எப்போது இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்
உணர்வில் ஏன் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் போடுவதில்லை?
- அபூ ஜாஹீர், பத்தா, ரியாத்
இன்ஷா அல்லாஹ் என்பதை எப்போது சொல்ல வேண்டும் என்பதில் மக்கள் மத்தியில் அறியாமை நிலவுகிறது. பொருத்தமில்லாத இடங்களில் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்துவதுடன் மற்றவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எந்த இடங்களில் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடங்களில் நாம் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்தியே வருகிறோம்.
அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 18:24,25
நான் இதைக் கட்டாயம் செய்வேன் என்று கூறும் போது தான் இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும். மேலும் நாம் பேசும் விஷயம் எதிர்காலம் பற்றியதாக இருக்க வேண்டும். இந்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு மார்க்கத்தில் வழிகாட்டுதல் இல்லை என்பதை மேற்கண்ட வசனங்களில் இருந்து அறியலாம்.
மனிதன் மரணித்தே தீருவான் என்றோ அப்துல்லா மரணித்தே தீருவார் என்றோ கூறினால் அதற்கு இன்ஷா அல்லாஹ் கூறக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் நாட்டம் இதில் நமக்கு சொல்லப்பட்டு விட்டது.
நாளை வருவதாக அப்துல்லா சொன்னார் என்பதில் இன்ஷா அல்லாஹ் கூறுவது அர்த்தமற்றது. ஒருவர் சொன்னதை நாம் எடுத்துக் காட்டுகிறோமே தவிர நமது செயலைப் பற்றி கூறவில்லை.
வெள்ளிக்கிழமை பெருநாள், சனிக்கிழமை நோன்பு என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதைக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூறுவதும் பொருளற்றது. வெள்ளிக்கிழமை நான் பெருநாள் கொண்டாடுவேன் எனக் கூறினால் அதற்கு இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும்.
நேற்று கூட்டம் நடந்தது. இப்போது கூட்டம் நடக்கிறது என்று சென்ற கால அல்லது நிகழ்கால வினையாகப் பயன்படுத்தினால் அதற்கும் இன்ஷா அல்லாஹ் கூறக் கூடாது. ஏனெனில் இது இறைவன் நாட்டப்படி நடந்து விட்டது அல்லது நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிவதால் அல்லாஹ் நாடினால் என்று கூறக்கூடாது. இது எதிர்காலம் பற்றியது அல்ல.
வெள்ளிக்கிழமை பிறை பார்த்ததால் ஞாயிற்றுக் கிழமை பெருநாள் என்று உணர்வில் அறிவிப்பதில் இன்ஷா அல்லாஹ் போட மாட்டோம். இறைவன் நாட்டப்படி முதல் பிறை தென்பட்டதால் தான் ஞாயிறு பெருநாள் என்கிறோம்.
அது போல் தெளிவான சட்ட திட்டங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் கூறக் கூடாது. லுஹருக்கு இன்ஷா அல்லாஹ் நாலு ரக் அத் எனக் கூறகூடாது. திருடினால் இன்ஷா அல்லாஹ் கையை வெட்ட வேண்டும் என்று கூறக்கூடாது
இப்படி எங்கே இன்ஷா அல்லாஹ் போட வேண்டுமோ அங்கெல்லாம் போட்டுத்தான் வருகிறோம். அப்படி விடுபட்டால் குறிப்பாக சுட்டிக் காட்டுங்கள். விடுபட்டிருந்தால் திருத்திக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
16.12.2011. 9:11 AM
எப்போது இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode