Sidebar

21
Sat, Dec
38 New Articles

ஜனாஸாவுக்கு அருகில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்ல வேண்டுமா

ஜனாஸாவின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்

ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

صحيح مسلم

(916) وحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ بِشْرٍ، قَالَ أَبُو كَامِلٍ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عُمَارَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ».

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1523, 1524

மேற்கண்ட நபிமொழிக்கு வேறு விதமாகப் பொருள் கொண்டு சிலர் குழப்புவதால் இது பற்றி சற்று அதிகமாக அறிந்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நபிமொழியில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் மவ்த்தா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு மரணித்தவருக்கு என்பதே நேரடிப் பொருளாகும். இதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இறந்த பின் அவருக்கு அருகில் லாயிலாஹ இல்லலல்லாஹ் என்று கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று குழப்பி வருகின்றனர்.

மவ்த்தா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணித்தவர் என்பது தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனாலும் சில சொற்களுக்கு நேரடிப் பொருள் கொள்ள இயலாத நிலை ஏற்படும் போது அதற்கு நெருக்கமான வேறு பொருள் கொள்வது எல்லா மொழிகளிலும் உள்ளது போலவே அரபு மொழியிலும் உள்ளது.

சிங்கத்தின் வீர முழக்கம் என்ற சொற்றொடரில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு என்றாலும் அத்துடன் இணைந்துள்ள வீர முழக்கம் என்ற சொற்றொடர் சிங்கத்துக்கு நேரடிப் பொருள் கொள்வதைத் தடுக்கிறது. வனவிலங்கு எந்த முழக்கமும் செய்யாது என்பதால் வீரமிக்க ஒரு மனிதரைப் பற்றித் தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வோம்.

அகராதியில் வனவிலங்கு என்று தானே பொருள் செய்யப்பட்டுள்ளது என்ற வாதம் இந்தச் சொற்றொடருக்குப் பொருந்தாது. இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. இதே அடிப்படையில் தான் மேற்கண்ட ஹதீஸும் அமைந்துள்ளது.

மரணித்தவரிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுங்கள் என்று சொல்லப்பட்டால் இவர்கள் செய்கின்ற வாதம் பொருந்தலாம்.

மரணித்தவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லிக் கொடுங்கள் என்பது தான் ஹதீஸின் வாசகம். சொல்வது வேறு! சொல்லிக் கொடுப்பது வேறு! சொல்லிக் கொடுப்பது என்றால் அவர் முன்னே நாம் ஒன்றைச் சொல்லி அவரையும் சொல்ல வைப்பதாகும்.

மரணித்தவருக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதால் இந்த இடத்தில் மரணத்தை நெருங்கியவருக்கு என்று தான் பொருள் கொண்டாக வேண்டும்.

(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்பவர்களே

என்று திருக்குர்ஆன் (39.20) கூறுகிறது.

இதிலும் மய்யித் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை மய்யித் என்று அல்லாஹ் கூறுகிறான். இனி மரணிக்கப் போகிறவர் என்று இதை நாம் புரிந்து கொள்கிறோம். இந்த வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்று ஒருவர் கூட புரிந்து கொள்ள மாட்டோம்.

எனவே மரணித்தவருக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கூறுவதாக இருந்தால் அதன் நேரடிப்பொருளில் புரிந்து கொள்ள முடியாது. செவியேற்பவருக்குத் தான் சொல்லிக் கொடுக்க முடியும்.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது. (27.80) என்று அல்லாஹ் கூறுவதால் மரணத்தை நெருங்கியவருக்கு சொல்லிக் கொடுங்கள் என்று தான் மேற்கண்ட நபிமொழியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இப்னு ஹிப்பான் என்ற நூலில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு நபிமொழி நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

صحيح بن حبان 3004 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ»

உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 7/272

இந்த ஹதீஸிலும் மவ்த்தா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிற்பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை மவ்த்தா என்பதற்கு நாம் என்ன பொருள் செய்ய வேண்டும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

யாருடைய கடைசி வார்த்தை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைகிறதோ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மரணித்தவருக்கு அருகில் மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்பதையும், மரணத்தை நெருங்கியவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த செயல் விளக்கமும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

مسند أحمد 12543 - حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى رَجُلٍ مِنْ بَنِي النَّجَّارِ يَعُودُهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا خَالُ، قُلْ: لَا إِلَهَ إِلَّا اللهُ " فَقَالَ: أَوَ خَالٌ أَنَا أَوْ عَمٌّ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا بَلْ خَالٌ "، فَقَالَ لَهُ: قُلْ: لَا إِلَهَ إِلَّا هُوَ، قَالَ (3) : خَيْرٌ لِي؟ قَالَ: " نَعَمْ " (4)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சார்களில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா? சிறிய தந்தையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் மாமா தான் எனக் கூறினார்கள். பிறகு அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்  என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 12104, 13324

மரணத்தை நெருங்கியவருக்கு அருகில் நாம் தான் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மரணத் தறுவாயில் உள்ளவரைச் சொல்லுமாறு நேரடியாகக் கூறக் கூடாது என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். நாம் இவ்வாறு கூறச் சொல்லும் போது அவர் மறுத்து விட்டால் அவர் இறை மறுப்பாளராக மரணிக்கும் நிலை ஏற்படும் என்று காரணம் கூறுகிறார்கள்.

புரிந்து கொள்ளாமல் அல்லது வேதனை தாள முடியாமல் ஒருவர் கலிமா சொல்ல மறுத்தால் அவர் அல்லாஹ்வின் பார்வையில் மறுத்தவராக மாட்டார்.

இவர்கள் கூறுவது தவறு என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கலாம். மேலும் சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளதால் நேரடியாகச் சொல்லிக் கொடுப்பதே நபிவழியாகும்.

முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்

மரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவராக இருந்தால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும்; நபிவழியுமாகும்.

صحيح البخاري 1356 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»

யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து, நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் தனது தந்தையைப் பார்த்தார். நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதைக் கேள் என்று அவரது தந்தை கூறினார். உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவரை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1356, 5657

صحيح البخاري 1360 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ: أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ المُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ: " يَا عَمِّ، قُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ " فَقَالَ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ؟ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ المَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ: هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَاللَّهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ: {مَا كَانَ لِلنَّبِيِّ} [التوبة: 113] الآيَةَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன் என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா? என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் நான் அப்துல் முத்தலிபின் வழியில் தான் இருப்பேன் என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார்.

அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)

நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772

முஸ்லிமல்லாதவர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல முயல வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழிகள் சான்றுகளாகவுள்ளன.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account