Sidebar

22
Sun, Dec
38 New Articles

இறந்தவரின் கடன்களை வாரிசுகள் அடைத்தல்

ஜனாஸாவின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கடன்களை அடைத்தல்

ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவர் செய்த நல்லறங்கள் மரணித்தவருக்குச் சேர வேண்டுமென்று அவரது வாரிசுகள் விரும்பினால் அவர் பட்ட கடன்களை அடைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

صحيح البخاري 2295 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِجَنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ: «هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ: أَبُو قَتَادَةَ عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? எனக் கேட்டார்கள். மக்கள் இல்லை எனக் கூறினார்கள். ஏதாவது சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் இல்லை எனக் கூறினார்கள். உடனே தொழுகை நடத்தினார்கள். பின்னர் மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அல்லாஹ்வின் தூதரே! தொழுகை நடத்துங்கள் என்று மக்கள் கூறினார்கள். இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொல்லப்பட்டது. ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட்டார்கள். மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மூன்றாவதாக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று மக்கள் கூறினார்கள்.  இவர் ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் இல்லை என்றனர்.  இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். மூன்று தங்கக் காசுகள் கடன் உள்ளது  என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்  எனக் கூறினார்கள். அப்போது அபூ கதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 

அறிவிப்பவர்: ஸலமா பின் அல்அக்வஃ (ரலி) 

நூல்: புகாரி 2291, 2295

صحيح البخاري 2298 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُؤْتَى بِالرَّجُلِ [ص:98] المُتَوَفَّى، عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ: «هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلًا؟»، فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ لِدَيْنِهِ وَفَاءً صَلَّى، وَإِلَّا قَالَ لِلْمُسْلِمِينَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الفُتُوحَ، قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ المُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا، فَعَلَيَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ»

கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்டால்  கடனை அடைப்பதற்கு எதையேனும் இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். கடனை அடைக்க எதையேனும் அவர் விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லாவிட்டால் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்  என்று முஸ்லிம்களிடம் கூறி விடுவார்கள். ஏராளமான வெற்றிகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய போது  மூமின்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிக உரிமை படைத்தவன். எனவே கடன்பட்டு மூமின்கள் யாரேனும் மரணித்து விட்டால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பு. அவர் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேர்ந்தது  என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) 

நூல்: புகாரி 2295, 5371

கடன்பட்டவர் சொத்து எதையும் விட்டுச் சென்றால் வாரிசுகள் அதைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு முன்னால் அவரது சொத்திலிருந்து அவரது கடனை அடைப்பது அவசியம். கடன் போக மிஞ்சியது தான் உண்மையில் அவர் விட்டுச் சென்றதாகும். இதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு  என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லா விட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். 

திருக்குர்ஆன் 4:11

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். 

திருக்குர்ஆன் 4:12

ஒருவர் கடனை அடைக்கும் அளவுக்கு சொத்து எதையும் விட்டுச் செல்லாவிட்டால் அவரது வாரிசுகள் சொந்தப் பொறுப்பில் அதை நிறைவேற்ற வேண்டும். அல்லது கடன் கொடுத்தவரைச் சந்தித்து தள்ளுபடி செய்யுமாறு கேட்க வேண்டும்.

அவ்வாறு கடனை நிறைவேற்றாவிட்டாலோ, கடன் கொடுத்தவர் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டாலோ இறந்தவர் மறுமையில் பெரிய அளவில் நட்டம் அடைவார். கடன் கொடுத்தவர் மறுமையில் இறைவனிடம் முறையிடும் போது இவருடைய நன்மைகளை எடுத்துக் கடன் கொடுத்தவர் கணக்கில் அல்லாஹ் சேர்த்து விடுவான். செய்த நல்லறங்கள் யாவும் மற்றவருக்குப் போய்ச் சேர்ந்து விடும்.

இறந்தவருக்காக ஆடம்பர விழாவும், விருந்துகளும் வைப்பவர்கள் இறந்தவர் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால் அவரது கடன்களை அடைப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account