கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?
விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.
நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி.
இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.
இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.
நாம் உம்மி சமுதாயம். நமக்கு வானியல் தெரியாது என்று முந்தைய வாதத்தில் கூறினார்கள். வானியல் தெரியாத அந்த சமுதாயம் மேகமூட்டம் ஏற்படும் போது கணித்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள். இவர்களது வாதப்படி வானியல் தெரியாத சமுதாயத்திடம் கணித்துக் கொள்ளுங்கள் என்று எப்படிக் கூற முடியும்?
இவர்கள் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸில் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்த இடத்தில் ஃபக்துரூ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு எண்ணிக்கையை எண்ணுதல், மதிப்பிடுதல் என்றெல்லாம் பொருள் உண்டு.
எண்ணிக்கை கூட தெரியாதவர்கள் வாழ்ந்த ஒரு சமுதாயத்திடம் மதிப்பிட்டுக் கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மற்ற அறிவிப்புகளில் மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். ஷஃபானை முப்பது நாட்கள் என்று முழுமையாக்குங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. அவற்றை முன்னரே நாம் எடுத்து எழுதியுள்ளோம்.
அந்த அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு, எந்தச் சமுதாயத்திடம் இது முதலில் கூறப்பட்டதோ அந்தச் சமுதாயம் கணித்து முடிவு செய்யும் நிலையில் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த ஹதீஸை ஆராய்ந்திருந்தால் ஃபக்துரூ என்பதற்கு மேகமாக இருக்கும் போது முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் மற்றொரு அறிவிப்பில் ஃபக்துரூ என்பதுடன் ஸலாஸீன என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. ஸலாஸீன என்றால் முப்பதாக என்று பொருள். முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்தால் அது பொருத்தமாக உள்ளது. முப்பது நாட்களாகக் கணியுங்கள் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது. எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறிய பிறகு அங்கே கணிப்புக்கு என்ன வேலை இருக்கும்?
லா நஹ்ஸிபு என்பதற்கு வானியலை அறிய மாட்டோம் என்று ஒரு வாதத்துக்காக பொருள் கொண்டாலும் இவர்களுக்கு எதிராகத் தான் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
நாம் உம்மி சமுதாயம் என்று இந்த ஹதீஸ் துவங்குகிறது. நாம் எழுதுவதை அறிய மாட்டோம். ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்று ஒரே தொடராகக் கூறப்பட்டுள்ளது. எழுதுவதை அறிய மாட்டோம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்கிறோமோ அதே போன்று தான் ஹிஸாபை அறிய மாட்டோம் என்ற வாசகத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.
எழுதுவதை அறிய மாட்டோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்குமே எழுதத் தெரியாது என்ற பொருள் அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதத் தெரிந்தவர்களும் இருந்தார்கள். குர்ஆன் எழுதப்பட்டது எழுதத் தெரிந்த நபித்தோழர்களால் தான்.
அதே போல் ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் வானியல் தெரிந்தவர்களும் இருந்தார்கள் என்று தான் அர்த்தமாகிறது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளின் படி வானியல் கணிப்பு தெரிந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த போதிலும் அவர்களிடம் கேட்டு பிறையைத் தீர்மானிக்காமல் பிறையைப் பார்க்க வேண்டும்; அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே கணிப்பு தெரிந்தவர்களாக சிலர் இருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படக் கூடாது ஓட்டு மொத்த சமுதாயமும் என்றைக்கு வானியல் மேலோங்கி இருக்கிறதோ அப்போது தான் வானியல் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தான் இவர்கள் வாதப்படி கூற வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை
கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode