லஞ்சம் கொடுப்பது குற்றமா?
என்கொயரி, தாலுகா அலுவலகம் போன்ற இடங்களில் ஆவணங்களைப் பெறுவதற்காக நம்மிடம் கட்டாயமாக பணம் கேட்கிறார்கள். அப்படிக் கேட்கும் போது பணம் தர மறுத்தால் ஆவணங்கள் பெற முடிவதில்லை. இப்படி இருக்க அதற்கு உடன் படுவது லஞ்சம் ஆகுமா? இது லஞ்சம் என்றால் அதை களைய வழி என்ன?
ஷேக் மன்சூர்- நெல்லை பேட்டை.
லஞ்சத்தில் இரு வகைகள் உண்டு. நமக்கு சட்டப்படி உரிமை இல்லாதவற்றையும், அடுத்தவரின் உரிமையையும் நமதாக்கிக் கொள்ளவும், சட்ட விரோதமாக சில காரியங்களை சாதித்துக் கொள்ளவும் வழங்கப்படும் லஞ்சம் ஒரு வகை.
உலகம் முழுவதும் இந்த வகை லஞ்சம் தான் காணப்படுகிறது.
சட்டப்படி நமக்குச் செய்து தர வேண்டிய காரியத்துக்காக வாங்கப்படும் லஞ்சம் இரண்டாவது வகை. இந்த வகை லஞ்சம் நமது நாட்டில் மட்டுமே நீங்கள் காணமுடியும்.
சட்ட விரோதமான காரியத்தை ஒரு அமைச்சர் அல்லது அதிகாரி செய்து கொடுத்தால் அதனால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடும். அபராதம், சிறைத் தண்டனை, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டி வரும். எனவே இதற்காக லஞ்சம் வாங்குவது தவறு என்றாலும் லஞ்சம் வாங்குவோரின் பார்வையில் இதற்கு நியாயம் கற்பிக்க முடியும்.
ஆனால் இரண்டாம் வகை லஞ்சத்தில் இது போல் எந்த நியாயத்தையும் கூற முடியாது. ரேஷன் கார்டுக்கு நாம் விண்ணப்பிகிறோம். அதைச் செய்து தருவதற்காகத் தான் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குகின்றனர். நம்முடைய ஆவணம் சரியாக இருந்தால் உடனடியாக அதைச் செய்து தருவது அரசு ஊழியர்களின் கடமையாகும். இதற்கு லஞ்சம் கேட்டால் நடு ரோட்டில் வைத்து இவர்களைச் சுட்டுத் தள்ளும் அளவுக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஆனால் சாதிச் சான்றிதழ் வாங்குதல் போன்ற காரியங்களானாலும், வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் பண்ணுவதாக இருந்தாலும், மின் இணைப்பு பெறுவதாக இருந்தாலும், வேறு எந்தத் துறையில் எந்தக் காரியத்தை சட்டப்படி செய்து தருவதாக இருந்தாலும் இந்தியாவில் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும். இதுதான் எழுதப்படாத சட்டமாக உள்ளது.
லஞ்சத்துக்கு எதிராகப் போராடும் போராளிகள் கூட இது போல் பொது மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்த லஞ்சம் பற்றிப் பேசுவதில்லை. மக்களைப் பாதிக்காத லஞ்சத்தை ஒழிப்பது பற்றியே வாய் கிழியப் பேசுகின்றனர்.
அலைக்கற்றை ஒதுக்கீடு அலைவரிசை ஒதுக்கீடு போன்ற காரியங்களில் பண முதலைகளுக்கு சாதகமாக நடந்து லட்சம், கோடிகள் என்று சுருட்டினாலும் அது குப்பனையோ சுப்பனையோ பாதிப்பதில்லை. சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்படுவதில்லை.
ஆனால் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக ஒரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கதினர்களிடம் லஞ்சம் கேட்பது மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றமாகும். ஆனால் இந்த லஞ்சத்தை ஒழிப்பது பற்றி யாரும் வாய் திறப்பதாக இல்லை.
இது தான் லஞ்சத்தில் மாபெரும் லஞ்சம் என்ற போதும் லஞ்சம் கொடுக்காமல் சட்டம் பேசிக் கொண்டு சகித்துக் கொண்டு காத்திருக்க அனைவருக்கும் இயலாது.
இது போன்ற நிலையில் உள்ளவர்கள் நிர்பந்தம் காரணமாக லஞ்சம் கொடுத்தால் அதை நாம் குறை கூற முடியாது. அடுத்தவரின் உரிமையைத் தன்னுடயதாக்க லஞ்சம் கொடுத்தால் அதில் நிர்பந்தம் இல்லாததால் அதை ஒரு போதும் செய்யக் கூடாது.
08.08.2012. 15:00 PM
லஞ்சம் கொடுப்பது குற்றமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode