Sidebar

23
Mon, Dec
26 New Articles

நாற்பது வயதில் தான் சட்டதிட்டங்களா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நாற்பது வயதில் தான் சட்டதிட்டங்களா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுகு பீஜே எழுதிய விளக்கம்)

15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.314 அவன் தனது பருவ வயதை அடைந்து, நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்'' என்று கூறுகிறான்.340

திருக்குர்ஆன்: 46:15

இவ்வசனம் என்ன கூறுகிறது என்பதில் பல    நூற்றாண்டுகளாக எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.

குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறிக் கொண்டு குர்ஆன் எந்த மொழியில் அருளப்பட்டதோ அம்மொழியின் அரிச்சுவடி கூட அறியாத ராஷாத் கலீபா என்பவனும் அவனைப் போன்றவர்களும் இவ்வசனத்தைத் தங்களின் நச்சுக் கருத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது. நாற்பது வயது வரை மனிதன் எப்படி வாழ்ந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்பது இந்த மூடர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கமாகும்.

நாற்பது வயதை அடையும் போது என்ற வாசகத்தைத் தான் இவர்கள் தங்களின் கூற்றுக்குச் சான்றாக எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அடுத்து வருகின்ற வசனத்தில் இவர்களது நன்மைகளை ஏற்று தீமைகளை மன்னிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதையும் தங்கள் வாதத்துக்குப் பலம் சேர்ப்பதற்கு எடுத்துக் காட்டுகின்றனர்.

நாற்பது வயது வரை மனிதன் மீது எதுவும் கடமையாவதில்லை என்று வாதிட்டாலும், அது தவறாகும்.

நாற்பது வயதுக்கு முன்பே மனிதன் மீது கடமைகள் சுமத்தப்பட்டு விடுகின்றன. ஆயினும், மன்னிப்புக் கேட்டால் நாற்பது வயது வரை அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறினாலும் அதுவும் தவறானதாகும்.

இவ்வாறு வாதிடுவதற்கு ஏற்ற வகையில் இவ்வசனம் அமைந்திருக்கவில்லை. இவ்வசனம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்கு முன்னால் மனிதன் மீது எப்போது முதல் பொறுப்புகளும், கடமைகளும் சுமத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

அனாதைகள் பருவம் அடைவது வரை அழகிய முறையில் தவிர அவர்களின் சொத்துக்களின் பக்கம் நெருங்காதீர்கள்.

திருக்குர்ஆன்: 6:152, 17:34

பிறரது பராமரிப்பில் வளரும் அனாதைகள் சுயமாகப் பொறுப்பேற்கும் காலம் குறித்து இவ்வசனம் விளக்குகிறது. அனாதைகள் பருவம் அடைந்து விட்டால் தாங்கள் சொத்துக்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வார்கள். அதுவரை தான் மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது இவ்வசனத்தின் வழிகாட்டுதலாகும்.

பருவமடைதல் என்றால் அது தான் நாற்பது வயதை அடைதல் என்று விளக்கம் கூறுவோரும் விபரம் கெட்டவர்களும் உள்ளனர். பருவம் அடைதல் என்றால் உடலுறவு கொள்ளத் தகுதியை அடைதல் தான் என்று அல்லாஹ்வே தெளிவாகக் கூறி விடுகிறான்.

அனாதைகளைப் பரீட்சித்துப் பாருங்கள்! அவர்கள் உடலுறவு கொள்ளும் பருவத்தை அடைந்து அவர்களிடம் நீங்கள் திறமையைக் கண்டால் அவர்களின் செல்வங்களை அவர்களிடம் வழங்கி விடுங்கள்.

திருக்குர்ஆன்: 4:6

உடலுறவு கொள்ளும் பருவம் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் நிகாஹ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "நிகாஹை அவர்கள் அடையும் போது'' என்பதற்கு உடலுறவு கொள்ளும் பருவத்தை அடைதல் என்பதே பொருளாகும். பருவம் அடைதல் என்று எதை நாம் கூறுகிறோமோ அதுவே மனிதன் முதிர்ச்சியடையும் வயதாகும் என்று இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

சொத்துக்களைப் பாராமரிப்பது பற்றித் தானே இவ்வசனங்கள் கூறுகின்றன. மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் அதாவது வணக்க வழிபாடுகளுக்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளதா என்று சிலருக்குத் தோன்றலாம்.

அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அறிவுடையோர் இதிலிருந்து அதை விளங்கிக் கொள்ள இயலும். ஏனெனில், சொந்தமாக- சுயமாக மனிதன் இயங்கும் வயது இது தான் என்று கூறுவதே போதுமானதாகும்.

ஆனாலும், இவர்கள் எதை விரும்புகிறார்களோ அதையும் அல்லாஹ் கூறாமல் இல்லை.

பிறரது வீடுகளுக்குச் செல்லும் போது அனுமதி கேட்ட பிறகு தான் செல்ல வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கட்டளையாகும். ஆனால், சிறுவர்கள் அனுமதி கேட்கத் தேவையில்லை என்பதும் குர்ஆனுடைய கட்டளை ஆகும்.

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை எதுவரை என்றால் நாற்பது வயது வரை அல்ல. மாறாக, பருவம் அடையும் வரை தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பவர்கள் போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 24:59

சிறுவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் பெரியவர்களுக்குரிய சட்டத்திற்குள் வந்து விடுகிறார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இப்போது விளக்கத்திற்காக நாம் எடுத்துக் கொண்ட வசனத்திற்கு வருவோம். இவ்வசனத்தில் பருவம் அடைவது நாற்பது வயதில் தான் என்று கூறப்படவே இல்லை. மாறாக அதற்கு எதிரான கருத்தே கூறப்பட்டுள்ளது.

"மனிதன் பருவத்தை அடைந்து மேலும், நாற்பது வயதை அடையும் போது'' என்று தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பருவத்தை அடைவதே நாற்பது வயதில் என்றால் இவ்வாறு கூற முடியாது. இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கூறினாலே போதுமானதாகும்.

பருவ வயதை அடைதல் என்பது வேறு.

நாற்பது வயதை அடைதல் என்பது வேறு

என்பதை இவ்வசனத்திலிருந்து முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"நாற்பது வயதை அடையும் போது'' என்ற சொற்றொடரை இங்கே ஏன் குறிப்பிட வேண்டும்? இதற்கு இவ்வசனத்திலேயே விடை கிடைக்கிறது.

பொதுவாக மனிதன் பருவம் அடையும் போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றதையும் கூட அவன் நினைப்பதில்லை. அவனுக்குத் திருமணம் ஆகும் போது பெற்றோர் மேலும் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெற்றோரை, உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கிறானா என்றால் அதுவுமில்லை.

அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும் போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது! நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான். இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான்.

இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் கூட நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.

தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும்  போது தான் தந்தையின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்கு தேவைப்படுகிறது.

பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!

கருவில் சுமந்தபோது தாய்பட்ட கஷ்டம்!

பெற்றெடுக்கும் போது அவள் படுகின்ற சிரமம்!

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிய பின் " நாற்பது வயதை அடையும் போது'' என்று கூறுவதிலிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.

"என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு'' என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று அவன் பருவ வயதை அடையும் போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன் எனக் கூறி திருந்துகிறான். இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசிக்கும் போது நாற்பது வயதை அடையும் போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பது தான் கூறப்படுகிறதே தவிர நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.

உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும் போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல்  தானாக இழந்து விடும். இவர்களை விட இளமைப் பருவத்தில் உள்ளவர்களை நெறிப்படுத்தத் தான் சட்ட திட்டங்கள் தேவை.

ஆனால், இந்த மூடர்கள் நாற்பது வயது வரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம் என்று நரகின் விறகுக் கட்டைகளாக மாறுகின்றனர்.

நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நாலைந்து மனநோயாளிகளான இவர்கள் மட்டும் கூறுவதால் இதன் விபரீதம் புரியவில்லை. உலகில் உள்ள அனைவரும் இந்தச் சித்தாந்தத்தைச் கடைப்பிடித்தால் என்னவாகும்? என கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் கூட இது எந்த அளவு ஆபத்து என்பதை உணர்வார்கள்.

இவ்வாறு கூறுகின்றவர்களிடம் நாற்பது வயதுக்கும் குறைவான சிலர் சென்று இழுத்துப் போட்டு உதைத்தால் - இவர்களின் பெண்களிடம் தகாத முறையில் நடந்தால் - இவ்வளவையும் செய்து விட்டு எங்களுக்கு நாற்பது வயது ஆகவில்லை என்பதால் பெரிதுபடுத்தாதீர்கள் என்று கூறினால் இந்த வசனத்தின் சரியான அர்த்தம் அவர்களுக்கு உடனே விளங்கி விடும்.

பருவம் அடைந்தவுடன் சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்து விடுகின்றன. நாற்பது வயது வரை அவை மன்னிக்கப்படும் என்றே நாம் கூறுகிறோம் என்று இவர்கள் சமாளிக்கக்கூடும்.

அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவனுக்கு இல்லையா? ஐம்பது வயதுடையவன் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்க மாட்டானா? என்று கேட்டால் திருதிருவென முழிப்பார்கள்!

மன்னிப்புக் கேட்டு மன்னிப்பதற்கு வயது வரம்பு இல்லை. மன்னிப்புக் கேட்காமலே மன்னிப்பு கிடைப்பதற்குத் தான் நாற்பது வயது வரம்பு என்று உளறுவார்கள்!

மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவர்களே! இவ்வசனத்தில் நாற்பது வயதுடையவன் " நான் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்று பாவமன்னிப்புத் தேடுவதாகத் தான் கூறப்பட்டுள்ளது. பாவமன்னிப்புக் கேட்காமல் மன்னிப்பதாக இங்கே கூறப்படவில்லை என்பதையாவது விளங்க மாட்டீர்களா?

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account