Sidebar

22
Sun, Dec
38 New Articles

இப்லீஸ் தஜ்ஜால் ஆகியோர் அற்புதம் செய்வது எப்படி

ஜின், ஷைத்தான்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இப்லீஸ் தஜ்ஜால் ஆகியோர் அற்புதம் செய்வது எப்படி?

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் போல் கருதியதாக ஆகும் என்று நாம் கூறுகிறோம்.

இந்த வாதத்துக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சில எதிர்க் கேள்விகளையே இதற்குப் பதிலாக முன்வைக்கிறார்கள்.

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி நமது உள்ளங்களுக்குள் புகுந்து நம்மை வழிகெடுக்கிறான்? இது அல்லாஹ்வின் செயல்பாடு போல் தானே உள்ளது?

தஜ்ஜால் என்பவன் இறந்த ஒரு மனிதனை உயிர்ப்பிப்பான்; இன்னும் பல காரியங்களைச் செய்வான் என்று ஹதீஸ்களில் உள்ளது. மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை எப்படி இவர்கள் செய்ய முடிகிறது?

இவை தான் அந்த எதிர்க்கேள்விகள்!

இப்லீஸ் செய்யும் அற்புதம் அவனது ஆற்றலால் செய்யப்படுகிறதா? அல்லாஹ்வின் அனுமதியோடு செய்யப்படுகிறதா? என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

வின்னுலகில் இருந்து இப்லீஸை இறைவன் வெளியேற்றும் போது என்ன நடந்தது என்பதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

"இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 7:13,14,15
 
இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்1 வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்) "இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான். "குறிப்பிட்ட நேரத்திற்கான நாள்1 வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 15:34,35,36,37,38
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான். "நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.  "எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
திருக்குர்ஆன் 17:62, 63, 64, 65
 
குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.
திருக்குர்ஆன் 16:98,99,100
தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)  "இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான். "குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான். "என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று கூறினான்.  "இதோ என்னிடம் நேரான வழி உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. 
திருக்குர்ஆன் 15:35-42

இந்த வசனங்கள் கூறுவதென்ன?

ஷைத்தானுக்கு மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி வழிகெடுக்கும் ஆற்றல் அறவே இல்லை. நான் மனிதனை வழிகெடுத்துக் காட்டுகிறேன்; எனக்கு அனுமதியும், அவகாசமும் வழங்கு என்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வேண்டினான். அல்லாஹ்வும் அதற்கு அனுமதி வழங்கினான். ஆனாலும் உறுதியான மக்களிடம் நீ தோற்றுவிடுவாய் என்ற பலவீனத்துடன் அவனுக்கு அல்லாஹ் இந்த அனுமதியை அளித்தான்.

அல்லாஹ் அனுமதி கொடுத்ததாகத் தெளிவாக அல்லாஹ்வே சொல்லி இருக்கும் போது ஷைத்தான் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்று ஆகாது.

இதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தலிலும் சேராது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இயன்ற காரியங்களை நபிமார்கள் செய்ததாக நம்புவது எப்படி இணைகற்பித்தலில் சேராதோ அது போல் இதுவும் சேராது.

ஏனெனில் நபிமார்கள் செய்த அற்புதங்கள் அல்லாஹ் அனுமதி கொடுத்த அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அல்லாஹ் அனுமதி அளித்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்களை தஜ்ஜால் செய்வான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான் என்று தெரிகிறது.

மக்களைச் சோதித்துப் பார்க்க இப்லீஸுக்கு அல்லாஹ் சில அதிகாரத்தைக் கொடுத்தது போல் தஜ்ஜாலுக்கும் கொடுத்துள்ளான் என்பதால் இதை நம்புவது இணைகற்பித்தலில் சேராது.

தஜ்ஜால் என்பவன் தான் நினைத்த போதெல்லாம் நினைத்த அற்புதத்தைச் செய்ய வல்லவன் என்று நம்பினால் தான் அது இணைகற்பித்தலாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


1882 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ : أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ : " يَأْتِي الدَّجَّالُ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ، أَوْ مِنْ خَيْرِ النَّاسِ، فَيَقُولُ : أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ. فَيَقُولُ الدَّجَّالُ : أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الْأَمْرِ ؟ فَيَقُولُونَ : لَا. فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ : وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ. فَيَقُولُ الدَّجَّالُ : أَقْتُلُهُ فَلَا أُسَلَّطُ عَلَيْهِ ". 
தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!
நூல் : புகாரி 1882, 6599, 1749

இறைவன் அனுமதித்த காரணத்தால் தான் ஒருவரை ஒரு தடவை தஜ்ஜால் உயிர்ப்பித்துக் காட்டுகிறான். அதே மனிதனை மீண்டும் கொலை செய்ய முயலும் போது அவனால் செய்ய இயலாமல் போனதற்குக் காரணம் இதற்கு அவனுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதுதான்.

சூனியக்காரனுக்கும் இதுபோல் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான் என்று இவர்கள் சொல்வார்களானால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தாக வேண்டும்.

எந்தக் காரியங்களைச் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான்?

அதற்கான ஆதாரம் என்ன?

எல்லாக் காரியங்களையும் செய்ய அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

எல்லா சூனியக்காரனுக்கும் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளானா?

அதற்கான ஆதாரம் என்ன?

அனைவருக்கும் அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை; சிலருக்குத் தான் அனுமதி அளித்துள்ளான் என்றால் அந்தச் சிலர் யார்?

அதற்கான ஆதாரம் என்ன?

இக்கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை என்றால் சூனியக்காரனுக்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை என்பது உறுதி.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவியரிடையே பிரிக்கலாம் என்று 2:102 வசனம் கூறுவதாக இவர்கள் வாதிடுகின்றனர். அவ்வசனத்தில் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான் என்பதற்கான ஆதாரம் என்று இவர்கள் கூறுவார்களானால் அது அவர்களது அறியாமையைத் தான் காட்டும்.

அல்லாஹ் நாடி விட்டான்; அனுமதித்து விட்டான் என்ற சொல்லமைப்புதான் அனுமதியைக் குறிக்கும். அல்லாஹ் நாடினால் அனுமதித்தால் என்று கூறப்பட்டால் அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை என்பதற்குத்தான் ஆதாரமாகும். ஒரு மருத்துவர் தரும் மருந்து அல்லாஹ் நாடினால் குணமளிக்கும் என்று கூறப்பட்டால் அந்த மருந்து குணமளிக்கும் என்று அல்லாஹ் அனுமதித்த்தானா? இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள்.

இம்மருந்து நிச்சயமாக இந்த விளைவை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் கட்டாயம் நடக்கும் என்று தான் கூற வேண்டும். அல்லாஹ் நாடிவிட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பின் அல்லாஹ் நாடினால் என்று கூற முடியாது. எனவே சூனியக்காரனுக்கு எந்த அனுமதியும் அல்லாஹ்வால் வழங்கப்படவில்லை என்பதால் அல்லாஹ்வால் அனுமதி வழங்கப்பட்ட தஜ்ஜால், ஷைத்தான் ஆகியோருடன் சூனியக்காரனை ஒப்பிட முடியாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account