இஸ்லாமிய அரசுக்குத் தான் ஜிஹாத் கடமையா ?
முஹம்மது மசூத்
பதில் :
உலகில் பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட விசயங்களில் ஒன்று ஜிஹாத் என்பதாகும்.
ஜிஹாத் என்ற சொல்லுக்கு உழைத்தல், பாடுபடுதல், ஆய்வு செய்தல், அசத்தியத்தைத் தட்டிக் கேட்டல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றுதான் ஆயுதம் ஏந்திப் போர் செய்தல் ஆகும்.
இந்த அர்த்தத்தில் அமைந்த ஜிஹாத் ஒரு அரசாங்கத்தின் கீழ் தான் செய்ய வேண்டும். அரசாங்கம் இல்லாமல் குழுக்களாக ஒன்று சேர்ந்து செய்வது ஜிஹாதில் சேராது. இதனைப் பின்வரும் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா? என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது? என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். "தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 2:246, 247
மேற்கண்ட இரு வசனங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.
அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளால் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.
இந்த நேரத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து போர் செய்வதை அவர்கள் மீது கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.
இவ்வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு சட்டங்கள் பெறப்படுகின்றன.
1. படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப்பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.
அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு இறைவனிடம் கோரிக்கை வைத்து இறைவன் மன்னரை நியமித்த பிறகு தான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.
போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.
2. இறைத் தூதர்கள் உலகில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களல்லர். மாறாக தமது சமுதாயத்தை ஓரிறைக் கொள்கையை நோக்கியும், ஒழுக்கத்தை நோக்கியும் அழைப்பதற்காகவே அனுப்பப்பட்டனர் என்பது இந்நிகழ்ச்சியிலிருந்து பெறப்படும் இரண்டாவது சட்டமாகும்.
ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் ஒரு இறைத்தூதர் உலகில் இருக்கும் போதே இறைத்தூதர் அல்லாத இன்னொருவரை இறைவன் மன்னராக நியமிக்கிறான். அந்த இறைத்தூதரும் அம்மன்னரின் கீழ் போரிடும் நிலையையும் ஏற்படுத்துகிறான். நபியையே மன்னராக இறைவன் நியமிக்கவில்லை.
சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம் என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவோர் ஜிஹாத் செய்பவர்கள் அல்ல என்பது இவ்வசனங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.
ஒரு இறைத்தூதர் தலைமையில் உருவான சமுதாயமாக இருந்தாலும் கூட ஆட்சி அமைக்காமல் போர் செய்யக் கூடாது என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்வதே இவர்களின் வாதம் தவறு என்பதற்குத் தக்க சான்றாகும்.
பின்வரும் ஹதீஸும் போர் செய்வதற்கு ஆட்சியும், ஆட்சித் தலைவரும் அவசியம் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
وَبِهَذَا الْإِسْنَادِ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ وَمَنْ يُطِعْ الْأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي وَمَنْ يَعْصِ الْأَمِيرَ فَقَدْ عَصَانِي وَإِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا وَإِنْ قَالَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ مِنْهُ
இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின்னால் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி, நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்தில் அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : புகாரி 2957
இமாம் என்றால் ஆட்சித் தலைவர் என்பது பொருளாகும்.
05.03.2012. 11:25 AM
இஸ்லாமிய அரசுக்குத் தான் ஜிஹாத் கடமையா ?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode