Sidebar

20
Sat, Apr
4 New Articles

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு நபிகள் சொன்னார்களா?

ஜிஹாத் தீவிரவாதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு நபிகள் சொன்னார்களா?

முஸ்லிமல்லாதாவர்களைக் கொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டதாகக் குற்றம் சாட்டுவோர் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.

392 - حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ»

392, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசித்தால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் நம் மீது விலக்கப்பட்டதாகும்; மேலும் அவர்களை விசாரணை செய்வது அல்லாஹ்வைச் சேர்ந்தது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தக் கருத்தைத் தான் தருகிறது. ஆனால் ஒரு விஷயத்தில் எந்த மனிதரின் கருத்தைப் புரிந்து கொள்வதாக இருந்தாலும் அந்த விஷயம் குறித்து அவரது ஒட்டு மொத்த போதனை என்ன? அந்த விஷயம் குறித்து அவரது நடவடிக்கைகள் என்ன என்று அறிந்து கொள்வது அவசியம்.

இஸ்லாத்தை ஏற்காதவர்களைக் கொல்லச் சொல்வது தான் நபிகளின் இந்த ஹதீஸின் கருத்து என்றால் அவர்கள் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் நபிகள் நாயகம் ஆட்சியின் கீழ் மரியாதையுடன் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

யூத இளைஞர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வேலையில் அமர்த்தப்பட்டு இருந்துள்ளார்.

صحيح البخاري

1356 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ - وَهْوَ ابْنُ زَيْدٍ - عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ - رضى الله عنه - قَالَ كَانَ غُلاَمٌ يَهُودِىٌّ يَخْدُمُ النَّبِىَّ - صلى الله عليه وسلم - فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِىُّ - صلى الله عليه وسلم - يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ «أَسْلِمْ». فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهْوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ - صلى الله عليه وسلم -. فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - وَهْوَ يَقُولُ «الْحَمْدُ لِلَّهِ الَّذِى أَنْقَذَهُ مِنَ النَّارِ»

1356 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனிடம் வந்த போது, அவனது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, இஸ்லாமை ஏற்றுக்கொள்! என்றனர். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு! என்றதும் அவன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

நூல் : புகாரி 1356

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என்பது தான் நபிகளின் இந்த ஹதீஸுக்கு அர்த்தமாக இருந்தால் யூதச் சிறுவனை எப்படி ஊழியராக ஆக்கிக் கொண்டார்கள்? அவருடைய வீட்டுக்குச் சென்று நோய் விசாரிக்கும் அளவுக்கு எப்படி நெருக்கம் காட்டி இருப்பார்கள்? நபிகள் நாயகம் சொல்வதைக் கேள் என்று அந்த சிறுவனின் தந்தை சொல்லும் அளவுக்கு எப்படி அவரிடம் மரியாதையை பெற்று இருப்பார்கள்? முஸ்லிமல்லாதவர்களைக் கொல்வது தான் நபிகளின் கொள்கை என்றால் அந்த யூதர் குடும்பத்துடன் எப்படி மதீனா நகரில் வாழ முடியும்?

صحيح البخاري

2617 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضى الله عنه - أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِىَّ - صلى الله عليه وسلم - بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا فَجِىءَ بِهَا فَقِيلَ أَلاَ نَقْتُلُهَا. قَالَ «لاَ». فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِى لَهَوَاتِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم

ஒரு யூதப் பெண் சமைத்த ஆட்டு இறைச்சி நபிகள் நாயகத்திற்கு உண்ணக் கொடுத்தார். ஆனால் அதில் அவர் விஷம் கலந்து வைத்திருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணாமல் அந்த இறைச்சியில் ஒரு துண்டைச் சாப்பிட்டார்கள். அதில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு கொண்ட பின் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க நபியின் தோழர்கள் வற்புறுத்திய போது அதை அவர்கள் ஏற்கவில்லை. அப்பெண்ணை மன்னித்தார்கள்.

நூல் : புகாரி 2617

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்வது தான் இந்த ஹதீஸின் பொருள் என்றால் யூதப் பெண் எப்படி மதீனாவில் வாழ்ந்திருக்க முடியும்? அவர் கொடுத்த உணவை நபிகள் எப்படி ஏற்றிருக்க முடியும்? அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை கொடுக்க தக்க காரணம் இருந்தும் கூட நபிகள் மன்னித்துள்ளார்கள் என்றால் பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு நபிகள் கூறி இருப்பார்களா?

صحيح البخاري

2916 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ، بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ» وَقَالَ يَعْلَى، حَدَّثَنَا الأَعْمَشُ: دِرْعٌ مِنْ حَدِيدٍ، وَقَالَ مُعَلًّى، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، وَقَالَ: رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ

2916 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தமது போர்க் கவசத்தை முப்பது ஸாவுகள் (சுமார் 130 கிலோ அளவு) வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல் : புகாரி 2916

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் பொருளாதார தன்னிறைவு பெற்று வாழ்ந்தனர்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு உரிமை பெற்று வாழ்ந்திருக்கும் போது இஸ்லாத்தை ஏற்காதவர்களைக் கொல்லுமாறு நபிகள் கூறி இருப்பார்களா?

صحيح البخاري

1311 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا»

1311 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பிரேத ஊர்வலம் எங்களைக் கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு யூதரின் பிரேதம் என்றோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 1311

சவ ஊர்வலம் என்றால் ஏராளமானவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் எந்த அச்சமும் இல்லாமல் பிரேதத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பள்ளிவாசலைக் கடந்து செல்கிறார்கள். அந்த பிரேதத்தைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழ்ந்து நிற்கிறார்கள் என்றால் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கட்டளையிட்டிருக்க முடியுமா?

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஜகாத் ஒரு கடமையாகும். செல்வந்தர்களிடம் இருந்து திரட்டப்படும் இந்த நிதியை எட்டு வகையான மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அவர்களில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்காக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதும் சேர்க்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 9:60 பார்க்க

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் நிதியில் இருந்து வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது என்றால் முஸ்லிமல்லாதவர்கள் கொல்லப்படாமல் வாழ்ந்தால் தான் சாத்தியமாகும்.

ஒரு யூதருக்கும் முஸ்லிமுக்கும் சொத்து விஷயமாக வழக்கு வந்த போது முஸ்லிமிடம் ஆதாரம் இல்லை என்பதால் யூதருக்கு சாதகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

صحيح البخاري

2417- قَالَ فَقَالَ الأَشْعَثُ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَلَكَ بَيِّنَةٌ قُلْتُ : لاَ قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ احْلِفْ ، قَالَ : قُلْتُ يَا رَسُولَ اللهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى : {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَة.

எனக்கும், ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்), உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, (அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே! என்று கூறினேன். உடனே, எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது' (3:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல் : புகாரி 2417

முஸ்லிமல்லாதவர்கள் சகல உரிமைகளும் பெற்று உயிர் வாழ்ந்தார்கள் என்பதற்கு இப்படி எண்ணற்ற  நிகழ்வுகள் நபிகள் வரலாற்றில் உள்ளன.

அப்படியானால் மேற்கண்ட ஹதீஸின் கருத்து என்ன? இந்த ஹதீஸ் போர்க்களத்தில் செயல்படுத்த வேண்டிய கட்டளையாகும். முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும் இடையே போர் மூண்டால் அந்த எதிரிகள் இஸ்லாத்தை ஏற்பதாக கூறினால் அவர்கள் சரணடைந்து விட்டார்கள் என்று கருதி அவர்களைக் கொல்லாமல் விட்டு விடவேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.

அந்த ஹதீஸ் போருக்கு வராத முஸ்லிமல்லாதவர்களைக் குறித்து கூறியதல்ல.

இதன் கருத்து இதுதான் என்பதை நாம் மேலே எடுதுக்காட்டிய சான்றுகள் உறுதி செய்கின்றன.

மேலும் திருக்குர்ஆனும் இக்கருத்தைத் தான் சொல்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர் உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்

திருக்குர்ஆன் 60:8,9

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 2:190

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காஃபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல்  உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை  எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். 

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

முஸ்லிமல்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account