இவர்தான் நபிகள் நாயகம்
தினமணி ரம்ஜான் மலரில் பீஜே எழுதிய கட்டுரைஇன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் கி.பி.571 ஆம் வருடம் நபிகள் நாயகம் பிறந்தார்கள். சிறு வயதில் தமது பெற்றோரை இழந்த நபிகள் நாயகம் பாட்டனார் பொறுப்பிலும் அவர் மரணித்த பின் பெரிய தந்தையின் பொறுப்பிலும் வளர்ந்தார்கள்.
நாற்பது வயது வரை ஒரு வணிகராகவும் சராசரி மனிதராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.
* ஒரே கடவுளை மட்டுமே வணங்க வேண்டும்.
* பெற்றோரைப் பேண வேண்டும்.
* பொய், புரட்டு மோசடி கூடாது.
* மனிதனுக்கு கேடு விளைவிக்கும் மது பானங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விலக்க வேண்டும்.
* கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் கூடாது.
என்றெல்லாம் கடவுளிடமிருந்து தமக்குச் செய்தி வருவதாக அறிவித்தனர். இந்தப் பிரச்சாரம் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.
பத்து ஆண்டுகள் சொல்லொனாத் துன்பத்தை அனுபவித்தார்கள். முடிவில் ஊரை விட்டே விரட்டப்பட்டார்கள். மதீனா என்ற நகரில் தஞ்சமடைந்து பதிமூன்று வருடங்கள் அங்கே வாழ்ந்து அறுபத்தி மூன்றாம் வயதில் மரணித்தார்கள்.
உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி சாதனைகள் பல படைத்துள்ளனர். எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாதனைகள் பல வகைகளில் தனித்து விளங்குகின்றன.
ஒரு தலைவரின் கட்டளைகளையும் நடைமுறைகளையும் அவர் வாழும்போது சிலர் கடைப்பிடித்திருப்பார்கள். அந்தத் தலைவரின் மரணத்திற்கு பின் அவரை அப்படியே பின்பற்றுவோர் இருக்க மாட்டார்கள். இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக வரலாற்றில் இதை மாற்றிக் காட்டிய ஒரே தலைவராக இருக்கின்றனர்.
தங்களின் வணக்க வழிபாடுகளில் மட்டுமின்றி தங்களின் வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் நபிகள் நாயகத்தின் கட்டளைப்படியே பல கோடி முஸ்லிம்கள் இன்றளவும் நடத்தி வருகின்றனர். உண்ணுதல், பருகுதல், மலஜலம் கழித்தல் போன்ற அற்பமான காரியங்களைக் கூட அவர்கள் காட்டிய வழியிலேயே செய்யக் கூடிய மக்களை பதினான்கு நூற்றாண்டுகளாகப் பெற்று வரும் ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.
இதற்கு, அவர்களிடம் காணப்பட்ட தனித் தகுதிகள் காரணமாக இருந்தன.
தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்வதற்கு முன் ஊரிலேயே பெரும் செல்வந்தராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டு காலப் பொதுவாழ்வில் அனைத்தையும் இழந்தார்கள்.
மரணித்த போது இன்றைய மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் கூட தேறாத அற்பமான பொருட்களை தான் அவர்கள் விட்டுச் சென்றனர். அதையும் கூட தமது வாரிசுகள் பயன்படுத்தக் கூடாது. பொதுநிதியில் சேர்த்து விடவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
இந்த நம்பகத் தன்மை தான் அவர்களை முஸ்லிம்கள் அப்படியே அடியொற்றி நடப்பதற்குக் காரணமாக இருந்தது.
மனிதன் வேறு, கடவுள் வேறு என்று உரத்துச் சொன்னவர் நபிகள் நாயகம். மனிதன் ஒருக்காலும் கடவுளாக ஆகவே முடியாது என்பதை உறுதி பட அவர்கள் அறிவித்தார்கள். மக்களில் சிலர் நபிகள் நாயகத்தையே கடவுள் நிலைக்கு உயர்த்த முற்பட்ட போது அதைக் கடுமையான முறையில் எச்சரித்து தடுத்து நிறுத்தினார்கள்.
* அவரது வாழ்நாளில் ஒருவரும் அவரது காலில் விழுந்ததில்லை.
* அல்லாஹ்விடம் தாமும் பிரார்த்தனை செய்து மற்றவர்களையும் பிரார்த்திக்கக் கூறியதைத் தவிர யாருக்கும் ஆசி வழங்கியதில்லை.
* அவர்களுக்காக யாரும் எழுந்து நின்றதில்லை.
* அவர்களுக்கு பராக் சொல்லக்கூடியவர்கள் யாரும் முன்னும் பின்னும் நடந்து சென்றதில்லை.
* அவர்களின் குடிசை வீட்டுக்கு வாயிற் காப்போன் யாருமில்லை.
இன்றைக்கு மிகவும் அடித்தளத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்படி சாதாரணமாக இருப்பானோ அதை விடப் பல மடங்கு சாதாரணமானவராகத் தான் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள்.
இவர் தான் பின்பற்றப்படும் ஒரே தலைவர் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.
எதை தமது வாழ்வில் அவர்கள் போதித்தார்களோ அதைத் தாமே முதலில் கடைப்பிடித்தார்கள். கடைப்பிடிக்காத ஒரு செய்தியையும் அவர்கள் கூறியதில்லை. கூறிய எந்த ஒன்றையும் கடைப்பிடிக்காமலும் இருந்ததில்லை.
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத இந்தத் தன்மையும் அவர்கள் இன்றளவும் அப்படியே பின்பற்றுவதற்குக் காரணம்.
அவர்களது ஆட்சியில் தமக்கோ, தமது உறவினருக்கோ, வேண்டியவருக்கோ சட்டத்திலிருந்து எந்த விலக்கையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. என் மகள் திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன் என்று தெளிவாகவே அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.
வட்டியைத் தடை செய்தபோது அன்றைக்கு மிகப் பெரிய வட்டித் தொழில் செய்து வந்த தமது பெரிய தந்தையிலிருந்து அதைத் துவக்கினார்கள்.
தமது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர்கள் அசலை மட்டும் செலுத்தலாம் எனப் பிரகடனம் செய்தார்கள்.
மாபெரும் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மாயம், மந்திரம், சோதிடம், புரோகிதம் ஆகிய அனைத்தையும் எதிர்த்தார்கள்.
அன்றைக்கு உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷி குலத்தில் பிறந்திருந்தும் குலத்தால் எந்தப் பெருமையும் இல்லை என்று அடித்துச் சொன்னார்கள். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் புனிதப் பணியை அன்றைக்கு தீண்டத் தகாதவராகக் கருதப்பட்ட பிலாலிடம் ஒப்படைத்தார்கள்.
தமது தாய்மொழி அரபு மொழியாக இருந்தும் அந்த மொழிக்கு நிகர் வேறு மொழியில்லை என்ற கர்வம் அன்றைய மக்களிடம் இருந்தும் அரபு மொழிக்கு என எந்தச் சிறப்பும் இல்லை என்றார்கள். எல்லா மொழிகளும் எல்லா மொழிகளைப் பேசுவோரும் சமமானவர்களே என்று பிரகடனம் செய்தார்கள்.
இது போன்ற சிறப்புத் தகுதிகளின் அடிப்படையில் தான் நபிகள் நாயகம் அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரைவிடவும் மேலாக மதிக்கின்றனர்.
உலகில் சீர்திருத்தம் செய்த தலைவர்கள் ஒரு சில துறைகளில் மட்டும் கருத்து கூறிவிட்டு மற்றவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இதில் தமக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறிவிடுவார்கள்.
நபிகள் நாயகத்தைப் பொருத்த வரை அவர்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் மனிதர்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனை குறித்தும் அவர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள் கருத்துச் சொல்லாத எந்தப் பிரச்சனையும் இல்லை. இன்றைக்கு நாம் சந்திக்கின்ற நவீனப் பிரச்சனைகளுக்குக் கூட அவர்களின் கருத்து என்ன என்பதை யாராலும் அறிய முடியும்.
சில தீமைகளுக்கு எதிராகக் கருத்துச் சொன்னால் சிலரது ஆதரவை இழக்க நேரிடுமோ என்று கருத்தை மறைப்பவர்களே மலிந்துள்ள நிலையில் யாரைப் பற்றியும், எந்த விளைவைப் பற்றியும் கவலைப்படாமல் தமது கருத்து இதுதான் என்று அறிவித்த தலைவர் நபிகள் நாயகம்.
அவர்கள் வலியுறுத்தாத நல்ல காரியங்கள் எதுவும் இல்லை. அவர்கள் எதிர்க்காத ஒரு தீமையும் இல்லை.
இதுபோன்ற இன்னும் பல தனிச்சிறப்புக்கள் காரணமாகவே உலகம் அவர்களை மாமனிதர் என்கிறது. முஸ்லிம் சமுதாயம் தமது நிரந்தர வழிகாட்டியாக அவர்களைக் கருதுகிறது.
இவர்தான் நபிகள் நாயகம் தினமணி கட்டுரை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode