முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா?
கடலூர் முன்னாள் நிர்வாகிகளுடன் பீஜே முபாஹலா செய்த போது சிலர் முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலாச் செய்யலாமா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன்னாள் இப்படிக் கேட்பவர்களைப் பற்றியும் நாம் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.
தமிழக தவ்ஹீத் வரலாற்றில் கடலூர் முபாஹலா தான் முதல் முபாஹலா அல்ல. இதற்கு முன் பல முபாஹலாக்களுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.
தமுமுகவில் இருந்து பிரிந்த போது அதன் தலைவர் ஜவாஹிருல்லா பீஜே என்னுடன் முபாஹலா செய்யத் தயாரா என்று அறை கூவல் விட்டார். உண்மை பேசுவோம் என்று தமுமுக வெளியிட்ட சீடியில் இதைக் காணலாம். பீஜே இந்த அறைகூவலை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இதன் பின்னர் ஜவாஹிருல்லாவை பல தடவை முபாஹலாவுக்கு அழைத்த போது கடைசி வரை அவர் பின் வாங்கி விட்டார்.
பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். ஆனால் முபஹலாவுக்கு சவால் விடலாமா என்று அப்போது யாருமே கேட்கவில்லை. கேட்டால் அறைகூவல் விட்ட ஜவாஹிருல்லாவுக்கு சங்கடம் ஏற்படும் என்பதே காரணம்.
அது போல் மேலப்பளையம் ஃபழ்லுல் இலாஹி என்பவர் முபாஹலா சவால் விட்ட போது பீஜே அதை ஏற்றுக் கொண்டு மேலப்பாளையம் சென்று குறிப்பிட்ட திருமண அரங்கில் முபாஹலா ஒப்பந்தம் செய்வதற்காகக் காத்திருந்தார். உணர்வு இதழிலும் இது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கடைசி வரை ஃபழ்லுல் இலாஹி வரவில்லை. மக்களுக்கு விளக்கம் அளித்து விட்டு பீஜே திரும்பினார்.
இதுவும் பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் இப்போது கேள்வி கேட்கும் யாரும் இது கூடுமா என்று கேட்கவில்லை. கேட்டால் அப்போது தீவிரமாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்த ஃபழ்லுல் இலாஹிக்கு சங்கடம் ஏற்படும் என்பதற்காக யாரும் கேள்வி கேட்கவில்லை.
அது போல் முஜீபுர் ரஹ்மான் உமரி விவாதம் செய்ய பின் வாங்கிய போது விவாதத்துக்கு வராவிட்டால் யார் பொய்யர் என்பதை முபாஹலா மூலம் அல்லாஹ்விடம் ஒப்படைப்போம் என்று பீஜே எழுதிய போது அதை முஜீப் ஏற்றுக் கொண்டார். அதற்கான நாளையும், நேரத்தையும் பீஜே முடிவு செய்து தெரிவித்த பின் முஜீப் பின் வாங்கினார். இது மின்னஞ்சல் மூலம் அப்போது பலருக்கும் பரப்பப்பட்டது. பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது.
அப்போது யாரும் கேட்கவில்லை. கேட்டால் முஜீப் பதில் சொல்ல வேண்டிய சங்கடம் ஏற்படுமே?
அது போல் ஹாமித் பக்ரி உடன் முபாஹலா அறைகூவல் நடந்த போது அப்போது அனைவரும் மவுனமாக இருந்தனர்.
முதன் முதலில் காயல்பட்டணம் ஜலீல் மைதீனுடன் முபாஹலா நடந்தது. இது மார்க்க சேவையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் தெரியும்.
முழுவிபரம் அறிய பார்க்க
இப்போது முபாஹலா செய்யக் கூடாது என்ற நிலைபாட்டை எடுத்தவர்கள் அதன் பின்னர் என்னோடு தான் பல ஆண்டுகள் இருந்தனர். அவர்களுக்கும் நமக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரியும் வரை ஒருவரும் இது பற்றிப் பேசியதில்லை.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைச் சபிக்கலாமா என்று இவர்கள் கேள்வி கேட்பதாக இருந்தால் ஜவாஹிருல்லா, முஜீப் ரஹ்மான், ஃபழ்லுல் இலாஹி, ஹாமித் பக்ரி உள்ளிட்ட பலரிடமும் கேட்க வேண்டும். ஆனால் இவர்கள் கேட்கவும் மாட்டார்கள். கேட்டால் அவர்கள் பதில் சொல்லவும் மாட்டார்கள்.
இனி இவர்கள் கேட்கும் கேள்விக்கு வருவோம். திருக்குர்ஆனில் யூதர்களை முபாஹலாவுக்கு அழைக்கச் சொல்லி அல்லாஹ் பினவருமாறு கட்டளை இடுகிறான்.
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:61
பச்சிளங்குழந்தைகளையும் அழைத்துத் தான் சாபத்தை வேண்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். இவர்கள் அல்லாஹ்வுக்கே பாடம் சொல்லிக் கொடுக்க புறப்பட்டு விட்டார்கள். அல்லாஹ்விடமே எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.
இவ்வசனம் யூதர்களைக் குறித்து அருளப்பட்டாலும் யார் பொய்யர் என்ற பிரச்சனை ஏற்படும் போது அனைவருக்கும் உரியது தான்.
குர்ஆன் வசனங்களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவினர் பற்றி தனி நபர் பற்றித் தான் அருளப்பட்டிருக்கும். ஆனால் அது அவர்களுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அந்தத் தன்மையில் உள்ள அனைவருக்கும் உரியது தான்.
லூத் நபி சமுதாயத்தின் ஓரினச் சேர்க்கையை அல்லாஹ் கண்டித்ததால் அது லூத் நபி சமுதாயத்துக்கு மட்டும் உரியது; நமக்கு அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது.
ஒருவர் உண்மை சொல்கிறாரா? பொய் சொல்கிறாரா என்பது ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால் அதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். அந்தத் தீர்வு தான் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுவதாகும்.
இவ்வசனத்தின் இறுதியில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இறைஞ்வோம் எனக் கூறப்படுகிறது. யூதப் பொய்யர் முஸ்லிம் பொய்யர் என்றெல்லாம் யாரும் வேறுபடுத்த மாட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படாது என்று இவர்கள் எங்கிருந்து கண்டுபிடித்தார்கள்? இப்படிக் கூறுபவர்கள் தான் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
கணவன் தன் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அதற்கான ஆதாரம் சாட்சிகள் அவனிடம் இல்லா விட்டால் என்ன செய்ய வேண்டும்?
இதை அல்லாஹ் பின் வருமாறு சொல்லிக் காட்டுகிறான்.
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். அவனே பொய்யன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும். அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.
திருக்குர்ஆன் 24:6-9
கணவன் மனைவி இருவருமே முஸ்லிம்கள் தான். ஆனால் யார் சொல்வது உண்மை என்ற பிரச்சனை வரும் போது அதற்கு நாம் ஏதாவது தீர்வு காண வேண்டும்.
இதற்கு லிஆன் என்று கூறப்படும்.
நபித்தோழர்களான கணவன் மனைவிக்கிடையே லிஆன் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை புகாரி 4745, 5310, 5314, 5315, 5316, 6748, 6856 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
யார் பொய்யர் என்பதைக் கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்பதற்கான முக்கியமான ஆதாரமாக இது உள்ளது.
மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் கண்டுபிடிக்க முடியாத போது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விட்டு பிரச்சனையை முடிப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை.
முஸ்லிம்களுக்கு மத்தியில் யார் பொய்யர்கள் என்பதில் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டக் கூடாது என்று யார் கூறுகிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
முஸ்லிம் பொய்யர்கள், முஸ்லிம் இணை வைப்பாளர்கள், முஸ்லிம் விபச்சாரிகள் ஆகியோருக்கு சிறப்புச் சலுகை உண்டு என்றெல்லாம் மார்க்க அறிவு உள்ள யாரும் வேறுபடுத்த மாட்டார்கள்.
மேலும் இப்படிக் கேட்பவர்கள் மத்ஹப்வாதிகளாக இருந்தால் அல்லது நபித்தோழர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்பவர்களாக இருந்தால் அவர்களுக்காக மேலதிகமாக சில விபரங்களை வைக்கிறோம்.
அறிஞர் இப்னு தைமியா அவர்கள் அத்வைதக் கொள்கை உடைய முஸ்லிம் பெயர்தாங்கிகளிடம் முபாஹலா செய்துள்ளனர்
மற்றொரு அறிஞரான ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இப்னு அரபியின் சீடர்களுடன் முபாஹலா செய்துள்ளார்.
இப்னு அப்பாஸ், சுஃப்யான் ஸவ்ரீ, அவ்ஸாயீ, இப்னுல் கையும் உள்ளிட்ட எண்ணற்ற அறிஞர்கள் தவ்றான கொள்கை உடையவர்களிடம் முபாஹலா செய்துள்ளனர்; செய்யலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
அதாவது எதிர்த்தரப்பில் உள்ள பச்சிளம் பாலகர்களுக்கு எதிராகவும் இறைஞ்சியுள்ளனர்.
29.04.2010. 14:02 PM
முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode