Sidebar

19
Sun, May
26 New Articles

சகுனம் பார்த்தல்

மறைவான விஷயங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சகுனம் பார்த்தல்

நாள், நட்சத்திரம் பார்த்தல், சகுணம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.

நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக் கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ, துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக் கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

எந்த நாள் கெட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், பொருள் வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து கூட இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம். முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி) படுகொலை செய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அதை நல்ல நாள் என்பதா?

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால் அதைக் கெட்ட நாள் என்பதா?

நாட்களுக்கும், நல்லது கெட்டது ஏற்படுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

 இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம் .

(அல்குர்ஆன் 3:140)

சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேல் பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.

நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன்  என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதி மொழிக்கு முரணாகும்.

ஒரு நாள், நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ் தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்ல நாட்கள் என்று கூறவில்லை. அல்லாஹ்வின் தூதரும் கூறவில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால் எப்படி அறிய முடியும்?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்?இதைச் சிந்திக்க வேண்டாமா?

வருங்காலத்தில் நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும் ஒன்று தான். ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.

2230 ( 125 ) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ، حَدَّثَنَا يَحْيَى - يَعْنِي ابْنَ سَعِيدٍ - عَنْ عُبَيْدِ اللَّهِ ، عَنْ نَافِعٍ ، عَنْ صَفِيَّةَ ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ ؛ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً ".
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 4137

9536 حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ عَوْفٍ ، قَالَ : حَدَّثَنِي خِلَاسٌ ، عَنْ أَبِي هُرَيْرَةَ . وَالْحَسَنِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " مَنْ أَتَى كَاهِنًا، أَوْ عَرَّافًا ، فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ". حكم الحديث: حديث حسن رجاله ثقات

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்கள், ஹஸரத்துகளின் நிலைமையைப் பாருங்கள்! வறுமையிலும், தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும், மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம் காணலாம்.

இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடிந்ததா? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா?

முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல காரியங்களையும் செய்யலாம். நாள் நட்சத்திரம், சகுணம், ஜோதிடம் ஆகிய அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வது அவசியமாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account