Sidebar

22
Sun, Dec
38 New Articles

இப்லீஸ் என்பவன் யார்?

ஜின், ஷைத்தான்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

509. இப்லீஸ் என்பவன் யார்?

ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவருக்குப் பணியுமாறு அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைப்படி வானவர்கள் பணிந்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிய மறுத்து விட்டான் என்று இவ்வசனங்கள் (2:34, 7:11, 15:31, 17:61, 18:50, 20:116, 38:74) கூறுகின்றன.

இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்லீஸைத் தவிர மற்ற வானவர்கள் பணிந்தனர் என்று கூறப்படுவதால் அவனும் வானவர்களில் ஒருவனாக இருந்தான் என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.

ஆனால் இப்லீஸ் குறித்தும், வானவர்கள் குறித்தும் அருளப்பட்ட மற்ற வசனங்களைப் பார்க்கும் போது இவன் வானவர் இனத்தவன் அல்லன் என்று தெரிகிறது.

18:50 வது வசனத்தில் அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்பட்டுள்ளது.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்றும், ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : முஸ்லிம்)

ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்று திருக்குர்ஆன் 15:27 வசனமும் கூறுகிறது.

எனவே இப்லீஸ் என்பவன் ஜின் எனும் இனத்தவனாக இருப்பதால் அவன் வானவர் இனத்தவனாக இருக்க முடியாது.

மேலும் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டால் அதை மீற முடியாத இயல்பு கொண்டவர்களாக வானவர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இதை 16:49, 16:50, 21:19, 21:27, 66:6 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

இப்லீஸ் வானவர்களின் இனத்தவனாக இருந்தால் அல்லாஹ்வின் கட்டளையை அவனால் மீறி இருக்க முடியாது.

மேலும் வானவர்கள் ஆண் பெண் என்ற பாலினத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவர்களுக்குச் சந்ததிகள் கிடையாது. ஆனால் இப்லீஸுக்குச் சந்ததிகள் உண்டு என 18:50 வசனம் கூறுவதால் இப்லீஸ் வானவர் இனத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியாது.

ஆனாலும் வானவர் இனத்தைச் சேராத ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸை வானவர்களுடன் அல்லாஹ் இருக்கச் செய்தான் என்று தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கிருந்து வெளியேறு என்று கூறி அவனை விண்ணுலகில் இருந்து அல்லாஹ் வெளியேற்றினான் என்று 15:34, 38:77 வசனங்கள் கூறுகின்றன. வெளியேற்றப்படும் வரை அவன் வின்னுலகில் வானவர்களுடன் இருந்துள்ளான் என்பது இதிலிருந்து தெரிகிறது.

எதற்காக இப்லீஸை வானவர்களுடன் அல்லாஹ் இருக்கச் செய்தான் என்பதற்கான காரணம் நமக்குச் சொல்லப்படாவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவனை அல்லாஹ் வானவர்களின் உலகமான வானுலகில் வானவர்களுடன் தங்க வைத்திருந்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account