Sidebar

21
Sat, Dec
38 New Articles

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ்ஜின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா?

- கடையநல்லூர் மசூது

பதில் :

இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனைக்குக் காரணம்.

வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு பைசாவும் முஸ்லிம்களுக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பது தான் உண்மை.

இவர்கள் மானியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வது என்றால் முதல் வகுப்பில் செல்ல ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது என்றால் ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

மூன்றாம் வகுப்பில் பயணம் செல்வது என்றால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.

இந்தப் பணம் எதற்காக செலுத்த வேண்டும்? சாதாரண வகுப்பில் விமான டிக்கெட், பதினைந்து நாட்கள் சவூதியில் ஆகும் உணவுச் செலவு, சவூதியில் தங்கும் அறைகள் ஆகிய ஏற்பாடுகளுக்காகத் தான் இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த ஒரு லட்சத்தி முப்பதாயிரத்தில் விமானக் கட்டணம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய்கள். அதிக பட்சம் (சீசன் நேரத்தில்) 40 ஆயிரம் ஆகும்.

சவூதியில் இறங்கியவுடன் நம்முடைய உணவுக்காக 20 ஆயிரத்தை தருவார்கள். அது தான் மானியமாம்.

ஒரு அறைக்கு ஆறு பேர் என்று அடைப்பதால் தங்கும் விடுதிக் கட்டணம் பத்தாயிரத்தைத் தாண்டாது. அதுவும் ஆற்காடு நவாப் மூலம் இந்தியர்கள் தங்குவதற்காக இந்தியாவுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.

மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், விமானக் கட்டணம் 40 ஆயிரம், உணவுக்காக கையில் இருபதாயிரம், தங்கும் விடுதிக்காக பத்தாயிரம் ஆக மொத்தம் 70 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ரூபாய் ஹாஜிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது. 70 ஆயிரம் செலவாகும் ஒரு புனிதப்பயணத்திற்கு மேலும், அறுபதாயிரம் ரூபாய்கள் கூடுதலாக கொள்ளை அடித்து விட்டு மானியம் தருவதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

ஒவ்வொரு ஹாஜிகள் மூலமும் போலி மானியத்தைக் கழித்த பின்னர் அறுபதாயிரம் ரூபாய்கள் சுரண்டி விட்டு மானியம் கொடுப்பதாக பிரச்சாராம் செய்வதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் கிடக்கும் பத்து ரூபாயை களவாடி விட்டு ஒரு ரூபாய் தர்மம் செய்வதற்கும், மத்திய அரசின் போலி மானியத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முஸ்லிம்கள் புனிதப் பயணம் செல்ல வேண்டுமானால் அறுபதாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என்று நேரடியாகவே சொல்லிவிடலாம்.

மற்றவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டால் எந்த வரியும் செலுத்தத் தேவை இல்லை. முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டும் என்பது தான் யதார்த்தம்.

ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு அனுமதியும், பயண ஏற்பாடும் மட்டும் செய்து தந்து விட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் 40+20+10=70 ஆயிரம் ரூபாயில் முஸ்லிம்கள் ஹஜ் செய்வார்கள். மானியம் என்ற பழியையும் சுமக்கும் இழிநிலை ஏற்படாது.

மத்திய அரசே! ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்து என்று சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தினால் தான் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்பதை இந்து மக்களும் அறிந்து கொள்வார்கள்.

மத்திய அரசாங்கம் தான் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மானிய நாடகம் நடத்துகிறது என்றால் நீதிபதிகளுக்குமா மூளை வரண்டுவிட்டது? எப்படி மானியம் வழங்கப்படுகிறது என்று விசாரித்து இருந்தால் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியுமே?

உணர்வு 16:38

16.05.2012. 7:20 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account