தவாஃபுக்காக உளூச் செய்தல்

ஹஜ்ஜின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தவாஃபுக்காக உளூச் செய்தல்

ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர்.

அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன.

தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.

கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்வ்என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.

صحيح البخاري

1614 - حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، ذَكَرْتُ لِعُرْوَةَ قَالَ: فَأَخْبَرَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ - حِينَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

(புகாரி 1615, 1642)

இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.

صحيح البخاري

337 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ: سَمِعْتُ عُمَيْرًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ، مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي جُهَيْمِ بْنِ الحَارِثِ بْنِ الصِّمَّةِ الأَنْصَارِيِّ، فَقَالَ أَبُو الجُهَيْمِ الأَنْصَارِيُّ «أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَحْوِ بِئْرِ جَمَلٍ فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الجِدَارِ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள்.

நூல் : புகாரி 337

இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும். அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத் தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.

صحيح البخاري

305 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَذْكُرُ إِلَّا الحَجَّ، فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ؟» قُلْتُ: لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ العَامَ، قَالَ: «لَعَلَّكِ نُفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَافْعَلِي مَا يَفْعَلُ الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي»

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்என்று கூறினார்கள்.

இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை. மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும்.

உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும். தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account