மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?
கேள்வி:
ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது 'மனித சமுதாயம் ஆதம்' ஹவ்வா' எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது' என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்?
- எஸ். ஷாஹுல் ஹமீது, அய்யம்பேட்டை.
பதில்:
இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும்.
ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும்.
இதற்குப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும்.
ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம்.
அவர்களின் புறத்தோற்றம் மட்டுமின்றி பண்பாடு, பழக்க வழக்கம், குணாதிசயம் போன்றவையும் மாறுபட்டிருப்பதை நாம் காண்கிறோம்.
மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினால் இரண்டு சகோதரர்களின் இரத்தங்களும் கூட ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்காது.
நேரடிப் பிள்ளைகள் மத்தியிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் போது, பல தலைமுறைகள் கடக்கும் போது ஏன் வித்தியாசம் இருக்காது என்று கூறினால் ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த வேற்றுமைகளை விட முக்கியமான ஒரு ஒற்றுமையையும் நீங்கள் சுட்டிக் காட்டலாம்.
ஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், தோற்றத்திலும் இருந்தாலும் அவை ஒரே மரத்தில் உருவான ஒரு இனத்தைச் சேர்ந்த காய்கள் என்று கூறுகிறோம்.
அது போல் பகுத்தறிவு என்னும் அம்சத்தில் ஐரோப்பியர்களும், ஆப்ரிக்கர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.
இதை விட முக்கியமாக, இக்கொள்கையை உலகம் ஏற்பதால் உலகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும்.
எல்லா மனிதர்களும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்றால், அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்பதும், பிறப்பால் எவரும் உயர முடியாது என்பதும் நிரூபணமாகும்.
குலம், சாதியின் பெயரால் மனிதர்கள் பிளவுபட்டிருப்பது இந்தக் கொள்கையைத் தழுவிய மறு வினாடியே ஒழிந்து போய் விடும்.
முஸ்லிம்கள் இதை நம்புவதால் தான் அவர்களிடம் தலித் முஸ்லிம், நாடார் முஸ்லிம் என்றெல்லாம் சாதி வேற்றுமை இல்லாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள் கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)
ஒரு ஜோடியில் இருந்து உருவான மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode