Sidebar

21
Sat, Dec
38 New Articles

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?

முஹம்மது நபி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?

பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள்.

புஹாரி 2731 & 2732

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? ஆதாரமான ஹதீஸ் என்றால் இது பகுத்தறிவுக்கு பொருத்தமாக இல்லையே ?

ஜாஹிர் அஹமத்

பதில்

புகாரியில் இது பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் இந்த முழு சம்பவத்தில் உள்ள செய்திகளை ஹதீஸ் கலை விதிக்கு உட்படுத்தி பிரித்து அறிய வேண்டும்.

நீண்ட ஹதீஸில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தப் பகுதி இது தான்.

ثم إن عروة جعل يرمق أصحاب النبي صلى الله عليه وسلم بعينيه قال فوالله ما تنخم رسول الله صلى الله عليه وسلم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلم خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظر تعظيما له

-பிறகு உர்வா பின் மஸ்வூத், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களைத் தமது இரு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்கிறார்கள். நபியவர்கள் அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் சென்று விடுகிறார்கள்.

என்று சொல்லப்பட்டுள்ளது.

மக்காவாசிகளின் பிரதிநிதியாக பேச்சு வார்த்தைக்கு வந்த உர்வா என்பவர் இப்படி நினைத்தார் என்று இதன் அறிவிப்பாளர்களான  மிஸ்வர் பின் மக்ரமா, மர்வான் ஆகியோர் கூறுகிறார்கள்.

உர்வா இப்படி நினைத்தார் என்பது இவர்களது ஊகம் தானே தவிர உர்வா சபையில் இப்படி கூறியதைக் கேட்டு இவ்விருவரும் அறிவிக்கவில்லை. ஒரு மனிதர் இப்படி ஊகித்தார் என்று சொல்வது மார்க்கத்தில் ஏற்கப்படாது.

மேலும் உர்வா என்ன நினைக்கிறார் என்பதை இருவரும் ஒரே விதமாக ஊகம் செய்ய முடியாது.

மேலும் இதே ஹதீஸில் உர்வா இப்படி நினைத்திருக்க முடியாது என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

உர்வா மக்காவாசிகளின் பிரதிநிதியாக வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியது என்ன என்பதை இதே அறிவிப்பாளர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

فَقَالَ عُرْوَةُ عِنْدَ ذَلِكَ: أَيْ مُحَمَّدُ أَرَأَيْتَ إِنِ اسْتَأْصَلْتَ أَمْرَ قَوْمِكَ، هَلْ سَمِعْتَ بِأَحَدٍ مِنَ العَرَبِ اجْتَاحَ أَهْلَهُ قَبْلَكَ، وَإِنْ تَكُنِ الأُخْرَى، فَإِنِّي وَاللَّهِ لَأَرَى وُجُوهًا، وَإِنِّي لَأَرَى أَوْشَابًا مِنَ النَّاسِ خَلِيقًا أَنْ يَفِرُّوا وَيَدَعُوكَ

நானோ, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடியவர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன் என்று கூறினார்.

இது உர்வா வெளிப்படையாகச் சொன்ன வார்த்தை.

நபித்தோழர்கள் குழப்பத்தில் உள்ளனர். போர் வந்தால் உம்மை விட்டு ஓடிப் போய் விடுவார்கள் என்று நபிகள் நாயகத்திடம் உர்வா கூறிய வாசகம் இது தான்.

நபித்தோழர்கள் குறித்து தனது நிலைபாடு இது தான் என்று அவர் சொன்ன பிறகு அதை இந்த இரு அறிவிப்பாளர்களும் அறிவித்த பிறகு அதற்கு மாற்றமாக உர்வா நினைத்தார் என்று எப்படிச் சொல்வார்கள்? அப்படிச் சொன்னால் அது பொய்யான ஊகமாகத் தான் இருக்கும்.

மேலும் உர்வா மக்காவாசிகளிடம் போய் இதைக் கூறியதாகவும் இவ்விருவரும் அறிவிக்கிறார்கள்.

فرجع عروة إلى أصحابه فقال أي قوم والله لقد وفدت على الملوك ووفدت على قيصر وكسرى والنجاشي والله إن رأيت ملكا قط يعظمه أصحابه ما يعظم أصحاب محمد صلى الله عليه وسلم محمدا والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلم خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظر تعظيما له وإنه قد عرض عليكم خطة رشد فاقبلوها فقال رجل من بني كنانة دعوني آتيه فقالوا ائته

(இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்து நேரடியாக அறிந்தபின்) உர்வா தன் தோழர்களிடம் சென்று, என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரது தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கின்றார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரது கட்ட ளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றார்கள். அவர் உளூ செய்தால் அவர் உளூ செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் சென்று விடுகிறார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரை கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை.

இப்படி உர்வா மக்காவாசிகளிடம் போய் சொன்னதாகவும் இவர்கள் அறிவிக்கிறார்கள்.

உர்வா மக்காவாசிகளிடம் போய் இப்படிச் சொன்னார் என்றால் இவர்கள் அந்தச் சபையில் இருந்திருக்க வேண்டும். இவ்விருவரும் நபிகள் நாயகத்தின் சபையில் தான் இருந்தார்கள். உர்வாவுடன் கூடவே சென்று அவர் கூறியதை இவர்கள் செவியுறவில்லை.

உர்வா என்ன சொன்னார் என்பதை நேரடியாக அறியாத இவர்கள் அறிவிப்பதை ஹதீஸ் கலையில் ஏற்க முடியாது. இதுவும் ஊகம் தானே தவிர உண்மையல்ல.

மேலும் ஹுதைபியா சம்பவத்தைக் கூறும் இந்த ஹதீஸை முழுமையாக ஒருவர் பார்த்தால் உர்வா நினைத்தது போல் நினைக்கவே மாட்டார்.

வணக்க வழிபாடுகள் தொடர்பாக நபிகள் கூறியதை நபித்தோழர்கள் அப்படியே ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தாலும் வணக்க வழிபாடுகள் அல்லாத விஷயங்களில் அவர்கள் தமது மறுப்பை அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தான் இந்தs சம்பவம் கூறுகிறது.

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، قَالَ سُهَيْلٌ: أَمَّا الرَّحْمَنُ، فَوَاللَّهِ مَا أَدْرِي مَا هُوَ وَلَكِنِ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ كَمَا كُنْتَ تَكْتُبُ، فَقَالَ المُسْلِمُونَ: وَاللَّهِ لاَ نَكْتُبُهَا إِلَّا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று நபியவர்கள் சொன்னார்கள். அதற்கு சுஹைல், ரஹ்மான் என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், இறைவா! உன் திருப் பெயரால்...' என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன் என்றார். முஸ்லிம்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று தான் இதை எழுதுவோம் என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப் பெயரால்' என்றே எழுதுங்கள் என்று சொன்னார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் சொல்வதற்கு முன் இதை ஏற்கமாட்டோம் என்று நபித்தோழர்கள் கூறினார்கள். தங்கள் கருத்தை வெளிப்படையாகச் சொல்பவர்களாகத் தான் நபித்தோழர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். எச்சிலை பூசிக் கொள்பவர்களாக இல்லை

فَقَالَ سُهَيْلٌ: وَعَلَى أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا رَجُلٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلَّا رَدَدْتَهُ إِلَيْنَا، قَالَ المُسْلِمُونَ: سُبْحَانَ اللَّهِ، كَيْفَ يُرَدُّ إِلَى المُشْرِكِينَ وَقَدْ جَاءَ مُسْلِمًا؟

மேலும் சுஹைல், எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்' என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது? என்று கேட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னால் மனதில் பட்டதைச் சொல்லக்கூடியவர்களாகத் தான் தோழர்களை உருவாக்கி இருந்தார்கள். எச்சிலைப் பூசிக் கொள்பவர்களை உருவாக்கவில்லை.

فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ: فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: أَلَسْتَ نَبِيَّ اللَّهِ حَقًّا، قَالَ: «بَلَى»، قُلْتُ: أَلَسْنَا عَلَى الحَقِّ، وَعَدُوُّنَا عَلَى البَاطِلِ، قَالَ: «بَلَى»، قُلْتُ: فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا؟ قَالَ: «إِنِّي رَسُولُ اللَّهِ، وَلَسْتُ أَعْصِيهِ، وَهُوَ نَاصِرِي»، قُلْتُ: أَوَلَيْسَ كُنْتَ تُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي البَيْتَ فَنَطُوفُ بِهِ؟ قَالَ: «بَلَى، فَأَخْبَرْتُكَ أَنَّا نَأْتِيهِ العَامَ»، قَالَ: قُلْتُ: لاَ، قَالَ: «فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ»،

அப்போது (நடந்ததை) உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம், அல்லாஹ்வின் தூதர் தான் என்று பதிலளித்தார்கள். நான், நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.) என்று பதிலளித்தார்கள். நான், அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன் என்று பதிலளித்தார்கள். நான், விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம்' என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா? எனக் கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள் என்று கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) ஒப்பந்தம்ச் செய்து முடித்த பின்னர் கூட உமர் (ரலி) அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏற்காமல் கேள்விகள் கேட்டுள்ளார்கள். எச்சிலைப் பூசிக் கொள்ளும் சமுதாயத்தை உருவாக்கவில்லை.

ஹுதைபியா உடன்படிக்கையை யார் கவனித்தாலும் நியாயம் என்று மனதில் பட்டதை அப்படியே கேட்கும் மக்களாகத் தான் நபித்தோழர்கள் இருந்துள்ளனர் என்று கணிப்பாரே தவிர உர்வா ஊகித்ததாகச் சொல்வது போல் கணிக்கவே மாட்டார்.

فَلَمَّا فَرَغَ مِنْ قَضِيَّةِ الكِتَابِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «قُومُوا فَانْحَرُوا ثُمَّ احْلِقُوا»، قَالَ: فَوَاللَّهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ

பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால்

இவற்றைப் பார்க்கும் போது உர்வா இப்படி நினைத்திருக்கவும் முடியாது. அவர் போய் மக்காவாசிகளிடம் சொல்லி இருக்கவும் முடியாது. அப்படிச் சொன்னதற்கு இவ்விருவரும் சாட்சிகளாக இருக்கவில்லை.

ஒரு வாதத்துக்காக உர்வா அப்படிச் சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும் இது முஸ்லிமல்லாதவரின் கூற்றாகத் தான் இடம் பெற்றுள்ளது.

ஒரு தலைவருக்கு முழுமையாகக் கட்டுப்படும் மக்களைக் காணும் போது இவரது சளியைக் கூட மேனியில் பூசிக் கொள்கிறார்கள் என்று மிகைபடக் கூறும் வழக்கம் உள்ளது. வெள்ளை வெளேர் நிறத்தில் உள்ளவரைப் பற்றி கூறும் போது இவரின் வெளிச்சம் இருக்கும் போது விளக்குகள் தேவைப்படாது என்று கூறுவது போல் இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபித்தோழர்கள் நபிக்குக் கட்டுப்பட்டதைக் கண்டு வியந்த முஸ்லிமல்லாத உர்வா பின் மஸ்வூத் என்பார், முஹம்மத் சளியைத் துப்பினால் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் அதைத் தாங்குவார்கள் போல் உள்ளதே என்று மிகைபடக் கூறினார் என்றுதான் எடுத்துக் கொள முடியும்.

அவ்வாறு இல்லாமல் நிஜமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சிலைத் துப்பும் போது அதைப் பிடித்து உடல் முழுவதும் நபித்தோழர்கள் பூசிக் கொண்டார்கள் என்று நேரடியான கருத்து கொண்டால் அப்போது இது ஆதாரமற்ற செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடும்.

இந்தக் கருத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், திருக்குர்ஆனின் போதனைக்கும், ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் ஆகிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் ஒட்டு மொத்த அறிவுரைகள் மூலம் நாம் அறிந்து வைத்துளோம். அவர்கள் முன்னால் எச்சிலைப் பூசிக் கொண்டால் அதைக் கண்டு வெறுப்பவர்களாகத் தான் அவர்கள் இருந்திருப்பார்கள்.

மனிதன் இயல்பாகவே அருவருப்படையும் செயலை தன் முன்னால் தனக்காகச் செய்யும் போது அதைக் கண்டு மகிழ்வது அவர்களின் நற்பண்புகளுக்குப் பொருந்தவில்லை. நபியின் இந்தப் பொதுவான பண்புகளைக் கூறும் எல்லா ஆதாரங்களுடனும் இந்தச் செய்தியின் நேரடிப் பொருள் மோதுகிறது.

நபிகளார் எந்த ஒரு சமயத்திலும் தான் புகழப்பட வேண்டும்; தனக்கு ஏனையோர் மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை. ஆதலால் தான் தனக்காக எழுந்து நிற்பதைத் தடை செய்து பிறர் தனக்காக எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்கள்.

2755 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ ، قَالَ : حَدَّثَنَا قَبِيصَةُ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْحَبِيبِ بْنِ الشَّهِيدِ ، عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ : خَرَجَ مُعَاوِيَةُ ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ، فَقَالَ : اجْلِسَا ؛ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا ؛ فَلْيَتَبَوَّأْمَقْعَدَهُ مِنَ النَّارِ ".

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி)  அமருங்கள்  என்றார்.  தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்.

நூல்கள் : திர்மிதி அபூதாவூத்

2754 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : أَخْبَرَنَا عَفَّانُ ، قَالَ : أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ قَالَ : لَمْ يَكُنْ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا ؛ لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள் : அஹ்மத், திர்மிதீ

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தனக்காக எழுந்து நிற்பதையே வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சளியை மக்கள் முகத்தில் பூசிக் கொள்வதை அனுமதித்திருப்பார்களா?

இது எழுந்து நின்று மரியாதை செய்வதை விட மிக மோசமானதும் அருவருக்கதக்கதும் இல்லையா?

சுயமரியாதையை வலியுறுத்திப் போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தொண்டர்களின் சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்கான இக்காரியத்தை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

1635 حَدَّثَنَا إِسْحَاقُ ، حَدَّثَنَا خَالِدٌ ، عَنْخَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍرَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى السِّقَايَةِ فَاسْتَسْقَى، فَقَالَ الْعَبَّاسُ : يَا فَضْلُ، اذْهَبْ إِلَى أُمِّكَ فَأْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ مِنْ عِنْدِهَا، فَقَالَ : " اسْقِنِي ". قَالَ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ، قَالَ : " اسْقِنِي ". فَشَرِبَ مِنْهُ ثُمَّ أَتَى زَمْزَمَ وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا، فَقَالَ : " اعْمَلُوا، فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ ". ثُمَّ قَالَ : " لَوْلَا أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ حَتَّى أَضَعَ الْحَبْلَ عَلَى هَذِهِ ". يَعْنِي عَاتِقَهُ، وَأَشَارَ إِلَى عَاتِقِهِ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து,  வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா  என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்தத் தண்ணீரையே தாருங்கள்  எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே  என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள் எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி  இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1635

3312 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ ، قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ ، قَالَ : حَدَّثَنَاإِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ : أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ فَجَعَلَتُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ : " هَوِّنْ عَلَيْكَ ؛ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ : إِسْمَاعِيلُ وَحْدَهُ وَصَلَهُ.

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார்.  இயல்பாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்  என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

நூல் : இப்னு மாஜா 3303

சாதாரணமான இந்த மரியாதையையே ஏற்றுக் கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் தமது சளியைப் பிறர் முகத்தில் பூசி தனக்கு மரியாதை செய்வதை ஏற்றிருப்பார்களா? இப்படி மெய்யாகவே நடந்திருந்தால் இதைக் கண்டிக்காமல் மௌனியாக இருந்திருப்பார்களா?

நானும் மனிதனே

எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்  என்று அழுத்தம் திருத்தமாக நபிகள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

2140 حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ ، أَخْبَرَنَاإِسْحَاقُ بْنُ يُوسُفَ ، عَنْ شَرِيكٍ ، عَنْحُصَيْنٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍقَالَ : أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَلِمَرْزُبَانٍ لَهُمْ، فَقُلْتُ : رَسُولُ اللَّهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ. قَالَ : فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ : إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ، فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ. قَالَ : " أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ ؟ ". قَالَ : قُلْتُ : لَا. قَالَ : " فَلَا تَفْعَلُوا، لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ ؛ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ ".

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்  என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?  எனக் கேட்டார்கள்.  மாட்டேன்  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல் : அபூதாவூத்

13596 حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلًا قَالَ : يَا مُحَمَّدُ، يَا خَيْرَنَا وَابْنَ خَيْرِنَا، وَيَا سَيِّدَنَاوَابْنَ سَيِّدِنَا. فَقَالَ : " قُولُوا بِقَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِكُمُ الشَّيْطَانُ - أَوِ الشَّيَاطِينُ، إِحْدَى الْكَلِمَتَيْنِ - أَنَا مُحَمَّدٌ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، مَا أُحِبُّ أَنْ تَرْفَعُونِي فَوْقَ مَنْزِلَتِي الَّتِي أَنْزَلَنِي اللَّهُ ".

حكم الحديث: إسناده صحيح على شرط مسلم

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்  என்றார்கள்.

நூல் : அஹ்மத்

3445 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ ، حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ : أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، سَمِعَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " لَا تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا : عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்  என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

நூல் : புகாரி: 3445

நபிகளாரின் சளியை மக்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொண்டு நபிகள் நாயகத்தின் தகுதியை விடவும் உயர்த்தும், வரம்பு மீறிய மரியாதையை அளிக்கும் இச்செயலை நபிகளார் அனுமதித்திருப்பார்களா?

மகத்தான நற்குணம்

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

அல்குர்ஆன் 68 : 4

நற்குணத்தை விரும்பும் நாமே இதைச் சகிக்க மாட்டோம் எனில் உயர்ந்த  நற்குணத்தில் இருக்கிற நபிகளார் இதை எப்படிச் சகித்திருப்பார்கள்?

நபிகளாரின் சளியை ஸஹாபாக்கள் தங்கள் முகத்தில் தேய்த்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் அதன் நேரடிப் பொருளில் சொல்லப்பட்டு இருந்தால் இச்சம்பவம் குர்ஆன், ஹதீஸ் வழிநெடுக சொல்லப்பட்டிருக்கும் நபிகளாரின் நற்குணத்திற்கு எதிராக, மாமனிதர் என்ற நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது.

மேலும் திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் சுத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திருப்பதை ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களில் காண்கிறோம்.

இவை அனைத்துக்கும் மாற்றமாக நிச்சயம் நபித்தோழர்கள் செய்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

எனவே இந்த ஹதீஸில் உர்வா சம்மந்தப்பட்ட இந்தப் பகுதி மட்டும் ஊகத்தை அடிப்படையாக கொண்டடத்அதை நிராகரிக்க வேண்டும். 

எனவே முஸ்லிமல்லாத ஒருவர் மிகைப்படுத்திக் கூறிய வாசகம் என்று இதை எடுத்துக் கொண்டால் இந்தச் சொற்றொடரை நாம் மறுக்கத் தேவையில்லை.

நிஜமாகவே சளியைப் பூசிக் கொண்டார்கள் என்ற கருத்துக் கொண்டால் இந்த ஹதீஸில் உள்ள இந்த வாசகம் மறுக்கப்பட வேண்டும்.

28.03.2013. 8:19 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account