ஈஸா நபி யுகமுடிவு நாளின் அடையாளமாவார்
ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களூக்கு பீஜே எழுதிய விளக்கம்
61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)
திருக்குர்ஆன்: 43:61
இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்பு ஈஸா நபி மரணித்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்கனவே இறந்த ஒருவர் யுக முடிவு நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட யுக முடிவு நாளின் அடையாளமாக இருக்கிறார்கள் என்று கூறப்படாத போது அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்த ஒருவரைப் பற்றி இவ்வாறு கூறவே முடியாது.
யுக முடிவு நாள் நெருங்கும் போது அதை உணர்த்தும் அடையாளமாக அவர் இருக்கிறார் என்றால் யுக முடிவு நாள் நெருங்கும் போது அவரது வருகை அவசியமாகும்.
(இது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அதை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஈஸா நபியின் வருகை என்பது குர்ஆனுக்கு முரணானது என்று அறிவீனர் சிலர் வாதிடுவதால் குர்ஆனிலிருந்தே இதை நிரூபிக்கின்றோம்.)
சென்ற இதழில் நாம் எடுத்துக்காட்டிய வசனமும் அதிலிருந்து எடுத்து வைத்த வாதங்களும் இவ்வசனமும் இதிலிருந்து எடுத்து வைத்த வாதங்களும் ஈஸா நபியவர்கள் இனி மேல் தான் மரணிப்பார்கள் என்பதை உறுதியாகக் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.
ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடக்கூடியவர்கள் சில வசனங்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். ஆனால், அவர்கள் இவ்விரு வசனங்களுக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கத்தையும் கூற மாட்டார்கள். இவ்விரு வசனங்களும் குர்ஆனில் இல்லாதது போல் நழுவி விடுவார்கள்.
கீழ்க்காணும் வசன்ங்களை எடுத்துக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று எதிர்வாதம் செய்கிறார்கள்.
{ وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117) إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (118)} [المائدة: 116 - 118]
116. "மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?''459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன்.10 எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.
117, 118. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)26
திருக்குர் ஆன் 5:116, 117, 118
இம்மூன்று வசனங்களிலும் மறுமை நாளில் ஈஸா நபி விசாரிக்கப்படுவதும் அவர்கள் அளிக்கவுள்ள பதிலும் முன்கூட்டியே நமக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இம்மூன்று வசனங்களில் "என்னை நீ கைப்பற்றிய போது'' என்ற சொற்றொடர் உள்ளது. இந்த சொற்றொடர் தான் அவர்களின் ஆதாரமாக இருக்கிறது.
என்னை நீ கைப்பற்றிய போது என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் "ஃபலம்மா தவஃப்பைத்தனீ' என்ற வாசகம் அமைந்துள்ளது.
இவ்வாசகத்துக்கு "என்னை நீ மரணிக்கச் செய்த போது'' என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு என்றும், என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு என்று ஈஸா நபியே கூறியுள்ளதிலிருந்து அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை அறியலாம் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பதும் இவர்களின் வாதம்.
இவர்களின் இந்த வாதம் நிராகரிக்கப்படவேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.
இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும். எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.
இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். தவஃப்பா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல. முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்பதே அதன் நேரடிப் பொருளாகும். மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.
2:224, 2:240, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:17, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)
இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.
அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள். (4:15)
மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்பது கூறியது கூறலாக உள்ளதால் மரணம் கைப்பற்றிக் கொள்ளும் வரை என்ற பொருள் கொள்கிறோம். இங்கும் அதே சொல் தான் இடம் பெற்றுள்ளது.
உயிர்கள் மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.(39:42)
இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்குப் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.
இவை தவிர மறுமையில் முழுமையாக கூலி தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசன்ங்களுக்கு முழுமையாகக் கூலி தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.
மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள்கள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும். மெஜாரிட்டி அடிப்படையில் பொருள் செய்யக் கூடாது.
தொழுகையைக் குறிக்கும் ஸலாத் என்ற சொல்லும், அதிலிருந்து பிறந்த சொற்களும் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.
இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம்பெற்ற தவஃப்பா என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது?
என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் அவர் கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார் என்ற வசனத்துடனும், அவர் மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.
மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் பொருளாக இருக்கிறதோ அது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொடுப்பது தான் சரியானதாகும்.
மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது.
நான் உயிருடன் இருந்த வரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று ஈஸா நபி கூறவில்லை.
நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நான் உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் அவர்களுடன் இருந்த போது என்று கூறுகிறார்கள்.
அதாவது ஈஸா நபி அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள். அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பதை இதிலிருந்து ஊகம் செய்யலாம்.
நான் உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு ஃபலம்மா தவஃப் பைதனி என்று அவர்கள் கூறினால் அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்று தான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு முற்றிலும் வித்தியாசமான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.
தவஃப்பா என்ற சொல்லுக்கு என்னைக் கைப்பற்றிய போது என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.
அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்தபோது அம்மக்களைக் கண்காணிப்பார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப்பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து முன்னர் நாம் சுட்டிக்காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.
இது தவிர வேறு சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ் தொடரும்..
ஈஸா நபி யுகமுடிவு நாளின் அடையாளமாவார்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode