நாமே தீர்மானிக்கலாமா?
பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
سنن الترمذي
697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீநாமே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடமே ஒப்படைத்துள்ளதால் நமது விருப்பம் போல் தீர்மானிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் எவற்றையெல்லாம் தீர்மானித்து விட்டார்களோ அந்த விஷயத்தில் நாம் தீர்மானிக்க ஒன்றுமே இல்லை. அவர்களின் தீர்மானத்திற்கு மாற்றமாக நாம் எதையும் தீர்மானிக்க முடியாது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் தீர்மானிக்காமல் நம்மிடம் அப்பொறுப்பை விட்டுள்ள விஷயத்தை மட்டுமே நாம் தீர்மானிக்க வேண்டும்.
சவூதியில் காணப்படும் பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று நாம் தீர்மானித்தால் அந்தத் தீர்மானம் குப்பைக் கூடைக்குத் தான் போக வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் அனைவருக்கும் தலைப்பிறை ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
28 நோன்பு முடிந்தவுடன் தலைப்பிறை என்று தீர்மானிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. அது போல் முப்பது முடிந்த பிறகும் அந்த மாதம் நீடிக்கிறது.
ன்று தீர்மானிக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்பது தெளிவான ஹதீஸ் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டது.
கண்ணால் பிறையைக் கண்ட பிறகு அல்லது காண்பதற்கு ஏற்ற நாளில் கண்டவர் சாட்சி கூறிய பிறகு அதை நம் வசதிப்படி மறுக்க முடியாது. தக்க சாட்சிகள் கூறும் போதும் நாமே கண்ணால் காணும் போதும் ஏற்க வேண்டும் என்று மார்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை மீறி நாம் தீர்மானிக்க முடியாது.
இது போல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை தவிர நாம் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்ட அம்சமும் இருக்கிறது. இதை நாமே ஏற்றுக் கொண்டிருக்கிற மற்றொரு சட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்தால் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழலாம் என்று மார்க்கம் அனுமதித்துள்ளது.
காயல்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு ஒருவர் தூத்துக்குடி வருகிறார். இவர் கஸ்ர் தொழலாம். ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் பயணம் செய்கிறார். இவர் கஸ்ர் தொழ மாட்டார். ஏனெனில் ஊருக்குள் தான் இவர் சுற்றுகிறார். பயணம் என்றால் ஊரை விட்டுத் தாண்ட வேண்டும் என்று கூறுவோம்.
ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.
இது போன்ற தீர்மானம் செய்வது மட்டுமே நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எந்தக் கிராமத்தில் தெரியும் பிறை நமது ஊருக்குத் தெரிய வாய்ப்புள்ளது? எந்தக் கிராமங்களில் காணப்பட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தும்? எவ்வளவு தூரத்தை நாம் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்? என்பன போன்ற விபரங்களை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கலாம். இந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கக் கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மட்டும் தான் மிச்சமாக உள்ளது.
மற்ற அனைத்தும் நபியவர்களால் முடிவு செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறு தீர்மானிக்கும் போது நமது ஆய்வை முழுமையாகச் செய்ய வேண்டும். இறையச்சத்தை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.
தவறான நோக்கத்தில் தவறான முடிவு செய்தால் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
கசாப்புக் கடையில் இறைச்சி கிடைக்குமா? தையல் கடையில் துணிகள் தைக்கப்பட்டு விட்டனவா? என்பதையெல்லாம் அளவு கோலாகக் கொண்டு தீர்மானிப்பது மார்க்கம் அனுமதிக்கின்ற தீர்மானமாகாது.
பிறை சம்பந்தமான ஒட்டுமொத்த முடிவும் நமது கையில் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
நீங்கள் தீர்மானிக்கும் நாள் என்பது ஒட்டு மொத்த உலக சமுதாயமும் சேர்ந்து தீர்மானிப்பது என்று விசித்திரமான விளக்கமும் தரப்படுகிறது.
பிறை சம்பந்தமாக ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்க முடியாது என்பது முன்னரே நிரூபிக்கப்பட்டு விட்டது.
உலகத்திற்கெல்லாம் ஒரே தலைமை ஏற்பட்டால் கூட ஒரே நாளில் நோன்பு என்று தீர்மானிக்க முடியாது. அப்படித் தீர்மானிப்பதில் சில பகுதிகளில் 28 நோன்பில் முடியும் என்பதையும் முன்னரே விளக்கியுள்ளோம்.
எனவே ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் காணப்பட்ட பிறை குறித்து தீர்மானிப்பதையே இந்த ஹதீஸ் கூறுகிறது என்பது தான் சரியான விளக்கமாகும்.
பிறை விஷயத்தில் பகுதி என்பதை எப்படி தீர்மானிப்பது?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode