தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:
– பிறமத மக்களின் உள்ளத்தை ஈர்த்த பீஜே உரை!
லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், இஸ்லாமிய சட்டத்தின் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்த திருச்சியில் குழுமிய பொதுக்கூட்டத்தில் (06.11.16) சகோதரர் பீஜே அவர்கள், தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கூறிய செய்திகள் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களும் இஸ்லாத்தின் உன்னதத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்தது.
பீஜே தனது உரையில் கூறிய முக்கிய செய்திகளின் தொகுப்பு:
பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று தானே இஸ்லாத்தை ஏற்றோம்:
எங்களுக்கு அற்புதமான முறையில் இஸ்லாம் வழங்கிய சட்டதிட்டங்களை விட்டுவிட்டு பொது சிவில் சட்டம் என்ற சட்டத்தின் பக்கம் வாருங்கள் என்று எங்களுக்கு அழைப்பு விடுகின்றீர்களே! முஸ்லிம் பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது; அதனால் நாங்கள் போடும் சட்டத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என்று சொல்கின்றீர்களே! நாங்கள் என்ன அரபு நாட்டு இறக்குமதியா? இதே இந்தியாவில் பிறந்தவர்கள் தான்; எங்களது முப்பாட்டிமார்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருந்தார்கள். எந்த பொது சிவில் சட்டம் என்று சொல்லி நீங்கள் இப்போது எங்களை அழைக்கின்றீர்களோ அதே சட்டத்தைத் தான் எங்களது முப்பாட்டிமார்கள் பின்பற்றி வந்தனர். அதில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும், அநீதிகளையும் கண்டித்து வெந்து நொந்து போய் தான் அவர்களெல்லாம் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
இந்து மதம் பெண்களுக்கு இழைத்த அநீதிகள்:
இந்து மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்ச நெஞ்சமா?
பெண்கள் யாரும் ரவிக்கை அணியக் கூடாது என்று சொல்லி இந்து மதம் பெண்களை இழிவுபடுத்தவில்லையா?
கணவன் இறந்துவிட்டால் சதி என்ற பெயரால் உடன்கட்டை ஏற வைத்தீர்கள்; உயிரோடு தீவைத்துக் கொளுத்தினீர்கள்.
அவ்வாறு தீவைத்து கொளுத்தப்படாமல் இருக்கும் பெண்களை அலங்காரம் செய்யக் கூடாது என்று சொல்லி மொட்டை அடித்து புழக்கடையில் கூழாங்கல்லிலே படுக்க வைத்தீர்கள்.
பெண்களுக்கு ஆன்மா இருக்கின்றதா இல்லையா என பட்டிமன்றம் நடத்தினீர்கள்.
பெண்களுக்கு சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை என்று வைத்திருந்தீர்கள். அவள் எந்த ஆணையாவது சார்ந்து தான் வாழ வேண்டும் என்று பெண்களைக் கொடுமைப் படுத்தினீர்கள்.
இதையெல்லாம் வெறுத்துத் தான் அந்தக் கொடுமைகளில் இருந்தெல்லாம் தப்பித்து வந்து தான் தூய இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுள்ளோம்.
மறுபடியும் அந்தக் கொடுமைகளையெல்லாம் நாங்கள் அனுபவிக்க வேண்டுமா?
நீ கொண்டு வரும் சட்டமெல்லாம் அதரப் பழசுதான்.
இந்து மதத்திற்கு மாறுவோரை ஐயராக ஆக்குவீர்களா?:
கர் வாபசி என்று சொல்லி தாய் மதம் திரும்பச் சொல்லி அழைத்தாயே! மறுபடியும் உனது இந்து மதத்திற்கு நாங்கள் வந்தால் மீண்டும் எங்களை அதில் இணைத்து ஐயராக ஆக்குவீர்களா? என மக்கள் கேள்வி எழுப்பியதும் ஓட்டமெடுத்தாயே! இதுதான் உனது நிலை.
இப்படி நீ போட்ட சட்டமெல்லாம் அசிங்கமானது; எங்களைக் கொடுமைப்படுத்தக்கூடியது என்பதை உணர்ந்து காரி உமிழ்ந்து விட்டுத்தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளோம்.
அற்புதமான மார்க்கத்தை நாங்கள் தேர்ந்தெடுத்து வந்துள்ளோம்.
இங்கு குழுமியிருக்கும் உளவுத்துறை, காவல்துறை, மற்றும் பிறமத சகோதர, சகோதரிகள் மற்றும் மீடியாக்கள், இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கின்றோம்.
இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகின்றது என்று சொல்லி இஸ்லாத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்கள் செய்த போதும் கூட அப்படியெல்லாம் இல்லை; நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லி, இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பிய அவதூறை அடித்து நொறுக்க இங்கே லட்சக்கணக்கான பெண்கள் குழுமிய காரணம் என்ன என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தலாக் தலாக் தலாக்(?):
தலாக் என்ற விஷயத்தின் உண்மை நிலையை முதலில் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். தலாக் என்ற முறையைப் பலரும் எதிர்க்கின்றனர். தலாக் என்றால் என்ன? விவாகரத்து என்று அர்த்தம். தலாக்கை எதிர்க்கக் கூடியவர்கள் விவாகரத்து முறையே இருக்கக் கூடாது என்று அவர்கள் சொல்ல வருகின்றார்களா?
யாராவது அப்படிச் சொல்வார்களா?
இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையை எதிர்ப்பவர்கள் திருமணம் முடித்த கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் விவாகரத்தே செய்யக் கூடாது என சொல்ல வருகின்றார்களா
விவாகரத்துச் செய்வது சட்டப்படி குற்றம் என அவர்கள் அறிவிக்கத் தயாரா?
இப்போது இவர்கள் வைத்துள்ள இந்து திருமணச் சட்டத்திலாவது அப்படி உள்ளதா?
இல்லை;
அப்படியானால் விவாகரத்து என்பதை அனைவரும் ஏற்றுத்தான் இருக்கின்றோம்; இஸ்லாம் கூறும் விவாகரத்து முறை கூடாது என்பதுதான் இவர்களது வாதம்.
இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் பெண்களுக்குக் கேடு ஏற்படுகின்றது என்பது தான் இவர்களின் பிரதான குற்றச்சாட்டு. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
முஸ்லிம்களை விட இந்துக்களில் தான் அதிகமான விவாகரத்து நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் எடுத்த புள்ளி விபரத்தின்படி 0.56 சதவீதம் பேர் முஸ்லிம்களிலும், 0.76 சதவீதம் பேர் இந்துக்களிலும் விவாகரத்துச் செய்கின்றனர்.
இந்தப் புள்ளிவிபரமே சொல்கின்றது முஸ்லிம்கள் அதிகமாக விவாகரத்துச் செய்வதில்லை என்று.
உனது விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்தினால் விவாகரத்து கூடத்தான் செய்யுமே தவிர குறையாது.
இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டுமுறை:
கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் அழகான முறையில் பிரிந்து கொள்ள இஸ்லாம் எளிய வழியைக் காட்டுகின்றது. அதுதான் தலாக் எனும் விவாகரத்து வழிமுறை.
முதலில் பிடிக்காத மனைவியை கணவன் தலாக் சொல்லி பிரிவான்.
தலாக் சொல்லிப் பிரிந்த பிறகு மூன்று மாதவிடாய்க் காலங்கள் அந்தப் பெண் அவனது வீட்டில் தான் தங்கியிருக்க வேண்டும்; அவன் தான் அந்தப் பெண்ணுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பான். இப்படி தலாக் சொல்லப்பட்டு பிரிந்திருக்கும் மனைவியின் மூன்று மாதவிடாய் காலங்களுக்குள் அவன் மறுபடியும் சேர்ந்து வாழ விரும்பினால் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம்; மறுபடியும் சேரவே முடியாது என்று இஸ்லாம் அவர்களை அடியோடு வெட்டவில்லை; மூன்று மாதவிடாய் காலங்கள் முடிந்து விட்டால் அவளோடு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மறுபடியும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம்; இதுதான் ஒரு தலாக்;
மறுபடியும் சேர்ந்து வாழும் போது பிரிவு ஏற்பட்டால் இரண்டாவது தடவை தலாக் சொல்லலாம்; அப்போதும் முந்தைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; இப்போதும் இணைய வாய்ப்பு உள்ளது;
இதன் பிறகு இணைந்து மூன்றாவது தடவை தலாக் கூறினால் தான் அவளோடு இவன் இணைய முடியாது என்று இஸ்லாம் சொல்கின்றது. இது எவ்வளவு அழகான எளிய நடைமுறை.
இந்தியச் சட்டம் வழங்கியுள்ள கொடூர விவாகரத்து முறையில் விளையும் கேடுகள்:
ஆனால் இந்துமதச் சட்டத்தின் பிரகாரம் தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து செய்யப்படும் முறை என்ன? அதனால் எவ்வளவு தீமைகள் நிகழ்கின்றது தெரியுமா?
இந்தியாவில் உள்ள இத்தகைய விவாகரத்து நடைமுறையால் பல கொலைகள்; மனைவி மீது பழிசுமத்துதல்; கணவனை மனைவியே கொலை செய்தல் உள்ளிட்ட பல கொடுமைகள் அரங்கேறுகின்றன.
இஸ்லாம் சொல்லும் தலாக் முறையில் இது போன்ற கொடுமைகள் நிகழ்வதில்லை. இலகுவான முறையில் திருமணம் ரத்து செய்யப்படும்.
இந்துப் பெண்கள் அனுபவிக்கும் அவலங்கள்:
ஆனால் இந்து மதச் சட்டப்படி என்ன நிலைமை?
விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேற வேண்டும். பல ஆண்டுகள் நீதிபதி வாய்தா வாய்தா என வாய்தா போட்டு அலைக்கழிப்புச் செய்வார். அதன் பிறகு பல ஆண்டு காலம் கழித்து விவாகரத்து வழங்குவார்.
இத்தனை ஆண்டுகள் நாம் நமது உடல் பசியை தீர்க்க வழியில்லாமல் போய்விட்டதே என நினைக்கும் கணவன் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்துதல் உள்ளிட்ட கொலைச் சம்பவங்களை அரங்கேற்றி ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு எனச் செய்தி வரவழைக்கின்றான்; ஸ்டவ் வெடித்து கிழவி செத்ததாக செய்தி வந்துள்ளதா?
அதற்கு காரணம் இதுதான்.
முஸ்லிம் சமுதாயத்தில் அதுபோல ஸ்டவ்கள் வெடிக்காததற்குக் காரணம் விவாகரத்து முறை எளிதாக இருப்பதால் தான்.
விவாகரத்து இழுத்தடிக்கபடும் நிலையில், கணவனைப் பிடிக்காத மனைவி அவனைச் சோற்றில் விஷம் வைத்து காலி செய்கின்றாள்.
மனைவியைப் பிடிக்காத கணவன் சின்ன வீடு செட்டப் செய்து வைத்துக் கொண்டு தனது மனைவியை கொடுமைப்படுத்துகின்றான்.
இந்த நாட்டில் பலதார மணம் தான் கூடாது; சின்ன வீடு செட்டப் வைத்துக் கொள்வது குற்றமே இல்லை; இதுதான் நீதியா?
விவாகரத்துக் கேட்டுச் செல்லும் பெண்களை நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது அவர்களது மானம் போகின்றது.
பல நேரங்களில் அந்தப் பெண்ணிடம் அவளது கற்பையே சில வக்கீல்கள் பீஸ் ஆக கேட்கின்றார்கள்.
இவ்வளவு கொடுமைகளும் இந்து மதத்தில் பொதுசிவில் சட்டத்தில் உள்ளது. அதைத் தடுக்கத்தான் இந்த விழிப்புணர்வு.
இந்தக் கேவலங்கள் எல்லாம் முஸ்லிம் பெண்களுக்குக் கிடையாது; பிரிய வேண்டும் என நினைக்கும் தம்பதிகள் அந்தப் பகுதி ஜமாஅத் தலைவரிடம் போய் முறையிடும் போது அவர்கள் வசிக்கும் தெருவிலேயே இருக்கும் தலைவருக்கு அனைத்தும் தெரியும்; ஆனால் அந்த நீதிபதிக்கு ஒன்றும் தெரியாது; இதனாலும் அதிகப் பிரச்சனைகள் ஏற்படும்.
இவ்வளவு எளிய அழகான நடைமுறையை விட்டுவிட்டு மானத்தை இழந்து உங்களது நீதிமன்றப்படி ஏறச் சொல்கின்றீர்களா? அதை எதிர்த்துத்தான் இத்தனை லட்சம் பெண்கள் இங்கே கூடியுள்ளார்கள்.
எங்களது இஸ்லாமியச் சட்டத்தின் முன்னால் நீ போடும் பொதுசிவில் சட்டத்தால் உன்னால் என்ன செய்ய முடியும்?
வழக்குகளை நாங்கள் கொண்டு வந்தால் தானே நீ சட்டம் போடுவாய். நாங்கள் எங்களுக்குள் பேசி முடித்துக் கொண்டால் உன்னால் என்ன செய்ய முடியும்?
தடவை என்பதன் பொருள் என்ன?:
அதே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி மூன்று தலாக்கையும் ஒன்றாகச் சொல்லி ஒரேயடியாகப் பெண்களைப் பிரித்து வைக்கும் கொடுமை சில இஸ்லாமிய மதகுருமார்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது நபி வழியில்லை; அது இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது.
திருப்பி அழைக்கப்படும் தலாக் என்பது இரண்டு தடவை தான் என திருக்குர்ஆன் கூறுகின்றது.
தடவை என்பதற்கு விளக்கம் என்ன?
இதே விளக்கத்தை 1987 ஆம் ஆண்டு இதே திருச்சியில் நடந்த ஒரு மாநாட்டில் நான் தெளிவுபடுத்தினேன். அதையே இப்போதும் சொல்கின்றேன். தடவை என்று எப்போது நாம் சொல்லுவோம்; ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்; அப்போது தான் தடவை என்போம்; 10 இட்லிகளை ஒருவன் ஒரே தட்டில் வைத்து ஒருமிக்க சாப்பிடுகின்றான். இவன் ஒரு தடவை சாப்பிட்டான் என்று சொல்வோம்; அதே நேரத்தில் 2 இட்லி சாப்பிட்டுவிட்டு கைகழுவி விட்டு மறுபடியும் இரண்டு இட்லி சாப்பிடுகின்றான்; அதன் பிறகு கைகழுவிவிட்டு மறுபடியும் இரண்டு இட்லி சாப்பிடுகின்றான்; இப்படியே 5 முறை 10 இட்லி சாப்பிட்டால் நாம் என்ன சொல்வோம்; 5 தடவை சாப்பிட்டான் என்போம்;
அதுபோலத் தான்; தலாக் விடப்படுதல் என்பது மூன்று தடவை நிகழ வேண்டும்; அப்போது தான் அது மூன்றாகக் கணக்கிடப்படும்; தலாக் தலாக் தலாக் என மூன்று முறை அல்ல; மூன்று லட்சம் தடவை சொன்னாலும் ஒரு தலாக் தான்; இது புரியாமல் இந்த ஆலிம்கள் தவறாக மக்களை வழி நடத்துகின்றார்கள்.
கடந்த 1987ஆம் ஆண்டு பீஜே அவர்கள் திருச்சியில் உரையாற்றிய மாநாடு குறித்து அப்போது வெளியான செய்தி
விபரீத ஃபத்வா வழங்கிய ஆலிம்(?):
இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் கூட ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தடைவிதித்த ஒரு ஆலிம்; அந்தக் குழந்தை பிறந்த தினத்திலிருந்து ஐந்து தடவை அதன் காதில் பாங்கு கேட்ட பிறகுதான் அது தாய்ப்பால் குடிக்க வேண்டும் என தவறாகச் சொல்லி தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இதுபோல ஆலிம்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் திருந்த வேண்டும்.
முத்தலாக் – விதண்டாவாதமும்; உண்மை விளக்கமும்:
முத்தலாக் என்பது கூடாது தான் ஆனால் சொல்லிவிட்டால் அது நிகழ்ந்துவிடும்; எப்படி விஷத்தைக் குடிக்கக் கூடாதோ; அதைக் குடித்தால் அதைக் குடித்தவன் எப்படிச் செத்து விடுவானோ அது போலத்தான் இதுவும்; முத்தலாக் கூடாது தான்; ஆனால் சொன்னால் முத்தலாக் நிகழ்ந்துவிடும் என சிலர் தப்பான விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.
இது தவறான உதாரணமாகும்; மெட்டீரியலாக உள்ளதற்கும், வாயில் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
மெட்டீரியலாக உள்ள பொருளானது உடலில் போனால் செத்து விடுவோம்; ஆனால் வாயால் சொல்வதாலேயே அது நடந்துவிடாது; 3000 ரூபாயை ஒரு ஆலிமிடம் கடன் வாங்கிவிட்டு ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மூவாயிரத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டேன் என்று ஒருவன் சொன்னால் இவ்வாறு சொன்னதாலேயே பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக யாராவது ஒப்புக் கொள்வார்களா? அதை அந்த ஆலிம்தான் ஏற்பாரா? அது போலத் தான் தலாக் என்பதும்; மூன்று தடவை நிகழ்ந்தால் தான் அது முத்தலாக் ஆகுமே ஒழிய வார்த்தையால் சொல்வதால் முத்தலாக் ஆகிவிடாது.
இறுதி எச்சரிக்கை:
இறுதியாக, இந்த பாஜக அரசாங்கத்திடம் ஒன்று கேட்கின்றோம்; பொதுசிவில் சட்டம் என்று அனைவருக்கும் பொதுவானதாக சட்டம் கொண்டு வரப்போகின்றோம் என்று சொல்கின்றீர்களே!
இந்து மதத்திலேயே ஆயிரத்தி எட்டு ஜாதிகள் உள்ளன; செட்டியார்; கள்ளர்; தேவர்; தலித் என்று பல பிரிவுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் பிராமணாள் கல்யாணம் செய்வது போல் தான் அனைவரும் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொன்னால் நாட்டில் நிலைமை என்னவாகும்? நாட்டில் இரத்த ஆறுதான் ஓடும்; அரிவாளால் தான் பேசுவார்கள். இதுதான் நடக்கும்.
இந்து மதத்திற்குள்ளேயே உங்களால் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர இயலாது; இதுதான் நிலைமை.
நாமம் போடுவதில் சண்டை:
தற்போது கூட திருப்பதியில் உள்ள கடவுள் சிலைக்கு நாமம் எப்படிப் போடுவது என்று சர்ச்சை ஓடிக்கொண்டுள்ளது. யு வடிவ நாமமா? அல்லது ஒய் வடிவ நாமமா என்று சண்டை நாறி ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றம் சென்று லண்டன் நீதிமன்றம் ப வடிவத்திலான நாமம் போடச்சொல்லி உத்தரவு போட்டுள்ளார்கள்.
இவ்வளவு கேலிக் கூத்துக்களையும், பிரிவுகளையும் வைத்துக் கொண்டு எங்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்கப் போகின்றீர்களா? என்று பீஜே கேள்வி எழுப்பி உரையை நிறைவு செய்தார்.
08.11.2016. 2:04 AM
தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode