அரஃபா நோன்பைத் தீர்மானிப்பது எப்படி
சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள்.
சுபுஹ் தொழுத பின் முஜ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள்.
இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.
தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்களை நாம் இது வரை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிப்பதைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள்.
சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்?
எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். நோன்பையும், நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.
ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.
அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.
அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?
இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.
அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள்.
அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.
நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.
அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.
மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது.
மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.
நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.
தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை(2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.(2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?
ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?
உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.
மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது.
மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும்.
ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் தேதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் தேதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி 10 அன்று சவூதியில் அரஃபா நாள்.
ஆனால் ஜனவரி முதல் தேதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள்.
இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும்.
நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் – அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?
இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.
தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது.
நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.
சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது.
எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.
எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும்.
இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்.
அரஃபா நோன்பைத் தீர்மானிப்பது எப்படி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode