பெண் சல்மான் ருஷ்டியா?
ஓர் உலகளாவிய சதி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுவேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது!
இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும், நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன.
எப்படியாவது, இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம் என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும், உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமியச் சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது!
அமெரிக்க அதிபர் கிளின்டன், சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளரைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் முழு நேரத்தைச் செலவிட வேண்டிய பிஸியான பதவி அது!
அயல் நாட்டு மன்னர்களும், அதிபர்களும், அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமெரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது.
இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா? எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளர்! அவ்வளவு தான்.
எழுத்தாளர் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்த எழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சயமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்!
இழிந்த நடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! இதைத் தவிர எழுத்துலகில் இவர் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத் தான் அமெரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்தச் செய்தியைத் தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின.
(இவனது சாத்தானிய வசனங்கள் என்ற நூலுக்கு வேதம் ஓதும் சாத்தான்கள் என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்களை அடையாளம் காட்டியுள்ளோம்.)
குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத இவனை அமெரிக்க அதிபரும், பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.
மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை.
இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூனிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்துள்ளனர். அறிவுப்பூர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாள்கள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை.
முற்போக்கும், புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம் என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்த மேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா?
பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டுகொள்ள மாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்!
தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான் பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ஸரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.
இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பவர் தஸ்லிமா நஸரீன்.
பெண்களும், புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி அசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே,. ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.
இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களை நாம் அடையாளம் காண முடியும்.
பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனிமேல் வெளியே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார்.
(இந்தியாடுடே – 93, டிசம்பர் 6 – 20)
இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டு வெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்!
-மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்த நஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை-
இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக் (?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல் தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்?
இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை.
ஒரு வேளை காளிதாசனுக்கும் ஞான சம்பந்தனுக்கும் ஞானம்(?) பொங்கியது போல் தஸ்லீமா நஸரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்!
இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும், பொய்யிலேயே ஊறிப் போனவள் என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவையில்லை.
ஆண் பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இப்பத்திரிகைகள் போற்றியதில்லை.
ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர் எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பே இதைப் படம் பிடித்துக் காட்டும் என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது.
ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள். இவள் புரட்சிகர எழுத்தாளராம்!
இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது.
இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப் போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது.
உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமான வேலையைச் செய்து வருகின்றனர். தகாத உறவுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புனர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர்.
இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ஆண்களே நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள் என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத – புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காமவெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள்.
ஒரு தரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படி பெண்களைத் தூண்டினார் என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது.
துகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதி வந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள்.
இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சொரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்!
இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சி என்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும், இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா? குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா?
இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா? ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில் உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.
இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்பு என்று நீங்கள் கருதினால் இவளை ஆதரிப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?
இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது.
பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். மனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்து பார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது.
ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவை முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக் கொண்டால் நாகரீத்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம்.
நான் ஆவேசமும், நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள் என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது.
இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர் தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்?
மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காமவெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளை நீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக்காரியானாலும், அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும், வெறி பிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது.
மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்துகின்றது என்று நிரூபிக்க குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி விளாசித்தள்ளியிருந்தார் நஸரீன்.
இது இந்தியா டுடேயின் வாசகம்.
எவ்வளவுதான் மறைத்தாலும் இவர்களின் உள்நோக்கம் இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைக் கவனித்தீர்களா? எழுதினார்; குறிப்பிட்டார் என்று கூட எழுதவில்லை. விளாசித் தள்ளினார் என்று மகிழ்ச்சித் துள்ளலுடன் தேர்வு செய்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது இந்தியா டுடே. காமவெறி பிடித்த பைத்தியக்காரியைக் கூட புரட்சியாளராகச் சித்தரிக்கக் காரணம் இது தான்.
இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் சொல்கிறோம். எழுதுவதை எழுதிவிட்டுப் பிறகு பல்டி அடித்து மன்னிப்புக் கேட்டு தடுமாறக் கூடிய சல்மான் ருஷ்டி போன்ற கோழைகளையும், மனநிலை சரியில்லாத கேவலமான தஸ்லீமா நஸரீனையும் தான் உங்கள் வலையில் சிக்க வைக்க முடியும். ஒழுங்கான ஒரு முஸ்லிமைக் கூட உங்களால் பிடிக்க முடியாது.
அப்படி என்ன விளாசித் தள்ளிவிட்டார் என்பதை விளக்கமாகக் கூறினால் நாமும் கொஞ்சம் விளாசித் தள்ளலாம். அதை இந்தியா டுடே குறிப்பிடவில்லை.
நீங்கள் அவர்களுக்கு ஆடை; அவர்கள் உங்களுக்கு ஆடை என்று ஆண் பெண் சமத்துவத்தைக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?
ஆண்களுக்கு இருப்பது போன்ற உரிமைகளும் கடமைகளும் பெண்களுக்கும் உள்ளன எனக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?
ஆண்களாயினும் பெண்களாயினும் சட்டத்தின் முன் சமம் என்று இஸ்லாம் கூறுகிறதே அதை விளாசினாரா?
அவள் விளாசித் தள்ளியது எது என்று இந்தியா டுடே தெளிவுபடுத்தினால் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
இவளுக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கின்றது என்று பாருங்கள்!
அலேன்கின்ஸ்பெர்க், குந்தர்கிராஸ், ஜான் இர்விங், நார்மன்மெய்லர், ஆழிடான் போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து மரண தண்டனை விதித்ததைக் கண்டித்திருக்கிறார்கள். சக தோழர் சல்மான் ருஷ்டியும் தான் என்று இந்தியா டுடே கூறுகிறது!
இதில் ஆச்சரியப்பட ஏதுவுமில்லை. இவளுக்காக நாளை வெள்ளை மாளிகையின் கதவுகள் கூட திறக்கப்படலாம்! பிரிட்டிஷ் மகாராணியும் போப்பாண்டவரும் கூட இவளைக் கட்டி அணைக்கலாம்? ஆயினும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இவர்களின் திட்டம் ஒருக்காலும் வெற்றி பெறப் போவதில்லை.
இவளது தகாத நடத்தைக்கும், போக்குக்கும் எதிராக பங்களாதேஷ் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பிற்போக்கு என்று வர்ணிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு நாம் சிலவற்றை நினைவுபடுத்துகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர் கதையைக் குமுதத்தில் எழுதினார். (இரத்தம் ஒரே நிறம் என்று நினைவு) அத்தொடர் கதையில் நாடார் சமூகத்தைப் பற்றி அவர் பயன்படுத்திய வார்த்தைக்காக அந்த சமூகமே கொதித்தெழுந்தது. குமுதம் இதழ்கள் சாலை நடுவே எரிக்கப்பட்டன. உடனடியாக அத்தொடரை குமுதம் நிறுத்தியது.
இது போன்று தான் கி. ராஜ நாராயணன் விஸ்வகர்ம சமுதாயத்தைப் பற்றி எழுதிய போதும் எதிர்ப்பு வந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.
எந்தச் சமூகம் பற்றியும் தவறாக எழுதுவதை அந்தச் சமூகம் சகித்துக் கொள்வதில்லை. இது மனித இயல்பு. இதை உணர்ந்து குமுதமும் நடந்து கொண்டது. எழுதியவர்களும் நடந்து கொண்டனர். புரட்சி வசனம் பேசிக் கொண்டிருக்கவில்லை. புரட்சியாக எழுதக் கூடியவர்களும் கூட அதற்குரிய இலக்கணத்துடன் எழுத வேண்டும்.
சினிமா டைரக்டரான பாலசந்தர் தனது சமூகமான பிராமண சமுதாயப் பெண்ணைப் பற்றி அரங்கேற்றம் சினிமா எடுத்த போது இப்பத்திரிகைகள் கொதித்ததை நாம் மறக்கவில்லை.
சமீபத்தில் உ.பி.யில் ஸஹமத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின் சுவரொட்டியில் ராமனின் தங்கை சீதை என்று குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தையும், நாட்டையும் ரகளையால் திணறச் செய்தார்களே! ஒரு ராமாயணத்தின் அடிப்படையில் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட செய்திக்கே இத்தனை காலாட்டா செய்தார்களே! ஸஹமத்தைக் கண்டித்து வேண்டாத வேலையிலீடுபடுவதாகத் தலையங்கம் எழுதினார்களே!
சுஜாதாவுக்கு எதிராகவும், கி.ராஜநாராயணனுக்கு எதிராகவும், ஸஹமத்துக்கு எதிராகவும் போராடியது மட்டும் முற்போக்காம். பங்களாதேஷ் மக்களது நடத்தை பிற்போக்காம். இதுதான் இந்தியப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மம்.
இந்தியப் பத்திரிகையாளர்களின் ஒரு தலைப்பட்சமான போக்குக்கு இன்னொரு சான்றையும் கூட நாம் குறிப்பிட முடியும்.
ஹைதராபாத் சிறுமிகள் இருவரை இரண்டு அரபிகள் திருமணம் செய்ததை இந்தப் பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக்கின. பெண்ணின் விருப்பமின்றி நடைபெறும் திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுப்பதால் நாமும் அதனைக் கண்டிக்கிறோம்.
நாள் தோறும் தலைப்புச் செய்தியாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்டம் போட்டார்களே அது நல்ல நோக்கத்தில் செய்தது தானா? உண்மையிலேயே பொருந்தாத திருமணத்தை எதிர்ப்பதென்றால் இது போல் நடக்கும் அனைத்துத் திருமணங்களையும் அவர்கள் எதிர்க்க வேண்டுமல்லவா?
என்.டி ராமாராவ் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்தது சரிதானா? அப்பெண்ணின் கணவர் புகார் செய்த பின்னரும் கூட இதை அவ்வளவு பெரிய விடயமாக இந்தியப் பத்திரிகைகள் எடுத்துக் கொள்ளவில்லையே அது ஏன்?
ஒரு சாமியார் திடீரெனக் காணாமல் போக, பலவிதமான வதந்திகள் வந்தனவே அது பற்றிப் பாராளுமன்றத்தில் எவரும் வாய் திறக்கவில்லையே? பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையே அது ஏன்?
எந்தச் செய்தியாவது இஸ்லாத்தை மாசுபடுத்த உதவும் என்றால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் என்றால் இவர்கள் அதைப் பெரிய விசயமாக ஆக்குவது என்று முடிவு செய்து விட்டார்கள். சர்வதேச அளவில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை சமுதாயம் கண்டுகொள்ள வேண்டும்.
தஸ்லீமா நஸ்ரின் யார்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode