Sidebar

22
Sun, Dec
26 New Articles

ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா?

ஹராமான வருவாய்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா?

இஸ்லாத்தின் பார்வையில் ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தாமல் காப்பி எடுத்து பயன்படுத்தலாமா? தவறு என்றால் பழைய நூல்களை வாங்கினாலும் வெளியிடுபவர் நட்டமடைவாரே? அது சரியா?

முஹம்மத் யூனுஸ்

இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சந்திக்காத பிரச்சனை என்பதால் நேரடியான ஆதாரம் இதற்குக் கிடைக்காது. ஆனால் இது சரியா தவறா என்று முடிவு செய்வதற்கேற்ற அடிப்படை நிச்சயம் இஸ்லாத்தில் இருக்கும்.

இஸ்லாத்தில் வியாபாரத்தின் விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டுள்ளன. ஒருவன் ஒரு பொருளை விற்று விட்டால் அதில் விற்றவனுக்கு எந்த உரிமையும் இல்லை. வாங்கியவன் தன் இஷ்டம் போல் அதைப் பயன்படுத்தலாம். இது தான் வியாபாரம்.

நாம் ஒரு சாப்ட்வேரை வங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது. நமக்குச் சொந்தமான ஒரு பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையைப் பறிக்கிறது என்ற பார்வையும் இதில் உள்ளது.

சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுத்து பயன்படுத்துவதால் தயாரிப்பவருக்கு பெரிய நட்டம் ஏற்படுகிறது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தவறு என்ற மற்றொரு பார்வையும் இதில் இருக்கிறது.

விற்பனையாளருக்கு நட்டம் ஏற்படுத்துதல் என்பது போலியான காரணமாகும். அவருக்குச் சொந்தமானதை எடுத்து அடுத்தவருக்குக் கொடுத்தால் தான் அவருக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அமையும். நமக்குச் சொந்தமானதை நாம் இலவசமாகக் கொடுப்பதில் அவருக்கு நட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இது போல் விற்பனையாளருக்கு சிறு நட்டம் ஏற்படும் பல காரியங்களை குற்றம் என்று ஃப்தவா கொடுத்ததில்லை. தொகை பெரிது என்பதால் இந்த வாதத்தை இப்போது கூறுகிறார்கள்.

மற்றவருக்கு அதிக நட்டம் ஏற்படுத்துவதும், குறைந்த நட்டம் ஏற்படுத்துவதும் இஸ்லாத்தில் சமமான குற்றங்கள் தான்.

குறைவான நட்டம் ஏற்படுத்தும் காரியங்கள் நடந்த போது அது யாருக்கும் குற்றமாகப் படாமல் இருந்தது என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொண்டால் இது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும்.

ஒரு நூல் வெளியிடப்படுகிறது. அந்த நூலை நீங்கள் வாங்குகிறீர்கள். உங்கள் சம்மதத்துடன் ஒருவர் ஜெராக்ஸ் எடுத்தால் அதனால் வெளியீட்டாளர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நட்டம் ஏற்படும். ஆனாலும் ஜெராக்ஸ் எடுப்பது ஹராம் என்று யாரும் கூறவில்லை.

அது போல் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய ஒரு நூலை ஒருவர் இரவல் கேட்கிறார். அவருக்கு நீங்கள் படிக்கக் கொடுத்தால் வியாபாரிக்கு விற்பனை பாதிக்கப்படும். இதன் காரணமாகவும் . வெளியீட்டாளர் நட்டமடைவார். ஆனாலும் இது தவறு என்று ஒருவருக்கும் தோன்றவே இல்லை. யாருடைய மனசாட்சியும் உறுத்தவில்லை.

ஏன் உறுத்தவில்லை? வெளியீட்டாளருக்குப் பாதிப்பு என்று ஏன் தெரியவில்லை?

எப்போது நாம் விலை கொடுத்து வாங்கி விட்டோமோ உடனே அது நமது உடமையாகி விட்டது. அதை நாம் யாருக்கும் கொடுக்கலாம். ஜெராக்ஸ் எடுக்கலாம். வெளியீட்டாளருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்று இவர்கள் விளங்கி வைத்துள்ளதே காரணம்.

அதே நூலை நீங்கள் அச்சிட்டு விற்பனை செய்தால் அது உங்களை உறுத்துகிறது. விற்பனை செய்யும் உரிமை வெளியீட்டாளருக்கு உரியது என்பது நமது மனசாட்சிக்குத் தெரிகிறது.

அது போல் ஒரு சாப்ட்வேரை நாம் விலை கொடுத்து வாங்கினால் அதை நாம் பயன்படுத்துவதும், மற்றவருக்குப் பிரதி எடுத்துக் கொடுப்பதும் சமமானது தான்.

விலைக்கு விற்ற பிறகும் விற்றவருக்கு அதில் உரிமை இருக்க முடியாது.

சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் இது போல் நடக்கக் கூடாது என்று கருதினால் அதைக் காப்பி எடுக்க முடியாமல் செய்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அல்லது காப்பி எடுக்க முயற்சிக்காத வகையில் நியாயமான விலையில் அவர்கள் விற்பனை செய்தால் யாரும் காப்பி எடுக்க மாட்டார்கள். பத்து ரூபாய் பெறுமானமில்லாத சீடியில் சாஃப்ட்வேரைப் பதிவு செய்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் போது தான் விலை கொடுத்து வாங்கியவர்கள் காப்பி எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நூறு ரூபாய்க்கு அதை விற்றால் கூட தயாரிப்புச் செலவை விட பன்மடங்கு லாபம் கிடைக்கும். ஆனால் உலகப் பணக்காரராக முடியாது.

இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால்தான் காப்பி எடுக்கிறார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வரவேண்டும். இதன் மூலம் காப்பி எடுப்பதை அவர்கள் தடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காசு கொடுத்து வாங்கிய பிறகும் வாங்கியவனிடம் உனக்கு உரிமை இல்லை என்று கூற முடியாது.

மேலும் ஒரு சாப்ட்வேரை பத்துப் பேர் பணம் போட்டு கூட்டாக வாங்கினால் பத்து காப்பி எடுப்பார்கள். அல்லது பத்து சிஸ்டங்களில் அதை நிறுவுவார்கள். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

காசு கொடுத்து வாங்காமல் திருடி காப்பி எடுப்பதுதான் திருட்டாக ஆகும். ஒரு சாப்ட்வேரை விலை கொடுத்து வாங்கி அதைக் காப்பி எடுத்து பலரும் பகிர்ந்து கொள்வது எந்த வகையிலும் தவறாகாது.

ஒரு சட்டையை விற்கும் போது நீ ஒரு தடவை தான் அணிய வேண்டும் என்றோ, யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றோ நிபந்தனை விதித்தால் அது செல்லாது. அது போல் தான் இதுவும் அமைந்துள்ளது.

இது நேரடி ஆதாரத்தின் மூலம் இல்லாமல் சிந்தித்துக் கூறப்படும் கருத்தாக உள்ளதால் இது சரி என்று படக்கூடியவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு புரிந்து கொள்ள இடமில்லை என்று கருதுவோர், தாம் தவறு என்று கருதுவதைச் செய்ய வேண்டாம்,.

மார்க்கத்தில் தடுக்கப்படாத காரியத்தை உலக நாடுகளின் சட்டம் தடுக்குமானால் அதனால் சங்கடங்கள் ஏற்படுமானால் அப்போதும் அதைக் கவனத்தில் கொள்வது தவறல்ல.

09.01.2010. 2:12 AM

Share this:

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account