ஆதமுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்தார்கள் என்பதன் பொருள் என்ன?
ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)
34. "ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்!''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் ஸஜ்தா செய்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
அல்குர்ஆன் 2:34
முதல் மனிதராகிய நமது தந்தை ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட போது வானவர்கள் அதற்கு மாற்றுக் கருத்து கூறினார்கள். வானவர்களை விட ஆதமுக்கு அறிவை வழங்கிய இறைவன் அதை அவர்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்டினான். இதன் பின்னர் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் (சாஷ்டாங்கம்) செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டான். வானவர்களும் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஸஜ்தாச் செய்தனர்.
மேற்கண்ட வசனம் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் வசனமாகும். ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தாச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டதும் வானவர்கள் அவருக்கு ஸஜ்தாச் செய்ததும் 7:11, 15:29, 30, 31, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளன.
வானவர்கள் இயல்பிலேயே பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் பாவம் செய்யும் இயல்பு பெற்ற மனிதன் சில வகைகளில் அவர்களை விடச் சிறந்தவன் என்பது தான் இவ்வசனங்களிலிருந்து நாம் பெற வேண்டிய செய்தியாகும்.
அல்லாஹ்வுடைய கட்டளை எதுவாக இருந்தாலும் நமது விருப்பு வெறுப்புகளைத் தூக்கியெறிந்து விட்டு அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதையும் இச்சம்பவத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், இந்நிகழ்ச்சியிலிருந்து இவ்வாறு பாடம் படிப்பதை விட்டு விட்டு தங்களின் தவறான நடவடிக்கைகளுக்கு இவ்வசனங்களை ஷியாக்கள் சான்றுகளாக எடுத்துக் காட்டுகின்றனர்.
ஆயத்துல்லாஹ் எனப்படும் குருநாதர்களின் கால்களில் மற்றவர்கள் விழ வேண்டும். அவ்வாறு விழுவது புண்ணியமானது என்பது ஷியாக்களின் கொள்கை.
நபிகள் நாயகம் (ஸல்) உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. நான்கு இமாம்களும் ஏனைய நல்லறிஞர்களும் கூட இதை ஆதரிக்கவில்லை.
தனி மனிதர்களைப் புகழ்வதிலும் துதி பாடுவதிலும் வரம்பு மீறியதால் உருவான ஷியாப் பிரிவினர் பெரியார்களின்(!) கால்களில் விழும் கலாச்சாரத்தை ஏற்படுத்தினார்கள்.
இந்தக் கலாச்சாரத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் முக்கியமான ஆதாரம் வானவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தாச் செய்தது பற்றிக் கூறும் வசனங்களாகும்.
ஷியாக்களாக இல்லாத சிலரும் அறியாமையின் காரணமாக அவர்களின் வலையில் விழுந்து அநதக் காரியத்தைச் செய்து வருகின்றனர். நமது நாட்டை ஆட்சி புரிந்தவர்களில் பலர் ஷியாக்களாக இருந்ததன் காரணமாக முஹர்ரம் பத்தாம் நாள் மாரடித்தல், தீமிதித்தல், ஷியாக்களின் பனிரெண்டு இமாம்களில் ஒருவரான ஜஃபர் சாதிக் பெயரால் நடைபெறும் பூரியான் பாத்திஹா போன்றவை எவ்வாறு ஷியாக்களிடமிருந்து மற்றவர்களைத் தொற்றியதோ அது போலவே காலில் விழும் கலாச்சாரமும் மிகச் சிலரிடம் குடிபுகுந்து விட்டது.
இவ்வசனமும் இதே நிகழ்ச்சியைக் கூறும் ஏனைய வசனங்களும் மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்களின் நடவடிக்கைக்கு ஆதரவான சான்றுகளைப் போல் தோன்றினாலும் இறையச்சத்தை முன்னிறுத்தி கவனமாகச் சிந்திக்கும் போது இது எவ்வகையிலும் இவர்களது நடவடிக்கைக்குச் சான்றாக ஆகாது என்பதை அறியலாம்.
இது குறித்த ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால் வேறொரு முக்கியமான விவரத்தை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத், ருகூவு, ஸஜ்தா (அ) ஸுஜுது, பஜ்ர், லுஹர் அஸர், மஃரிப், இஷா, போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகிற பொருளில் இவ்வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தவில்லை.
தொழுகையைக் குறிப்பிட ஸலாத் என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனை. இப்பொருளில் தான் அரபுகள் இவ்வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய வணக்கத்திற்கு ஸலாத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
ஸவ்ம் என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிட இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் "கட்டுப் படுத்திக் கொள்ளுதல்'' என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குச் சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டினார்கள்.
இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.
நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் தரையில் படும் வகையில் பணிவது ஸஜ்தா என்று நாம் விளங்கி வைத்துள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை.
நன்றாகப் பணியுதல் என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களையும் அகராதியில் கூறப்பட்ட பொருளின்படி ஸஜ்தா எனலாம்.
அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருளில் இவ்வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள் என்று நாம் கூறியதை நினைவு கூர்வீராக!
அல்குர்ஆன்: 2:58
இதே நிகழ்ச்சி 4:154, 7:161 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு நுழைய முடியுமா? ஸஜ்தாச் செய்தவர்களாக என்றால் பணிவுடன் என்பது தான் இங்கே பொருளாக இருக்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "எட்டு உறுப்புகள் அல்லது ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்ய நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' என்று விளக்குவதற்கு முன்னால் ஸஜ்தாவின் பொருள் பணிதல் தான்.
மேற்கண்ட வசனங்களில் மூஸா நபியின் சமுதாயத்திற்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் உருவாக்கப்பட்ட விளக்கத்தை இதற்கு நாம் அளிக்க முடியாது.
அதை விட இன்னும் தெளிவாக இக்கருத்தை உறுதிப்படுத்தும் சில வசனங்களைப் பாருங்கள்!
18. "வானங்களில்507 உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் ஸஜ்தா செய்கின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா?396 இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தியவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.
அல்குர்ஆன்: 22:18
மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்குச் ஸஜ்தாச் செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான்.
இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, முட்டுக்கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.
அவன் கட்டளையிட்டவாறு அவனுக்குப் பணிந்து அவன் இட்ட பணிகளை அவை செய்கின்றன. சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தா. மரங்கள் பூத்து. காய்த்து குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா. மலைகள், இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்து வருகின்றன. மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும் தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.
"பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் எனக்கு ஸஜ்தாச் செய்ய நான் கண்டேன்'' என்று யூசுஃப் தம் தந்தையிடம் கூறியதை நினைவு கூர்வீராக!
திருக்குர்ஆன்: 12:4
15. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன.96 அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.396
திருக்குர்ஆன்: 13:15
48. அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலப்புறங்களிலும், இடப்புறங்களிலும் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.
49. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.396 வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன்: 16:48, 49
இவ்வசனங்கள் அனைத்திலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் இப்போது நாம் கொள்கின்ற பொருளை இங்கே கொள்ள முடியாது என்பதையும் தெளிவாக அறியலாம்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்னர் பயன்படுத்தப்படும் ஸஜ்தாவுக்கு பணியுதல் என்பது தான் பொருளாகும்.
ஆதம் (அலை) அவர்களை விட வானவர்கள் வணக்க வழிபாடுகளில் ஊறித் திளைத்தவர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒன்றைக் கூட மீற முடியாதவர்கள். ஆனாலும், ஆதமுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவு, சிந்திக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. இந்த வகையில் வானவர்களை விட ஆதம் - மனிதன் - சிறந்தவன் என்று ஒப்புக் கொண்டு அவருக்குப் பணிவைக் காட்ட வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை. இப்படித் தான் மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மேலே நாம் கூறிய காரணமே போதுமானதாகும்.
ஆயினும், இதை வலுப்படுத்தும் வகையில் இன்னும் பல காரணங்களும் உள்ளன.
வானவர்கள் என்ற படைப்பு மனிதனைப் போன்றதல்ல. அவர்களுக்கு என திட்டவட்டமான வடிவம், உருவம் ஏதும் இல்லை. மனித வடிவத்தில் சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் ஜிப்ரீல் என்னும் வானவர் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார்.
எனவே, நம்மைப் போல் அவர்களைக் கருத முடியாது. எனவே, பணிவை எவ்வாறு அவர்கள் வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு அவர்கள் பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.
பெரியார்களின் கால்களில் விழுந்திட இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.
ஒரு வாதத்திற்காக - ஒரு பேச்சுக்காக - அவர்கள் நாம் இப்போது செய்வது போலவே ஸஜ்தாச் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது.
காரணம் அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் மலக்குகள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர்.
பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள் என்று அல்லாஹ் எங்கேயும் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரும் கட்டளையிடவில்லை.
மாறாக நமக்குத் தடை தான் விதிக்கப்பட்டுள்ளது.
37. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!396
திருக்குர்ஆன்: 41:37
படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தா செய்யக்கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது நமக்கு இடப்பட்ட கட்டளை. அவனை மட்டுமே வணங்குவதற்கு அடையாளமே அவனுக்கு மட்டும் ஸஜ்தாச் செய்வது தான். யாருக்காவது ஸஜ்தாச் செய்தால் அவரை வணங்கியதாகவே அது அமையும் என்றெல்லாம் இவ்வசனம் பிரகடனம் செய்கிறது.
முஆத் (ரலி) ஸல்மான் (ரலி) போன்ற நபித்தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்துவிட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தா செய்யக்கூடாது என்று பிரகடனப்படுத்திவிட்டனர்.
இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது.
பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாமே தவிர காலில் விழுவதை, ஸஜ்தாச் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இவ்வசனத்தில் இவர்களின் நடவடிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆதமுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்தார்கள் என்பதன் பொருள் என்ன?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode