வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?
இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா?
எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு நமக்கு இல்லை. அது போல் சாதாரணமான ஹிஸாப் (அதாவது எண்ணிக்கை) என்ற அறிவும் இல்லை. எனவே நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என்று கூறினால் அது பொருந்திப் போகிறது.
ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய பொருளைக் கொள்வதை விட எண்ணிக்கை என்று அன்றைய காலத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டு வந்த சாதாரண பொருளைச் செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமாக பொருந்திப் போகிறது என்பதை உணர்வீர்கள்.
அதாவது எழுதவும் தெரியாத எண்ணிக்கையும் தெரியாத உம்மி சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பது தான் இதன் பொருள்.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களில் பலருக்கு ஒன்று இரண்டு என்று வரிசையாக எண்ணத் தெரியாது. இன்றைக்கும் கூட சுவற்றில் தினம் ஒரு கோடு வரைந்து பால் கணக்குப் பார்க்கக் கூடியவர்கள் உள்ளனர். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தில் எண்ணத் தெரியாதவர்கள் இருந்ததில் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
புகாரி அல்லாத மற்ற நூல்களில் உள்ள அறிவிப்புகள் எண்ணத் தெரியாத சமுதாயம் என்ற கருத்திலேயே இவ்வாசகம் பயன்படுத்தப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது (பத்து விரல்களையும் விரித்துக் காட்டி) இப்படி, (மீண்டும் விரித்துக் காட்டி) மீண்டும் இப்படி (மீண்டும் விரித்துக்காட்டி) மீண்டும் இப்படி'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம்
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி 29 வரை குறிப்பிட்டார்கள். இரு கைகளையும் மூன்று தடவை விரித்து மடக்கினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைவிரல்களையும் விரிக்கிறார்கள். மீண்டும் இரு கைவிரல்களை விரிக்கிறார்கள். மீண்டும் இரு கை விரல்களை விரிக்கும் போது ஒரு விரலை மடக்கிக் கொள்கிறார்கள். மறுபடியும் அதே போல் மூன்று தடவை கைவிரல்களை விரித்துக் காட்டுகிறார்கள் இது தான் மாதம் எனவும் கூறுகிறார்கள்.
ஒன்று, இரண்டு என்று முப்பது வரை கூட எண்ணத் தெரியாத சமுதாயத்துக்கு முதலில் பத்து விரல்களைக் காட்டுகிறார்கள். மீண்டும் பத்து விரல், மீண்டும் பத்து விரல் காட்டி விளக்குகிறார்கள். அடுத்த மாதத்துக்கு ஒரு விரலை மடக்கிக் காட்டுகிறார்கள். எண்ணத் தெரிந்த சமுதாயமாக இருந்தால் 29 அல்லது 30 என்று கூறினால் போதாதா? (சில சமயங்களில் அதைப் புரிந்து கொள்ளும் மக்கள் இருந்த சபையில் அப்படியும் கூறியுள்ளார்கள்) எண்ணத் தெரிந்த சமுதாயத்திடம் போய் முப்பது என்பதை மூன்று தடவை விரல்களைக் காட்டி யாரேனும் விளக்குவதுண்டா?
எண்ணத் தெரிந்தவரிடம் முப்பது ரூபாய் கடன் கேட்கும் போது மூன்று தடவை விரல்களை விரித்துக் காட்டி இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் தா என்று கேட்டால் நமக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவன் நினைப்பான். நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளின் விலை கேட்கிறோம். அதற்கு கடைக்காரர் தனது விரல்களை ஐந்து தடவை விரித்துக்காட்டி இவ்வளவு விலை என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்?
ஆனால் அதே சமயம் எண்ணத் தெரியாதவர்களிடம் இப்படித் தான் கேட்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களுக்கு வானியல் தான் தெரியாது. மற்றபடி எண்ணிக்கையெல்லாம் அத்துபடி என்று வாதிடுவோமேயானால், எண்ணிக்கை அறிந்த சமுதாயத்திடம் போய் ஒருவன் 29ஐயும் 30ஐயும் இப்படிக் கூறினால் அவனது நிலை என்னவாகும்? அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதப்பட்டாலும் பரவாயில்லை நான் இப்படித் தான் பொருள் செய்வேன் என்று எந்த முஸ்லிமும் சொல்ல மாட்டான். எனவே எப்படிப் பார்த்தாலும் மேற்கண்ட ஹதீஸிற்கு வானியலை அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றதல்ல.
வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode