நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன?
(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)
81. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 3:81
இவ்வசனத்திற்கு பல ஆண்டுகளாக அறிஞர்களில் பலர் தவறான விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்களின் தவறான விளக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் (இறைத் தூதர்) என்று அறிவித்துக் கொண்டான். இவ்வசனம் உண்மையில் கூறுவது என்ன என்பதை மார்க்க அறிஞர்களில் பலரும் கவனிக்கவில்லை. ரஷாத் என்பவனும் விளங்கிடவில்லை.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதிக் காலத்தில் வரவுள்ளனர். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் இங்கே கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.
இவர்களது தவறான விளக்கத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் என்று எவ்வாறு பிரகடனம் செய்தான் என்று முதலில் பார்ப்போம்.
7, 8. நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை95 நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.26
திருக்குர்ஆன் 33:7
இவ்வசனத்தில் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடக்கம் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், உம்மிடமும் என்று இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்டதே இவ்வுடன்படிக்கை. இனி மேல் வரக்கூடிய தூதரை ஏற்க வேண்டும் என்று நபிகள் நாயகத்திடமும் உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் நபிகள் நாயகத்துக்குப் பிறகு ஒரு தூதர் வரவிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்தத் தூதர் நானாவேன் என்று ரஷாத் கலீஃபா என்பவன் வாதிட்டான்.
பெரும்பாலான அறிஞர்களின் விளக்கமும், அந்த விளக்கத்தின் அடிப்படையில் இவன் எழுப்பிய வாதமும் இரண்டுமே முற்றிலும் தவறானதாகும்.
மேற்கண்ட வசனம் எதிர்காலத்தில் வரவிருக்கிற ஒரு தூதர் பற்றிய முன்னறிவிப்பாகும் என்பது தான் இருவரின் வாதத்துக்கும் அடிப்படை.
முன்னறிவிப்பில் கூறப்படுபவர் யார் என்பதில் தான் இவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
ஆனால் இவ்வசனத்தை கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லையென்பதே உண்மையாகும்.
இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும். வாசக அமைப்புக்கு எதிரான கருத்தை இதற்கு விளக்கமாகக் கூறக் கூடாது. அவ்வாறு யார் கூறினாலும் அது முற்றிலும் தவறானதாகும்.
இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்திலிருந்தே அறிவது தான் சரியானதாகும்.
நபிமார்களிடம் இறைவன் உறுதிமொழி எடுத்திருக்கிறான். இதில் எல்லா நபிமார்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அடங்க மாட்டார்கள் என்று கருதுவதற்கு இவ்வசனம் இடம் தரவில்லை. நபிகள் நாயகத்திடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டதை 33:7 வசனம் தெளிவாகவும் அறிவித்து விடுகிறது.
எனவே, நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையையே இவ்வசனம் கூறுகிறது. நபிகள் நாயகத்தை விட்டுவிட்டு மற்ற நபிமார்களிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறுவது இவ்வசனத்தில் இல்லாத கருத்தும் இவ்வசனத்திற்கு முரணான கருத்துமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி ஏனைய நபிமார்களிடம் தான் உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் இதை விளங்கியதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்று கூறினார்கள்.
இவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு என்று தவறாகக் கூறியதைத் தான் ரஷாத் கலிஃபா என்பவன் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான். இது முன்னறிவிப்பு தான் ஆனால் அது நபிகள் நாயகத்தைக் குறித்த முன்னறிவிப்பு இல்லை. மாறாக, என்னைக் குறித்த முன்னறிவிப்பாகும் என்று வாதிட்டான்.
உம்மிடமும் என்று 33:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளதால், இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) பற்றியதாக இருக்க முடியாது என்றான்.
அதாவது இவ்வசனம் ஒரு முன்னறிவிப்பு என்பதில் இவனும் பெரும்பாலான அறிஞர்களும் ஒன்றுபடுகிறார்கள். யாரைப் பற்றிய முன்னறிவிப்பு என்பதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் இதில் எந்த முன்னறிவிப்பும் இல்லை. எனவே, எடுக்கப்பட்ட உடன்படிக்கை என்ன என்பதை அவ்வசனத்திலிருந்தே நாம் ஆராய்வோம்.
உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் உடன்படிக்கை.
அல்லாஹ் ஒரு வார்த்தையைக் கூட தேவையில்லாமல் பயன்படுத்த மாட்டான். நபிமார்களிடம் உடன்படிக்கை எடுக்கும் போது "உங்களிடம் ஒரு தூதர் வந்தால்'' என்று அல்லாஹ் கூறுகிறான். உங்களிடம் என்ற வார்த்தை முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வாசகம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.
ஸும்ம ஜாஅகும் - பின்னர் உங்களிடம் வந்தால் என்று அல்லாஹ் கூறுவதைத் தான் மார்க்க அறிஞர்களில் பலர் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டனர்.
"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன். இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனி மேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன்வரவேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.
இது நபிகள் நாயகத்தைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகிவிடும். "அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் ஷரத்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகத்துக்கு உதவவுமில்லை.
அது போல் ரஷாத் கலீஃபா என்பவனையோ வேறு யாரையோ இது குறிக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவனை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்று அவனுக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். ரஷாத் கலீஃபாவுக்கு நபிகள் நாயகம் உதவவுமில்லை. அவன் மீது ஈமான் கொள்ளவுமில்லை. எனவே இவ்வசனம் யாரைப் பற்றிய முன்னறிவிப்பும் இல்லை.
மாறாக "நபித்துவம்' என்பது மனிதனின் உழைப்புக்காகவோ திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல. அல்லாஹ்வின் கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.
1. உங்களிடம் அவர் வந்தால்.
2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்.
3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்.
ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.
ஒரு நபியை இறைவன் அனுப்பிய பின் அவருக்கு பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதை 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
நமக்குக் கிடைத்த தகுதியை இன்னும் சிலருக்கு அல்லாஹ் பங்கு போட்டுக் கொடுத்து விட்டானே என்றெல்லாம் முதலில் அனுப்பப்பட்டவர்கள் உரிமைக் குரல் எழுப்பக்கூடாது என்று ஏற்கனவே இறைவன் கடுமையான உறுதிமொழி எடுத்த தன் காரணமாகவே 36 வது அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு ஒரு சமுதாயத்துக்கு ஒரு காலக்கட்டத்தில் பல நபிமார்கள் அனுப்பப்பட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.
யாருடைய விளக்கத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இவ்வசனத்தைச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்குத் தான் வர முடியும்.
எனவே, ரஷாத் கலீஃபா என்பவன் தன்னைத் தூதர் என்று கூறிக் கொண்டதற்கு இவ்வசனத்தில் எள்ளளவும் எள் முனையளவும் ஆதாரம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்பதற்கும் இதில் ஆதாரம் ஏதுமில்லை.
இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக்காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
ஹில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி. அவர் உலகில் - பூமியில் - இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தான் அந்த நம்பிக்கை.
அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.
ஹில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும்.
அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும்.
பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
இவ்வசனத்திலிருந்து ஹில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம். அல்லது அவர் நபியில்லை என்று கூற வேண்டும். (ஈஸா நபியவர்கள் ஏன் உதவவில்லை என்று கேட்க முடியாது. அவர்கள் இம்மண்ணுலகில் இல்லை. மேலும் ஈஸா நபியவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றைப் பின்னர் நாம் விளக்கவுள்ளோம்.
நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode