முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா?
ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்
144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101 அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
திருக்குர்ஆன் 3:144
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்லர் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக்கூடாது. இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாக சிலர் வாதிடுகின்றனர்.
"முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர்'' என்ற சொற்றொடரின் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்றால் அவர்களுக்கு முன் வந்த அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பதே பொருள். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.
ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால் இக்கருத்து மேலும், வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித்தான் நபித்தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தார்கள். இந்த வரலாறு புகாரி (3670, 1242, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலுசேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி)யின் வாதத்தை நபித்தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று எதிர்க்கேள்வி கேட்டிருப்பார்கள்.
அபூபக்கர் (ரலி) இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததை நிரூபித்தபோது நபித்தோழர்கள் எவ்வித எதிர்க் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர். எனவே, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை நபித்தோழர்கள் ஏகமனதாக நம்பியிருந்தார்கள் என்பதும் இவர்களின் வாதமாகும்.
திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாமல் இந்த வாதத்தை எடுத்து வைக்கின்றனர் ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழிமுறையல்ல.
இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாவிட்டால் அந்த ஒரு வசனத்திலிருந்து எது விளங்குகிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு வாதிடலாம். அவ்வாறு இல்லாமல் பல இடங்களில் அந்த விஷயம் குறித்து கூறப்பட்டால் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.
திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.
இந்த இடத்திலேயே ஈஸா நபியைத் தவிர என்று கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.
"பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு மனிதனுக்கு நாம் வலியுறுத்தினோம்'' என்று குர்ஆன் கூறுகிறது. மேலும், மனிதனை அவனது தாய் சிரமத்துடன் பெற்றெடுத்தாள் எனவும் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 31:14)
இவ்வசனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனிதர்கள் அனைவரது நிலையும் இதுதான் என்று கூற முடியாது. மனிதன் என்பதில் ஆதம், ஹவ்வா,, ஈஸா ஆகியோரும் அடங்குவார்கள். எனவே, அவர்களுக்கும் தாய், தந்தையர்கள் இருந்தார்கள் என்று ஒருவர் வாதிடுவது எந்தளவு அறிவீனமோ இந்த வாதமும் அது போன்றதாகும்.
இவ்வசனத்தில் மனிதன் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் திருக்குர்ஆனின் வேறு வசனங்களில் ஆதம், ஹவ்வா, ஆகியோருக்கு இவ்வாறு பெற்றோரைப் பேணுமாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியாது என்று அறிந்து கொள்கிறோம்.
மனிதர்களே என்று அழைத்து உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 49:13)
இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ஈஸா நபிக்கும் தந்தை இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய இயலும். ஆயினும் வேறு இடங்களில் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் அவரை இதிலிருந்து நீக்கி விடுகிறோம்.
மனிதனை விந்திலிருந்து படைத்ததாகப் பல வசனங்கள் கூறுகின்றன. இதில் ஆதம், ஹவ்வா, ஈஸா ஆகியோர் விதி விலக்குப் பெற்றது வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் ஏராளமான வசனங்கள் குர்ஆன் முழுவதும் உள்ளன.
எனவே, முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிட்டு வருகின்றனர்.
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.
ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
என்ற கருத்திலமைந்த இரு வசனங்கள் (43:61, 4:159) பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன. இவ்வசனத்தைக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடுவோர் அவ்விரு வசனங்களை என்ன செய்யச் சொல்கிறார்கள்? வேதத்தில் பாதியை ஏற்று மீதியை மறுப்பவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும்.
எனவே அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து "ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்'' என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதையும், ஆதமைக் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் இணைத்து "ஆதம் தவிர மற்றவர்களை விந்துத் துளியில் படைத்தோம் என்று முடிவு செய்தது போல் தான் இங்கேயும் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.
இவர்களின் வாதம் தவறானது என்பதற்கு மேற்கண்ட இரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் சான்றாக அமைந்துள்ளது. ஏறத்தாழ இந்த வசனத்தைப் போல் அமைந்த அந்த வசனம் இவர்களின் கருத்து தவறானது என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்ற விதமாக அமைந்துள்ளது.
75. மர்யமின் மகன் மஸீஹ்92 தூதரைத் தவிர வேறில்லை.459 அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.101 அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
திருக்குர்ஆன்: 5:75
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.
இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.
இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் - நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்தில் - ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகிற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?
"ஈஸா தூதர் தான். அவரே மரணித்து விட்டார்'' என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.
மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்தை இது அழுத்தமாகச் சொல்லும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா?
"ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஞானமிக்கவன். நுண்ணறிவாளன். அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.
அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?
அவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர் எனக் கூறி விட்டு அவர்கள் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி கடவுள் தன்மையை மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி இறைவன் தக்க பதில் கூறியிருப்பான்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.
அதுபோல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் ஆதாரமாகக் காட்டுவதும் சரியல்ல.
ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர். நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் அவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி)யின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
ஈஸா நபி வருகை பற்றி அறிந்து கொள்ள 4:159 வசனத்தை ஓதுங்கள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதை முன்னர் நாம் குறிப்பிட்டதும், ஈஸா நபியின் வருகை பற்றிய ஹதீஸ்களைப் பல நபித்தோழர்கள் அறிவித்திருப்பதும் நபித்தோழர்களின் நிலைப்பாட்டை நமக்கு விளக்குகிறது.
அனைவருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் ஆதாரமாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.
வவ்வால் பறவையினமாக இருந்தும் அது பாலூட்டியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விதிவிலக்கு. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதால் "பறவைகள் பாலூட்டுவதில்லை'' என்று நாம் பேசலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். பேசுபவருக்கும் கேட்டவருக்கும் வவ்வால் விதிவிலக்கு என்பது சொல்லாமலேயே தெரியும்.
ஈஸா நபி விஷயம் விதிவிலக்கானது என்பதை நபித்தோழர்கள் நம்பியிருந்ததால் தான் அவர்கள் அதை ஆதாரமாகக் காட்டி கேள்வியெழுப்பவில்லை.
எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல அமைந்த 5:75 வசனம் அவர்கள் இதுவரை மரணிக்கவில்லை என்று விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.
ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் வேறு சில வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode