அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காத உணவை அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாமா?
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று திருக்குர்ஆனும், நபிமொழியும் கூறுகின்றன.
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது தீயதாகும்.
திருக்குர்ஆன் 6 : 121
5503 حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ شُعْبَةَ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ عَنْ جَدِّهِ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ لَنَا مُدًى فَقَالَ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ لَيْسَ الظُّفُرَ وَالسِّنَّ أَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ وَأَمَّا السِّنُّ فَعَظْمٌ وَنَدَّ بَعِيرٌ فَحَبَسَهُ فَقَالَ إِنَّ لِهَذِهِ الْإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا رواه البخاري
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூர்மையான) கத்திகள் இல்லையே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரத்தத்தைச் சிந்தக்கூடிய எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு) விட்டால் அதை நீங்கள் உண்ணலாம் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 5503
முறையாக அறுக்காதவற்றை உண்ண நினைப்பவர் பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டால் அது ஹலாலாகி விடும் என்ற வாதம் தவறானது.
உண்ணக்கூடியவர் பிஸ்மில்லாஹ் கூறிவிட்டால் அது ஹலாலாகி விடும் என்றால் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள் என்ற தடைக்கு பொருள் இல்லாமல் போய்விடும்.
அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறப்படாவிட்டால் பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடலாம் என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியைக் காட்டுகின்றனர்.
5507 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ حَدَّثَنَا أُسَامَةُ بْنُ حَفْصٍ الْمَدَنِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ قَوْمًا قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ قَوْمًا يَأْتُونَا بِاللَّحْمِ لَا نَدْرِي أَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ أَمْ لَا فَقَالَ سَمُّوا عَلَيْهِ أَنْتُمْ وَكُلُوهُ قَالَتْ وَكَانُوا حَدِيثِي عَهْدٍ بِالْكُفْرِ تَابَعَهُ عَلِيٌّ عَنْ الدَّرَاوَرْدِيِّ وَتَابَعَهُ أَبُو خَالِدٍ وَالطُّفَاوِيُّ رواه البخاري
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?) என்று ஒரு கூட்டத்தார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள் என்று பதில் சொன்னார்கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போது தான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
நூல் : புகாரி 5507
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவைகள் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணலாம் என்ற கருத்து மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் இருப்பதாக தோன்றுகிறது.
ஆனால் இது பொதுவானதல்ல. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் அறுப்பது குறித்து சொல்லப்பட்டதாகும்.
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுப்பார்கள் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும். புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் சட்டத்தை அறியாமல் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது போல் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் அவர்கள் தருகின்ற உணவுகளை பிஸ்மில்லா கூறி சாப்பிடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்று புரிந்து கொள்வதே சரியானதாகும்.
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவைகளை உண்ணக்கூடாது என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமான கருத்தை இந்த ஹ்தீஸுக்கு கொடுக்கக் கூடாது.
பொதுவானதாகக் கருதினால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாததை உண்ணாதீர்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையை மீறும் நிலை ஏற்படும்.
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காத உணவை அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode