்லை.

சமய ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசும் ஆட்சியாளர்கள் எல்லா வசதிகளும் இருந்தும் இந்தக் கோயபல்சுகளின் பிரச்சாரத்தை முறியடிக்க முயலவில்லை.

போபர்ஸ் ஊழலையும், ஹர்ஷத் மேத்தா ஊழலையும் தமது நிருபர்களைக் கொண்டு அம்பலத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர்கள் இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அதிரடி ரிப்போர்ட்கள் தரும் பத்திரிக்கைகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்தக் கோயபல்சுகள் வளர்ந்தார்கள். மதவெறி தலைவிரித்தாடியது, அவர்களின் வளர்ச்சியை அத்தனை பேரும் மவுனமாக மகிழ்வுடன் ரசித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களில் இருந்து மாறுபட்டு இந்தியா டுடே இதழ் தனது செய்தியாளர்களைக் களம் இறக்கி இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அத்தனை கோவில்களுக்கும் சென்று உணமையைக் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. (பிப்ரவரி 21. 1993)

இந்தியா டுடே பிப்ரவரி 1993 இதழ் யாரிடமாவது இருந்து அதை அனுப்பி வைத்தால் அதை இங்கே இணைத்துக் கொள்ளலாம்.

கோவில்கள் இடிக்கப்பட்டதாகக் கூறும் இந்தக் கோயபல்சுகளை அணுகிய இந்தியா டுடே அந்தப் பட்டியலைக் கேட்ட போது இடிக்கப்பட்ட கோவில்களின் எண்ணிக்கை பற்றியே அவர்களிடம் ஒத்த கருத்து இல்லை. ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு எண்ணிக்கையைக் கூறியதை இந்தியா டுடே அம்பலப்படுத்தியது.

பின்வரும் உண்மைகளை இந்தியா டுடே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன என்பதை பா.ஜகவைச் சேர்ந்த எவரும் சரியாகச் சொல்ல முடியவில்லை.

100க்கும் மேற்பட்ட கோவில்கள் என்றார் சஹான்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அத்வானி இது பற்றிப் பேசும் போது ஒரு முறை 55 என்றார். மற்றொரு முறை 40 என்றார்.

பாஜகவின் மத்திய அலுவலகம் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 46 கோயில்களின் பட்டியலைத் தந்தது.

அதன் ஜம்மு அலுவலகமோ 82 கோவில்களின் பெயர் அடங்கிய பட்டியலைத் தந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் பத்திரிக்கையாளர் பி.ஜி வர்கீஸிடம் 1990 ல் காஷ்மீர் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட கொளுத்தப்பட்ட 62 கோவில்களின் பட்டியலை அளித்தார்.

1986 பட்டியலில் இருந்த கோவில்களும் அதிகம் இடம் பெற்றிருந்தன.

1986 ல் இடிக்கப்பட்ட கோவில்களை 1990 லும் எப்படி இடிக்க முடியும்?

பா.ஜ. க விடமிருந்தே பெற்ற பட்டியலில் உள்ள 23 கோவில்களை இந்தியா டுடே சென்று பார்த்த பிறகு சாயம் வெளுத்து விட்டது.

எந்தெந்த கோவில்களை முஸ்லிம்கள் இடித்து விட்டார்கள் என்று சங்பரிவாரக் கும்பல் புளுகி வந்ததோ அவை அனைத்தையும் இந்தியா டுடே நேரில் பார்த்து அவை எவ்வித சேதாரமும் இல்லாமல் நின்று கொண்டிருப்பதைப் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை ஒரு பத்திரிக்கை மட்டும் தான் செய்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், சமுதாயத் தலைவர்களும் இனியாவது விழிப்பார்களா? நியாய உணர்வுள்ள ஹிந்துக்கள் இவர்களை இனம் காண்பார்களா?

இந்தியா டுடே இந்தக் கயமையை தோலுரித்துக் காட்டிய பின் காஷ்மீரில் கோவில்களை முஸ்லிம்கள் இடித்து விட்டார்கள் என்று யாரும் பேசுவதில்லை என்பது குறிப்படத்தக்கது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account