Sidebar

21
Thu, Nov
13 New Articles

ஹஜ் பயணமும் புனித யாத்திரையும் ஒன்றா?

இஸ்லாமின் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஹஜ் பயணமும் புனித யாத்திரையும் ஒன்றா?

வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை மக்கா எனும் நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

ஏனைய மதங்களில் எவ்வாறு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறதோ அது போன்ற ஒரு யாத்திரையாகத் தான் ஹஜ் யாத்திரையும் அமைந்துள்ளது.

இருந்த இடத்திலேயே கடவுளை வணங்கலாம் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு கடவுளை வணங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கச் சொல்வது ஏன்?

பல தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இவ்வாறு செய்வதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவர்கள் எதைக் கடவுளென நம்புகிறார்களோ அதைத் தரிசிக்க அவர்கள் புனித யாத்திரை செய்கிறார்கள்.

கஅபா ஆலயம் கடவுளை வழிபடும் இடமே தவிர கடவுள் அல்ல என்று ஒரு புறம் கூறிக் கொண்டு அதைத் தரிசிப்பதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டுமா? இந்தப் பணத்தை எத்தனையோ நல்ல வழிகளில் செலவிடலாமே என்பதும் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனத்துக்கு உரிய விடை கிடைத்து விடும்.

ஒரே ஒரு கடவுள் வணக்கத்தை நிலை நாட்டுவது தான் இஸ்லாத்தின் பிரதான நோக்கம் என்றாலும் அந்த வணக்கத்திற்குள்ளேயும் மனித குலத்திற்கு நன்மைகள் அடங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

தொழுகையை எடுத்துக் கொள்வோம். கடவுளை ஒவ்வொருவரும் தத்தமது இல்லத்தில் இருந்த கொண்டே வணங்க முடியும். ஆனாலும் ஒரு வணக்கத்தலத்தில் வந்து கூடி கூட்டாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம்  கட்டளையிடுகிறது. இதனால் கடவுள் வணக்கம் நிறைவேற்றப்படுவதுடன் மனித குலத்திற்கும் அளப்பரிய நன்மைகள் கிடைக்கின்றன.

ஒன்றன் பின் ஒன்றாக   வரிசையாக   அணிவகுத்து இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிறைவேற்றும் போது யார் முதலில் பள்ளிவாசலுக்கு வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்க வேண்டும். வருபவரது பொருளாதார நிலை, குலம், கோத்திரம், பதவி, அந்தஸ்து, அறிவு, ஆற்றல் எதுவுமே அங்கு கவனத்தில் கொள்ளப்படாது. நாட்டின் அதிபராகவே இருந்தாலும் அவர் கடைசியில் வருவாரேயானால் அவர் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும்.

ஏதோ ஒரே ஒரு நாள் இப்படி நின்று விட்டால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தினமும் இப்படி நிற்க வேண்டும். தினசரி ஐந்து தடவை இப்படி அணிவகுத்து நிற்க வேண்டும்.

பிறப்பால் தன்னை உயர்ந்தவனாகக் கருதிய ஒருவன் இன்று தான் இஸ்லாத்தை ஏற்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முன்னால் தாழ்ந்த குலமாகக் கருதப்பட்டவன் நிற்பான். இது உயர்ந்த குலத்தவன் என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொள்பவனுக்கு உறுத்தலாக இருக்கும். மீண்டும் நிற்கிறான். அந்த உறுத்தல் சிறிது குறையும். மீண்டும், மீண்டும் தினசரி ஐந்து தடவை இப்படியே பழகும் போது இந்த உறுத்தல் அடியோடு நீங்கிவிடும். தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்திலிருந்து அவன் முற்றிலுமாக விடுபட்டு விடுவான்.

அது போல் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டவனின் தாழ்வு மனப்பான்மையும் படிப்படியாகக் குறைந்து முடிவில் தனது தாழ்வு மனப்பான்மையிலிருந்து முற்றிலுமாக அவனும் விடுபடுவான்.

தொழுகை என்பது வெறும் நிற்பது மட்டுமின்றி ஒவ்வொரு தொழுகையின் போதும் பலமுறை நெற்றியை நிலத்தில் வைத்துக் கடவுளை வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கும் போது முதல் வரிசையில் உள்ள தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்பட்டவனின் பாதம் உயர்ந்தவனாகக் கருதப்பட்டவனின் தலையில் படும். அதையும் அவன் சகிக்கப் பழகிக் கொள்கிறான். இப்படியே நாள் தோறும் அளிக்கப்பட்ட பயிற்சியின் காரணமாகவே முஸ்லிம்களிடம் தீண்டாமை எள் முனையளவும் இல்லை. எத்தனையோ சட்டங்களைப் போட்டும் ஒழிக்க முடியாத ஒரு கொடுமையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மிக எளிதாக ஒழித்துக் கட்டி விட்டது. இதற்குத் தொழுகையும் ஒரு காரணமாகவே உள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பல்வேறு சாதிகளிலிருந்து இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பது அனைவருமே அறிந்த உண்மை. ஆனால் எந்த முஸ்லிமுக்கும் தனது முன்னோர் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றனர் என்பது தெரியாது.

தனது பூர்வீக சாதி எது என்பது கூட தெரியாத அளவுக்கு இஸ்லாம் சாதி வேறுபாட்டை ஒழித்துக் காட்டியது.

எந்தச் சட்டத்தினாலும் சாதிக்க முடியாததை தொழுகை எனும் வணக்கத்தின் மூலம் இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது.

ஒரு ஊரில், ஒரு தெருவில், ஒரு நாட்டில் வசிக்கும் மக்களிடையே தொழுகையின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்திய இஸ்லாம், ஹஜ் எனும் வணக்கத்தின் மூலம் இந்தச் சமத்துவத்தை உலகளாவிய அளவில் நிலை நாட்டிக் காட்டுகிறது.

வெள்ளைத் தோல் காரணமாகத் தம்மை உயர்ந்தவரென எண்ணும் ஐரோப்பியரின் தலையில் கருப்பு நிற ஆப்பிரிக்கரின் கால்கள் படுகின்ற அற்புதத்தை அங்கே தான் காண முடியும்.

இந்தியன் இந்தியனல்லாதவன் என்ற வேறுபாடு அங்கே கிடையாது. தமிழன், வேற்று மொழி பேசுபவன் என்ற பேதமும் அங்கே கிடையாது. பூர்வீக முஸ்லிம், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவன் என்ற பாகுபாடும் அங்கே கிடையாது.

மனிதனைப் பேதப்படுத்துகின்ற தேசம், மொழி, நிறம் போன்ற எல்லா வேறுபாடுகளும் மறக்கப்படும் ஒரே இடமாக அது திகழ்கின்றது.

எல்லா விதமான வேற்றுமைகளையும் வேரறுத்து உலக சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மாநாடு என்றும் ஹஜ்ஜைக் குறிப்பிடலாம்.

ஹஜ் கடமையை நிறைவேற்றி முடிக்கும் வரை அனைவரும் ஒரே விதமான ஆடை அணிந்து இருக்கும் காட்சியையும், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் காட்சியையும் அங்கே காணலாம்.

அரஃபா எனும் திறந்த வெளியில் அனைவரும் ஒரே நேரத்தில் குழும வேண்டும். அங்கே ஒரு சிறப்புரை ஆற்றப்படும். அவ்வுரையில் ஓரிறைக் கொள்கையும், உலக சமத்துவமும் வலியுறுத்தப்படும். அவ்வுரையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை தான். அரபு மொழி பேசுவோருக்கு மற்ற மொழி பேசுவோரை விட எந்தச் சிறப்பும் இல்லை. சிவந்தவருக்கு கறுப்பரை விட எந்தச் சிறப்பும் இல்லை. என்று அந்த மைதானத்தில்   ஹஜ் பயணத்தின் போது   நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்தார்கள் என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே இவ்வளவு செலவு செய்து அங்கே போக வேண்டுமா? என்ற கேள்வியும் தவறாகும். பயனுள்ள செலவு வீண் செலவு என்பதெல்லாம் அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்தே மதிப்பிடப்படும்.

ஆயிரம் சட்டங்கள் போட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக முயன்றும் ஒழிக்க முடியாத தீண்டாமையையும், நிறவெறியையும் ஒழித்துக்கட்டும் நன்மை இதனால் ஏற்படுகிறது. இந்த நன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது செய்யப்படும் செலவு அற்பமானது தான். இதை விட அதிகமாகச் செலவு செய்தும் ஒரு நாட்டிலேயே தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. அதை விடக் குறைவாகச் செலவு செய்து உலக சகோதரத்துவம் நிலைநாட்டப்படும் போது செலவைப் பற்றி எண்ணிப் பார்ப்பது முறையில்லை.

மனித குலம் ஒன்றுபடுவதற்காக எவ்வளவு செலவு செய்தாலும் அது வீண் செலவாக ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணம் செய்பவர்கள் மக்காவில் கடவுள் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு அங்கே செல்வதில்லை. மக்காவில் உள்ள எந்தக் கட்டடத்தையும், அல்லது அங்குள்ள வேறு எதையும் நிச்சயமாக வணங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டால் ஹஜ் பயணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகம் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account