கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?
கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே.
ஸியாத் ரஹ்மான்
பதில் : சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக இஸ்லாம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அதற்கு நாம் தக்க விளக்கம் அளித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கம் இல்லாமல் இஸ்லாம் தாழ்ந்தது என்றும், தங்களின் கிறித்தவம் மேலானது என்றும் திமிர்வாதம் பேசுவோரையும்,
இஸ்லாம் மட்டமானது என்றும் தங்களின் கழிபட்ட கம்யூனிசம் தான் சிறந்தது என்றும் களமிறங்குவோரையும் தான் நாம் விவாதத்துக்கு அழைக்கிறோம்.
எழுத்து வடிவில் நாம் எவ்வளவு தெளிவாகப் பதிலளித்தாலும் அதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதற்கு நாம் தக்க மறுப்பு எழுதினாலும் மறுப்புக்கு மறுப்பு என்று ஏதாவது உளறிக் கொட்டுவார்கள். அதை எழுத்து வடிவிலான விவாதத்தில் உடனே சுட்டிக்காட்ட முடியாது.
இவ்வாறு சென்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே செல்லும். அதிக இடைவெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.
ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு குரங்கு போல் தாவி தப்பித்துக் கொண்டு இருப்பார்கள். நாம் பத்து விஷயங்களுக்குப் பதில் சொன்னால் அதில் சமாளிக்கத் தகுந்த ஓரிரு விஷயங்கள் குறித்து மட்டும் பதில் போடுவார்கள். எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் ஒவ்வொன்றாகச் சொல்வோம் என்று கூறி பல வருடங்களை ஓட்டி விடுவார்கள்.
மேலும் ஒன்றை உயர்த்தி மற்றொன்றைத் தாழ்த்தி வாதிக்கும் குருட்டுக் கும்பலுக்கு நம் தரப்பு விளக்கம் மட்டும் போதுமான பதிலடியாகாது. நீ தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் உலகிலேயே மூட நம்பிக்கையும், கிறுக்குத் தனமும் அதிகமாக உள்ளதாகும் என்று கிடுக்கிப்பிடியும் போட வேண்டிய அவசியமும் உள்ளது.
வெறும் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு ஓட இடமளிக்காமல் நமது கேள்விகளையும் அவர்களைச் சந்திக்க வைத்து அவர்கள் தூக்கிப் பிடிக்கும் கம்யூனிசம் தான் உலகில் உள்ள சித்தாந்தங்களில் கழிபட்டது என்பதையும் நாம் நிறுவ வேண்டும்.
சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்மந்தமில்லாதவைகளை எழுதுவதும், கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகக் கூறிக் கொண்டு நாட்களைக் கடத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக நாம் அறிகிறோம்.
ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே அதை ஒப்புக் கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.
எந்த மனிதரும் பொதுமக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேச மாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொதுமக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்திருக்கும்.
நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தைத் தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும்,
இஸ்லாத்தின் அடிப்படைகள் திருமறைக் குர்ஆனும், குர்ஆனிற்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டும்தான்.
ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்கும் கள்ளக் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் மற்றும் பலர் இஸ்லாத்தினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் மனிதர்களின் கருத்துக்களைத் தான் இஸ்லாம் போன்று காட்டி விமர்சிக்கின்றனர். அல்லது குர்ஆன் கூறாத கருத்தை இவர்கள் திணித்துக் கொண்டு விமர்சிக்கின்றனர்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தப்ஸீரில் உள்ள மனிதக் கருத்துக்களையும் இஸ்லாம் போல் காட்டி விமர்சிக்கின்றனர். இவற்றையெல்லாம் தெளிவாக விளக்க வேண்டும் என்றால் நேரடி விவாதம் தான் சாத்தியமானதாகும்.
மேலும் இஸ்லாம் குறித்து எடுத்து வைக்கும் எந்த வாதத்துக்கும் தக்க ஆதாரத்தை அந்த இடத்திலேயே எடுத்து வைக்க வற்புறுத்தி அவர்களின் அறியாமையை அடையாளம் காட்ட முடியும்.
இதன் காரணமாகத் தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் நம்முடன் நேரடியாக விவாதிக்க அறைகூவல் விடுக்கின்றோம்.
அதன் அடிப்படையில் கிறித்தவர்களுடன் நடந்த விவாதத்திலும், நாத்திகர்களுடன் நடந்த விவாதத்திலும் நம் தரப்பை நிலைநாட்டியதுடன் அவர்களின் தரப்பு தவறு என்பதையும் இரண்டே நாட்களில் நிரூபித்து முடித்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
எழுத்து விவாதம் என்று ஜவ்வு மாதிரி எதையாவது பத்து வருடங்களுக்கு உளறிக் கொண்டு காலத்தை ஓட்டலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.
எழுத்து விவாதம் என்ற பெயரில் எவனோ எழுதியதை வாந்தி எடுக்கும் கூட்டம் ஓட்டம் பிடிப்பது இதற்குத் தான்..
ஒரு காலம் இருந்தது. நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளை விவாதத்துக்கு அழைத்த போது மதத்தைப் பின்பற்றுவோர் ஓட்டம் எடுத்தனர்,.
இன்று கம்யூனிஸ்டுகளும் நவீன கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவுவாதிகளும் ஓட்டம் பிடித்துக் கொண்டே உளறிக்கொண்டு திரிகின்றனர். நாம் விரட்டிக் கொண்டு செல்கிறோம். நான் ஓடவில்லை என்று சொல்லிக் கொண்டே ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சாதாரணக் கம்யூனிஸ்டுகளும், நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்டுகள் என்று பீற்றிக் கொள்பவர்களும் மூடர்களே என்பதையும் சிந்தனைக் கோளாறு உள்ளவர்களே என்பதையும் மதவாதிகளை விட பிற்போக்கானவர்களே என்பதையும் அவர்களின் சொற்களையும், எழுத்துக்களையும் வைத்து நாம் நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறோம்.
அத்துடன் அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக எந்தக் கேள்வி கேட்டாலும் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் பதில் அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்.
இப்படி நெஞ்சுயர்த்திச் சொல்லும் நிலையில் இஸ்லாம் இருப்பதும், அதை எதிர்கொள்ள முடியாமல் இவர்கள் ஓட்டம் எடுப்பதுமே எது உண்மை என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.
நாம் விடாமல் விரட்டும் நிர்பந்தம் காரணமாக அவர்கள் விவாதக் களத்துக்கு வந்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ரோசம் வரும் அளவுக்கு நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு கேள்வி கேட்டு விரட்டிக் கொண்டே இருந்தால் தங்கள் அடிமைக் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக விவாதத்துக்குத் தயார் என்று ஒப்புக் கொள்ளும் நிலையை அவர்கள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அப்போது சில நாட்கள் விவாதத்துடன் அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
13.03.2012. 15:07 PM
கம்யூனிஸ்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode