Sidebar

08
Sun, Sep
0 New Articles

ஹுதைபியா உடன்படிக்கை என்றால் என்ன?

முஹம்மது நபி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன?

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப் பயணமாகவே பார்த்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களைக் கொண்டு வந்தார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் ஹதீஸிலும், 1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை மிரட்டும்படியாக இருந்தது.

இந்தப் புனிதப் பயணம் மக்காவாசிகளிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும் விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத் தடுத்து விட்டனர். முடிவில் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் அவர் திரும்ப வந்துவிட்டார்.

உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும், அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான் (ரலி) அவர்களை நான் தங்களுக்குப் பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார்கள். நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம் என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும், குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி வைத்த செய்தியை அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், நீங்கள் தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்ளலாம் என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை என்று பதிலளித்தார். குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர்.

நூல்: முஸ்னத் அஹ்மத்

உஸ்மான் (ரலி) அவர்களை குறைஷிகள் தடுத்து வைத்ததால் உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைக்கிறது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், தோழர்களும் கடுமையான கோபத்திற்கும், கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள்.

பொதுவாகவே அன்றைய காலத்தில் தூது செல்பவர்களைக் கொலை செய்யும் வழக்கம் இல்லை. அதை ஒரு மரபாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த மரபுக்கு மாற்றமாக மக்கா குறைஷிகள் நடந்து விட்டார்கள் என்பது முஸ்லிம்களிடம் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். தங்கள் உயிர்களை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கவும் முன்வந்தார்கள்.

பைஅத் ரிள்வான்

நபித்தோழர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கையும் செய்தனர்.

صحيح البخاري

2960 – حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ، فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ: «يَا ابْنَ الأَكْوَعِ أَلاَ تُبَايِعُ؟» قَالَ: قُلْتُ: قَدْ بَايَعْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَأَيْضًا» فَبَايَعْتُهُ الثَّانِيَةَ، فَقُلْتُ لَهُ: يَا أَبَا مُسْلِمٍ عَلَى أَيِّ شَيْءٍ كُنْتُمْ تُبَايِعُونَ يَوْمَئِذٍ؟ قَالَ: عَلَى المَوْتِ

ஹுதைபிய்யா தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் என்ன உடன்படிக்கை செய்தீர்கள்? என்று ஸலமா பின் அக்வஃ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், மரணத்தின் மீது உடன்படிக்கை செய்தோம் என்று பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஸீத் பின் அபீஉபைத்

நூல்: புகாரி 2690

இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

திருக்குர்ஆன் 48:10

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தோழர்கள் செய்த அந்த உடன்படிக்கையை, தன்னிடம் செய்த உடன்படிக்கை என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்டவர்களைத் திருப்திப்பட்டுக் கொண்டதாகவும் இறைவன் கூறுகின்றான். அதனால் இந்த உடன்படிக்கைக்கு பைஅத்துர் ரிள்வான் (இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்ற உடன்படிக்கை) என்று பெயர் வழங்கப்படுகின்றது.

மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகத் தான் முஸ்லிம்கள் வந்தனர். ஆனால் இடையில் அவர்களது பயணத்தில் இப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டு அது ஒரு போராக மூளப் பார்த்தது. ஆனால் பின்னர் உஸ்மான் (ரலி) கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதான முயற்சிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

குறைஷிகளின் முதல் நல்லெண்ணத் தூதராக வந்த பிஷ்ர் பின் சுஃப்யான் அல்கஃபி என்பார் உஸ்ஃபான் என்ற இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து, குறைஷிகள் நீங்கள் வருவதைத் தெரிந்து கொண்டு தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வெளியே கிளம்பி வந்துவிட்டார்கள். வலுக்கட்டாயமாக, முஹம்மது மக்காவிற்கு வருவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தில் காலித் பின் வலீத் தனது குதிரைப் படையுடன் முன்னரே வந்து விட்டார் என்று கூறினார். காலித் பின் வலீத் அப்போது இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை.

போர்ப் பயணம் அல்ல! புனிதப் பயணமே!:

காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் கமீம் என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் (மிரார் என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) ஹல் ஹல் என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், கஸ்வா (என்ற பெயர் கொண்ட இந்த ஒட்டகம்) பிடிவாதம் பிடிக்கிறது, கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது என்று கூறினார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்த போது) யானையைத் தடுத்த(இறை)வனே இதையும் தடுத்து வைத்திருக்கின்றான் என்று கூறினார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன் என்று கூறினார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பயணம் போருக்கான பயணம் அல்ல! உம்ராவுக்கான புனிதப் பயணம் என்பதை நிரூபிக்கும் விதமாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஹுதைபிய்யாவில் முகாமிடுகின்றார்கள்.

இப்போது இங்கு குறைஷிகளின் இரண்டாவது நல்லெண்ணத் தூதர் புதைல் பின் வரக்கா என்பார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள்.

நம்பிக்கையாளர் புதைலின் வரவு:

இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், (முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டு விட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள் என்று கூறினார்கள்.

புதைல் அவர்களின் இந்தச் செய்தி, முதல் தூதரான பிஷ்ர் என்பாரின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

தாய் ஒட்டகங்கள், குட்டிகளுடன் வந்துள்ளன என்ற புதைலின் வார்த்தைகள் அரபியர்களின் முக்கியமான நடைமுறைகளைத் தெளிவுபடுத்துகின்றன. நீண்ட நாட்கள் ஓரிடத்தில் முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரபிகள் இப்படி பால் கொடுக்கும் ஒட்டகங்களை அவற்றின் குட்டிகளுடன் ஓட்டிச் செல்வார்கள். தங்களுடைய உணவுக்கு ஒட்டகத்தின் பாலைக் கறந்து குடித்துக் கொள்வார்கள் என்பது தான் அந்த நடைமுறை. இதையே புகைலின் வார்த்தைகள் விளக்குகின்றன.

தங்களுடைய மனைவி, மக்களுடன் வந்து முகாமிடுவதையும் இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. பயந்து, போரிலிருந்து பின்வாங்கி ஓடக்கூடாது என்பதற்காக மனைவி, மக்கள், பிள்ளை குட்டிகளுடன் போர்க்களங்களுக்கு வருவது அரபுக் குலத்தவரின் வழக்கத்தில் இருந்தது. இந்தக் கருத்தும் புகைலின் இந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதை நாம் அறியலாம்.

மொத்தத்தில் குறைஷியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு கடினப் போக்கைக் கடைப்பிடித்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ நிதானம், சாந்தி, சமாதானத்தையும் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதோ அந்த சமாதானத் தூதர் தெரிவிக்கின்ற சாந்தி வார்த்தைகளைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்று விட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்து விட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான் என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட புதைல் அவர்கள் கூறுகிறார்கள்:

நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன் என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று, நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம் என்று சொன்னார். அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினர். அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு புதைல் எடுத்துரைத்தார்.

உர்வாவின் வருகை:

புதைலின் இந்த சமாதானப் பேச்சை குறைஷிகள், குறிப்பாக அவர்களிலுள்ள அறிவிலிகள் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. இப்போது உர்வா என்பவர் எழுந்து குறைஷிகளிடம் அனுமதி கேட்கின்றார்.

உடனே, (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ, முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள் என்று கூறினார். அதற்கு அவர்கள், அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள் என்று கூறினர்.

சூடான சூழல்:

அவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடியவர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன் என்று கூறினார்.

உர்வா நபித்தோழர்களிடம் ஏடாகூடமாகப் பேசி அவர்களைச் சூடாக்கி விடுகின்றார். ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூழலைச் சூடாக்காமல் விவகாரத்தை சாதுரியமாகக் கையாள்கிறார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆக்ரோஷம்:

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா? என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, இவர் யார்? என்று கேட்டார். மக்கள் அபூபக்ர் என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன் என்று கூறி விட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களுடைய தாடியைப் பிடித்தபடி இருந்தார்.

அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும், தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். உர்வா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா (ரலி) அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து என்று கூறிய வண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, இவர் யார்? என்று கேட்க மக்கள், இவர் முகீரா பின் ஷுஅபா என்று கூறினார்கள். உடனே உர்வா, மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா? என்று கேட்டார். முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்த போது அவரது தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்கள்.

குறைஷிகளிடம் திரும்பிய உர்வா, முஹம்மது ஒரு நேரிய திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்; அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று என்று கூறினார். ஆனால் அதைக் குறைஷிகள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

தாக்க வரவில்லை, தவாஃபுக்கே வருகின்றோம்:

உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், என்னை அவரிடம் செல்ல விடுங்கள் என்று சொன்னார். அதற்கு அவர்கள், சரி, செல்லுங்கள் என்று கூறினர். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும், அவர்களின் தோழர்களிடமும் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும்  ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் பலியிட வேண்டிய ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்கள். உடனே, அவரிடம் ஒரு ஒட்டகம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் தல்பியா கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே என்று (தமக்குள்) கூறிக் கொண்டார். தம் தோழர்களிடம் திரும்பிச் சென்ற போது, ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை என்று கூறினார்.

இதற்கு அடுத்து, பனூ கினானா குலத்தைச் சார்ந்த ஒருவர் நான்காவது தூதராக வருகின்றார். இவரது ஆலோசனையையும் குறைஷிகள் ஏற்க முன்வரவில்லை. நாங்கள் போர் தொடுப்பதற்கு வரவில்லை, புனிதத் தலத்தில் வலம் வந்து, பலி கொடுக்கவே வந்துள்ளோம் என்ற முஸ்லிம்களின் உண்மை நிலையை குறைஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று வந்த அத்தனை பிரதிநிதிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தடுப்பது நியாயமில்லை என்ற கருத்தையே குறைஷிகளிடம் பதிவு செய்தனர். ஆரம்பத்தில் காட்டமாகப் பேசிய உர்வாவும் முஹம்மது (ஸல்) அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதையே பிரதிபலிக்கின்றார். ஆனால் குறைஷிகள் அசைந்து கொடுக்கவில்லை.

மிக்ரஸின் வருகை:

அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, என்னை அவரிடம் போக விடுங்கள் என்று கூறினார். மக்காவாசிகள், சரி, நீங்கள் அவரிடம் செல்லுங்கள் என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன் என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

ஐந்தாவது பிரதிநிதியாக சுஹைல் பின் அம்ரீ வருகையளிக்கின்றார்.

மிக்ரஸ் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் பின் அம்ர் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது என்று கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, (ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம் என்று கூறினார்.

முஸ்லிம்களின் முதல் கொந்தளிப்பு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல், ரஹ்மான் – அளவற்ற அருளாளன் என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், இறைவா! உன் திருப்பெயரால்… என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன் என்றார். அதற்கு முஸ்லிம்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று தான் இதை எழுதுவோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிஸ்மிக்க அல்லாஹும்ம – இறைவா! உன் திருப்பெயரால் என்றே எழுதுங்கள் என்று சொன்னார்கள்.

அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பெயர் குறைஷிகளுக்கு ஒருவிதமான குமட்டலை ஏற்படுத்துகின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா? என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.

திருக்குர்ஆன் 25:60

இணைவைப்பாளர்களின் இந்த வெறுப்பு முஸ்லிம்களைக் கொதிப்பிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்துகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நபித்தோழர்களின் இந்த வெறுப்பையும் தாண்டி சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்கிறார்கள்.

இரண்டாவது கொந்தளிப்பு:

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுங்கள் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்றே எழுதுங்கள் என்று கூறினார்கள்.

ஒப்பந்தத்தின் இந்த இரண்டாவது விதியும் முஸ்லிம்களைக் கொதிநிலைக்குக் கொண்டு போய்விடுகின்றது. இறைத்தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கசப்பு மருந்தை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களுடன் தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்) தை கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன் என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.

மூன்றாவது கொந்தளிப்பு:

பிறகு சுஹைலுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம் என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம் என்று கூறினார்; அவ்வாறே எழுதினார்.

ஒப்பந்தத்தின் இந்த விதியும் நபித்தோழர்களிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதையும் அவர்கள் அமைதியாக சகித்துக் கொண்டனர்.

நான்காவது கொந்தளிப்பு:

மேலும் சுஹைல், எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும் என்று நிபந்தனையிட்டார்.

ஒப்பந்தத்தில் அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு விதியும் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு அடி அல்ல, இடியாகவே விழுகின்றது. இதனால் அவர்கள் கொந்தளிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுஹைல் தொடர்ந்து சூடாக்கிக் கொண்டிருந்தார். நபித்தோழர்கள் உணர்ச்சிக் கொதிப்பில் தகித்தனர்.

முஸ்லிம்கள், சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது? என்று வியப்புடன் கேட்டார்கள்.

நபித்தோழர்கள் தங்கள் சூட்டை இப்படி வியப்புடன் கூறி தணித்துக் கொண்டனர்.

ஐந்தாவது கொந்தளிப்பு:

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார். அவர் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார். உடனே (அவரது தந்தையான) சுஹைல், முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள் என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள் என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், நான் அனுமதியளிக்கப் போவதில்லை என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம் என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூஜன்தல் அவர்கள் இணை வைப்பாளர்களிடமே திருப்பி அனுப்பப்படுகின்றார். இதை நபித்தோழர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கெஞ்சிக் கேட்ட பிறகும் குறைஷிகள் ஒப்புக் கொள்ளாததால், இரத்தம் தோய்ந்தவராக இருந்த அபூ ஜந்தல் இணை வைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்.

முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக வந்திருக்க என்னை இணைவைப்பாளர்களிடம் திருப்பி அனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் பார்க்க மாட்டீர்களா? என்று அபூஜந்தல் கேட்டது முஸ்லிம்களின் இதயங்களை நொறுங்கச் செய்து விட்டது.

அதுவரை கொதிப்பிலும், கொந்தளிப்பிலும் இருந்த நபித்தோழர்கள் அக்கினிப் பிழம்பாக மாறிவிட்டார்கள். அவர்கள் சார்பாக உமர் (ரலி) அவர்கள் வெடித்துச் சிதறுகிறார்கள். அசத்தியத்திற்கு எதிராக அடங்கிக் போவதா? இறை நிராகரிப்பு எகிறிக் குதிப்பதா? அது இறை நம்பிக்கையாளர்களை ஏறி மிதிக்க நாம் அனுமதிப்பதா? என்று கேட்டு உமர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொப்பளித்த வார்த்தைகள் இதோ:

அப்போது (நடந்ததை) உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம், அல்லாஹ்வின் தூதர் தான் என்று பதிலளித்தார்கள். நான், நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.) என்று பதிலளித்தார்கள்.

அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன் என்று பதிலளித்தார்கள். விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம் என்று தாங்கள் எங்களுக்குச் சொல்லி வந்திருக்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா? எனக் கேட்டார்கள். இல்லை என்று நான் பதிலளித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான பதிலில் அடங்காத உமர் (ரலி), அடுத்தக்கட்டத் தலைவரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அதற்கு அபூபக்ரும் நபியவர்களின் பதிலை அப்படியே அச்சுப் பிசகாமல் அழுத்தம் திருத்தமாய் சமர்ப்பிக்கின்றார்கள். அந்த சூடான விவாதத்தையும் உமர் (ரலி) அவர்களின் வார்த்தையில் சுவைப்போம்.

பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான் என்று கூறினார்கள். நான், நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்றார்கள். நான், அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மிடம் சொல்லவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள் என்று உங்களிடம் சொன்னார்களா? என்று கேட்டார்கள். நான், இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை) என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள் என்று கூறினார்கள்.

துயரத்தில் மூழ்கிய தோழர்கள்:

ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டால் அவர் தடுக்கப்பட்ட அந்த இடத்திலேயே பலிப்பிராணிகளை அறுத்து, தலைமுடியைக் களைய வேண்டும்.

பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள்.

தோழர்கள் ஒரு போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையை மீற மாட்டார்கள். ஆனால் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியும் தங்கள் மீது விழுந்த அடியாக அல்ல, இடியாக இருந்ததால் அவர்களிடம் இந்தத் தயக்கம் ஏற்பட்டது.

அருமை மனைவியின் அற்புத யோசனை:

அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியைச் சொன்னார்கள். உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் பிராணிகளை அறுத்து முடி களையப்) புறப்படுங்கள். நீங்கள்  குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள் என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

உரிய நேரத்தில் உரிய ஆலோசனையை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழங்கினார்கள். அது உடனே எடுபடவும் ஆரம்பித்தது. அந்த சோக மயமான கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாய்மொழி உத்தரவில் நபித்தோழர்கள் சிறிது தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயலில் இறங்கிய பிறகு அதைப் பின்பற்றுவதை விட்டுக் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. அதில் அவர்கள் கொஞ்சம் கூடப் பின்தங்கவில்லை. உடனே செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நெருக்கியடித்து ஒருவரையொருவர் கொன்று விடுவார்கள் என்ற அளவுக்கு நபியவர்களின் செயலை, செயல்படுத்த முனைந்துவிட்டனர். அந்த அளவுக்கு அவர்களது கட்டுப்பாடு அவர்களின் இந்தச் செயலில் பிரதிபலித்தது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரைத் தவிர்ப்பதற்காகக் கடைப்பிடித்த சமாதான நடவடிக்கையையும், அதில் அவர்கள் கொண்ட பிடிமானத்தையும் தான்.

மக்காவின் மீதும் குறைஷிகள் மீதும் போர் தொடுப்பதற்கான அத்தனை நியாயங்களும், சரியான காரணங்களும் அவர்களுக்கு இருந்தன. ஏற்கனவே உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது, நபித்தோழர் தங்கள் உயிரை அர்ப்பணிப்பதாக உறுதிப்பிரமாணமும் செய்திருந்தனர். போர் என்ற கார்மேகம் சூல் கொண்ட கருவாக போர் மழையைக் கொட்டுவதற்குத் தயாராக இருந்தது. போருக்கான சூழ்நிலைகள் அத்தனையும் நபியவர்களுக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அத்தனையையும் தட்டிக் கழித்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதானத்தையே நிலைநாட்டினார்கள். அதை அல்லாஹ்வும் அங்கீகரிக்கின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பும் போது அல் ஃபத்ஹ் – அந்த வெற்றி என்ற அத்தியாயத்தின் 1 முதல் 5 வரையிலான வசனங்கள் இறங்கின.

நபித்தோழர்கள் கவலையிலும், வேதனையிலும் மூழ்கியிருந்தனர். நபிகள் நாயக்ம (ஸல்) அவர்கள் பிராணியை ஹுதைபிய்யாவில் அறுத்துப் பலியிட்டனர். அப்போது இந்த உலகம் அனைத்தை விடவும் எனக்கு மிக விருப்பமான ஓர் வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 3341

(முஹம்மதே!) தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.) தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 48:1-5

கவலையில் மூழ்கியிருந்த நபித்தோழர்களுக்கு ஆறுதலாக இந்த வசனங்கள் இறங்கின. வெற்றி என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுவது ஹுதைபிய்யா உடன்படிக்கையைத் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பாக்கியத்திற்காக நபித்தோழர்கள் வாழ்த்துத் தெரிவிக்கின்றார்கள். அதே சமயம் இதனால் எங்களுக்கு என்ன பயன் என்றும் கேட்கின்றார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கீழ்க்காணும் இந்த ஹதீஸ் அமைகின்றது.

தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம் என்னும் (48:1) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும் என்று நான் கூறினேன். (அப்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள், (நபியவர்களே!) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (இந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்) என்று கேட்டனர். அப்போது, நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் என்னும் (48:5) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 4172

உண்மையில் ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு போர் தொடுத்தால் கூட இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது. மக்காவில் இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி, ஒட்டுமொத்த மக்காவும் இஸ்லாத்தின் கீழ் வந்தது. அந்த அளவுக்கு இந்த உடன்படிக்கை மாபெரும் வெற்றியாக அமைந்தது.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தவர்களைத் திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற விதியை கொஞ்ச காலம் கழித்துத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். மக்காவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆண், பெண் என அனைவரும் மக்கா வெற்றிக்கு முன்பே இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்து விட்டனர்.

இஸ்லாத்தின் முதல் எதிரியாகவும், குறைஷிகளின் முன்னணித் தலைவராகவும் திகழ்ந்த உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்சூம் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்து விட்டார்.

அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். ஆகவே, அவரது வீட்டார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர் (60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.

நூல்: புகாரி 2713

இதே போன்று ஆண்கள், பெண்கள் என்று பலர் இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வந்தனர். இம்மாபெரிய பயன்கள் இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையால் விளைந்தன. ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஆரம்பத்தில் எதிர்த்த உமர் (ரலி) அவர்கள் இதையெல்லாம் பின்னால் உணர்ந்து, நான் இவ்வாறு அதிருப்தியுடன் பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்கள் புரிந்தேன் என்று கூறுகின்றார்கள்.

சண்டையா? சமாதானமா? போரா? அமைதியா? என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதானத்தையும், அமைதியையும் தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை தொடர்பான இந்தச் செய்தி புகாரி 2734, முஸ்னத் அஹ்மத் 18166 ஆகிய ஹதீஸ்களிலிருந்து தொகுக்கப்பட்டது

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account