கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம்.
மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வசதி உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அறப்பணிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வாரி வழங்கி வருகின்றனர்.
ஆனாலும் சிரமப்படுவோர் கடன் கேட்டால் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.
கொடுத்த கடன் திரும்ப வராவிட்டால் நட்டமாகிவிடுமே என்ற அச்சம் தான் கடன் கொடுக்கத் தடையாக அமைந்துள்ளது.
ஆனால் தர்மம் செய்வதை விட கடன் கொடுப்பதில் மிக அதிகமான நன்மைகள் உண்டு என்ற இஸ்லாத்தின் போதனையை அதிகமான முஸ்லிம்கள் அறியவில்லை.
நாம் ஒருவருக்கு அல்லது ஒரு நற்பணிக்கு நூறு ரூபாய் தர்மம் செய்தால் நூறு ரூபாய் தர்மம் செய்த நன்மை தான் கிடைக்கும்.
ஆனால் நூறு ரூபாய் கடன் கொடுத்து விட்டு அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தால் அந்தக் கடன் திரும்ப வரும் வரை தினமும் நூறு ரூபாய் தர்மம் செய்த நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும்.
நூறு ரூபாய் கடன் கொடுத்து நூறு நாள் கழித்து அது திரும்பக் கிடைத்தால் 100*100=10000 பத்தாயிரம் ரூபாய் தர்ம்ம் செய்த நன்மை கிடைத்து விடும். நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க நன்மைகளும் அதிகரித்துக் கொண்டே வரும். அவகாசம் முடிந்த பின்னர் மேலும் அவகாசம் அளித்தால் கடன் கொடுத்த தொகை போல் தினமும் இரு மடங்கு தர்ம்ம் செய்த நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
مسند أحمد
23046 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ "، قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ "، قُلْتُ: سَمِعْتُكَ يَا رَسُولَ اللهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ "، قَالَ لَهُ: " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ "
கடன் பெற்றவருக்கு ஒருவர் அவகாசம் கொடுத்தால் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகையைத் தர்மம் செய்த நன்மையைப் பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடன் பெற்றவருக்கு ஒருவர் அவகாசம் கொடுத்தால் ஒவ்வொரு நாளும் அந்தத் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த நன்மையைப் பெறுவார் என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு மடங்கு நன்மை என்று முன்பு கூறியதற்கு மாற்றமாக இப்போது இரு மடங்கு எனக் கூறுகிறீர்களே என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டுமே சரி தான்; கொடுக்கப்பட்ட அவகாசத்துக்குள் கடன் திரும்பக் கிடைத்தால் தினமும் அந்த்த் தொகையைத் தர்மம் செய்த நன்மைகள் கிடைக்கும். கொடுத்த அவகாசம் முடிந்து மேலும் அவகாசம் கொடுத்தால் அப்போது கொடுத்த கடன் தொகையப் போல் இரு மடங்கு தர்மம் செய்த நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல்கள்: தப்ரானி, பைஹகீ, ஹாகிம்
கடன் கொடுப்பதில் தர்மம் செய்வதை விட அதிக நன்மை உண்டு என்பதை உணர்ந்து நடப்போமாக!