Sidebar

18
Fri, Oct
11 New Articles

மேக மூட்டத்தின் போது…

பிறை பார்த்தல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மேக மூட்டத்தின் போது…

பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை இங்கே தனித்தனியாகத் தருகிறோம்.

صحيح البخاري

1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

صحيح البخاري

1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

صحيح البخاري

1907 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلاَثِينَ»

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907

صحيح مسلم

2566 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْمًا

நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதற்கு ஒவ்வொரு தனித்தனி நபரும் பிறை பார்க்க வேண்டும். ஓர் ஊரில் ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காவிட்டால் பார்த்தவர் நோன்பு வைக்க வேண்டும். பார்க்காதவர் நோன்பு நோற்கக் கூடாது என்று பொருள் கொள்ளக் கூடாது.

வார்த்தை அமைப்பு இவ்வாறு பொருள் கொள்ள இடமளித்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறை இவ்வாறு பொருள் கொள்ளத் தடையாக நிற்கிறது.

கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் அவர்களது சாட்சியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்று மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தனி நபரும் பார்க்கத் தேவையில்லை. ஒரு பகுதியில் யாராவது ஓரிருவர் பார்த்து சாட்சியம் அளித்தால் அப்பகுதியிலுள்ள அனைவரும் பார்த்ததாகத் தான் பொருள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று எந்தப் பொருளில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது.

தனித்தனி நபர்கள் பார்க்க வேண்டியதில்லை என்றால் உலகத்துக்கே ஒருவர் பார்த்து அறிவிப்பது போதுமா?

ஊருக்கு ஊர் யாராவது பார்த்தால் போதுமா?

எவ்வாறு பொருள் கொள்வது? இவ்வாறு இரண்டு கருத்துக்கள் கொள்ளவும் இந்த வாசக அமைப்பு இடம் தருகிறது.

ஆனாலும் முதலாவது கருத்தைக் கொள்வதற்கு நமக்குத் தடை உள்ளது. உலகில் யாராவது பார்த்தால் போதும் என்றால் உலகமெங்கும் ஒரே நாளில் நோன்பு என்ற கருத்து வரும். அதனால் மாதம் 28 நோன்பு வரக்கூடும். மேலும் நாம் இது வரை எடுத்துக் காட்டிய சான்றுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

ஆகவே ஒவ்வொரு பகுதியிலும் யாராவது பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.

மேலும் உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.

சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.

மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.

பிறை பார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது. (இவ்வாறு வாதிடக்கூடியவர்களின் வாதங்களைத் தனியாக நாம் அலசியுள்ளோம்.)

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account