Sidebar

06
Thu, Feb
78 New Articles

பாக்கியாத் பத்வாவும் பரேலவி நாளேடும்

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பாக்கியாத் பத்வாவும் பரேலவி நாளேடும்

தமிழகத்தில் உள்ள அரபுக் கல்லூரிகளின் தாய்க்கல்லூரி என்று தமிழக உலமாக்களால் பாராட்டப்படும் நிறுவனம் வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் . இதை நிறுவிய அஃலா ஹஸ்ரத் அவர்கள் மத்ஹப்வாதியாக இருந்த போதும் மத்ஹப் நூல்களில் கண்டிக்கப்பட்டுள்ள பித்அத்களை துணிவுடன் கண்டித்தவர். ஆனாலும் பிற்காலத்தில் அந்தக் கல்லூரியின் பொறுப்புக்கு வந்தவர்கள் மத்ஹப்களில் கண்டிக்கப்பட்ட தீமைகளைக் கூட கண்டிக்காமல் அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து மக்களை வழிகெடுத்தனர். இந்த நிலையில் தான் மத்ஹப்களில் கண்டிக்கப்பட்ட தீமைகளைக் கூட நியாயப்படுத்தும் போலி உலமாக்களை அடையாளம் காட்டுவதற்காக தப்லீக் சிந்தனை உடைய உலமாக்கள் அஃலா ஹஸ்ரத் அளித்த ஃபத்வாக்களில் காலத்துக்கு தேவையானதைத் தொகுத்து பாகியாத் ஃபத்வா என்ற பெயரில் இலவசமாக வெளியிட்டனர். அதனை நாமும் மக்களிடம் பரப்புவதில் கவனம் செலுத்தினோம்.

இந்தக் காலகட்டத்தில் தான் முஸ்லிம் லீக் தலைவரும் மணிச்சுடர் நாளிதழ் உரிமையாளருமான அப்துஸ் ஸமத் இதற்கு எதிராக கடுமையான கருத்தைப் பதிவு செய்தார். இவரது தந்தை திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்த அப்துல் ஹமீத் பாக்கவி ஆவார். பாக்கவியின் மைந்தன் என்ற பொருள்படும் இப்னுல் பாக்கவி என்ற பெயரில் அப்துஸ்ஸமத் கட்டுரை எழுதுவது இதன் அடிப்படையில் தான்.

மத்ஹப்களில் கூறப்பட்ட உண்மைகளைச் சொல்வதைக் கூட அன்றைய சமுதாயத் தலைவர்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை. அப்படியானால் மத்ஹபுக்கு எதிரான நமது பிரச்சாரத்துக்கு எத்தகைய எதிர்ப்புகள் இருந்திருக்கும்? அந்த வரலாற்றைப் பதிவு செய்வதற்காக அன்று பீஜே ஆசிரியராக இருந்த போது அல்ஜன்னத் இதழில் பதிவு செய்ததை தேவையான மாற்றத்துடன் இங்கே வெளியிடுகிறோம்..

காலம் சென்றவரை விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல. தவ்ஹீதுக்கு எதிராக யாரெல்லாம் கச்சை கட்டி இருந்தனர் என்ற வரலாற்றைப் பதிவு செய்வதே இதன் நோக்கம்.

பாக்கியாத் ஸ்தாபகரின் பத்வாக்கள் என்ற தொகுப்பிலிருந்து ஒரு பத்வாவைச் சென்ற இதழில் அல்ஜன்னத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த பத்வா தொகுப்புகள் யாவும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்தது அல்லவெனினும் ஷிர்க், பித்அத் பற்றிய பத்வாக்களில் பெரும்பாலானவை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையை ஒட்டி அமைந்துள்ளது.

இதனிடையே பரேலவி நாளேடு மணிச்சுடரில் சமுதாயத் தலைவர் யார்? என்ற தலைப்பில் இப்னுல் பாகவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமத்) 15.09.1988 இதழில் பாகியாத் பெயரால் மோசடிப் பிரசுரம் என்ற தலைப்பிட்டு மிதிப்புரை என்று எழுதியிருக்கிறார்.

அதைப் படிக்கின்ற அறிவுடைய எவருக்கும் எழுதியவரின் மடமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு மக்களை இன்னமும் மடையர்களாக எண்ணிக் கொண்டிருக்கும் அவரது மனப் போக்கையும் காட்டுகின்றது. வரிக்கு வரி விமர்சிக்கப்பட வேண்டிய அளவுக்கு அதில் சரக்குகள் இருக்கின்றன.

24.04.1988 அன்று நடைபெற்ற பாக்கியாத் பட்டமளிப்பு விழாவில் அது வெளியிடப்பட்டதாக அந்த மதிப்புரையில் ஒப்புக் கொள்ளும் இப்னுல் பாகவி இந்த பத்வாவை மக்கள் மத்தியில் மதிப்பற்றதாகச் செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்து வைக்கும் மலிவான வாதங்கள் மஞ்சள் பத்திரிகைகளையும் மிஞ்சி விடுகின்றன.

அஃலா ஹஸரத் காலமாகி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பாக்கியாத் பதிவு ஏட்டில் உள்ள சுமார் 375 பத்வாக்களை மவ்லவி முஹம்மது யாகூப் வெளியிட்டிருக்கிறார்

என்கிறது மிதிப்புரை.

இதன் மூலம் பாக்கியாத் பதிவு ஏட்டில் அந்த ஃபத்வா இருக்கின்றது என்பதை இப்னுல் பாகவி ஒப்புக் கொண்டு விட்டு அரை நூற்றாண்டுகள் கழிந்து விட்ட பின் வெளியிடப்பட்டதைக் குறை காண்கிறார்.

அப்துல் ஹமீது பாகவி வெளியிட்ட தர்ஜமதுல் குர்ஆனை அவர் மறைந்து பல்லாண்டுகள் கழித்த பின் அவரது மகன் வெளியிடுவது எப்படியோ அப்படி இதை இப்னுல் பாகவி எடுத்துக் கொள்ளவில்லை?

பத்வாக்கள் வெளியிடப்படு முன் அதன் முதல்வருடைய அனுமதியையோ பேராசிரியர்களின் அனுமதியையோ பெற்றதாகத் தகவல் இல்லை

என்கிறார் இப்னுல் பாகவி..

அனுமதி பெறவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதனால் அந்த ஃபத்வாக்களை அதன் ஸ்தாபகர் வழங்கவில்லை என்று ஆகிவிடுமா? அனுமதி பெறவில்லை என்று கூட எழுதத் திராணியின்றி அனுமதி பெற்றதாகத் தகவல் இல்லை. என்று எழுதியிருக்கிறார் இவர்.

சொல்லப்படுகிறது, பேசிக் கொள்கிறார்கள், தகவல் இல்லை இவையெல்லாம் மஞ்சள் பத்திரிக்கை நடை இல்லையா?

இவரது பாணியிலே நாம் எழுவதென்றால் இந்த மிதிப்புரை எழுதுவதற்காக எத்தனை லட்சம் பெற்றார் என்பது பற்றி நமக்குத் தகவல் இல்லை என்று எழுதலாம் அல்லவா?

அனுமதி பெறவில்லை என்றே வைத்துக் கொள்வோம். பகிரங்கமாக அந்த ஸ்தாபனத்தில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர், நிர்வாகிகள், பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திய விழாவில் பெங்களூர் அரபிக்கல்லூரி முதல்வர் அபுஸ்ஸூவூத் அவர்களால் வெளியிடப்பட்டதே அனுமதி தானே.

இதன் ஒரு பகுதியைத் தமிழில் மொழி பெயர்த்த அந்தக் கல்லூரிப் பேராசிரியரை அந்த ஸ்தாபனத்தில் தொடர அனுமதிக்கக் கூடாது

என்று எழுதியிருக்கும் இவர் இன்னொன்றையும் எழுதுவாரா?

மதரஸா பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேராசிரியர்கள் முன்னிலையில் அது வெளியிடப்படும் போது அதைத் தடுத்து நிறுத்தாத - நிறுத்த முடியாத - அதற்கு ஆதரவாக இருந்த கையாலாகாத முதல்வர் உட்பட எல்லாப் பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தனது நாளிதழில் வலியுறுத்துவாரா? கையாலாகாத முதல்வரும், பேராசிரியர்களும் நிறைந்த ஸ்தாபனமே பாக்கியாத் என்று சொல்லாமல் சொல்கிறார் இவர்.

ஆயிரக்கணக்கான பத்வாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த ஏட்டிலிருந்து 375 பத்வாக்களை மாத்திரம் இவர் பொறுக்கி எடுத்து வெளியிடுவதற்கு என்ன நோக்கம் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை

இப்படி ஒரு வித்தியாசமான வாதத்தைக் கூறுகிறது பரேலவி நாளேடு.

6666 ஆயத்களுக்கு இவரது தந்தை மொழி பெயர்ப்பு செய்திருக்கும் போது தனது நாளேட்டில் ஒரு சில ஆயத்களை மட்டும் வெளியிடுவதற்கு என்ன நோக்கம் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் போது இவர் மட்டும் ஸிராஜுல் மில்லத் என்று தன்னைப் பற்றி தானே எழுதிக் கொள்வதற்கு என்ன நோக்கம் என்று தெளிவாகத் தெரியவில்லை.

அவரது வஞ்சக நடையில் இதற்கு இப்படித்தான் பதில் கூற வேண்டும்.

வட ஆர்காடு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் உர்தூ மொழியினர். உர்தூ பேசாவிட்டால் முஸ்லிமே இல்லை என்று கூறும் அளவுக்கு உர்தூ மோகம் கொண்டவர்கள்.

அந்த மாவட்டத்தின் தலைநகரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உர்தூ தெரிந்திருக்கவில்லையாம்.

பைத்தியக்காரன் கூட இதை நம்ப மாட்டானே? வந்திருந்த மக்களுக்குத் தான் தெரியவில்லை. உர்தூவில் மணிக்கணக்காகப் பேசும் அந்த முதல்வருக்குமா உர்தூ தெரியாமல் போனது?

உர்தூவிலேயே பாடங்கள் நடத்துகின்ற பேராசியரியர்களுக்குமா உர்தூ தெரியவில்லை?

அய்யா இப்னுல் பாக்கவி அவர்களே உங்கள் அரசியல் பித்தலாட்டங்களை இதிலும் காட்ட வேண்டுமா? இப்படி அறவே உண்மையில்லாததை எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை?

தெற்கத்தி நடையில் எழுதப்பட்ட அந்த ஃபத்வாவை அதன் கருத்து மாறாமல் இலக்கிய உர்தூவில் மாற்றியதாக அந்த ஃபத்வாவை தொகுத்தவர் குறப்பிடுகிறார். அதையும் இப்னுல் பாக்கவி விடவில்லை.

அஃலா ஹஸரத் அவர்களுக்கு இலக்கிய உர்தூ தெரியாதாம். இவருக்கு இலக்கிய உர்தூ தெரியுமாம்

என்று சிண்டு முடிகிறார்.

இப்னுல் பாக்கவி இவ்வளவு மட்டரகமாகப் போக வேண்டுமா? அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் உர்தூவில் பாண்டித்துவம் பெற்று இருப்பது அவசியமா என்ன?

உர்தூ இலக்கிய அறிவு ஒருவருக்கு இல்லை என்று கூறுவது அவரது தகுதியைக் குறைத்துவிடுமா என்ன?

மார்க்க அறிஞரான இவரது தந்தையின் தமிழ் நடையை விட இவரது தமிழ் நடை இலக்கியத்தரமுடையது என்று சொன்னால் இவரது தந்தையின் மார்க்கப் புலமைக்கு என்ன மாசு வந்து விடப் போகிறது?

ஒரு குறிப்பிட்ட மஸ்லக்கைப் பின்பற்றும் குழப்பவாதிகள் தமிழ்நாட்டு மஸ்ஜிதுகளில் இதைத் தொங்கவிட எடுத்துக் கொண்ட அவசரத்தையும், முக்கியத்துவத்தையும் பார்க்கும் போது இதன் முன்னால் வேறு சில சக்திகளின் தூண்டுதல் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது

என்று தன்னை அடையாளம் காட்டுகிறார் இப்னுல் பாக்கவி.

அந்த பத்வாத் தொகுப்பை தப்லீகின் மிகப்பெரும் தலைவர் அபுஸ்ஸூவூத் மவ்லவி அவர்கள் வெளியிட்டதால் தப்லீக் ஜமாஅத்தினரும் தேவ்பந்த் மஸ்லக்கை ஒட்டி அந்த பத்வாக்கள் அமைந்திருப்பதால் தேவ்பந்த் மவ்லவிகளும் இதை மஸ்ஜிதுகளில் தொங்க விட்டனர். அவர்களைத் தான் குழப்பவாதிகள் என்கிறார். உள்நோக்கம் என்கிறார்.

சந்தனக் கூடு வைபவங்களைச் செய்தியாக வெளியிட்ட போது இவரைப் பரேலவி என்று நம்பாத தப்லீக் ஜமாஅத்தினர்

குணங்குடி மஸ்தானுக்கு விழா எடுக்கச் சொன்ன போதும் பரேலவி என்று இவரை அடையாளம் தெரிந்து கொள்ளாத தப்லீக் ஜமாஅத்தினர்

காயிதே மில்லத் சமாதிக்கு பச்சைப் போர்வை போர்த்தி பாத்தியா ஓதும் போது இவரைத் தெரிந்து கொள்ளாத தப்லீக் ஜமாஅத்தினரும் தேவ்பந்திகளும்

இனியாவது இந்த பரலேவியைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

அவரது ஏடு சமுதாய நாளேடு அல்ல. பரலேவிக் கொள்கையைப் பரப்புவதற்காக பரேலவியால் நடத்தப்படும பரேலவிக் கொள்கைப் பிரச்சார ஏடு என்பதை இனியும் புரிந்து கொள்ளத் தவறினால் மிகப் பெரும் விளைவை பரேலவிசத்தை ஆதரிக்காத இயக்கங்கள் சந்திக்க நேரும் என எச்சரிக்கிறோம்.

இவருக்கெல்லாம் ஜிந்தாபாத் போடுவதை இனியேனும் தவிர்க்கா விட்டால் தக்லீதை ஆதரிக்கும் தவ்ஹீத் இயக்கங்கள் கூட ஜிந்தாவாக இருக்க முடியாது என்பதை தவ்ஹீத்வாதிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

22.12.2010. 12:10 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account