இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா?
என்னுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடைய முதல் மனைவியிடத்தில் அனுமதி கேட்கவில்லை. இது சரியா?
ராஸித்
பதில் :
ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. ஆனால் இவ்வாறு செய்வதற்கு முன் சில ஒழுங்கு முறைகளைப் பேணிக் கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
திருமணத்தை உறுதியான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا(21)4
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) எடுத்துள்ளார்கள்.
திருக்குர்ஆன் 4 : 21
கணவனைத் தவிர வேறு ஆணை மனைவி நாடக் கூடாது என்பதும், கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை கணவன் நாடக் கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த அடிப்படையில் தான் நம் நாட்டில் திருமண ஒப்பந்தங்கள் நடக்கின்றன.
மேலும் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வதால் முதல் மனைவியின் உரிமைகளை இரண்டாவது மனைவிக்குப் பங்கு வைத்துக் கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது.
மனைவியுடன் தங்கும் நாட்கள், மனைவிக்கு அளிக்கும் செலவுத் தொகை இறந்துவிட்டால் இவருடைய சொத்தில் பங்கு பெறுதல் ஆகிய விஷயங்களில் முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே நீதமாக நடக்க வேண்டும். கணவன் நியாயமாக நடக்கத் தவறினால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை மனைவிக்கு உண்டு.
இரண்டாவது திருமணம் செய்யப் போகும் தகவலை முதல் மனைவிக்குத் தெரியப்படுத்தினாலே இந்த உரிமையை முதல் மனைவிக்கு வழங்க முடியும்.
ஒருவர் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்கிறார் என்றால் இவர் மரணித்து விட்டால் இவர் விட்டுச் சென்ற சொத்தில் முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் பங்கு உண்டு.
ஆனால் இவர் இரகசியமாக இரண்டாவது திருமணம் செய்ததால் இவருடைய சொத்தில் இரண்டாவது மனைவிக்கு பங்கு கொடுக்கப்படாமல் அவர் புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படும்.
மேலும் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்தால் முதல் மனைவியுடன் அவர் செய்த திருமண ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எனவே ஒப்பந்ததாரரான முதல் மனைவியிடம், தான் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தெரிவிப்பது அவசியம்.
இவ்வாறு முதல் மனைவியிடம் தெரிவித்த பின் பழையபடி அதே கணவருக்கு மனைவியாக வாழ்வதற்கும் அல்லது தன்னுடைய திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்து கணவனை விட்டு பிரிந்துகொள்வதற்கும் முதல் மனைவிக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது.
இரண்டாவது திருமணம் செய்யும் தகவலை முதல் மனைவியிடம் தெரிவித்தாலே இந்த உரிமையை அப்பெண் பயன்படுத்த முடியும். தெரிவிக்காவிட்டால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமையை முதல் கணவன் பறித்தவராகி விடுவார். எனவே முதல் மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்வது தவறு.
இதற்கு பின்வரும் செய்திகள் ஆதாரங்களாக உள்ளன.
3110حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي أَنَّ الْوَلِيدَ بْنَ كَثِيرٍ حَدَّثَهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ حَدَّثَهُ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ حُسَيْنٍ حَدَّثَهُ أَنَّهُمْ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَيَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا فَقُلْتُ لَهُ لَا فَقَالَ لَهُ فَهَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ وَايْمُ اللَّهِ لَئِنْ أَعْطَيْتَنِيهِ لَا يُخْلَصُ إِلَيْهِمْ أَبَدًا حَتَّى تُبْلَغَ نَفْسِي إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ ابْنَةَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ عَلَيْهَا السَّلَام فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ إِنَّ فَاطِمَةَ مِنِّي وَأَنَا أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ قَالَ حَدَّثَنِي فَصَدَقَنِي وَوَعَدَنِي فَوَفَى لِي وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلَالًا وَلَا أُحِلُّ حَرَامًا وَلَكِنْ وَاللَّهِ لَا تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتُ عَدُوِّ اللَّهِ أَبَدًا رواه البخاري
ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன் நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறி விட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தமது மருமகனை (அபுல் ஆஸ் பின் ரபீஉவை) அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். அவர் என்னிடம் பேசிய போது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப் பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 3110
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸ் நபியவர்களின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். ஸைனப் மனைவியாக இருக்கும் போது அடுத்த திருமணம் செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுல் ஆஸ் (ரலி) அவர்களுடன் ஒப்பந்தம் செய்து தனது மகளை அவருக்கு மணமுடித்துக் கொடுத்துள்ளார்கள். அந்த ஒப்பந்தத்தை அபுல் ஆஸ் (ரலி) அவர்கள் கடைசி வரை பேணியதாக நபியவர்கள் அவரைப் புகழ்கிறார்கள்.
எனவே ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்யும் போதே நான் மனைவியாக இருக்கையில் என்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் அடுத்து மணமுடிக்கக் கூடாது என நிபந்தனையிட்டு மணமுடிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
5230حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ إِنَّ بَنِي هِشَامِ بْنِ الْمُغِيرَةِ اسْتَأْذَنُوا فِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَلَا آذَنُ ثُمَّ لَا آذَنُ ثُمَّ لَا آذَنُ إِلَّا أَنْ يُرِيدَ ابْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّمَا هِيَ بَضْعَةٌ مِنِّي يُرِيبُنِي مَا أَرَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا هَكَذَا قَالَ رواه البخاري
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதிகோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீ தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாக விலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மன வேதனைப்படுத்துவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5230
அலீ (ரலி) அவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. முந்தைய செய்தியில் ஆகுமானதை நான் தடை செய்ய மாட்டேன் என நபியவர்கள் கூறிய வாசகம் இதை உணர்த்துகின்றது.
மாறாக இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் தனது மகள் ஃபாத்திமாவை விவாகரத்துச் செய்துவிடுமாறு கூறினார்கள். இரண்டாவது திருமணம் செய்யும் கணவனை விட்டுப் பிரிவதற்கு பெண்ணுக்கு உரிமை உண்டு என்பதால் இந்த உரிமையை இங்கு நபியவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
எனவே ஒருவர் அடுத்த திருமணம் செய்தால் முதல் மனைவிக்கு அதை அவர் தெரியப்படுத்த வேண்டும்.
உங்களுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துவிட்டு பிறகு முதல் மனைவிக்கு இதை தெரியப்படுத்தியதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். இது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
மேலுள்ள ஹதீஸில் அலீ பின் அபீ தாலிப் அவர்கள் என் மகளை ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பே முதல் மனைவிக்கு தெரியப்படுத்த வேண்டும் என நபியவர்களின் வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வதற்கு முன் ஒப்பந்ததாரரிடம் தெரிவிப்பது தான் சரியான செயல். நம் இஷ்டத்துக்கு ஒப்பந்தத்தை மாற்றிவிட்டு பிறகு இதைத் தெளிவுபடுத்தினால் ஒப்பந்ததாரருக்குரிய உரிமையை நாம் வழங்கவில்லை என்றாகிவிடும். எனவே இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பே முதல் மனைவிக்கு இதை தெரியப்படுத்துவது அவசியம்.
08.08.2010. 17:44 PM
இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode