Sidebar

04
Fri, Oct
26 New Articles

குண்டு வைத்தவர்கள் யார்? கட்டுரை

ஜிஹாத் தீவிரவாதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

குண்டு வைத்தவர்கள் யார்?

பீ.ஜைனுல் ஆபிதீன்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பீஜே அவர்கள் எழுதிய இந்தச் சிற்றேடு இலவசமாக வெளியிடப்பட்டது. அதை வரலாற்றுப் பதிவாக இப்போது வெளியிடுகிறோம்.

குண்டு வைத்தவர்கள் யார்?

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் நின்று உண்மைகளைக் கண்டறிய விரும்பும் அனைவரின் கவனத்திற்கு!

கடந்த சில ஆண்டுகளாக நமது இந்தியத் திருநாட்டில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்து அப்பாவி மக்கள் உடல் சிதைந்து மாண்டு போனதைக் கண்டு, குண்டு வைத்த படுபாவிகளை மக்கள் மனதாரச் சபித்தார்கள்.

ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடந்து அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் நாட்டில் உள்ள காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சிமி, லஷ்கரே, தய்யிபா, ஜெய்ஷே முஹம்மது மற்றும் சில பெயர்களைக் கூறி இவர்கள் தான் சதிகாரர்கள் என்று மீடியாக்கள் மத்தியில் அறிவித்து வந்தனர்.

இந்த அறிவிப்புக்கு கண், காது வைத்து மிகைப்படுத்தி மீடியாக்களும் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டும் வந்தனர். நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தான் செய்கின்றார்கள் என்ற கருத்து தினந்தோறும் பதிவு செய்யப்பட்டதால் முஸ்லிம் சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்கும் நிலை ஏற்பட்டது.

கடவுளின் கருணையால் குண்டு வெடிப்புகளின் மர்மம் இப்போது விலகத் துவங்கி விட்டது.

அப்பாவி இந்துக்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் கொன்று குவித்து, அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டால் இந்துக்களுக்கு ஆளும் கட்சியின் மீது கோபம் ஏற்படும். அந்தக் கோபத்தை தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்யலாம் என்ற நோக்கத்துடன் குண்டு வைத்த சதிகாரர்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டனர்.

மாலேகான் குண்டு வெடிப்பு

மகாராட்டிர மாநிலம் மாலேகான் என்ற ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பல்லாயிரம் மக்கள் வெள்ளிக் கிழமையன்று தொழுது கொண்டிருந்த போது மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 38 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 125 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

இது 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று நடந்தது.

குண்டுவெடிப்பு பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்டிருந்தும், முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீதே புலனாய்வுத் துறை போட்டு சில முஸ்லிம்களையும் கைது செய்தது.

இதே மாலேகான் நகரில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட சிமி அலுவலகம் அருகில் மோட்டார் சைக்களில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியையும் மராட்டியக் காவல் துறை முஸ்லிம்கள் மீது தான் போட்டது.

இதே நாளில் குஜராத் மாநிலம் மொடாசா நகரிலும் குண்டு வெடித்தது.

இதனால் கொந்தளித்துப் போன முஸ்லிம்கள் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்த மராட்டிய அரசு ஏ.டி.எஸ். ATS எனப்படும் தீவிரவாதத் தடுப்புப் படையிடம் மறு விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது.

சாதி, மத உணர்வுகள் இல்லாமல் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காகவே தக்க பயிற்சி பெற்ற இந்தப்படை மாலேகான் இரண்டாவது குண்டுவெடிப்பைப் பற்றி மறு விசாரணை செய்த போது தான் குண்டு வைத்த சதிகாரர்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

எந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டதோ அந்த மோட்டார் சைக்களில் இருந்து தனது விசாரணையை தீவிரவாதத் தடுப்புப்படை துவக்கியது.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பொருத்த வரை அது எவ்வளவு தான் சேதமடைந்தாலும் அந்த வாகனத்தின் எண்ணை தடய அறிவியல் துறை மூலம் கண்டுபிடிக்க முடியும்.

மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் சுரண்டப்பட்டிருந்தாலும் அதன் என்ஜினை ஆய்வு செய்து அதன் எண்ணைத் தடய அறிவியல் துறை கண்டுபிடித்தது.

என்ஜினுடைய எண் தெரிந்து விட்டால் அந்த எண்ணுடைய இரு சக்கர வாகனம் யாருக்கு விற்கப்பட்டது? யார் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த மோட்டார் சைக்கிள் இளம் பெண் துறவியான பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.

இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. யிலும், ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் அங்கம் வகிப்பவர் என்பதும் தெரிய வந்தது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண் சாமியார் கைது செய்யப்பட்டு இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்பரிவாரத்தைச் சேர்ந்த

ஷியாம்லால்,

திலீப்நகர்,

தர்மேந்திரா பைராகி

ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்களில் குர்ஆன் வசனம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அப்போது தான் முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் என்பது இவர்களின் எண்ணம். அந்த இடத்தில் உருது மொழிப் பிரசுரங்களும் சிதறிக் கிடந்தன.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் குர்ஆன் ஸ்டிக்கர்களும், உருதுப் பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ஒட்டு தாடிகளும், தொப்பிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் குண்டு வெடிப்புகளில் ஜெலட்டின், அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிமருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஆர்.டி.எக்ஸ். என்னும் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

மற்ற வெடி மருந்துகளைப் போல் இது எங்கேயும் கிடைக்காது. இராணுவத்தில் மட்டுமே இந்த வகை வெடிமருந்து இருக்கும். மாட்டிக் கொண்ட இவர்கள் குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டதுடன் ஆர்.டி.எக்ஸ். எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது தான் முன்னாள் இராணுவத்தினரும், இந்நாள் இராணுவத்தினரும் ஆர்.டி.எக்ஸ். சப்ளை செய்ததும் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தது.

மேஜர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற

பிரபாகர் குல்கர்னி,

உபாத்யாயா

ஆகிய இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கர்னல் என்ற உயர் அந்தஸ்தில் உள்ளவருக்கும் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்து இராணுவத்தின் அனுமதி பெற்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 பேருக்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி அளித்துள்ளதாக இவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு வைத்ததில் தொடர்புடைய

சியாம்சாரு,

திலீப் நஷர்,

சிவநாராயனன் ஆகிய மூவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல சங்பரிவாரத்தினரும், காஷ்மீர் சாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும் பண முதலைகள் இதற்குப் பெருமளவில் பண உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் புள்ளி ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் சாமியார், பா..ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், தொடர்புகளும் அம்பலமாகியுள்ளன.

மேலும் அந்தச் சாமியார் வந்தேமாதரம் என்ற அமைப்பை குஜராத்தில் நிறுவியுள்ளார். இதற்கு குஜராத் மோடி அரசு நிதியுதவி அளித்ததும் அம்பலமாகியுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பை துப்பு துலக்கிய ஏ.டி.எஸ் படை, குஜராத் மற்றும் பிற இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கும், மாலேகான் குண்டுவெடிப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அப்பாவி முஸ்லிம்களை மட்டுமின்றி அப்பாவி இந்துக்களையும் சங்பரிவாரத்தினர் எப்படிக் கொலை செய்வார்கள் என்று ஆச்சரியப்படத் தேவையில்லை.

இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புள்ளவரும், தலித்கள் முஸ்லிம்களாக மதம் மாற இருந்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து அதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் சங்பரிவாரத்தின் ஆசையை நிறைவேற்றியவரும், எப்போதும் ராம் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவரும், இந்து மதத்தில் அதிக ஈடுபாடு காட்டியவருமான காந்தியைக் கூட இதே சங்பரிவாரத்தைச் சேர்ந்த கோட்சே தான் கொன்றான்.

இந்து மதப்பற்று உள்ள எந்த ஒருவனுக்கும் காந்தியைக் கொல்ல மனம் வராது. ராம பக்தரான காந்தியைக் கொல்வது இவர்களின் நோக்கம் அல்ல.

காந்தியைக் கொன்று அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டால் அதிகமான முஸ்லிம்களை இந்துக்கள் கொன்றொழிப்பார்கள் என்பதற்காகவே காந்தியைக் கொன்றனர்.

இதனால் தான் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும், சுன்னத் செய்து கொண்டும் காந்தியைக் கொன்றான் என்பதை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது.

விநாயகருக்கு செருப்பு மாலை

2002ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகில் உள்ள சதுமுகையில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. இதை முஸ்லிம்கள் மீதும், திகவினர் மீதும் போட்டு இந்துத்துவா இயக்கங்கள் ஆர்ப்பரித்தனர்.

கடைசியில் தீவிர விசாரணைக்குப் பின் செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகிய இரண்டு இந்து முன்னணியினர் தான் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவர்கள் என்று அம்பலமாகி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து மத்தில் பற்று உள்ள எவரும் தான் வணங்கும் சிலைக்கு செருப்பு மாலை போடத் துணிவாரா? தங்கள் கடவுளுக்கு செருப்பு மாலை போடுவதால் முஸ்லிம்களுக்கு அழிவு வரும் என்றால் அதையும் இந்துத்துவா இயக்கத்தினர் செய்வார்கள் என்பதற்கு இதை விட சான்று தேவையா?

இலஞ்சி தேருக்கு தீ வைப்பு

இது போல் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் தேருக்குத் தீ வைக்கப்பட்டது. உடனடியாக முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டாலும் விசாரணையில் இதைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்து மதத்தில் பற்று உடைய எவரேனும் தனது கடவுளின் வாகனமான தேருக்கு தீ வைப்பார்களா? இவர்கள் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இந்துமதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தேருக்கும் தீ வைத்து இந்து மதத்துக்கே துரோகம் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு

இது போல் 2008ஆம் ஆண்டு தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகில் குண்டு வெடித்தது. முஸ்லிம் தீவிரவாதிகள் தான் இதைத் செய்தனர் என்று ராமகோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால் முடிவில் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி. குமார், இலட்சுமி நாராயண சர்மா ஆகியோர் தான் குண்டு வைத்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தாணே நகர் குண்டு வெடிப்பு

அது மட்டுமின்றி மராட்டிய மாநிலம் தாணேயில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், அத்காரி ரக்சயாதன் என்ற ஆடிட்டோரியத்திலும்  நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரின் தீவிர புலனாய்வுக்குப் பின்

  1. மங்கேஷ் தினகர் நிகாம்
  2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி
  3. சந்தோஷ் ஆங்ரே
  4. விக்ரம் பவே

ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் தான் இதை நிகழ்த்தியவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராய்காட் மாவட்டம் வர்சா கிராமம் மற்றும் பென் ஆகிய கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் சோதனையிட்ட போது பாக்கெட் பாக்கெட்டாக அமோனியம் நைட்ரேட் 200டெட்டனேட்டர்கள், டைமர்கள், வோல்டேஜ் மீட்டர்கள், இரண்டு ரேடியோ சர்க்யூட்கள், ரிமோட் கன்ட்ரோல்கள், ரிவால்வர், 92தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேற்கண்ட குண்டுவெடிப்புகளில் அப்பாவி இந்துக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்துக்களின் கோபத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்காக சில இந்துக்களை அழிப்பது தவறில்லை என்பது இவர்களின் அடிப்படைக் கொள்கை.

மத்தியப் பிரதேச விஹெச்பி அலுவலக குண்டு வெடிப்பு

1993ல் மத்தியப் பிரதேசம் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் குண்டுவெடித்து இரண்டு பேர் காயமடைந்தனர். முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டாலும் பின்னர் இவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறாக வெடித்ததால் தான் அந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மோவ் நகர் கோவில் குண்டு வெடிப்பு

2002ல் மோவ் எனும் ஊரிலுள்ள கோவிலில் வெடிகுண்டு வெடித்தது.

முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்படாலும் தீவிர விசாரணைக்குப் பின் வி.ஹெச்.பி. தொண்டர்கள் தான் குண்டு வைத்தனர் என்று காவல்துறை கண்டுபிடித்து கைது செய்தது. இவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

மகாராட்டிரம் நாண்டெட் குண்டு வெடிப்பு

2006 ஏப்ரல் 7 அன்று மராட்டிய மாநிலம் நான்டெட் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து சங்பரிவாரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஔரங்காபாத் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டு வைப்பதற்காக தயார் செய்த போது வெடித்து விட்டதாகக் கூறினார்கள்.

அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் ஏராளமாகக் கிடைத்தன.

முஸ்லிம்கள் அதிகமாகக் கூடும் பள்ளிவாசல்களில் குண்டு வைப்பது இவர்களின் சதித் திட்டத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பள்ளிவாசலில் குண்டு வைத்தாலும் அதையும் முஸ்லிம்கள் மீது போடுவதற்கு மீடியாக்கள் தயாராக இருப்பதால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று இவர்கள் நம்புகின்றனர்.

மராட்டியம் பர்பானி நகர் குண்டு வெடிப்பு

2003 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகையின் போது மராட்டிய மாநிலம் பார்பானி நகரில் உள்ள முஹம்மதிய்யா பள்ளிவாசலில் குண்டு வெடித்தது.

2004 ஆகஸ்ட் 27ஆம் தேதி பார்பானி மாவட்டம் சித்தார்த் நகரில் உள்ள மதரஸா மற்றும் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டுகள் வெடித்து பல முஸ்லிம்கள் பலியாகினர்.

அதே நாளில் அதே நேரத்தில் மராட்டிய மாநிலம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா பள்ளிவாசலில் குண்டு வெடித்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

ஹைதராபாத், அஜ்மீர் குண்டு வெடிப்புகள்

2008 ஆம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதியிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கண்ட எல்லா குண்டுவெடிப்புகளும் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடும் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையின் போது நடத்தப்பட்டன. நிச்சயமாக இதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது என்பதை சாதாரண மூளையுள்ளவனும் அறிய முடியும். ஆனால் மீடியாக்களுக்குத் தான் மனசாட்சி இல்லாமல் போய் விட்டது.

நான்டெட் நகரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது காயமடைந்து கைது செய்யப்பட்ட சஞ்சய் என்ற பாபுராவ் சௌத்ரி, ஹிமான் சுபான்சே இருவரும் பெங்களூரில் உள்ள குற்றவியல் ஆய்வுக் கூடத்தில் நரம்பியல் ஆய்வுக்கும், மூளை வரைவு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

2003 ஆம் ஆண்டு வெடிகுண்டு தயாரிக்க, தான் பயிற்சி பெற்றதாகவும், நான்டெட் நகரின் பஜ்ரங்தள் தலைவன் பாலாஜி காடியா, வி.ஹெச்.பி. தலைவன் கோவிந்த் புரானிக், ஔரங்காபத் ஆர்.எஸ்.எஸ் தலைவன் அபய்மதூக்கர், பஜ்ரங்தள் தலைவன் வினோத்ராவ் தேசர் ஆகியோருடன் கூட்டாக பள்ளிவாசலில் குண்டு வைக்கத் திட்டமிட்டதை ஹிமான் சுபான்சே ஒப்புக் கொண்டான்.

காயமடைந்த குருராஜ் ஜெயராம் என்பவன் குண்டு வைக்க தனக்கு 50 ஆயிரம் தரப்பட்டதாகக் கூறினான். புனோ நகரில் மிதுன் சக்கரவர்த்தி என்பவன் தனக்குப் பயிற்சி அளித்ததாக இவன் ஒப்புக் கொண்டான்.

மேலும் ஔரங்காபாத் பள்ளிவாசலைப் பல கோனங்களில் காட்டும் புகைப் படங்கள், ஔரங்காபாத் மேப், பள்ளிவாசல் இருக்கும் பகுதி அடையாளமிடப்பட்ட மேப் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

இவ்வளவு நடந்த பின்பும் சின்ன செய்தியாக மீடியாக்கள் வெளியிட்டு பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்தன.

கோத்ரா குண்டு வெடிப்பு

கோத்ரா ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு 2000 முஸ்லிம்களைக் குஜராத்தில் கொன்று குவித்ததை நாட்டு மக்கள் மறக்க முடியாது. கோத்ரா ரயிலை எரித்ததே சங்பரிவாரர் தான் என்பதை வீடியோ ஆதாரங்களுடன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்திய பிறகும் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் மீடியாக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

நாட்டில் எந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக முஸ்லிம்கள் மீது பழிபோடும் காவல்துறை அதன் படி வழக்கு நடத்தியுள்ளார்களா? தண்டனை பெற்றுத் தந்தார்களா என்றால் இல்லவே இல்லை என்று கூறிவிடலாம்.

நிரூபிக்கப்படாத குண்டு வெடிப்பு பழிகள்

பெங்களூரில் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகி 15 பேர் காயமடைந்தனர். அந்தப் பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டாலும் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

2003 ஆம் ஆண்டு மும்பை ரயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. இது வரை வழக்கில் எந்தத் துப்பும் இல்லை.

2003ஆகஸ்ட் 25 அன்று மும்பை கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் செத்தனர். உடனடியாக எந்த ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டது. ஆனால் வழக்கில் எதையும் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.

2004 ஆகஸ்ட் 15 அன்று மும்பையில் வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் இறந்தனர். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. ஆனால் எந்தத் துப்பும் துலக்கப்படவில்லை.

2005 ஆகஸ்ட் 29 அன்று புதுடெல்லியில் 3 இடங்களில் குண்டு வெடித்து 66 பேர் பலியானார்கள். உடனடியாக முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறது.

2006 மார்ச் 7 அன்று காசி வாரணாசியில் குண்டு வெடித்து 15 பேர் செத்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். அதுவும் நிரூபிக்கப்படவில்லை.

2006 ஜுலை 11 அன்று மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வெடித்தது. 180 பேர் செத்தனர். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.

எந்த முஸ்லிம்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

2007 பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான் சென்ற சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் செத்தனர். பெரும்பாலோர் முஸ்லிம்கள். ஆயினும் இந்தப் பழியும் முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.

2007மே 118 அன்று ஹைதாரபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடித்து 11 பேர் செத்தனர். அந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டனர். ஆனால் துப்பு துலக்கவில்லை.

2007 ஆகஸ்ட் 25 அன்று ஹைதராபாத் பூங்காவில் வெடிகுண்டு வெடித்து 40 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இது வரை தடையங்கள் இல்லை.

2008 மே 13 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 7 வெடிகுண்டுகள் வெடித்து 63 பேர் பலியானார்கள். இந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டு பெரிய கலவரமே நடந்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களைத் தொடர்பு படுத்த எந்தத் தடயமோ ஆதாரமோ இல்லை.

இப்படி நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் உரிய விதத்தில் துப்பு துலக்கியிருந்தால் அன்றைக்கே சங்பரிவாரர் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

முஸ்லிம்கள் மீது பொய்யாகப் பழி சுமத்தியதால் தான் எந்தத் துப்பும் கிடைக்காமல் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.

கோவை மும்பை குண்டு வெடிப்புகளின் நிலை

கோவை குண்டுவெடிப்பும், மும்பை தொடர் குண்டுவெடிப்பும் ஆகிய இரண்டு மட்டுமே முஸ்லிம்கள் மீது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போலீசும், அரசும் இந்துத்துவா சக்திகளும் ஒருமித்து தாக்குதல் நடத்தி 19 பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட குழு என்ன செய்வது என்ற அறிவு இல்லாமல் பதிலடி என்ற பெயரில் வெடிகுண்டு வைத்தனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்தி இல்லை. எந்த நெட்ஒர்க்கும் இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

அது போல் பால் தாக்கரேயால் தூண்டிவிடப்பட்ட மும்பை காலவரத்தில் குறி வைத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் அல்லாத வீடுகளுக்கு ஸ்வஸ்திக் அடையாளம் போட்டு முஸ்லிம் வீடுகளைக் கண்டறிந்து தாக்கி நூற்றுக் கணக்கானோரைக் கொன்று குவித்தனர். இதற்குக் காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அந்தக் கோபத்தின் காரணமாக மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சில முஸ்லிம்கள் இறங்கினார்கள். அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இதைத் தவிர எந்தக் குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களைச் சம்மந்தப்படுத்த துரும்பளவும் முகாந்திரமோ, ஆதாரமோ இல்லை. ஆனால் சங்பரிவாரத்தைச் சம்பந்தப்படுத்த எண்ணற்ற ஆதராங்கள் கிடைத்தும் பெரும்பான்மை என்ற போர்வைக்குள் நுழைந்து சங்பரிவாரம் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.

குண்டு எடுப்பு நாடகம்

இவை யாவும் சங்பரிவாரத்தின் திட்டமே என்பதை குஜராத் குண்டு எடுப்பு (வெடிப்பு அல்ல) நாடகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

குஜராத்தின் சூரத் நகரில் வெடிக்காத குண்டுகளை எடுத்தார்கள். மோடி பார்வையிட வரும் போது அவரது மேடையில் கூட ஒரு குண்டு தொங்க விடப்பட்டதாக தொலைக் காட்சியில் பார்த்தோம்.

நாட்டில் அதிகப் பாதுகாப்பில் இருக்கின்ற மோடி ஒரு பகுதிக்கு வந்தால் எவ்வளவு சோதனை நடத்தப்படும்? அப்படி இருக்கும் போது அவர் பர்வையிடும் மேடையில் மோடியைத் தவிர யாராவது குண்டு வைக்க முடியுமா?

அவர் போகும் பாதையெல்லாம் வெடிகுண்டுகளாக எடுக்கப்படுகின்றன. இப்படி நடக்கும் என்பதை அறிவுடைய யாராவது நம்புவார்களா?

அதை விட வேடிக்கை வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்த நாடகம்.

வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய தனி நிபுணர்கள் உள்ளனர். அதற்கென குண்டு துளைக்காத உடை உண்டு. அப்படியெல்லாம் இல்லாமல் சாதாரண போலீசார், சாதாரண உடையில் பொது மக்கள் மத்தியில் பக்கோடா பொட்டலத்தைப் பிரிப்பது போல் பிரித்து வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ததைப் பார்த்து நாடே கை கொட்டி சிரித்தது.

இந்து மதத்தின் தீவிர பக்தரான பூரி சங்காராச்சரியாரே இதை நாடகம் என்றார்.

வெடிக்கப்படாமல் கண்டு எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குஜராத் முதல்வர் மோடியின் நாடகம். மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டவை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோத்ரா சம்பவம் போன்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்த மோடி திட்டமிடுகிறார். அவர் எதையும் செய்யத் திறமை படைத்தவர்

என்று பூரி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

தலைச்சேரி குண்டு எடுப்பு

19.10.2008 அன்று கேரள மாநிலம் தலைச்சேரியை அடுத்த தர்மடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீட்டுத் தோட்டத்தில் சக்திவாய்ந்த 20 குண்டுகளைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவருக்குச் சொந்தமான ஷோபாசதனம் என்ற வீட்டில் தான் மேற்படி குண்டுகள் எடுக்கப்பட்டன.

2008 செப் 21 அன்று கர்நாடகா புத்துர் எனும் இடத்தில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காமத்துக்குச் செந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்து 397 ஜெலட்டின் குச்சிகள், 1200 டெட்னேட்டர்கள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் சுரேஷ் காமத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவற்றையெல்லம் தொகுத்துப் பார்க்கும் போது கோவை, மும்பை தொடர் குண்டுவெடிப்பு தவிர அனைத்துமே சங்பரிவாரத்தின் சதித் திட்டம் என்பது தெளிவாகிறது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. ஆனால் மறு விசாரணை நடத்திய சி.பி.ஐ. அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்கள் மீது வழக்குப் போட்ட காவலர்களைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

நடுநிலையாளர்களே! இந்த விபரங்கள் யாவும் மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது மிகப் பெரிய வலைப்பின்னல் இதன் பின்னால் இருப்பது தெரிகிறது.

ராணுவத்தினரே இந்த பயங்காரவாதச் செயல்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து கடத்தி தீவிரவாதிகளூக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்கள் பணக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவை அனைத்துமே நாட்டிலிருந்து முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்துக் கடவுளை உடைத்தாலும், இந்துக் கோவில்களை இடித்தாலும், இந்துத் தலைவர்களைக் கொன்றாலும், இந்து அப்பாவி மக்கள் உடல் சிதறி செத்து மடிந்தாலும் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட முடியும் என்றால் அதைச் செய் என மூளைச் சலவை செய்யப்ட்ட ஒரு கூட்டம் தான் அனைத்தையும் கன கச்சிதமாகச் செய்து வந்தது.

அத்வானியாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இப்போது மாட்டிக் கொண்டனர்.

நியாய உள்ளம் படைத்த எங்கள் இந்து சகோதரர்களே! உங்களையே கொன்று குவிக்கத் தயங்காத இந்தப் பாவிகளை இனியும் இந்து மதத்தின் காவலர்கள் என்று நம்பப் போகிறீர்களா?

ஆட்சியைப் பிடிக்கவும், முஸ்லிம்களை அழித்தொழிக்கவும், இந்துக்களையே கொன்று, அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போடுபவர்களையும், இந்துத் தெய்வங்கள் மீது செருப்பு மாலை போட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும், இந்துத் தலைவர் காந்தியைக் கொன்று அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும், கோத்ரா ரயிலில் வந்த கரசேவகர்களைக் கொளுத்தி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும் இந்துக்களின் காவலர்கள் என்று இனியும் நம்பப் போகிறீர்களா?

உங்களையே நாளை அழிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதில் இனியும் உங்களுக்குச் சந்தேகமா?

உங்கள் தெய்வங்களுக்குச் செருப்பு மாலை போடத் துனிந்தவர்களை இந்துக்கள் பட்டியலில் சேர்க்க உங்கள் மனம் இடம் தருமா?

அரசியலுக்காக மதவெறியைத் தூண்டும் இவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல; இந்துக்களுக்கும் எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

அனைத்து மதத்தவரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ குறுக்கே வருபவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் அவர்களை அடியோடு ஒதுக்கித் தள்ளுவோம். ஒற்றுமை காப்போம்.

08.08.2015. 13:16 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account